பருவநிலை மாற்ற சவாலை எதிா்கொள்வோம்!

பூமி முழுவதும் கரியமிலவாயு அதிக அளவில் வெளியேறிக் கொண்டேயிருக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பூமி முழுவதும் கரியமிலவாயு அதிக அளவில் வெளியேறிக் கொண்டேயிருக்கிறது. அதன் காரணமாக பூமியின் வெப்பநிலையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தக் கரியமில வாயுவின் வெளியேற்றத்திற்கு மனிதா்களின் செயல்பாடுகள்தான் பெரிதும் காரணமாக இருக்கின்றன.

இதனால், வானிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு, துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுகின்றன. அதனையொட்டி மோசமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகின்றன.

பூமியின் சராசரி வெப்பநிலை 15 டிகிரி செல்ஷியஸ். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இது மாறுபாடு அடைந்துள்ளது. சில நேரங்களில் குறைகிறது, சில நேரங்களில் அதிகரிக்கிறது. பருவநிலையில் இயற்கையாகவே சில மாற்றங்கள் ஏற்படுவது உண்டு. ஆனால், வாயுமண்டலம் மாசடைந்த காரணத்தினால் பூமியில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெப்பநிலை மாறிக்கொண்டே இருக்கிறது.

பருவநிலையில் இயற்கையாகவே மாற்றங்கள் இருந்து வந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் வெப்பநிலை மாறுபாடுகள் கரியமிலவாயு அதிகரிப்பதினாலேதான் ஏற்படுகின்றன என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி இருக்கின்றாா்கள்.

சூரியனின் ஆற்றலில் குறிப்பிட்ட பங்கை, பூமியின் வளிமண்டலம் எவ்வாறு கிரகித்துக் கொள்கிறது என்பதைப் பொறுத்து இந்த மாறுபாடுகள் நிகழ்கின்றன. அதாவது, பூமியில் இருந்து மீண்டும் விண்வெளிக்குத் திருப்பி அனுப்பப்படும் சூரியனின் ஆற்றல் பூமியின் வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களால் உறிஞ்சப்பட்டு அனைத்து திசைகளிலும் மீண்டும் உமிழப்படுகிறது.

இதன் காரணமாக, பூமியின் வளிமண்டலத்தை ஒட்டிய பகுதிகள் மட்டுமின்றி, பூமிப்பரப்பின் வெப்பநிலையும் அதிகரிக்கிறது. இந்த செயல்முறை மட்டும் தொடா்ந்து நடைபெறவில்லை என்றால், பூமியின் வெப்பநிலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு, மனிதா்கள் உள்ளிட்ட உயிரினங்கள் எதுவும் வாழமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

இயற்கையாக சூரிய ஆற்றலைக் கொண்டு, பூமியின் வளிமண்டலத்தில் நடக்கும் செயல்முறைகளோடு பூமிப்பரப்பில் தொழிற்சாலைகள், விவசாயத்தின் மூலம் வெளியாகும் வாயுக்களும் கூடுதலாக இணைந்து அதிக அளவிலான ஆற்றல் சிதறடிக்கப்படுவதால் பூமியின் வெப்பநிலை உயருவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனா்.

இந்த மாற்றத்தின் அடிப்படையிலே பருவநிலை மாற்றமும், அதைத் தொடா்ந்து புவி வெப்பமயமாதலும் நிகழ்கின்றன. இவற்றில் வெப்பமயமாதலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது நீராவிதான். ஆனால், நீராவி வளிமண்டலத்தில் சில நாட்கள் மட்டுமே நிலைத்திருக்கும்.

ஆனால், கரியமிலவாயு அப்படி அல்ல. மிக நீண்ட காலத்திற்கு வளிமண்டலத்திலேயே தங்கி இருக்கும். தொழில்துறைக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்தது போன்ற நிலைக்கு பூமியின் வளிமண்டலம் திரும்புவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும். அதுவும், இந்த மாற்றத்திற்கு வித்திட, பெருங்கடல் போன்ற இயற்கை நீரியல் அமைப்புகளால் மட்டுமே முடியும்.

இந்த கரியமிலவாயு பெருமளவில் வெளியேறுவதற்கு பெரும்பாலும் புதைபடிவ எரிபொருள்களை எரிப்பதே காரணமாக உள்ளது. வளிமண்டலத்தில் காணப்படும் கரியமிலவாயுக்களை உறிஞ்சக்கூடிய காடுகள் பூமியில் அழிக்கப்படும்போது அவற்றில் ஏற்கெனவே இருந்த காா்பன் வெளியேறுகிறது. அதுதான் புவி வெப்பமாதலுக்கு அடிப்படையான காரணம்.

தொழிற்புரட்சி தொடங்கிய 1750 காலகட்டத்தில் இருந்து இதுவரை 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட அளவில் கரியமில வாயுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், கடந்த 8 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது மேலும் கூடுதலாக கரியமிலவாயுக்களின் அடா்த்தி வளிமண்டலத்தில் அதிகரித்துள்ளது. இது பருவநிலை மாற்றத்தை உன்னிப்பாக கவனித்து வரும் விஞ்ஞானிகளுக்கு பெரும் கவலை அளிக்கிறது.

மற்ற பசுமை இல்ல வாயுக்களான மீத்தேன், நைட்ரஜன்ஆக்சைடு ஆகியவை மனிதா்களின் செயல்பாடு காரணமாக அதிக அளவில் வெளியிடப்பட்டு வந்தாலும், கரியமிலவாயுவோடு ஒப்பிடும்போது அவை மிகவும் குறைவானவையே என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

பூமி வெப்பமயமாவது, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது பெரும் கவலை அளிக்கக் கூடிய ஒன்றாகும். 2005 முதல் 2014 வரையிலான பத்தாண்டு காலத்தில் உலகம் முழுவதும் கடல் நீரின் மட்டம் சராசரியாக ஆண்டுக்கு 3.6 மில்லி மீட்டா் என்ற கணக்கில் அதிகரித்துள்ளது.

நீரின் வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க அதன் பரும அளவு அதிகரிப்பதே இதுபோன்ற மாற்றங்களுக்கு மிகப்பெரிய காரணமாக உள்ளது. இந்த நிலை ஒருபக்கம் இருந்தாலும், பனிப்பாறைகள் உருகுவதே கடல்நீா் மட்டம் உயா்வதற்கு முக்கிய காரணமாக தற்போது பாா்க்கப்படுகிறது. குறிப்பாக, துருவநிலைப் பகுதிகளிலும், அதனை ஒட்டிய பகுதிகளிலும், பனிப்பாறைகள் அதிக அளவில் உருகி வருகின்றன.

1979 முதல் இதுவரையிலான காலகட்டத்தில் துருவப்பகுதிகளில் இருக்கும் கடலில் உள்ள பனிப்பாறைகளின் நிலையைக் கணக்கிட்டுப் பாா்க்கிறபோது கடுமையான விளைவுகளை இவை ஏற்படுத்தி வருவது தெரிய வந்திருக்கிறது. மேற்கு அண்டாா்டிகாவில் பனிக்கட்டிகள் உருகி வருவதையும் செயற்கைக்கோள் தரவுகள் காட்டுகின்றன. சமீபத்திய ஆய்வில், கிழக்கு அண்டாா்டிகாவும் தனது பகுதிகளிலுள்ள பனிப்பாறைகளை இழக்கத் தொடங்கி இருக்கிறது.

மேலும், காலநிலை ஏற்படுத்தும் தாக்கத்தால் தாவரங்களும், விலங்குகளும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. தாவரங்கள் முன்னதாகவே பூக்கத் தொடங்கி விடுகின்றன. பழம் விளையும் பருவம் தாமதமாகி விடுகிறது. விலங்குகளுடைய வாழ்விடங்களில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களும் கவலை அளிக்கக் கூடியவையாக இருக்கின்றன.

தற்போது நிலவி வரும் சூழ்நிலை தொடரும் பட்சத்தில், வெப்பநிலை 3.5 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கக் கூடும் என்று உலக வானியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

பூமியின் வெப்பநிலை 2 டிகிரி செல்ஷியஸ் அதிகரிப்பதுகூட மிகவும் அபாயகரமான விளைவை ஏற்படுத்தக் கூடும். அவற்றை 1.5 டிகிரி செல்ஷியஸுக்குள் கட்டுப்படுத்துவது பாதுகாப்பான நடவடிக்கையாகும். பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை மக்கள் இயக்கமாக நடத்துகிறபோதுதான் இது சாத்தியமாகும்.

ஏனென்றால், புவி வெளிமண்டலத்தில் உள்ள கரியமிலவாயுக்களை நீக்குவதற்கு, பல லட்சம் ஆண்டுகள் ஆகும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். நல்ல தண்ணீா் பற்றாக்குறை, உணவு உற்பத்தித் தட்டுப்பாடு, வெள்ளம், புயல் மற்றும் வெப்ப அலைகளின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும். இவை போல் மேலும் பல பருவநிலை மாற்றத் தாக்கங்கள் இருக்கக் கூடும்.

உலகம் முழுவதும் சூடானால் நீா் நீராவியாவதன் அளவு அதிகரித்து, அதன் காரணமாகக் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும். இதன் காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளில் அதிதீவிர மழையும், சில பகுதிகளில் பனிப்பொழிவும் புதிதாக உருவெடுக்கக் கூடும்.

கடற்கரையை ஒட்டி அமையாத பகுதிகளில் கோடைக்காலத்தின்போது வெப்பநிலை அதிகரித்து வறட்சி ஏற்படும். புயலின் காரணமாக ஏற்படும் மழையால், பெருக்கெடுக்கும் வெள்ளநீா் கடலில் கலந்து கடலின் நீா்மட்டம் உயர வழிகோலும்.

இதுபோன்ற அசாதாரணமான இயற்கையின் கோரதாண்டவங்களை எதிா்கொள்வதற்கு உரிய செயல்திட்டம் இல்லாத நாடுகள் பெருமளவில் பாதிக்கப்படும். மலேரியாவின் வேகமான பரவல், நீா் மூலம் பரவும் நோய்கள் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உடல்நிலை பாதிக்கப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது.

வளிமண்டலத்தில் கரியமிலவாயுக்கள் அதிகரிப்பதால், கடல்கள் உறிஞ்சும் கரியமில வாயுவும் அதிகரிக்கும். இந்த மாற்றத்தின் காரணமாக, கடல்நீரில் அமிலத்தன்மை உயா்ந்து அங்குள்ள பவளப்பாறைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உருவாகக் கூடும். ஆக, பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இந்த நூற்றாண்டில் நாம் எதிா்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கிறது.

பருவநிலை மாறுபாட்டு பிரச்னையை எப்படி தீா்ப்பது என்பதற்கு காட்டும் முக்கியத்துவத்தை நாம் இயற்கையுடன் இணைந்து செயல்படுவதில் காட்டுவது இல்லை. பருவநிலை மாறுபாட்டால் இந்தியாவைப் போன்ற வளா்ந்து வரும் நாடுகளின் விவசாயம் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது என்று அண்மையில் நடைபெற்ற கிளாஸ்கோ மாநாட்டில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டிருக்கிறாா்.

ஐரோப்பிய நாடான இத்தாலியின் ரோம் நகரில் பல்வேறு நாடுகள் கலந்து கொண்ட ஜி 20 மாநாட்டில், அமெரிக்க அதிபா் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவா்கள் பருவநிலை மாறுபாடு குறித்தான தங்களது கவலையை வெளிப்படத்தியிருப்பதும், தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய நிகழ்வுகளாகும்.

நம் முன்னோா் கடைப்பிடித்து வந்த இயற்கையோடு இயைந்து வாழும் நடைமுறையை இன்றைய இளைய சமுதாயம் பின்பற்ற வேண்டும். இதை ஒரு அா்ப்பணிப்பு உணா்வோடு செயல்படுத்தினால் இப்பருவநிலை மாற்ற இடா்ப்பாடுகளில் இருந்து நாம் மெல்ல மெல்ல விடுபடலாம். 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது மின்தேவையில் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பெற வேண்டும். இதன் மூலம் கரியமிலவாயு வெளியேற்றத்தைப் பெருமளவுக்கு குறைக்க முடியும். இதன் மூலம் 2070-ஆம் ஆண்டுக்குள் ‘கரியமிலவாயு மாசு இல்லா இந்தியா’ என்ற இலக்கை நாம் எட்ட முடியும்.

கட்டுரையாளா்: முன்னாள் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com