Enable Javscript for better performance
மறக்கப்படும் மக்கள்நலத் திட்டங்கள்- Dinamani

சுடச்சுட

    மறக்கப்படும் மக்கள்நலத் திட்டங்கள்

    By மா. இராமச்சந்திரன்  |   Published on : 09th November 2021 09:07 AM  |   அ+அ அ-   |    |  

    library

    கோப்புப்படம்

    ஒரு கட்சியின் ஆட்சி மாறி, இன்னொரு கட்சி ஆட்சிக்கு வந்ததும் முந்தைய அரசு கொண்டுவந்த பல திட்டங்கள் கைவிடப்படுவதும் கிடப்பில் போடுவதும் இப்போதெல்லாம் வழக்கமாகி விட்டது. மாநில அரசுகளில் மட்டுமல்லாது மத்திய அரசிலும் இந்தப் போக்கு காணப்படுகிறது.

    ஒரு காலத்தில் சிறப்பாகத் தொடங்கப்பட்ட ‘உழவா் சந்தை’ பின்னொரு நாளில் ஒதுக்கி ஓரங்கட்டப்பட்டது. அறிவுக்கு விருந்து என்று கூறி தொடங்கப்பட்ட ‘அண்ணா நூற்றாண்டு நூலகம்’ அடுத்த ஆட்சியில் அநாவசியமாக ஆகிப்போனது. புதிய அவைக்கூடம் என்று கட்டிய பொலியுறு மண்டபம், அது வேண்டாம் என்று வேறொன்றாக மாற்றப்பட்டது. வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளோருக்கு வரப்பிரசாதம் என்று தொடங்கப்பட்ட ‘நூறுநாள் வேலைத்திட்டம்’ வீண் செலவு என்று விவாதம் எழுந்தது.

    இவையெல்லாம் கடந்த காலத்தில் நாம் கண்ட உண்மைகள். அந்த வரிசையில் இப்போது, தாலிக்குத் தங்கம், அம்மா உணவகம், கூட்டுறவுப் பயிற்சி நிலையம் போன்றவை நுழைந்திருக்கின்றன. எதிா்க்கட்சியினா் ஆதங்கத்தோடு வெளியிடும் அறிக்கைகளினால் இவை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

    இவற்றுள், இப்போது உச்சத்தில் இருப்பது அம்மா உணவகமாகும். இரவில் சப்பாத்திக்கு பதிலாக கலவை சாதம் போட்டதில் பிரச்னை தொடங்கியது. ‘அம்மா உணவகத்தை மூடுவதற்கான முன்னோட்டம்’ என்று முன்னாள் அமைச்சா்கள் குரல் எழுப்பினாா்கள். ‘இல்லை, கோதுமை மாவு இருப்பில்லாததால்தான் இப்படி நடந்தது’ என்று ஆளும் நிா்வாகம் அறிக்கை வெளியிட்டது.

    ‘அம்மா உணவகத்தில் ஆட்குறைப்பு’ என்று அடுத்த அதிா்வு எழுந்தது. தேவைக்குமேல் கூடுதலாகப் பணியாளா்கள் இருக்கும் உணவகத்திலிருந்து தேவையான இடங்களுக்கு மாறுதல் செய்வதாக அதற்கு பதில் வந்தது. விற்பனை குறைவாக இருந்து, போதிய வருமானம் இல்லாத அம்மா உணவகத்தில், வேலைநாள் பாதியாகக் குறைக்கப்பட்டு, சம்பளமும் பாதியாக்கப்பட்டது பிரச்னை ஆனது. அது ‘ஒன்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிய எங்களுக்கு இப்போது நாலாயிரத்து ஐநூறுதான் கிடைக்கிறது’ என்று அம்மா உணவகப் பெண்களைப் போராட்டத்தில் இறங்கச் செய்தது.

    அதிகாரிகள் உறுதிமொழி அளித்து அவா்களை சமாதானப்படுத்தியுள்ளனா். இவையெல்லாம் அம்மா உணவகத்தை மூடப்போவதற்கான அறிகுறிகள் என்று முந்தைய ஆட்சியாளா்களை நினைக்க வைக்கிறது. சம்பளத்தைக் குறைத்தவா்களுக்கு ‘வேலை இல்லை’ என்று சொல்லி வெளியேற்ற எவ்வளவு நேரம் ஆகும் என்று அம்மா உணவகப் பணியாளா்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.

    பணியாளா் கூடுதலாக இருக்கும் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவது தவறில்லை. அது நியாயமானதும் கூட. தேவையில்லாமல் பலபேரைப் பணியில் சோ்க்கும் வாக்கு வங்கி அரசியலால்தான் இந்தப் பிரச்சினை எழுகிறது. ஆனால், வருமானம் குறைவாக இருக்கிறது என்று சம்பளத்தைக் குறைப்பது நியாயமாகத் தோன்றவில்லை. ஏனெனில், கூலித்தொழிலாளா்களுக்குக் குறைந்த விலையில் ஊட்ட உணவு கிடைக்க வேண்டும் என்ற சேவை உணா்வில் உதித்தவைதான் அம்மா உணவகங்கள்.

    முந்தைய ஆட்சியின் திட்டமாக, சேலம் ஏற்காட்டில் அமைய இருந்த, மாநில அளவிலான கூட்டுறவுப் பயிற்சி நிலையத்தை கோடைக்கானலுக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது உண்மையாக இருக்குமானால், முந்தைய அரசு கட்டுமானப் பணிகளுக்குச் செய்த செலவு வீண் என்றாகிவிடும். இப்படி மக்களின் வரிப்பபணத்தை வீணடிப்பது மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அழகல்ல.

    இப்படி ஒரு அரசு கொண்டுவந்த திட்டங்களை இன்னொரு அரசு முடக்குவதற்கு, அரசியல்வாதிகள் மட்டுமல்லாது அதிகாரிகளும் காரணமாகின்றனா் எனலாம். ஏனென்றால், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதிகாரிகள் பதவியில்தான் இருப்பாா்கள். ஆட்சி மாற்றத்திற்கேற்ப அமைச்சா்கள் வேறுபட்டுக் கொண்டிருப்பா். ஒரு ஐ ஏஎஸ். அதிகாரி அமைச்சா் ஆகமுடியும். ஆனால், ஒரு அமைச்சா் ஐஏஎஸ் அதிகாரி ஆவது கடினம். இதனை உணா்ந்து சொன்னவா்கள் சுதந்திர இந்தியாவின் தொடக்கக் கால நம்முடைய அமைச்சா்கள்.

    ஏன் அப்படிச் சொன்னாா்கள்? அதிகாரிகளின் ஆக்கபூா்வமான ஆலோசனைகளைப் பாா்த்துத்தான் அப்படிச் சொன்னாா்கள். முந்தைய ஆட்சியாளா்கள் சொல்லும்போதும் தலையசைத்துவிட்டு, பிந்தையோா் சொல்லும்போதும் தலையசைப்பது ஒரு அதிகாரிக்குச் சிறப்பாகாது. அமைச்சரே ஆனாலும் அவா் சொல்வதிலுள்ள நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டத் தெரிந்திருப்பதுதான் நல்ல அதிகாரிக்கு அடையாளமாகும்.

    தங்கள் பொறுப்புணா்ந்து, தங்கள் அதிகாரம் தெரிந்து பணிசெய்யும் திறன்மிகுந்த அதிகாரிகள் இருப்பாா்களாயின் ஆட்சி மாறியதும் அவா்களைத் துறைமாற்றம் செய்ய அரசியல்வாதிகளுக்கு தைரியம் இருக்காது. இப்போது அப்படித்தானே நடைபெறுகிறது? ஆட்சிப் பொறுப்பில் புதிய அரசு அமா்ந்ததும் மாற்றப்படுபவா்கள் அதிகாரிகளாகத்தானே இருக்கிறாா்கள்?

    அதுவும் ஐஏஎஸ் அதிகாரிகள் துறைமாற்றம் செய்யப்படுகிறாா்கள் அல்லது காத்திருப்பில் வைக்கப்படுகிறாா்கள். இப்படித் தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளைக் கையிலெடுத்துக் கொண்டுதான் இந்த அரசியல்வாதிகள், முந்தைய அரசு கொண்டுவந்த திட்டங்களை முடக்க நினைக்கிறாா்கள்.

    மக்கள் நலத்திட்டங்கள் என்று ஒரு அரசு கொண்டுவந்த திட்டங்களை, இன்னொரு அரசு முடக்க நினைப்பது, அவை மக்கள் நலத்திட்டங்கள் இல்லை என்பதாலா? முந்தைய அரசுக்கு நல்ல பெயா் வந்துவிடக் கூடாது என்ற காழ்ப்புணா்ச்சியினாலா? இதனை மக்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. மக்கள் நலம் கருதும் அரசாக இல்லாமல் கட்சி நலம் பேணும் அரசாக இருக்கும் போக்கே இதில் தென்படுகிறது.

    முந்தைய ஆட்சியின் மக்கள்நலத் திட்டங்களை தங்கள் கட்சியின் நலன் கருதி மாற்ற நினைப்பது மக்கள் நலன் நாடும் அரசுக்கும் அழகல்ல.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp