தோப்பான தனிமரம்

 இந்த தேசம் தியாகத்தின் தேசம். தியாகத்தைத் தன் வாழ்வியலாகச் செய்து கொண்டவர்கள் காலம்தோறும் இங்கே தோன்றிக்கொண்டே இருப்பதே இதற்கு சான்று. தமிழகத்தில் தென்கோடியில் காளையார்கோவிலை 1700-களில் ஆண்ட நாளில் வெள்ளையர்களுக்கு எதிராக அனைத்து பாளையக்காரர்களையும் ஒருங்கிணைக்க முயன்று விடுதலை வேள்வியில் தங்களைக் கரைத்துக் கொண்டவர்கள் மாவீரர்கள் மருது சகோதரர்கள். மக்கள் அவர்கள் மீது கொண்ட விசுவாசத்திற்கு சரித்திரத்தில் அழியாத சான்று இருக்கிறது.
 இயற்கை நம்மைக் காக்கும் தெய்வம் என்று நம்பிய மக்கள் திருப்புவனம் கிராமத்தில் இரட்டையாக வளர்ந்த மருத மரங்களை தங்களைக் காக்கும் மருது சகோதரர்கள் என்று போற்றி வளர்க்கிறார்கள். அந்த மரங்களை வெட்டுவதற்கான சூழல் வந்த நேரத்தில் கிராம மக்கள் அந்த மரங்களைக் காக்க அவற்றை கட்டித் தழுவிக்கொண்டு தங்களை வீழ்த்திய பின்னே மரங்களை வெட்ட முடியும் என்று போராடி மரங்களைக் காத்தார்கள்.
 இன்றைக்கும் கிராமிய மணம் கமழும் நாட்டுப்புறப்பாடல் வடிவங்களில் இந்த சம்பவம் தமிழர் நினைவில் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
 பாரதத்தின் தென்கோடி சிவகங்கை பகுதியில் சில நூற்றாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இதே சம்பவத்தை சில ஆண்டுகளுக்கு முன் வடகோடி இமயத்தில் நம் கண்முன்னே நிகழ்த்திக் காட்டிய பெரியவர் சுந்தர்லால் பகுகுணா.
 1970-களில் இமயமலைப் பகுதிகளில் வனங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகக் குரல் கொடுத்தவர். அணைக்கட்டுக்கான இடத்தைத் தேர்வு செய்த அரசு அங்கே காட்டு மரங்களை வெட்ட முயன்ற நேரத்தில் தன் குழுவினருடன் அங்கிருந்த மரங்களைக் கட்டிக்கொண்டு தங்களை வீழ்த்திய பிறகே மரங்களை வெட்ட முடியும் எனப்போராடிய மாமனிதர்.
 இயற்கை இல்லாமல் மனிதனுக்கு வாழ்வில்லை என்பதை உலகம் முழுவதும் கேட்கும்படி தன் செயல்களால் உரக்கச் சொன்ன மகான்.
 கிராமியப் பொருளாதாரத்தை நம்பியவர். பொருளாதார வளர்ச்சிக்கு வனங்கள் அழிக்கப்படுவது தவிர்க்க முடியாதது என்ற வாதத்தை மறுத்து, மனிதனின் பொருளாதார வளர்ச்சி சூழலியல் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அதுவே நீடித்த வளத்தை வழங்கும் என்றும் எடுத்துச் சொன்னவர்.
 மனிதர்கள் சுகமாக வாழ இயற்கை காக்கப்படுவதோடு வளர்க்கப்படவும் வேண்டும் எனக்கூறி அதற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த மண்ணின் மைந்தன் சுந்தர்லால் பகுகுணா.
 வனஅழிப்பைத் தடுக்க உத்தர பிரதேசத்தில் 1972-இல் பகுகுணாவால் தொடங்கப்பட்ட சிப்கோ இயக்கம் பின்னர் கர்நாடகம், ராஜஸ்தான், ஹிமாசல பிரதேசம் ஆகிய மலைப் பிரதேசங்களிலும் பரவி விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த அமைப்பின் மூலம் உலகம் முழுவதும் சூழலியல் சார்ந்த சிந்தனைகளை முன்வைத்தார். இமயமலைப் பகுதிகளில் தொடர்ந்து இவர் குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது.
 வனப்பகுதிகளில் மனம் போன போக்கில் மரங்களை வெட்டுவதால் இந்தியக்காடுகளின் தன்மையும் அவற்றின் பரப்பளவும் பெருமளவில் குறைந்துள்ளன.
 இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முப்பது சதவிகிதமாக இருந்த இந்தியாவின் காட்டுப்பகுதி, நூற்றாண்டின் இறுதியில் ஏறத்தாழ 19 சதவீதமாகக் குறைந்துவிட்ட நிலையில் அதன் பாதிப்புகள் மக்களை எப்படி அவதிக்குள்ளாக்கும் என்று தாயுள்ளத்தோடு நாட்டுக்கு உணர்த்த முயன்றதே சுந்தர்லால் பகுகுணா என்ற மனிதரை நமக்கு அடையாளம் காட்டியது.
 காந்திய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட காந்தியவாதி பகுகுணா. தன் வாழ்நாள் முழுமையும் அறத்தோடு அகிம்சையைப் பின்பற்றி வாழ்ந்தார். காந்திய சிந்தனை அவரது உணவு, உடை முதல் பண்பு வரை அனைத்திலும் பிரதிபலித்தது. சுதந்திர தினம், குடியரசு தினம் இரண்டையும் பண்டிகைகளாகக் கொண்டாடியவர் சுந்தர்லால். கிராமியப்பொருளாதாரத்தை நம்பியவர்.
 சூழலியலும் பொருளாதாரமும் ஒன்றுக்கொன்று கைகோத்துக்கொண்டதாக இருக்கும் சமூகமே நிலைத்த செல்வச் செழிப்பைப் பெறமுடியும் என்பதை வலியுறுத்தி, காந்திய முறையில் உண்ணாநோன்புகளை மேற்கொண்டிருக்கிறார் சுந்தர்லால் பகுகுணா. கனிவானவராகவும், மென்மையானவராகவும் இருந்த போதிலும், தனது கொள்கைகளில் உறுதியாக நின்றவர் அவர்.
 இமயமலையின் சூழலை முற்றிலும் பாதிக்கக்கூடியதும் வனங்களை அழித்துவிடக்கூடியதுமான தெஹ்ரி அணை கட்டுவதற்கு எதிரான போராட்டங்களில் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உழைத்தார். அதற்கென மாநிலம் முழுவதும் நான்கு மாதங்கள் பாதயாத்திரை மேற்கொண்டு இளைய சமூகத்திடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனை மக்கள் இயக்கமாக மாற்றினார்.
 "புத்தகங்களில் படித்து ஒரு பிராந்தியத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள முடியாது அதற்கு அந்தப் பிராந்தியத்தின் மூலைமுடுக்குகளுக்கும் பயணம் செய்து நாம் நேரில் காண வேண்டும்' - இந்த பிரசாரம் பகுகுணாவோடு இமயத்தின் இளைஞர் பட்டாளத்தை பாத யாத்திரையில் தங்களை இணைத்துக் கொள்ளத் தூண்டியது. ஏராளமான இளைஞர்கள் தன்னெழுச்சியாக பகுகுணாவின் பின் வந்தனர். இந்த இளைஞர்களின் மனதில் மட்டுமல்லாது வாழ்வியலிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன.
 சுற்றுலா வளர்ச்சி என்ற நோக்கில் சிதைக்கப்படும் இயற்கை, கட்டப்படும் கட்டடங்கள் இமயத்தின் எழிலை நிரந்தரமாய் நீக்கிவிடும் என்று தொடர்ந்து சொல்லிவந்தவர். தெஹ்ரி அணை கட்டுவதற்கு எதிராக கடுமையாகப் போராடிய அவரது போராட்டங்களைத் தாண்டி அரசு அந்தத் திட்டத்தைக் கைவிட மறுத்தபோது தனக்கு அரசு வழங்க முன்வந்த பத்மஸ்ரீ விருதை 1981-இல் மறுத்தார்.
 1996-இல் தெஹ்ரி அணை கட்டுவதற்கு எதிராக உண்ணா நோன்பினைத் தொடங்கினார். 84 நாள்கள் வரை உண்ணா நோன்பு தொடர்ந்தது. அலக்நந்தா நதியில் ஏற்பட்ட வெள்ளத்தை முன்னிட்டு மலைப்பிரதேசத்தில் மரங்கள் காக்கப்பட வேண்டியதன் அவசியத்தை 1970-களில் பிரசாரமாக மேற்கொண்டார்.
 அவரது பேச்சாற்றலும் உண்மைகளை ஜோடனைகள் இன்றி எடுத்துச் சொல்லும் எளிமையும் மக்களின் கவனத்தை ஈர்த்தன. காந்தியவாதி, சுற்றுச்சூழல் ஆர்வலர், செயல்பாட்டாளர் என்பதோடு அவர் பத்திரிகையாளர் என்பதும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.
 மனிதர்கள் ஒருவருக்கொருவர் சார்ந்து வாழவேண்டியவர்கள். மனிதகுலம் இயற்கையோடு சார்ந்து வாழ வேண்டியது. மனித வாழ்வென்பது காடுகளோடும், நதிகளோடும் பின்னிப்பிணைந்ததே. இதை உணராமல் இயற்கையை சிதைப்பது நம்மை நாமே நாசப்படுத்திக் கொள்வதாகும்.
 அத்தகைய தீங்கு, இயற்கை, மனிதர் ஆகிய இரு சாராருக்கும் நிகழாமல் தடுப்பது நம் கடமை என்ற விதையை தன்னை நம்பிய இளம் பிள்ளைகள் மனதில் விதைத்து வளர்த்ததும் சுந்தர்லால் பகுகுணாவின் பெருமைகள்.
 சூழலியல் போராட்டங்களை முன்னெடுத்தவர் என்பது மட்டுமே சுந்தர்லால் பகுகுணாவின் முகம் அல்ல. 1970-களில் மது-க்கு எதிரான போராட்டங்களிலும் ஈடுபட்டு சிறை சென்றவர். இமயத்தில் மதுவோ அதனால் ஏற்படும் கொடுமைகளோ இருக்கக்கூடாது.
 அறத்தோடு தூய பழக்கவழக்கங்களை மேற்கொண்டு செம்மையாக மக்கள் வாழ தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டார். அவரின் ஆரம்பகட்ட செயல்பாடுகள் தனிமனிதரின் அறம் சார்ந்ததாகவே இருந்தன.
 தனிமனித ஒழுக்கத்தை உயிரெனப்பேணிய பெருந்தகை, காந்தியத்தின் பல பரிமாணங்களையும் சமூகத்தில் வேரூன்றச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஆலய பிரவேச போராட்டங்களையும் மேற்கொண்டார்.
 மாநிலமெங்கும் அறவழியில் நெறி பிறழாமல் இதற்கான அகிம்சை முறைப் போராட்டங்கள் பகுகுணாவால் நிகழ்ந்தன. அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையோடு வாழவும், வழிபடவும் ஆசிரமம் ஒன்றையும் அண்ணல் வழியில் நிறுவியிருக்கிறார்.
 2009-ஆம் ஆண்டில் அரசு அவருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கிச் சிறப்பித்தது. இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) ரூர்கி அவருக்கு சமூக அறிவியலுக்கான கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. பெற்ற கணக்கற்ற விருதுகளும், புகழும் மண்ணின் வளமைக்குப் பயன்படட்டும் என்று அர்ப்பணித்த பெரியார் சுந்தர்லால்.
 தனக்கென வாழாமல் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் மட்டுமல்லாது உலகம் உய்ய வழிகாட்டியாக வாழ்ந்தவர். அறநெறிகளும், இயற்கை வழங்கும் கொடையுமே மனித குலத்தின் விலைமதிப்பில்லாத சொத்து. சுந்தர்லால் பகுகுணா தன் வாழ்நாள் முழுதும் இதை நமக்கு உணர்த்த உழைத்திருக்கிறார். 94 வயதிலும் இயற்கை வெல்ல வேண்டுமெனப் போராடியவர் இயற்கை எய்தியிருக்கிறார்.
 இன்றைய உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பகுகுணா, கரோனா கொள்ளை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மே 21-ஆம் நாள் அமரர் ஆகியிருக்கிறார்.
 எத்தனையோ இழப்புகளை இந்தக் கொள்ளைநோய் ஏற்படுத்தியிருக்கிறது என்றாலும் பகுகுணா போன்ற புண்ணிய ஆத்மாக்கள் பிரிவது நம்மை வேதனையில் ஆழ்த்துகிறது. பகுகுணா சொல்லித் தந்த சூழலியல் நெறிகளை உலகம் பின்பற்றியிருந்தால் ஒருவேளை இந்தக் கொள்ளை நோய்கள் நம்மை நெருங்காமல் இருந்திருக்குமோ?
 
 கட்டுரையாளர்:
 ஊடகவியலாளர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com