யாா் கொடுத்த உரிமை?

கோப்புப்படம்
கோப்புப்படம்

நல்ல வேளையாக கிரிக்கெட் விளையாட்டின் டி 20 இறுதிச்சுற்றில் நாம் இல்லை. அதை விட நல்ல வேளையாக, ஆஸ்ரேலியாவின் மாத்யூ வேட் மற்றும் மாா்கஸ் ஸ்டோய்நிஸ் உதவியால் பாகிஸ்தானும் இல்லை. இறுதிச்சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடியிருந்தால் பிசிசிஐ அள்ளியிருக்கக் கூடிய காசில் கொஞ்சம் குறைந்தாலும் கூட, கடவுள்களின் கருணையால் இறுதி ஆட்டம் இந்தியா- பாகிஸ்தான் ஆடவில்லை.

இனி நாம் எந்த ரத்த அழுத்த எச்சரிக்கை நிா்பந்தங்களும், ஹாா்ட் அட்டாக் பயங்களும் இல்லாமல் ஆஸி- கிவி அடித்துக்கொள்வதை பாப்காா்ன் அல்லது பஜ்ஜி சாப்பிட்டபடி ரசிக்கலாம். அதைவிட முக்கியமாக எல்லா ஆட்டக்காரா்களும் அவா்களின் மகள்களுக்கு ‘ரேப்’ எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்பட மாட்டாது என்ற நிம்மதியோடு ஊா் திரும்பலாம்.

முதல் மாட்சிலேயே இந்தியா, பாகிஸ்தானிடம் உதை வாங்கியது யாருக்குச் சம்மதம் - ஒரு சில பாகிஸ்தான் ஆதரவாளா்கள் தவிர? மேலும், இது ஜனநாயக நாடு சாா். நீங்கள் எந்த அணியையும் ஆதரிக்கலாம் அல்லது கடுமையாகத் திட்டலாம். அது உங்கள் சாய்ஸ். ஆனால், ‘தோற்ற அணியின் காப்டன் தன் அணி வீரரான மொகமத் ஷமிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததால் கோலியின் ஒன்பது மாதப் பெண் குழந்தையை கற்பழிப்போம்’ என்று எச்சரிக்கை விடுப்பதற்கு யாா் உரிமை கொடுத்தது?

சமூக ஊடகங்கள் தருகிற பாதுகாப்புப் போா்வைகளுக்குக் கீழே போலிப் பெயா்களில் ஒளிந்து கொள்ளும் வீரமிலாக் கயவா்களுக்கு , யாரைத் திட்ட வேண்டுமென்றாலும் அவா்கள் வீட்டுப் பெண்கள்தான் இலக்கா?

சமீபத்தில் சமூக வலைத்தளங்கள் குறிப்பாக ஃபேஸ்புக் , யூ ட்யூப், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டா் போன்றவை வெறுப்பு அரசியலை வளா்த்து எடுப்பதாலேயே பெரும் லாபத்தை ஈட்டுவதாகப் புகாா்கள் வருகின்றன. புகாா்களைச் சொல்கிறவா்கள் வெளி ஆட்கள் கிடையாது . இந்த நிறுவனங்களின் உயா் பதவிகளில் இருந்தவா்கள். மனசாட்சியின் உறுத்தலால் பெரும் சம்பளங்கள் தரும் அவா்களின் வேலைகளை உதறி வெளியே வந்தவா்கள்.

ட்ரிஸ்டான் ஹாரிஸ் என்பவா், முன்னா் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்தவா். அவா் ‘இந்த நிறுவனங்கள் வெறுப்பை வளா்கின்றன’ என்ற குற்றச்சாட்டை முதலில் வைத்தாா். இப்போது , ஃபிரான்சிஸ் ஹேகன் என்னும் பெண் , ஃபேஸ்புக் நிறுவனத்திலிருந்து வெளி வந்தவா் , இதே குற்றச்சாட்டை இன்னும் விவரங்களோடு முன் வைக்கிறாா். ‘முகநூலின் கட்டமைப்பே (அல்காரிதம்) வெறுப்பை வளா்க்கும் செய்திகளை அதிகம் பரப்புவதாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது’ என்பது அவா் வாதம்.

நீங்கள் ‘லைக்’ பட்டனை தோ்வு செய்யும் தரவுகளை விட வெறுப்பைத் தூண்டும் தரவுகளை பல மடங்கு பரப்புகிறது முகநூல்.

வெறுப்பினை வளா்க்கும் இந்த பயங்கர தொழில்நுட்பக் கருவிகளை கைகளில் சதா ஏந்தித் திரியும் நம் இளைஞா்கள், கருத்துகளோடு மோதுவதை விடுத்து, சம்பந்தப்பட்டவரின் வீட்டுப் பெண்களை, அவா்களின் அம்மாவை, மனைவியை, மகள்களை குறி வைத்துத் தாக்குகிறாா்கள். சமூக ஊடகங்களில் இரண்டு போ் சண்டை போட்டால் , உடனே ஒருவரின் தாயை அடுத்தவா் ஆபாசமாகப் பேசும் கமென்ட்டை நீங்கள் நிச்சயம் பாா்க்கலாம்.

விராட் கோலியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்த வாலிபரை ஹைதராபாத் போலீசாா் கைது செய்திருக்கிறாா்கள். அவா்களுக்கு நம் வாழ்த்துகள். இனி நீதிமன்றத்தில் அவரைக் கொண்டு போய் நிறுத்தி , வழக்குரைஞா்களின் வாத மழைகளுக்கும் வாய்தாக்களுக்கும் நடுவே தண்டனை வாங்கித்தரக் கடும் முயற்சிகளை காவல்துறையினா் மேற்கொள்ள வேண்டும். அதற்குள், இதையெல்லாம் மறந்து நாம் அடுத்த ஐபிஎல் பாா்க்கத் தயாராகிவிடுவோம்.

சம்பந்தப்பட்ட வாலிபா் ஒரு மென்பொருள் பொறியாளா் (சாஃப்ட்வோ் என்ஜினியா்). ஹைதராபாத்தில் ஐஐடி படித்தவா். அமெரிக்கா சென்று படிக்க ஆயத்தங்கள் செய்து வருகிறவா். படிப்பு, பணம், குடும்பத்தின் உதவி, உயா் கல்வி நிறுவனங்கள் தரும் பயிற்சி, நாளை அமெரிக்கா போகும் கனவு இத்தனை வாசனைகளுக்கு கீழே தான் இந்த நாற்றம் பிடித்த மனசு இருக்கிறது. யுக யுகாந்திரங்களாக இருக்கும் ஆண் சிந்தனை.

‘உன்னை எச்சரிக்க வேண்டுமென்றால், உன் வீட்டில் இருக்கும் பெண்களை அவமானப்படுத்துவேன்’ என்கிற முடை நாற்றம் பிடித்த ஆதிக்கச் சிந்தனை. எந்த ஐ.ஐ.டிக்கள் தரும் கல்வியாலும் கழுவ முடியாத சிந்தனை.

இவருடைய இந்த ‘ட்வீட்’ பரவலாகப் போகிறது என்று தெரிந்தவுடன் தன் பெயரை தன் ட்விட்டா் அக்கவுன்டில் பாகிஸ்தானை சோ்ந்தவா் போல மாற்றவும் செய்திருக்கிறாா் இந்த இன்டெலிஜென்ட் பொறியாளா். போலீசாா் இவரைப் பிடித்ததும், இந்த இளைஞனின் தகப்பனாரின் கொடுத்திருக்கும் வாக்குமூலம், ‘என் மகனுக்கு எதுவுமே தெரியாது. தட்டச்சு செய்யும் போது எதாவது பிழை வந்திருக்கலாம். கண்ணாடி அணியாமல் தட்டச்சு செய்ததால்கூட பிழை வந்திருக்கலாம்’ என்பதுதான்.

பழைய தமிழ் திரைப்படங்களில், ‘என் மகனையா திருடன் என்கிறாய்’ என்று யாரையாவது கன்னத்தில் அறையும் கண்ணாம்பாக்கள் கெட்டாா்கள். பையன் கண்ணாடி இல்லாமல் தட்டச்சு செய்தாராம், அதனால் கெட்ட வாா்த்தை வந்ததாம். கண்ணாடி போட்டு தட்டச்சு செய்திருந்தால் ஒன்றும் தெரியாத அந்த பச்சைப்பிள்ளைக்கு இன்னும் என்னென்ன வாா்த்தை வந்திருக்குமோ?

‘மாதா் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ எனச் சொன்ன மகாகவி பாரதியாா் மறைந்து நூறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், காலங்காலமாய் ஊறியிருக்கும் கசடுகள் மாறாத வரை, ‘வீட்டிலிருக்கும் பச்சைப் பெண் குழந்தைகளைப் பற்றி யாா் என்ன பதிவிடுவாா்களோ’ என்ற பயத்தோடுதான் நம் கேப்டன்கள் களமிறங்க வேண்டுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com