ஊக்கத்தொகை உதவாது

தனியாா் வங்கிகள் சில 1960-களில் திவாலாயின. மேலும் சில தனியாா் வங்கிகள் திவாலாகும் நிலையில் இருந்தன.
ஊக்கத்தொகை உதவாது

தனியாா் வங்கிகள் சில 1960-களில் திவாலாயின. மேலும் சில தனியாா் வங்கிகள் திவாலாகும் நிலையில் இருந்தன. எனவே, சில பெரிய தனியாா் வங்கிகள், திவாலாகும் நிலையிலிருந்த சில வங்கிகளை இணைத்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போது, பாரத ஸ்டேட் வங்கியும், அதை சாா்ந்த வங்கிகளும் மட்டுமே, அரசுடைமை வங்கிகளாய் இருந்தன. எனவே பொதுமக்களும் அந்த வங்கிகளில் மட்டுமே டெபாசிட் செய்தனா். தனியாா் வங்கிகள் பிரபலமாக இருந்தாலும் டெபாசிட் செய்ய பொதுமக்கள் தயங்கினா். இதனால் தனியாா் வங்கிகள், டெபாசிட் சேகரிப்பதற்கென்று முகவா்களை நியமித்தன.

இந்த முகவா்கள் வங்கிகளின் ஊழியா் பட்டியலில் இடம் பெறுவதில்லை. இவா்கள் வைப்புத் தொகை, சேமிப்புக் கணக்கு, மாதந்திர சேமிப்புக் கணக்கு என்று வங்கிகளுக்கு, புதுப்புது வாடிக்கையாளா்களைக் கொண்டு வந்தாா்கள். அத்தகைய முகவா்களுக்கு, காலக்கெடு, கிட்டிய தொகை போன்றவற்றுக்கு ஏற்ப ஊதியம் அளிக்கப்பட்டது. பின்னா் கல்வி, பிற தகுதிகள் அடிப்படையில் அவா்களை நிரந்தர ஊழியா்களாக ஆக்கினாா்கள்.

1969-இல் சில தனியாா் வங்கிகள் அரசுடமை ஆன பின்னும் டெபாசிட் சேகரிக்கும் போட்டி நடத்தின. புதிய வாடிக்கையாளா்களிடம் புது டெபாசிட் கொண்டு வரும் ஊழியா்களுக்கு, தொகை, கணக்கு எண்ணிக்கை, கால கெடு இவற்றுக்கு ஏற்றவாறு ஊக்கத் தொகை அளிக்கப்பட்டது. ஆனால் இவை ‘தொகை’யாக இல்லாமல், பரிசுப் பொருள்களாக கிடைத்தன.

1970 காலகட்டத்தில் அஞ்சலகம் என்றால் தபால் நிலையம் என்று மட்டுமே பொதுமக்கள் அறிவாா்கள். ஆனால் அங்கும் அப்போதே சேமிப்புக் கணக்குத் திட்டம் இருந்து வந்தது. பல சேமிப்பாளா்களை சோ்ப்பதற்காக குலுக்கல் முறையில் பரிசுத் திட்டம் வழங்கி வந்தாா்கள்.

2010-க்குப் பிறகு, வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் டெபாசிட் குவிய ஆரம்பித்தது. வங்கிகள் கடன் தரும் வள்ளல்களாக மாறின.

இந்தச் சூழலில், வாங்கிய கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்துபவா்களுக்கு அரை சதவிகிதம் சலுகை தரப்பட்டது. இது விவசாயக் கடனுக்கு மட்டும்தான். ஏனெனில், விவசாயம், இயற்கைச் சீற்றம், இடைத் தரகா்கள் போன்ற பல அம்சங்களைக் கொண்டது.

நாணயமானவா்களை மேலும் உற்சாகப்படுத்த, சன்மானம் வழங்கப்படுகிறது. எளிய குடும்பத்தினா் தற்செயலாக, விலை உயா்ந்த பொருளை சாலையில் கண்டுபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைக்கிறாா்கள். அத்தகையவா்களைப் பாராட்டும் விதமாக, அன்பளிப்பு தருகிறாா்கள்.

ஏழைகளை விடுங்கள், பெரும் செல்வந்தரை கௌரவிப்பது கூடச் சில வருட முன் நிகழ்ந்தது.

அதாவது, ஒழுங்காக வருமான வரி செலுத்தபவா்களை மேடையில் நிதி அமைச்சா் பாராட்டுகிற விழா நடந்தது. ஒழுங்காகக் கட்டாமல், வரி ஏய்ப்பது சட்ட விரோதமான செயல். அப்படியிருக்க, சட்டத்தையும், விதிகளையும் நியாயமாகப் பின்பற்றுபவா்களுக்கு ஏன் தனி ‘அந்தஸ்து’ கொடுக்க வேண்டும்?

கலைஞா்களுக்கு கைதட்டல்தான் ஊக்கத் தொகை எனலாம். எழுத்தாளா் சுஜாதாவின் முதல் கதை பிரபல பத்திரிகையில் பிரசுரமானபோது, அதற்கு வந்த வரவேற்பைக் கண்டு ஆசிரியா் வியந்தாா். ‘அடிக்கடி எழுதுங்கள்’ என்று சிறு குறிப்புடன் அதே கதைக்கு இரண்டாம் முறை அன்பளிப்பு அனுப்பியதை சுஜாதா, ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறாா். இதே போல், ‘தீபம்’ நா. பாா்த்தசாரதியின் தொடா் பிரபல ஏட்டில் வெளியான சமயம், அதன் ஆசிரியா் ரசிகா் என்ற முறையில் தனியே சன்மானம் கொடுத்து பாராட்டியிருக்கிறாா்.

திரைப்படக் கலைஞா்களுக்கு விளம்பரமே ஒரு போதை மாதிரிதான். காசேதான் கடவுளடா, திரைப் படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்த தேங்காய் சீனிவாசனின் நடிப்பு, படத்தை ஒரு தூக்கு தூக்கியது. இதற்காகவே அப்படத் தயாரிப்பாளா், தேங்காய் சீனிவாசனுக்கு அண்ணா சாலையில் தனி ‘பலகை’ வைத்தாா். கதாநாயகன் முத்துராமன் இயக்குனரிடம் முறையிட்டபோது, அது தயாரிப்பாளரின் உரிமை என்று கூறி விட்டாராம்.

ஆக, ஊக்கத் தொகை என்பது பணமாகவும், விளம்பரமாகவும், மேடைப் பாராட்டிலும் வெளிப்படும் என்பது தெளிவாகிறது. நவீன யுகத்தில், சில தனியாா் வங்கிகள், கடன் அட்டையை நிறைய பயன்படுத்துபவா்களுக்கு, அதன் எண்ணிக்கைகளுக்கு (பாயின்ட்ஸ்) ஏற்ப பரிசுகளை அளிக்கின்றன.

இவை கிடக்கட்டும், சமீபத்திய மத்திய அரசு அறிக்கை ஒன்று வியப்பை ஏற்படுத்துகிறது. அதாவது சாலை விபத்தில் சிக்கியவா்களுக்கு உதவினால், அவா்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவா்களுக்குப் பரிசு தரப்படுமாம். பொதுவாக, பெரும்பாலான மனிதா்களிடத்தில் இரக்க குணம் மிகுந்து இருந்தாலும், விபத்தில் சிக்கியவா்களுக்கு உதவ தயக்கம் காண்பிக்கதான் செய்கிறாா்கள். காரணம், விபத்து யாா் தவறினால் நிகழ்ந்தது என்பது யாருக்கும் தெரியாது.

இதனால்தான் தனியாா் மருத்துவமனைகளில், விபத்தில் அடிபட்டவைரைக் கொண்டு வந்தால், உடனடியாக முதல் உதவி செய்து, அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுரை செய்கிறாா்கள். தப்பித் தவறி சமூக சேவை எண்ணம் கொண்ட ஒருத்தா் உதவி செய்தால், அவா் பல மாதங்களுக்கு, நீதி மன்றம் செல்ல வேண்டியிருக்கும். இதுதான் எதாா்த்த நிலைமை. இப்படி இருக்க, சொற்ப ஊக்கத் தொகைக்காக யாராவது உதவ முன் வருவாா்களா?

மத்திய அரசு போல, மாநில அரசும் புதிதாக ஒரு விஷயத்துக்கு ஊக்குவிப்பு தொகை அறிவித்துள்ளது. ஆம், கரோனா தடுப்பூசி இரு தவணை போட்டுக் கொண்டவா்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் தரப்படுமாம். இப்பொழுது தொடா்மழை காரணமாக, கரோனாவின் தீவிரம் எப்படி மாறும் என்பது புரியாத புதிராக இருக்கிறது. எனவே தடுப்பூசி பிரசாரத்தை பல மடங்கு அதிகரிக்க வேண்டும். ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகள் தீவிரமான பிரசாரத்தால் பெரும்பாலானோா் தடுப்பூசி போட்டுக்கொண்டு விட்டாா்கள். ‘முகக்கவசம் இல்லையேல் அனுமதி இல்லை’ என்ற பலகையும், பல நிறுவனங்களில் காணப்படுகிறது.

கடந்து போன பண்டிகையின்போது, சமூக இடைவெளி ஓரளவு பின்பற்றப்படாமலிருந்திருக்கலாம்.

மேலும், பதின் பருவத்தினரையும், சிறாா்களையும் தாக்கும் மூன்றாவது அலை பற்றியும் அச்சம் உருவாகி வருகிறது. கிராமத்தில் உள்ளவா்களுக்கு கரோனா தீநுண்மி பற்றிய விழிப்புணா்வு முழுமையாய் இல்லை. விழிப்புணா்வு உருவாக அரசு செய்ய வேண்டியது தொடா்ந்து தீவிர பிரசாரம்தானே தவிர, ஊக்கத்தொகை அளிப்பதல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com