இரக்கம் ஒருவில் என் உயிரும் ஒருவும்!

இன்று அக்டோபர் 5-ஆம் தேதி. வள்ளலார் அவதார நாள். வள்ளலார் வாக்கிலேயே சொல்ல வேண்டுமானால் "வருவிக்க வந்துற்ற நாள்'.
இரக்கம் ஒருவில் என் உயிரும் ஒருவும்!
இரக்கம் ஒருவில் என் உயிரும் ஒருவும்!

இன்று அக்டோபர் 5-ஆம் தேதி. வள்ளலார் அவதார நாள். வள்ளலார் வாக்கிலேயே சொல்ல வேண்டுமானால் "வருவிக்க வந்துற்ற நாள்'. "எனை இந்த உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே' என்று வள்ளலாரே பாடியிருக்கிறார் (திருஅருள்பா 5485). இந்த உகத்தே என்று பாட்டில் உள்ளதை, இந்த யுகத்தே என்று கொள்ள வேண்டும். எனவே வள்ளற்பெருமான் யுகபுருஷர் என்பதும் இதனால் போதரும்.

ஒரு காலத்தில் நாட்டில் பக்தி குறைவாக இருந்தது. அப்போது இறைவன் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய தேவார மூவரையும் வருவித்தான். இம்மூவரும் ஊர் ஊராகச் சென்று அவ்வூர்க் கோயில்களில் எழுந்தருளி விளங்கும் இறைவனைத் தேவாரப் பாடல்கள் பாடி வழிபட்டார்கள். அதுவரை எல்லாத் தலங்களுமே வெறும் தலங்கள்தான். பாடல் பெற்ற தலங்கள் என்று ஒரு தல வரிசையை நாட்டுக்குத் தந்தவர்கள் இத்தேவார மூவருமே. இவர்களால் நாடு முழுவதிலும் பக்தி பெருகிற்று. சில காலத்துக்குப்பின் ஆன்ம உருக்கம் பெருகவில்லை.

ஊரான் அடிகள்
ஊரான் அடிகள்

இந்தக் குறையைப் போக்குவதற்கு இறைவன் நான்காமவராக மாணிக்கவாசகரை வருவித்தான். வந்த மாணிக்கவாசகர், தேவார மூவரைப் போல அதிகம் தலயாத்திரை செல்லவில்லை. மிகக் குறைந்த தலங்களையே அவர் பாடினார். தேவார மூவரைப் போன்று ஆயிரக்கணக்கில் பாடவில்லை. குறைந்த எண்ணிக்கையில் 600 என்ற அளவிலேயே பாடினார். 

மூவர் பாடல்கள் "தேவாரம்' எனப் பெயர் பெற்றதைப்போல, இவரது பாடல்கள் "திருவாசகம்' என்று வேறு ஒரு பெயரைப் பெற்றன. ஆனால், அவ்வளவு பாடல்களிலும் உருக்கம் மிகுதி. "திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்று ஒரு பழமொழியே ஏற்பட்டுவிட்டது. திருவாசகம் பாடப்பெற்ற பிறகு, நாட்டில் பக்தியுடன் உருக்கமும் பெருகிற்று.

சில நூற்றாண்டுகள் சென்றன. நாடெங்கும் பக்தியும், உருக்கமும் செழித்து விளங்கிய அளவுக்கு, இரக்கம் காணப்படவில்லை. இந்த இரக்கத்தை உலகில் உண்டாக்கவே இறைவன் வள்ளலார் இராமலிங்கரை, இந்த யுகத்தில் (19-ஆம் நூற்றாண்டில்) வருவித்தான். வந்துற்ற வள்ளலார் இரக்கத்தை, உயிர் இரக்கத்தைப் பரப்பினார்.  "இரக்கம் ஒருவில் என் உயிரும் ஒருவும்' (இரக்கம் போனால் என் உயிரும் போய்விடும்) என்று பாடினார்.

"ஜீவகாருண்ய ஒழுக்கம்' என்று ஒரு உரைநடை  நூலையே எழுதினார். ஜீவகாருண்ய ஒழுக்கம் எல்லாவற்றிலும் தலையானது,  ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்குவதே என்று கூறி, அதைச் செயற்படுத்த "சத்திய தருமச்சாலை'யைக்கட்டி, அதில் அணையாத அடுப்பையும் ஏற்றினார். 

"அற்றார் அழிபசி தீர்த்தல்' என்று திருவள்ளுவர் வழங்கிய தொடருக்கு, ஒரு செயல் வடிவம் கொடுப்பதே வள்ளலாரின் வடலூர் தருமச்சாலை. "அற்றார் அழிபசி தீர்த்தல்' என்ற குறள்பாவின் எதிரொலியாகத் தோன்றியது தான், "ஆற்றாமாக்கள் அரும்பசி களைவோர்' என்ற மணிமேகலைத் தொடர். மணிமேகலை நூலில் அன்னதான அறம் மிகுதியாகப் பேசப்பட்டதுடன் செயற்படுத்தவும்பட்டது. அதன் வடிவம்தான் "அமுதசுரபி' என்னும் அட்சய பாத்திரம். 

வள்ளலார் பிறந்தார். உலகில் "சமரச சுத்த சன்மார்க்கம்' என்றொரு புதுநெறி, பொதுநெறி பிறந்தது. ஜீவகாருண்ய ஒழுக்கம் கூடப் பிறந்தது. மறுபிறப்பு எடுத்தது. வள்ளலாருக்கு முன்பே நாட்டில் அன்னதானம் உண்டு என்றாலும், வள்ளலாருக்குப் பின்புதான் அது பேருருவம் கொண்டது. 

பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்று ஒரு மன்னன் பண்டை நாளைய பாரதப் போரில் பாண்டவர்கள், கெளரவர்கள் என்ற இருசாராருக்குமே பெருஞ்சோறு வழங்கினான் என்ற பழைய வரலாறு, வள்ளலாரால் புதியதொரு வடிவம் கொண்டது.

வயிற்றுப் பசியை நீக்குவதற்குத் தருமச்சாலையைக் கட்டியது போன்றே, அறிவுப்பசியை நீக்குவதற்கு ஒன்றுக்கு இரண்டாக இரண்டு கல்விக்கூடங்களை நிறுவினார். "சமரச வேத பாடசாலை' என்பது ஒன்று; "சன்மார்க்க போதினி' என்பது மற்றொன்று. 

சன்மார்க்க போதினி என்ற பாடசாலை தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் போதிக்கும் மும்மொழிப் பாடசாலை; சிறுவர் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் கல்வி கற்பிக்கும் பாடசாலை. பாலர் பள்ளிகள் அந்நாளில் பல இருந்தன. ஆனால், முதியோர்களும் படிக்கும் பள்ளியை, முதியோர் கல்வியை, முதன் முதலில் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர் வள்ளலாரே. 

பெரும்புலவர்கள் தம்மிடம் கற்கும் மாணவர்களுக்குத் திருக்குறளைப் பாடஞ் சொல்லுவதே அக்காலத்திய வழக்கம். அந்நிலையில் பாமர மக்கள் முதலாகப் பலதரத்தவரையும் வயது, கல்வி முதலிய வித்தியாசம் பாராமல் ஒரு பொது இடத்தில் கூடச்செய்து, பொதுமக்களுக்காக முதன் முதலில் திருக்குறள் வகுப்பு நடத்தச் செய்தவர் வள்ளலாரே.

கடவுள் ஒருவரே. அவரை ஜோதி வடிவில் உண்மை அன்பால் வழிபட வேண்டும் என்பது வள்ளலாரின் கொள்கை. வடலூர் குடிமக்கள் தருமச்சாலைக்காகக் கொடுத்த எண்பது காணி நிலப்பரப்பில் தருமச்சாலையையும், அதன் மேற்புறத்தில் சத்திய ஞான சபையையும் கட்டினார். 

தருமச்சாலையைக் கட்டியது 1867-இல்; ஞான சபையைக் கட்டியது 1872-இல். சபை முழுவதும் தத்துவ அமைப்பு; எண்கோண வடிவம்; மேலே செப்புக்கூரை, தங்கக் கலசம். ஞான சபைக்குள் வள்ளலார் ஏற்றிவைத்த அருள்பெருஞ்ஜோதி தீபம், அணையா விளக்காக இன்றும் எரிந்து உலகுக்கு ஒளி வீசி வருகிறது. 

ஜோதி தீபத்தின் முன் கண்ணாடி ஒன்றையும், கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்மை, வெண்மை, கலப்பு நிறம் ஆகிய ஏழு திரைகளையும் பெருமான் அமைத்துள்ளார். 

திரைகளை ஒவ்வொன்றாக நீக்கினால், கண்ணாடி வழியாக அருள்பெருஞ்ஜோதி தீபத்தின் ஒளி தரிசனம் ஆகும். இதுதான் வடலூரில் நிகழும் ஜோதி தரிசனம்.

நாள்தோறும், பகல், முன்னிரவு ஆகிய இரண்டு காலம் திரை நீக்காமல் ஜோதி வழிபாடு. மாதப்பூச நாளில் ஆறு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம். தைப்பூச நாளில் ஏழு திரைகளையும் நீக்கி ஜோதி தரிசனம். இத்திரைகளின் வரலாற்றைத் "திருவருள்பா' அருள்பெருஞ்ஜோதி அகவலில் காணலாம். ஜோதி வழிபாடு, ஜோதி தரிசனம் இவற்றின் விரிவான விளக்கங்களை யாம் எழுதியுள்ள "வள்ளலார் வரலாறு', "புரட்சித் துறவி வள்ளலார்' போன்ற நூல்களில் காணலாம்.

வடலூரில் இந்த ஜோதி தரிசனம் மட்டுமே உண்டு. சமயக் கோயில்களில் உள்ளது போன்று தேர், தெப்பம், வாத்தியம், வாகனம், அபிஷேகம், அர்ச்சனை முதலிய எதுவுமே இல்லை. இது முழுக்க முழுக்க ஞான வழிபாடு, ஞான பூஜை. இப்பூஜைக்கான வரைமுறைகளை வள்ளலார் பெருமானே வகுத்தருளியிருக்கிறார்.

வடலூரில் தருமச் சாலையையே தமது வசிப்பிடமாகக் கொண்டிருந்த வள்ளற்பெருமான், தமது அருள்வாழ்வின் நிறைவான காலத்தில், வடலூருக்குத் தெற்கே மூன்றுகல் தொலைவில் உள்ள மேட்டுக்குப்பம் எனும் ஊரில் தங்கினார். அந்த இடத்தின் பெயர் "சித்தி வளாகம்' என்பது. அது பெருமானே இட்ட பெயர். 

நான்கு ஆண்டுகள் அதில் உயர்நிலைச் சன்மார்க்கத் தவத்தில் ஈடுபட்டிருந்த பெருமான், 1874-ஆம் ஆண்டு தை மாதம் பூச நாளில் நள்ளிரவு சரியாக 12 மணிக்கு, உடம்போடு மறையும் சாகாக்கலை, மரணமிலாப் பெருவாழ்வு சித்திக்கப் பெற்று அருள்பெருஞ்ஜோதி மயமானார். அந்த நாள் 30.01.1874 ஆகும்.

பெருமான் ஒன்பதாம் அகவையில் பாடத் தொடங்கினார். 51-ஆம் அகவையில் சித்தி பெறும்வரை பாடிக்கொண்டே இருந்தார். மூவர் பாடல் "தேவாரம்'; மாணிக்கவாசகர் பாடல் "திருவாசகம்' என்று சிறப்புப் பெயர் பெற்றதைப்போன்று, பெருமான் பாடல்கள் "திருவருள்பா' எனப் பெயர் பெற்றன.

தேவாரத்தின் பிழிசாறு பக்தி; திருவாசகத்தின் பிழிசாறு உருக்கம்; திருவருள்பாவின் பிழிசாறு பக்தி, உருக்கம், உயிர் இரக்கம் ஆகிய மூன்றுமே ஆகும். பெருமான் பாடிய பாடல்கள் சற்று ஏறக்குறைய 6,000. இவை ஆறு திருமுறைகளாக வகுக்கப் பெற்றுள்ளன. முதல் ஐந்து திருமுறைகள் பொது. ஆறாம் திருமுறை சிறப்பு. திருவருள்பா பக்தியில் தொடங்கி, உயிர் இரக்கத்திலும் சீர்திருத்தத்திலும் நிறைவு பெறுகிறது.

உலகுக்கு பஞ்ச பூதங்கள் அடிப்படை யானதைப்போல, சன்மார்க்க சங்கம், சத்திய தருமச் சாலை, சத்திய ஞான சபை, சித்தி வளாகம் என நிறுவனங்கள் நான்கு, நூல் திருவருள்பா ஒன்று ஆகிய இவ்வைந்தும் சன்மார்க்க உலகுக்கு அடிப்படை.
பெருமான் பிறப்பு 1823 அக்டோபர் 5. 1923-இல் பெருமானின் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்பெற்றிருக்கும். அன்று அதைக் கண்டு களித்தவர்கள் யாரும் இன்று நம்மிடையே இல்லை. நாம் வாழுங்காலத்தில் பெருமான் 200 வருகிறது. காணப்போகிறோம்; கண்டுகளிக்கவிருக்கிறோம். வரும் 2022 அக்டோபர் 5-ஆம் தேதியிலேயே பெருமான் 200 தொடங்கிவிடுகிறது. 199 நிறைந்து 200 தொடக்கம். 2023 அக்டோபர் 5-ஆம் தேதியில் வள்ளலார் 200 நிறைவு.

2022-ஆம் ஆண்டு அக். 5 தொடங்கி ஓராண்டு காலம், உலகெங்கும் வள்ளலார் 200 விழாவை மிகப் பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும்.
 
"வள்ளலார் 200' வரப்போகும் இந்த நல்ல தருணத்தில், வடலூரை சர்வதேச மையமாக உயர்வு செய்யும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளதும், வடலூரில் 72 ஏக்கர் நிலப்பரப்பில் வள்ளலார் மணிமண்டபம் அமைக்க வரைபடம் தயார் செய்யும் பணி நடந்து வருவதும், சென்னை ஏழு கிணறு பகுதியில் வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வருவதும் நல்ல அறிகுறிகள். 
அருள்பெருஞ்ஜோதி...     அருள்பெருஞ்ஜோதி...
தனிப்பெருங்கருணை...     அருள்பெருஞ்ஜோதி...

இன்று (அக். 5) வள்ளலார் அவதார தினம்.

கட்டுரையாளர்:
முனைவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com