அமரர்களுக்கு மரியாதை

இறந்தவர்களுக்கு மரியாதை செய்வதே யுகம் யுகமாய் வந்தநமது இந்தியக் கலாசாரம். இறந்து போனவர் எதிரியானாலும் சரி, வேண்டியவர் என்றாலும் சரி, அவரை அமரர் என்றே அழைத்து,

 இறந்தவர்களுக்கு மரியாதை செய்வதே யுகம் யுகமாய் வந்தநமது இந்தியக் கலாசாரம். இறந்து போனவர் எதிரியானாலும் சரி, வேண்டியவர் என்றாலும் சரி, அவரை அமரர் என்றே அழைத்து, அமரர்கள் எனப்படும் தேவர்களுக்குச் சமமாக மதித்து இறுதி மரியாதை செய்து வழியனுப்பிவைப்பதே நமது பண்பாடு.
 என்ன செய்வது? பெருமழை, பூகம்பம், சுனாமி, கொள்ளை நோய் ஆகியவை நேரும்போதெல்லாம் அமரர் ஆவோரின் எண்ணிக்கை அதிகமாகிவிடுகிறது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் இறக்கும்போது அவர்களில் ஒவ்வொருவரையும் சாஸ்திர முறைப்படி நல்லடக்கமோ தகனமோ செய்வது இயலாத காரியம்தான்.
 ஆனால், இறுதிக்கால மரியாதையைக் குறைக்காமல் அவர்களை இவ்வுலக வாழ்விலிருந்து வழியனுப்பி வைப்பது இயலாத காரியமல்ல. இன்னும் உயிருடன் இருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் செய்யவேண்டிய கடமையும் கூட.
 கரோனா தீனுண்மி இரண்டாவது பரவல் என்னும் இந்தப் பேரிடர்க் காலத்தில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கைக்கேற்ப உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகின்றது.
 மருத்துவக் கட்டமைப்பை நாடு முழுவதும் எவ்வளவுதான் பலப்படுத்தினாலும் அதையும் விஞ்சிய அளவில் நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருவதால் நோய்த்தொற்றுப் பரிசோதனை, நோய்ப்பரவல் தடுப்பு, நோயுற்றவர்களுக்கான மருத்துவம், இறப்புகளைத் தவிர்ப்பது என்று பல்முனைப் போராட்டத்தினைத் தற்போது நமது தேசம் எதிர்கொண்டு வருகின்றது.
 மருத்துவமனைப் படுக்கைகள், மருத்துவப் பணியாளர்கள், உயிர்காக்கும் மருந்துகள், மூச்சுத்திணறுவோரைக் காக்கும் பிராணவாயு விநியோகம் என்றும் பலவழிகளிலும் சவால் இருந்து வருகிறது. மருத்துவ வசதிகள் எவ்வளவு அதிகப்படுத்தப்படுகின்றனவோ அதைவிட அதிகமான நோயாளிகள் உருவாகும் இச்சூழ்நிலையில், இறப்பு எண்ணிக்கையும் ஒருபுறம் உயர்கின்றது.
 தற்போதைய கரோனாப் பெருந்தொற்று காலத்தில் இறப்பவர்களின் உறவினர்கள் நேற்று இருந்தவர் இன்று இல்லை என்ற பழமொழியைக் கூறிச் சற்றே மன ஆறுதல் பெற முயன்றாலும், அவ்விதம் இறந்தவர்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கமோ தகனமோ செய்ய இயலாமல் போவது பெரிய வேதனை தரத்தக்க விஷயமாகும்.
 அதுமட்டுமல்ல, நம்முடைய உறவினரைச் சரிவர வழியனுப்பிவைக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வுக்கும் மன உளைச்சலுக்கும் பலர் ஆளாகலாம், அதற்கு அவர்கள் பொறுப்பில்லை என்றாலும் கூட.
 தற்போதைக்கு சடங்குகள் இன்றி நல்லடக்கம் செய்துவிட்டு, பின்னர் நிலைமை சீராகும் போது அவரவர் சம்பிரதாயப்படி இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைவதற்கான பரிகாரங்களைச் செய்வதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.
 நோய்வாய்ப்பட்டவர்களுடன் மட்டுமின்றி, இறப்பவர்களின் உடல்களுடனும் தங்களின் அன்றாட வாழ்வை நடத்திக்கொண்டிருக்கும் மருத்துவ முன்களப்பணியாளர்கள் அனைவரும் நம் இரக்கத்திற்குரியவர்களே. அது மட்டுமல்ல, இறந்து போனவர்களின் உடல்களை அதிக அளவில் கையாள வேண்டிய நிலையில் இருக்கும் மருத்துவமனைகளின் அடித்தாட்டு ஊழியர்களின் நிலைமை அதைவிடப் பரிதாபகரமானது.
 அதிகரிக்கும் இறப்புகளை அன்றாடம் பார்ப்பதினால் எழும் மன அழுத்தம் மட்டுமின்றி, கரோனா தீநுண்மியால் தங்களது இன்னுயிர்களுக்கும் தீங்கு நேரிடும் என்பதை அறிந்தும் தங்கள் மனதைத் தளரவிடாமல் பணியாற்றும் அம்மருத்துவத்துறை ஊழியர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே.
 அதுமட்டுமா? திடீரென்று அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப மயான வசதிகளை ஏற்படுத்தித்தருவதற்கு உழைக்கின்ற உள்ளாட்சி நிர்வாகங்களும், ஓய்வுக்கு நேரம் இன்றிச் சடலங்களை அடக்கமும் தகனமும் செய்துகொண்டிருக்கும் மயான ஊழியர்களும் நமது வணக்கத்திற்குரியவர்கள்.
 வட இந்தியாவின் ஒருங்கிணைந்த சீக்கியர்கள் அமைப்பு, தமிழ்நாட்டின் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போன்ற பல அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் நம் நாடு முழுவதிலும் கரோனாவினால் இறந்தவர்களின் சடலங்களுக்கு ஜாதி மத பேதமின்றி இறுதிச்சடங்குகள் செய்வது மிகப்பெரிய சமுதாயத்தொண்டாகும்.
 நோய்வாய்ப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் இறந்துபோவதைத் தடுக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, அவ்வாறு இறப்பவர்களின் சடலங்கள் சரிவரக் கையாளப்படுவது முக்கியம்.
 இறந்தவர் ஒவ்வொருவரின் சடலமும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவதும், அச்சடலம் மயானம் வரையில் கொண்டு செல்லப்படுவதற்குரிய அமரர் ஊர்தி ஏற்பாடு செய்யப்படுவதும் அவசியம். உரிமை கோரப்படாத சடலங்களும் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும்.
 பொதுமக்களில் சிலர் தங்கள் பகுதிகளில் உள்ள மயானங்களில் கரோனா பாதித்தவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்படக்கூடாது என்று எதிர்ப்பதும் சரியல்ல. சைக்கிள்களிலும் ஆட்டோக்களிலும் சடலங்கள் ஏற்றப்பட்டு அனுப்பப்படுவது கூடாது.
 மேலும், வட இந்திய மாநிலங்கள் சிலவற்றில் நடப்பது போல், மக்கள் பயன்படுத்தும் நதிகளில் சடலங்கள் வீசப்படுவது கூடவே கூடாது. அத்தகைய செய்கை, மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் நோயாளிகளாகும் அவலநிலைக்கு வழிவகுப்பதாகும்.
 அமரர்களாகிவிட்டவர்களை அமரர்களுக்குரிய மரியாதையுடன் வழியனுப்புவது ஒரு நாகரிக சமுதாயத்தின் கடமையாகும்.
 இதைக்கூட முறையாகச் செய்யவில்லை என்றால், நம்மை மனிதர்கள் என்று சொல்லிக்கொள்வதில் ஏதாவது பொருள் இருக்கிறதா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com