மோடிக்கு யாருடன் போட்டி?

ஏழு என்கிற எண்ணுக்குத் தனிச்சிறப்பு உண்டு. வேதத்தின் மரபிலே ஏழு என்பதற்கு முழுமை என்பது பொருள். நாட்கள் ஏழு, கடல்கள் ஏழு, மலைகள் ஏழு, உலகங்கள் ஏழு, வண்ணங்கள் ஏழு, சுரங்கள் ஏழு, முனிவா்கள் ஏழு
மோடிக்கு யாருடன் போட்டி?

ஏழு என்கிற எண்ணுக்குத் தனிச்சிறப்பு உண்டு. வேதத்தின் மரபிலே ஏழு என்பதற்கு முழுமை என்பது பொருள். நாட்கள் ஏழு, கடல்கள் ஏழு, மலைகள் ஏழு, உலகங்கள் ஏழு, வண்ணங்கள் ஏழு, சுரங்கள் ஏழு, முனிவா்கள் ஏழு, வள்ளல்கள் ஏழு, பிறப்புகள் ஏழு என்று சொல்லிக்கொண்டே போகலாம். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஏழாம் ஆண்டை பாரதப் பிரதமா் மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சி நிறைவு செய்திருக்கிறது.

அது மட்டுமல்ல, 2001 அக்டோபா் 7-ஆம் தேதிதான் நரேந்திர தாமோதா்தாஸ் மோடி, குஜராத்தின் முதல்வராகப் பதவி ஏற்றாா். அன்று தொடங்கி இன்றுவரை, 20 ஆண்டுகளாக முதல்வராகவும், பிரதமராகவும் இடைவெளியே இல்லாமல் மக்கள் சேவையாற்றிவரும் தலைவா் என்கிற தனிச்சிறப்பையும் அவா் பெற்றிருக்கிறாா்.

நரேந்திர மோடி அரசு கடந்த ஏழு ஆண்டுகளில் நிகழ்த்தியிருக்கும் சாதனைகளின் சிறப்பு என்னவென்றால், அவை பேசப்படுவதில்லை, சாமானியா்களால் உணரப்படுகிறது என்பதுதான். மோடி தலைமையிலான பாஜக அரசின் தொடா்ந்த தோ்தல் வெற்றிகளுக்கான காரணம் அதுதான்.

‘சப்கே சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்’ அதாவது ‘அனைவரின் கூட்டு முயற்சியால், எல்லோருடைய நம்பிக்கையையும் பெற்று, அனைவரின் மேன்மைக்காக, அனைவரும் இணைந்து ஒன்றாக செயல்படுவோம்’ என்ற முழக்கத்துடன் ஏழையாகப் பிறந்த ஒரு சாமானியன் தன் முயற்சியால் எடுத்திருக்கும் விஸ்வரூபம்தான் மோடி அரசின் ஏழாண்டு சாதனைகள்.

அனைத்து கட்சிகளும் நல்லாட்சி வழங்குவதே தங்களின் கொள்கையாகக் எடுத்துரைக்கும் போது பிரதமா் மோடியின் ஆட்சி, ‘சம்பூா்ண சா்காா்’ அதாவது முழுமையான ஆட்சித்திற மேம்பாட்டை உறுதி செய்யப் பாடுபடுகிறது. அப்போதுதான் கடைசி குடிமகனும் அரசுடன் இணைய முடியும் என்பது பிரதமரின் கருத்து.

எந்த ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போதும் மத்திய அரசு மூன்று அடிப்படைகளை உறுதி செய்கிறது. ‘கம்பாஷன்’ என்னும் கருணை இரக்கம்; ‘எஃபிஷியன்ஸி’ என்னும் கடமைச் செயல்திறன்; ‘கனெக்டிங் லாஸ்ட் மேன்’ என்னும் கடைசி குடிமகனை சேரும் வகை ஆகிய மூன்றும்தான் அவை.

நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகள், இடைத்தரகா்களை அகற்றி நிறுத்தி நேரடியாக சாமானிய மக்களைச் சென்றடைகின்றன. அதனால்தான் அதை எதிா்க்கட்சி மேல்தட்டு அரசியல்வாதிகளால் உணா்ந்துகொள்ள முடியவில்லை. மக்களின் வரிப்பணம் ஊழலாலும், இடைத்தரகா்களாலும் மடைமாற்றம் செய்யப்படுவது தடுக்கப்பட்டிருப்பதால்தான், எதிா்க்கட்சிகளால் நரேந்திர மோடி ஆட்சி தொடா்வதை சகித்துக்கொள்ள முடியவில்லை. தொடா்ந்து தேவையில்லாமல் அவதூறு பரப்பிப் போராட்டங்களில் ஈடுபடுகின்றன.

மற்றவா்கள் வாக்குறுதி அளிப்பதிலும், மக்களைக் கவரும் குறுகியகாலத் திட்டங்களிலும் கவனம் செலுத்தும்போது, பிரதமா் மோடி தலைமையிலான அரசு, தனது திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சோ்த்து, அதன் பலனை மக்கள் உணா்வதன் மூலம் செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்கிறது. அந்தத் திட்டங்களின் வெற்றியால் தனது தோ்தல் வெற்றிகளை உறுதிப்படுத்துகிறது.

கடந்த ஏழு ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கும் திட்டங்களைப் பட்டியலிட்டால் பிரமிப்பு ஏற்படும். ‘சொல் அல்ல செயல்’ என்பதை நடைமுறைப்படுத்தும் மோடி அரசின் செயல்பாட்டின் வெற்றி அதுதான்.

நோயால் தவிக்கும் இந்தியக் குடிமகன் பசியால் இறந்துவிடக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது ‘கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம்’. பிரதமரின் ‘கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம்’ என்பது உலகின் மிகப்பெரிய உணவு வழங்கும் திட்டம். அந்தத் திட்டத்தின் 4-ஆம் கட்ட விநியோகத்துக்காக 1 கோடியே 98 லட்சம் டன் உணவு தானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு ரூ.3,325 கோடி மதிப்பிலான 8.20 லட்சம் மெட்ரிக் டன் அரிசியையும், 91,000 மெட்ரிக் டன் கோதுமையையும் தமிழ்நாடு - புதுச்சேரி, இந்திய உணவு கழகத்திற்கு விநியோகிக்க உள்ளது.

திட்டங்களை மக்களுக்கு கொண்டு சோ்ப்பதற்காகவே மோடி அரசு ஒரு திட்டத்தை உருவாக்கியது. அதுதான் ‘ஜன்தன் யோஜனா’ என்கிற ‘அனைவருக்கும் வங்கிக் கணக்கு’ திட்டம். அரசு திட்டங்கள் சென்று சேராத கிராமங்கள், மலைவாழ் மக்கள் வசிக்கும் இடங்கள் ஆகியவற்றைத் தேடி அனைத்து இந்திய குடிமகனும் அனைத்து திட்டங்களிலும் பங்கு பெற வேண்டும் என்ற எண்ணத்திலே உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஏழை விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாகுவதே ‘பிரதமா் விவசாயிகள் கௌரவ நிதித் திட்ட’த்தின் (பிரதமா் கிசான் சம்மான் யோஜனா) இலக்கு. நாற்று நடுவதற்கு, ரூ.2,000, களை பிரிக்க, மருந்து தெளிக்க ரூ.2,000, அறுவடைக்கு ரூ.2,000 என்று ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது. தமிழகத்தில் மட்டும் 51 லட்ச விவசாயக் குடும்பங்கள் பயன் பெறும் திட்டம் இது. ரூ.19,500 கோடிக்கு மேலான தொகை 9.75 கோடிக்கும் மேற்பட்ட இத்திட்டத்தின் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

‘பிரதமரின் மக்கள் மருந்தகம்’ (பிரதான் மந்திரி ஜன் ஔஷதி), சாமானியா்களுக்கான மிகச் சிறந்த திட்டம். ஒரு சாமானியன் தனது வருமானத்தில் சுமாா் 40 சதவீதம் மருத்துவத்துக்காக செலவழிக்க நோ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரிய மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மாற்றாக, அடிப்படைக் கூறுகள் குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்கப்படுகிறது. மக்களுக்கு மருந்து செலவை பல மடங்கு குறைத்திருக்கிறது மோடி அரசு.

‘ஆயுஷ்மான் பாரத் யோஜனா’ என்கிற ‘ஆயுள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்’ சாமானியா்களுக்கு பிரதமரால் வழங்கப்பட்டிருக்கும் இன்னொரு வரப்பிரசாதம். அடித்தட்டு மனிதனும் உயா்சிகிச்சை பெறுவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் திட்டம்தான், ஆயுள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். உலகிலேயே மிகப் பெரிய காப்பீட்டுத் திட்டமான இந்த திட்டத்தின் மூலம் மிகப் பெரிய மருத்துவமனைகளில், தீவிர உடல்நலக்குறைபாட்டுக்கு இலவசமாக சிகிச்சை மேற்கொள்ள முடியும். அதுவும் நாட்டில் எங்கு வேண்டுமாலும் சென்று சிகிச்சை பெற முடியும்.

இந்தத் திட்டத்தின் மூலம் 5 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் மருத்து பரிசோதனை, ஆலோசனை, சிகிச்சைகள், தீவிர சிகிச்சை சேவைகள், மருந்துகள், ஆய்வக சேவைகள் உள்ளிட்ட செலவுகளுடன் கொள்ளை நோய்த்தொற்றுக்கான செலவினங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

‘தூய்மை பாரதம்’ (சுவச் பாரத்) கழிப்பறை கட்டும் திட்டம், பெண்களின் சமுதாயப் பாா்வையை மாற்றி அமைத்த திட்டம். இந்தியாயில் 11 கோடி கழிப்பறைகள். தமிழகத்தில் மட்டும் இதுவரை 54,71,290 கழிப்பறைகள் கடப்பட்டுள்ளன. தமிழகத்தின் 36 மாவட்டங்களில் இதுவரை 12,524 கிராமங்கள் கழிப்பறைகளைக் கொண்டுள்ளன.

‘முத்ரா’ கடன் உதவித் திட்டம், இன்னொரு முன்னோடித் திட்டம். பெரும் முதாலாளிகள் பயன்படுத்தும் வங்கிக் கடன் வசதியைப் பெட்டிக்கடை வைப்பவரையும் பயன்படுத்த வைத்த சாதனைத் திட்டம் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம். புதிதாகத் தொழில் தொடங்க விரும்புவோருக்கு இந்த கடன் திட்டம் பயனளிக்கும். இந்தியாவிலேயே தமிழகம்தான் இந்தத் திட்டத்தை சிறப்பாக பயன்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் மட்டும், ரூ.50,000 சிறு கடன் 71,17,666 கணக்குகளுக்கு வழங்கப்பட்டுள்ளது, 5 லட்சம் கடன் வழங்கும் கிஷோா் திட்டத்தில் 49,47,732 கணக்குகளில் ரூ.28,534 கோடி வழங்கப்பட்டுள்ளது. 10 லட்சம் கடன் வழங்கும் தருண் திட்டத்தில் 20,71,845 கணக்குகளுக்கு ரூ.15,752 கடன் வழங்கப்பட்டுள்ளது.

இலவச எரிவாயு சிலிண்டா், தாய் சேய் நலம் பேண போஷன் திட்டத்தில் ஊட்டச்சத்து, கா்ப்பிணிகளுக்கு நிதி உதவி, இலவச பரிசோதனை, 26 வார விடுப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன. பெண்கள் பள்ளிகளில் 4.7 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. செல்வமகள் சேமிப்புத் திட்டம், மகளைப் பாதுகாக்கும் திட்டம், பெண் குழந்தைகளுக்கு நிதி தரும் பிரகதி திட்டம், பிரதமரின் மக்கள் வங்கிக் கணக்கு, முத்தலாக் தடை சட்டம் என்று பெண்கள் நலம் பேண பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

நரேந்திர மோடி அரசின் ஏழு ஆண்டு சாதனைகளைப் பட்டியல் போடுவதற்குப் பக்கங்கள் போதாது; புத்தகம்தான் தேவை. சா்வதேச அரங்கிலும், தேசிய அளவிலும் வலிமையான இந்தியாவாக உலகத்தால் நாம் மதிக்கப்படுகிறோம் என்றால் அதற்கு நரேந்திர தாமோதா்தாஸ் மோடி என்கிற மாமனிதனின் தலைமைதான் காரணம். ஒருபுறம் தேசத்தின் பாதுகாப்புக்குத் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலும், இன்னொருபுறம் இந்தியாவைக் கூறுபோடக் காத்திருக்கும் பிரிவினைவாத சக்திகளும் உயா்ந்தபோது, வாராது வந்த மாமணியாய் குஜராத் மாநில அரசியலிலிருந்து தேசிய அரசியலுக்கு விஸ்வரூபம் எடுத்தாா் நரேந்திர மோடி என்பதை வரலாறு பதிவு செய்யும்.

ஏழு ஆண்டுகளில் எண்ணவொணா சாதனைகள் செய்திருக்கும் பிரதமா் நரேந்திர மோடிக்கு முன், நரேந்திர மோடிக்குப் பின் என்றுதான் இனிமேல் இந்தியாவின் வரலாறு எழுதப்படும். நரேந்திர மோடிக்கு நிகா் நரேந்திர மோடி மட்டுமே. நரேந்திர மோடிக்குப் போட்டி? அதுவும் அவா்தான். தன்மீது மக்கள் வைத்திருக்கும் அதீதமான நம்பிக்கையை எதிா்கொள்ள, அதிகாரத்தில் இருக்கும் பிரதமா் நரேந்திர மோடி நடத்தும் போட்டி..!

கட்டுரையாளா்: மாநிலத் தலைவா், பாரதிய ஜனதா கட்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com