வான்மழையை வரமாக்குவோம்!

வான்மழையை வரமாக்குவோம்!

மண் நிறைந்தது நிலம். நிலத்துக்கு நேரெதிர் வெளியானது வானம். அந்தப் பரந்த வெளியில் சுழன்று வருவது காற்று. காற்றின் துணையோடு பற்றி எரிவது நெருப்பு. நெருப்புக்கு முரணாகவும் அதே வேளையில் காற்றினுடைய பிரதியாகவும் விளங்குவது நீர். இவ்வாறு ஐம்பெரும் பூதங்களின் ஒத்த மாறுபட்ட பண்புகளால் இயற்கை சமைந்து உலகம் என்னும் பருப்பொருள் தோன்றியது.
 ஐம்பெரும்பூதங்களில் ஒன்றாகவும் ஏனைய நான்கு பூதங்களைத் தழுவியும் உள்ள ஒன்று நீர்தான். நிலத்தில் பல்வகை இடங்களுக்கேற்ப பல்வகை நிலைப் பெயர்களைப் பெறும் அதன் பொதுப்பெயர் நீர். பரந்த கடலிடை அலைந்து பரவும் நீரைச் சூரியன் தன் வெம்மைக் கதிர்களால் உறிஞ்சி அதுவே காற்றோடு கலந்து ஆவியாகி வான்நோக்கிச் செல்கிறது.
 மீண்டும் நிலத்தின் குளிர்ந்த காற்றினால் தழுவப் பெற்றுப் புவிக்குத் திரும்புகிறது. இதற்கு மழை என்று பெயர். ஆண்டாள் நாச்சியார் தனது திருப்பாவை நான்காம் பாசுரத்தில் இந்தச் சுழற்சியை அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். மீண்டும் நிலத்தில் நீருக்குப் பல நிலைகள்.
 இப்படி வானுக்கும் நிலத்துக்கும் இணைப்புப் பாலமாகவும் காற்றுக்குள் பொதிந்தும் நெருப்புக்குள் படர்ந்தும் தழுவி வாழும் தன்மையுடையது நீர். குளிர்மை பொருந்தியதால் பொதுவாகத் தண்ணீர் என்றும் வெம்மை நிறைந்த வேளையில் வெந்நீர் எனவும் தன்மைக்கு ஏற்பப் பெயர் பெறுகிறது. இவ்வுலகின் புனிதப் பொருள்கள் யாவும் நீர்மைத் தன்மை உடையனவேயாகும். உயிர்களின் இயக்கத்திற்குக் காரணமாகிய இரத்தத்தையும் செந்நீர் என்றே அழைப்பர். ஆற்றுநீர், ஊற்று நீர், வேற்றுநீர் ஆகிய மூன்றும் சேர்வதால் கடல்நீர் முந்நீர் எனப்படும்.
 "இனிமையும் நீர்மையும் தமிழென லாகும்' என்கிறது பிங்கல நிகண்டு. எவ்விதப் பேதமுமின்றி யாவரொடும் கலந்து விடும் நீரைப் போன்ற பண்புடையவன் ஆதலின் பாரியைக் கபிலர் "நீரினும் இனிய சாயலன்' என்று போற்றிப் பாடுகிறார். கடவுட் குணத்திற்கு நிகரான காதலுணர்வுடைய அன்பு நெஞ்சங்களை செம்புலப் பெயல்நீரை உவமையாகக் கொண்டு இரண்டறக் கலக்கச் செய்கிறார் சங்கப் புலவர். நீரின் பெருமை சுட்டும் இந்த அற்புதமான உவமையால் அவருக்கும் "செம்புலப் பெயல்நீரார்' என்பதே பெயராக அமைந்து விட்டது.
 இப்படிக் கணக்கிலடங்காத பெருமையுடைய நீரைக் கடவுளுக்கு இணையாக வைத்துத் திருவள்ளுவர் திருக்குறளில் வான்சிறப்பு என்று போற்றுகிறார்.
 நெருப்பின் சிறப்பு மேல்நோக்கி- வான்நோக்கிச் செல்வதென்றால் நீரின் சிறப்பு வானிலிருந்து கீழ்நோக்கி வருவதாகும். அதனாலேயே வான்மழை அமிழ்தத்திற்கு ஒப்பானதாகிறது. அதுபோலவே நிலத்திலும்கூட மேடான இடத்திலிருந்து பள்ளத்தை நோக்கிச் செல்வதும் நீரின் இயல்பாகும். நீர் எப்போதும் சமத்தன்மை உடையது. அதனாலேயே அந்தச் சமத்தன்மையைக் கடவுட் குணமாக்கிப் போற்றிக் கடவுள்வாழ்த்தைத் தொடர்ந்து வான்சிறப்பைப் பாடுகிறார் தெய்வப்புலவர்.
 தாவரங்களும் விலங்குகளும் நிறைந்த இந்த உலகத்தின் அனைத்து உயிர்களுக்கும் தானே உணவாகவும் உணவை உற்பத்தி செய்ய உதவியாகவும் விளங்குவது வான்மழையேதான்.
 விசும்பின் துளி வீழாத போதிலே இவ்வுலகத்தில் பசும்புல் கூடத் தலை நிமிர்த்தாது என்றும், பரந்து விரிந்திருக்கக் கூடிய கடலும் கூடத் தன்னுடைய நீர்மைத் தன்மையை இழந்து விடும் என்றும் உணர்த்துகிற வள்ளுவர் பெருமான் வான்மழை இல்லாது போனால் இந்த உலகத்தில் கடவுள் வழிபாடுகளும் அறச்செயல்களும் கூட நின்று விடும் என்று எச்சரிக்கவும் செய்கிறார்.
 எல்லா உயிர்களையும் வாழ்விக்கிற இந்த வான்மழைக்கு மற்றொரு குணமும் உண்டு. அது அளவு குறைந்து பெய்யாது கெடுப்பதும் அளவின் மிகுந்து பெய்து கெடுப்பதுமாகும். இவ்வாறு கெடுத்தாலும் தன்னால் கேடு அடைந்தவர்களை மீண்டும் காக்கும்பொருட்டுச் சார்வாய் விளங்குவதும் அதே மழைதான் என்பது வள்ளுவருடைய தீர்ப்பு.
 உழவைத் தலைத்தொழிலாகக் கொண்டு வாழும் கிராம வாழ்க்கைக்கு மழை எத்தனை உயரிய வரம் என்பதை யாவரும் அறிவர். மலைமீதிருந்து அருவியெனப் பெருகிவரும் ஆற்றினை அணைகட்டித் தடுத்துக் குளம், ஊருணி, கண்மாய், ஏரி என்று பலநிலைகளில் தேக்கிப் பயன்படுத்துவதில் உழவர் குடிமக்கள் பெரும் ஈடுபாடு காட்டுவர்.
 மாதம் மும்மாரி என்பது கணக்கானாலும் ஆண்டுக்கு இருமுறை பெய்கிற பருவமழையின் நீரினை முறையாகத் தேக்கிச் சேமித்தால் ஆண்டு முழுவதும் வாழ்க்கைத் தேவைக்கும் உழவுத் தொழிலுக்கும் நிலத்தடி நீர்வளத்துக்கும் பஞ்சமிருக்காது. ஆதலால் உழவுத் தொழில் என்பது தனித்தொழிலாக அல்லாமல் மண்ணும் விண்ணும் சார்ந்து உயர்ந்த வாழ்வாக விளங்கியது.
 நிலவகைப்பட்ட சமூகமே தமிழகத்தில் காலங்காலமாக நிலவி வந்தது. பாலையைத் தவிர்த்த ஏனைய நான்கு நிலங்களும் நிறையப் பெற்றதால் நானிலம் என்ற பெயரே அமைந்தது. ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய வகைமையில் நிலத்தொடு நீர் இணைந்தே இருந்தது. "உணவெனப்படுவது நிலத்தொடு நீரே நீரும் நிலனும் புணரி யோர்ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசி னோரே' என்கிறது குடபுலவியனாரின் புறநானூற்றுப் பாடல். நிலத்தையும் நீரையும் காலத்தொடு வைத்துக் கணக்கிட்டனர் நம் முன்னோர்.
 இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று ஆண்டிற்கு ஆறுபருவங்கள் உள்ளன. எல்லாவுயிர்க்கும் வான்மழையின்றி வாழ்வில்லை. அதனால்தான், "வான்நோக்கி வாழும் உலகெல்லாம்' என்றார் திருவள்ளுவர். இதற்கு உரை வழங்கிய காலிங்கர், "மழை நமக்கு உளது என்று அதனைக் குறிக்கொண்டு அஞ்சாது வாழும் உலகம்' என்றார்.
 பண்டைக்கால நகரங்கள் ஆறுகளாலேயே சிறப்புப் பெற்றன. பாண்டியர் தலைநகராம் மதுரைக்கு வையையும், முற்காலச் சோழர்களின் தலைநகராகிய புகாருக்கும் பிற்காலத்தைய தலைநகரங்களாகிய உறையூர், தஞ்சை ஆகியவற்றுக்குக் காவிரியும் சிறப்புச் சேர்த்தது. இவை தவிர, பல்லாறுகள் தமிழகத்தில் நீர்ப்பெருக்கெடுத்து வளங்கொள ஓடியிருப்பதை,
 "காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
 கண்டதோர் வையை பொருநை நதி - என
 மேவிய யாறு பலவோடத் - திரு
 மேனி செழித்த தமிழ்நாடு'
 என்று பாரதியார் பாடியதன்வழி அறிகிறோம்.
 வான்மழை வெள்ளம் அவர் காலத்தில் ஆற்றில் பெருக்கெடுத்து செழிப்பைத் தந்ததாகத்தானே பாடியிருக்கிறார். நம் காலத்தில் மட்டும் அது எப்படி அழிவைத் தந்து நிற்கிறது? காரணம் இடைப்பட்ட காலத்தில் இனிமேல் ஆறுகளால் பயனேதுமில்லை என்று அவற்றைக் கவனிக்கத் தவறியதோடு அவற்றின் வளங்களையெல்லாம் சிதைக்கத் தொடங்கி விட்டோம். எக்காலத்தும் இயல்பாக எதிர்கொள்ளப் பெற்ற வெள்ளம் இப்போது நமக்கே பேரிடராகத் தோன்றி நிற்கிறது.
 இன்றைக்கு அறிவியல் தொழில்நுட்பங்கள் பல்கிப் பெருகியுள்ளன. எப்பகுதியில் எவ்வளவு மழை பொழியக் கூடும் என்பதுவரை முன்கூட்டியே மிகத் துல்லியமாகக் கணிக்க முடியும். ஆனால் என்ன வியப்பு? நகரங்களில் மட்டும் மழை சோகத்தைத் தருகின்ற சாபமாகிப் போகின்றது. ஏன் நகரத்தில் மட்டும் மழை வேண்டாத பொருளா என்ன? இல்லையே. நகரத்து மக்களுக்கும் குடிப்பதற்கு நீர் வேண்டுமே. கிராமங்களில் உழவுத் தொழிலுக்குத் தேவைப்படும் நீரின் அளவைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு நீர் அதிகமாகத் தேவைப்படுகின்றதே.
 கார்காலத்தில் வெள்ளத்தை வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்குகிற நகரம்தான், வேனிற்காலத்தில் அதே நீரை வாகனங்களில் நிறைத்துக் கொண்டு வீதிவீதியாய் அலைகிறது. பருவத்துப் பெய்கிற மழைநீரையெல்லாம் தங்கட்குத் தேவையில்லை என்று கடலில் கலக்க விட்டு விட்டு, உப்புக் கரித்த கடல் நீரைக் குடிநீராக்குவதற்குத் திட்டங்கள் போடுகிறது நம்முடைய அறிவியல் நகர வளர்ச்சி.
 எல்லாக் காலங்களிலும் மழையும் வெள்ளமும் இருக்கத்தான் செய்யும். ஆனால், நிலநடுக்கத்தைப் போலவோ சுனாமி எனப்படும் கடற்கொந்தளிப்பைப் போலவோ மழையும் வெள்ளமும் எப்படிப் பேரிடராகும்? அதிலும் இத்தனை அறிவியல் தொழில்நுட்பங்களைத் திறம்பட இயக்கிப் பயன்பெறுகிற சூழலில் வாழ்கிற நாம் வான்மழையை நமக்கான வரமாக்கிக் கொள்ள முடியாதா என்ன?
 நீர்நிலைகளைக் கடப்பதற்குத்தான் பாலம் என்று பழங்காலத்தில் பெயர். ஆனால் இன்றைய நகரங்களில் வாகனங்கள் கடப்பதற்கே பாலங்கள் அமைந்திருக்கின்றன. வளரும் வேகச்சூழலில் நகரங்களில் பெரிய அளவிலான பரந்த நீர்நிலைகளை அமைப்பதற்கு இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. மக்கட்தொகைப் பெருக்கத்திற்கு ஈடாகவும் அதைவிஞ்சியும் வாகனப் பயன்பாட்டுப் பெருக்கம் அதிகரித்துள்ளது.
 ஆனாலும் பாதாளத்தில் ரயில் வண்டி போகிறது. பாதாளத்தில் சாக்கடை பாய்கிறது. அதைப் போலவே பாதாளத்தில் நீர்நிலைகளையும் நீர்ப்போக்குவரத்தையும் உருவாக்க முடியாதா? வெள்ளம் பெருகுகிற ஆறுகளின் வழிகளைப் புதுக்கியும் மாற்றியும் வறண்ட பகுதிகளுக்கு, பாழ்நிலங்களுக்குக் கொண்டு சேர்க்கக் கூடாதா? இதற்கான நிரந்தரத் திட்டங்களை இயற்றக் கூடாதா?
 பெருநகரங்களில் உள்ள நிலவழிப் போக்குவரத்தைப் போலவும் வான்வழிப் போக்குவரத்தைப் போலவும் நீர்வழிப் போக்குவரத்தையும் ஏற்படுத்தலாமே.
 "நீர்மிகின் சிறையும் இல்லை தீமிகின்
 மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை
 ஒளிமிக்கு அவற்றோரன்ன'
 என்கிறார் ஐயூர் முடவனார்.
 நீர்மிகும் இச்சிறை, நகரங்களுக்குச் சாபமென்றால் நமது அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளால் அதே நீரைச் சிறைக்கொண்டு விட்டால் வரமாகி விடாதா?
 பழமை என்று மரபை, இயற்கையை இழந்து விட்டுப் புதுமை என்று அதனையும் பிழையாகச் செய்தால் உலகத்துக்கே வாழ்வியலைக் கற்றுத் தருகிற தமிழகத்தின் இன்றைய நிலையை எண்ணி யாவரும் சிரிக்க மாட்டார்களா?
 மெய்ப்பொருள் காண்பதும் நன்றின்பால் உய்ப்பதும் அற்றங்காக்கும் கருவியாக இருந்து செறுவார்க்கும் உள்ளழிக்கலாகா அரணாகவும் விளங்குவது அறிவுதானே? பகுத்தறிந்து செயல்பட்டால் பன்மடங்கு வளம் பெறலாம்.
 வான்மழை என்பது சாபமன்று; வரம். அதனை ஆக்கிக் கொள்வதில் இருக்கிறது நமது திறமை. "நன்மையும் தீமையும் நாடிநலம் புரிந்த தன்மையால் ஆளப் படும்' என்பது வள்ளுவர் அறிவுரை. நாமும் அத்தகைய நலம்புரிந்த தன்மையால்
 ஆளலாமே!
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com