மக்களை ஈர்க்கும் மந்திரச்சொல்!

காலங்காலமாக, அரசாங்கத்தின் துறைகள் சார்ந்த நிர்வாக ரீதியான அதிகாரபூர்வ முடிவுகள், விருதுகள், இன்னபிற அறிவிப்புகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்பவை அரசாணைகள்தான்.
மக்களை ஈர்க்கும் மந்திரச்சொல்!

காலங்காலமாக, அரசாங்கத்தின் துறைகள் சார்ந்த நிர்வாக ரீதியான அதிகாரபூர்வ முடிவுகள், விருதுகள், இன்னபிற அறிவிப்புகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்பவை அரசாணைகள்தான். அத்தகைய அரசாணைகள் என்பவை பழைய அரசாணையைப் புதுப்பிக்கும், தேவையெனில் புதியதொரு அரசாணையாக உருவெடுக்கும். 

அப்படி மக்களிடத்தில் புழங்கும் அரசாணைகளில் "மந்திரச்சொல்' இடம்பெற வேண்டும். இங்கு மந்திரச்சொல் என்பது மக்களின் மனத்தில் பதிய வைக்கும் அரசாங்கத்தின் அன்புக் கட்டளை ஆகும். 

உதாரணத்திற்கு,  நான்கு ஆண்டுகளுக்கு முன் வெளியான பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அரசாணை ஒன்றில் சில மந்திரச்சொற்கள் இடம்பெற்று இருந்தன. அதாவது, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்கள் பெயரை அறிவிக்கும் நடைமுறையை ரத்து செய்யும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை. 
அதில் "கற்றல் என்பது தெரிதல், அறிதல், புரிதல், பயன்படுத்தல், வினவுதல், திறனடைதல், புதியன படைத்தல் என்று பல்வேறு நிலைகளில் நடைபெறும் ஒரு அழகிய செயல்பாடாகும். இதில் எழுத்துப்பூர்வமான தேர்வின் மதிப்பெண்களே அதீத முக்கியத்துவம் பெற்று ஒரு சில மாணவர்களே போற்றப்படும் நிலை தவிர்க்கப்பட வேண்டியதாக உள்ளது' என்று அரசாணையில் குறிப்பிட்டு அதற்கு அழகு சேர்த்து இருந்தார் அப்போதைய பள்ளிக்கல்வித்துறை செயலாளர். 

எனவே இதுபோன்று கனிவுடன் அதே சமயம் சமூகத்தில் புரிதலை ஏற்படுத்தும் வார்த்தைகளை உள்ளடக்கியதாக அரசாணைகள் உருமாற வேண்டும். அப்படி உருமாறினால் இந்த சமூகம் அதனை கூர்ந்து கவனிக்கும். 
அதற்கு சற்றே பின்னோக்கி செல்ல வேண்டும். அரசாணைகளுக்கு பதிலாக கடிதங்களை முன்வைத்து அலசினால் "மந்திரச்சொல்' எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது என்பது புரிய வரும். காலத்தின் வழி நடக்கும் நிகழ்வுகளைப் பதிவு செய்து கொண்டதில் கடிதங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஏனென்றால், அவை அன்பு, மகிழ்ச்சி, துக்கம், ரகசியம், வாழ்த்து என பல சுவைகளையும் வரலாற்றில் பரிமாறி உள்ளன. 

தந்தை - மகள் வழி கடிதங்கள் என்றால் சட்டென ஞாபகத்திற்கு வருபவர்கள் பண்டித நேருவும் இந்திராவும்தான். ஆம், நேரு ஆமதாபாத்தில் இருந்து முசெüரியில் இருக்கும் தனது பத்து வயது மகள் இந்திராவிற்கு எழுதிய கடிதங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. 

அக்கடிதங்களை எழுதத் தொடங்குமுன், "மகளே நான் எழுதப்போகும் கடிதங்களில், நமது பூமியின் கதை, இந்தப் பரந்த பூமியில் சிறியதும், பெரியதுமாக பரவி இருக்கும் எண்ணற்ற தேசங்களின் கதைகள், அவை ஒன்றில் இருந்து மற்றொன்றாக எவ்வாறு வேறுபடுகிறது என்பனவற்றை எல்லாம் கதைகளாக உனக்கு எழுத இருக்கிறேன்' என்பதில் கற்றலின் மந்திரச்சொல்லை எடுத்துக் கூறி இருந்தார். 
அதுவே பின்னாளில், இந்திரா காந்தியின் ஆழமான புத்தக வாசிப்பிற்கு அடித்தளம் இட்டதுடன் அவரை பல கோணங்களிலும் சிந்திக்க வைத்தது. இங்கு மகளுக்கு உண்டான மந்திரச்சொல்லை மிகச் சரியாக ஒரு தந்தை தன் கடிதங்கள் மூலம் பதிவு செய்துள்ளார் என்பதை வரலாறும் தன்னகத்தே பதிய வைத்துக் கொண்டது. 

பொதுவுடைமை கருத்தியல் கோட்பாட்டை உருவாக்கிய காரல் மார்க்ஸ், தன் மனைவி ஜென்னிக்கு எழுதிய கடிதத்தில் "இனிவரும் நூற்றாண்டு அனைத்துக்கும் ஜென்னி என்றால் காதல்; காதல் என்றால் ஜென்னி' என்று குறிப்பிட்டிருந்தார். இருவருக்குமிடையே திளைத்திருந்த அன்பை மந்திரச்சொல்லாக சுமந்து சென்றவை அக்கடிதங்கள்தான். 
பகத் சிங் சிறையில் இருக்கும்போது பஞ்சாப் மாகாணத்தின் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் "இந்திய விடுதலைப் போராட்டம் இந்திய மக்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போர். நாங்கள் போர்க்கைதிகள். எங்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்ட காரணமும் நாங்கள் அரசுக்கு எதிராக போர் தொடுத்ததாகத்தான் கூறுகிறது. 

எங்களை போர்க்கைதிகளுக்கு தண்டனை கொடுப்பது போல துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுங்கள்' என தன் மனத்தில் குடியிருந்த வீரத்தை மந்திரச்சொல்லாக இந்நாட்டிற்கு  எடுத்துச் சொன்னார். இப்படி ஒவ்வொரு நிலையிலும் பல அரிய செயல்களை மந்திரச்சொற்கள் நிகழ்த்தி உள்ளன. 
இந்த வரிசையில் தற்போதைய தலைமைச் செயலாளர், மாவட்ட அளவிலேயே மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதத்தில் "பொதுமக்கள் கனவுகள் நிறைந்த கண்களோடும், கவலைகள் நிறைந்த இதயத்தோடும் காத்திருப்பதைப் பார்க்கும்போது மனம் கனக்கிறது' எனும் வலிகள் நிரம்பிய மந்திரச்சொல் மூலம் அறிவுறுத்தி இருந்தார். 

அதேபோல் குப்பையில் கண்டறிந்த நூறு கிராம் எடைகொண்ட தங்க நாணயத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவுப் பணியாளர் மேரியை பாராட்டி எழுதிய கடிதத்தில் "குறுக்கு வழிகள் எல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை என்பதற்கு நீங்கள் சான்று' என்ற தூய்மையின் மந்திரச்சொல்லை சுட்டிக்காட்டி இருந்தார்.

இப்படி கடிதங்கள் வழியே மக்களிடத்தில் மந்திரச்சொல்லை விதைத்தவர்கள், விதைத்துக் கொண்டிருப்பவர்கள் இன்னமும் வரலாற்றில் இடம்பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் மக்களின் மனங்களில் குடிகொண்டு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றாக அரசாணைகள் பொலிவுடன் வலம்வர மந்திரச்சொல்லை அரசு பயன்படுத்த வேண்டும். 
என்றுமே அரசாங்கத்தின் கூற்றுக்கோ அல்லது அரசாணைக்கோ மக்கள் அனைவரும் அவ்வளவு எளிதாக மதிப்பளித்துவிட மாட்டார்கள். அதனை எதிர்ப்பவர்கள், ஆதரிப்பவர்கள் என இருவேறு மனநிலை கொண்டவர்கள் உண்டு. அவர்கள் இருவரையும் சமரசத்துடன் ஒத்துப்போக வைக்க வேண்டுமெனில் அதில் அனைவரும் உணரும் வகையில் மந்திரச்சொல் இடம்பெற வேண்டும். மேலும் அந்த மந்திரச்சொல் என்பது இயல்புடன் சமூகத்தில் உறவாடி உலா வரவேண்டும்.  

ஆகவே, இனி வரும் காலங்களில் அரசாணைகளில், அரசுக் குறிப்பு அல்லது செய்தி  போன்றவற்றில் மந்திரச்சொல்லை உபயோகப்படுத்த அரசு அதிகாரிகள் முன்வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com