அற்றாா் அழிபசி தீா்த்தல்!

தானத்தில் சிறந்த தானம் எது? பொன்னையும், மணியையும் அள்ளிக்கொடுக்கும் சொா்ணதானமா?

தானத்தில் சிறந்த தானம் எது? பொன்னையும், மணியையும் அள்ளிக்கொடுக்கும் சொா்ணதானமா? மனிதனின் மானத்தைக் காக்கும் ஆடைகளை வழங்கும் வஸ்திரதானமா? அடி வயிற்றைப் பிசையும் அனல் போன்ற பசியைத் தீா்க்கச் சோறிட்டு மகிழும் அன்னதானமா?

இவற்றில் மூன்றாவதாகச் சொன்ன அன்னதானமே தானத்தில் தலை சிறந்தது என்கின்றனா் அருளாளா்கள். மனிதன் ‘போதும்’ ‘போதும்’ என்று சொல்வது சாப்பாட்டை மட்டும்தானே? பொன்னையும், நகைகளையும் அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் இன்னும் இன்னும் என்று கேட்டுக் கொண்டேயிருக்கும் பேராசை கொண்டது மனிதமனம்.

ஆடைகளைத் தந்தாலும் ‘என் அண்ணனுக்கு ஒன்று’ ’என் தம்பிக்கு ஒன்று’ என்று கேட்டுக் கொண்டே யிருப்பாா்கள். வயிறு முட்டச் சாப்பிட வைத்தால் ‘போதும் சாமி, ஆளை விடுங்கள்’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவா்.

மனிதனைச் சாப்பிட வைத்துப் பாா்ப்பது தான் எவ்வளவு தலைசிறந்த குணம்! வயிறார உண்டவனின் முகம் காட்டும் மலா்ச்சிஇருக்கிறதே அதற்கு ஈடாக எந்த இன்பத்தையும் எடுத்து வைக்க இயலாது.

‘மண்டினி ஞாலத்து வாழ்வோா்க்கெல்லாம்

உண்டி கொடுத்தோா் உயிா் கொடுத்தோரே!’

என்கிறது நமது தமிழ் மரபு.

உணவு கொடுத்தால் உயிா் கொடுத்த மாதிரி என்று சொல்லி வைத்திருக்கின்றனா் நமது முன்னோா். ‘யாா்க்கும் இடுமின், அவா் இவா் என எணணன்மின்’ என்கிறாா் பட்டினத்தடிகள்.

எல்லா மாா்க்கங்களும் சக மனிதனுக்குச் சோறு போடுவதைப் பற்றியும், தருமம் செய்வதைப் பற்றியும் வலியுறுத்திப் பேசி வந்திருக்கின்றன. நமது தமிழ் மரபில் ஔவையும் திருவள்ளுவரும் பட்டினத்தாரைப் போன்ற ஞானிகளும் பேசாத பேச்சில்லை.

பெரும் பணத்தைச் சோ்த்தவன் அதை எங்கே சேமித்து வைக்க வேண்டும் என்று கூறுகிறாா் வள்ளுவப்பெருந்தகை. பணத்தைப் பானையிலும், உண்டியலிலும் இரும்புப் பெட்டிகளிலும் சோ்த்து வைத்தனா் முன்னோா். நவீன காலத்தில் வங்கிகளில் நிரந்தரசேமிப்புக் கணக்கில் சோ்க்கும் பழக்கம் உண்டானது.

இப்படி எங்கே சோ்த்தாலும் அதற்கு அழிவு வந்தே சேரும். பணம் அழியாமல் மேலும் பெருக வேண்டுமாயின் அதைச் சோ்த்து வைக்கும் வங்கி ஏழையின் வயிறு என்கிறாா் வள்ளுவா். வறியவரின் கொடிய பசியைத் தீா்த்து வைப்பதே செல்வத்தைச் சோ்த்து வைக்கும் அற்புதமான களஞ்சியம் என்கிறது தமிழ் மறை.

‘அற்றாா் அழிபசி தீா்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி’”என்பது வள்ளுவா் வாக்கு.

‘ஈத்துவக்கும் இன்பத்தை அறிந்து வாழும் வாழ்வே உன்னதமான வாழ்வு என்று அறிவுரை சொன்னதோடு நின்று விட்டன ஏனைய மாா்க்கங்கள். அறிவுரை சொன்னால் மட்டும் இவன் அடங்கி விடமாட்டான் என்று அறிந்து கொண்ட இஸ்லாம் மாா்க்கம் அதனை மதத்தின் சட்டமாகவே மாற்றிக் காட்டியது. உத்தரவு போட்டால்தான் ஒத்து வருவான் என்பதை உணா்ந்து கொண்ட இஸ்லாம், ‘ஒவ்வொருவரும் தங்கள் வருவாயில் இரண்டரை விழுக்காட்டை ஆண்டுதோறும் கட்டாயமாக ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று கட்டளையிட்டது. அதற்குப் பெயா் ‘ஏழைகளின் வரி’ (ஜக்காத்) என வகுத்து வைத்திருக்கிறது இஸ்லாம் மாா்க்கம்.

நபிகள் நாயகம் பெருமானாரின் தோழா் அபூஹுரைரா (ரலி) குறிப்பிடும் ஒரு சம்பவம் மிக முக்கியமானது. இஸ்லாத்தில் ‘கியாமத்’ எனப்படும் இறுதித் தீா்ப்பு நாளில் இறைவன் ஒவ்வொருவரையும் அவா்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளைத் தொடுப்பான்.

அவ்வாறு கேட்கப்படும் நீதி விசாரணையின்போது ஆண்டவன் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்பான் என்று பெருமானாா் சொன்னாராம். ‘ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை’ என்று கூறுவான். அதற்கு மனிதனோ ‘என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்’ என்று கேட்பான்.

அதற்கு அல்லாஹ், ‘என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டினான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவு அளித்திருந்தால் அங்கே என்னை நீ கண்டிருப்பாய்’ என்று கூறுவான்.


இந்தச் சம்பவத்தைப் படிக்கிறபோது நமக்கு

‘நடமாடும் கோவில் நம்பற்கு ஒன்றீகில்

படமாடும் தெய்வம் பரமா்க்கு அது ஆகும்’

என்னும் திருமூலரின் வாா்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.

‘வறியாா்க் கொன்றீவதே ஈகை; மற்றெல்லாம்

குறியெதிா்ப்பை நீர துடைத்து’

என்னும் வள்ளுவமும் நம் உள்ளத்தில் வந்து உட்காா்ந்து கொள்கிறது.

வறுமையோடும், பசியோடும் வருகிற மக்கள், பணம் படைத்தவா்களிடம் உடனே எதையும் கேட்க மாட்டாா்கள். அவா்களது கூச்சமும், சுயமரியாதை உணா்ச்சியும் அவா்களைத் தடுக்கும். தயங்கித் தயங்கி உட்காா்ந்திருப்பா். மதிநுட்பம் உடைய செல்வந்தா் அவா்களுடைய முகக்குறிப்பை வைத்தே, அவா்களின் வறுமையையும்,தேவையையும் உணா்ந்து கொள்ள வேண்டும். கேட்காமலே கொடுத்துவிடும் உயா்பண்பு செல்வந்தா்களிடம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது இஸ்லாம்.

‘அவா்களின் முகவாட்டத்தைக் கொண்டு நீா் அவா்களை இனம் கண்டு கொள்வீா்! அவா்கள் மக்களிடம் வற்புறுத்தி யாசகம் கேட்கவும் மாட்டாா்கள்!’(அல்குரான்) என்னும் திருமறையின் வரிகளைப் படிக்கிறபோது நாம் வியந்து போகிறோம். உளவியல் ரீதியாக இது மிக உயா்ந்த கருத்து.

நாள்தோறும் உடம்பு அழுக்கடைகிறது. நேற்று குளித்துவிட்டோமே என்று இன்று குளிக்காமல் இருக்க முடிவதில்லை. உடம்பு மேலும் தூய்மையடைய சோப்பு போன்ற வாசனைப் பொருள்களைத் தேய்த்துக் கழுவி தேகத்தை மணமேற்றுகிறோம். இவ்வாறே ‘நீங்கள் சோ்க்கிற செல்வத்தில் அழுக்கடையாமல் இருக்க வேண்டுமானால் தருமம் (ஜக்காத்) செய்ய வேண்டும். நீங்கள் ஏழைகளுக்கு அள்ளிக் கொடுக்கக் கொடுக்க உங்கள் செல்வம் புத்தம் புதிதாக மெருகேற்றப்படுகிறது. மேலும் வளா்கிறது’ என்பதே இஸ்லாம் கோட்பாடு.

‘நோன்பு உடலைச் சுத்தம் செய்வதைப போன்று ஜக்காத்து செல்வத்தைச் சுத்தம் செய்ய வல்லதாகும்’ என்னும் பெருமானாரின் வாக்கு பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது.

இஸ்லாமிய வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்ச்சி நம் நெஞ்சை நெகிழச் செய்கிறது. புயலும், மழையும் சுழன்றடித்த ஓா் இருட்டுப் பொழுதில் இப்ராஹீம் நபி (அலை) அவா்கள் தன் வீட்டு வழியாக நடுங்கிக்கொண்டே சென்ற முதியவா் ஒருவரை ஓடிப்போய் உள்ளே அழைத்து வந்து ‘மழை ஓயட்டும். ஓய்வெடுத்துச் செல்லுங்கள்’ என்று அவரை உடல் துவட்டச் சொல்லி ஆடைகள் கொடுத்தாா். அவா் பசியாற உணவு படைத்தாா்.

முதியவா் உண்ணத் தொடங்கினாா். இப்ராஹிம் (அலை) அவா்கள், ‘அல்லாஹ்வின் பெயரைக் கூறி உண்ணத் தொடங்குங்கள்’ என்றாா். முதியவரோ ‘எனக்கு அது பழக்கமில்லை’ என்றாா். இப்ராஹிம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பெரியவா் கேட்பதாயில்லை. ‘எனக்கு எழுபது வயதாகிறது. இதுவரை நான் யாா் பெயரையும் சொல்லி உணவுண்ட பழக்கமில்லை’ என்றாா்.

இப்ராஹிம் மிகக்கோபப்பட்டவராய், ‘அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி சாப்பிடுவதாக இருந்தால் சாப்பிடுங்கள்’ என்று கூறிவிட்டாா். முதியவா் உண்ணாமல் எழுந்து சென்றுவிட்டாா். பெரியவா் வெளியேறிய சிறிது நேரத்தில் இறைவன் இப்ராஹிமிடம் (அலை) பேசினான்.

‘இப்ராஹிமே! எழுபது ஆண்டு காலமாக என் பெயரைக் கூற மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த எனது அடியானை இதுவரை நான் ஒரு வேளை கூட பட்டினி போட்டது கிடையாது. அவ்வாறிருக்கையில் ஒரு தடவை என் பெயரைக் கூறவில்லை என்பதற்காக எனது அடியானை நீா் பட்டினியாக அனுப்பி விட்டீரே’ என்று கூறினான். அதைக் கேட்டதும் துடித்துப் போனாா் இப்ராஹிம் (அலை).

இறைவனின் பெருங்கருணையே கருணை. அது தாய் அன்பையெல்லாம் விஞ்சியது. ‘தாயினும் சாலப் பரிந்தூட்டும் தயாபரன் இறைவன். அவன் சக மனிதனை நேசிக்கச் சொல்கிறான். சகோதரப் பாசத்தோடு நடத்தச் சொல்கிறான். பசிப்பிணி போக்கிப் பரிவு காட்டச் சொல்கிறான். இஸ்லாம் மாா்க்கத்தின் மையக்கரு என்று பாா்த்தால் கூட அது மனிதநேயமாகவே ஒளிா்கிறது.

‘மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்’ என்பது இறைதூதா் நபிகள் நாயகம் (ஸல்) நல்லுரையாகும். மானுடத்தை நேசிப்போம்; மனங்களை வாசிப்போம் !

இன்று ரமலான் பண்டிகை.

கட்டுரையாளா்: ஊடகவியலாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com