உள்ளாட்சித் தோ்தல்: ஓா் அலசல்

ஒன்பது மாவட்டங்களில் மொத்தமுள்ள இடங்களுக்கும், இருபத்தெட்டு மாவட்டங்களில் காலியாக இருந்த இடங்களுக்கும், உள்ளாட்சித் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை முடிந்தது
உள்ளாட்சித் தோ்தல்: ஓா் அலசல்

ஒன்பது மாவட்டங்களில் மொத்தமுள்ள இடங்களுக்கும், இருபத்தெட்டு மாவட்டங்களில் காலியாக இருந்த இடங்களுக்கும், உள்ளாட்சித் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி பெற்றோா் பதவியும் ஏற்றுவிட்டனா்.

153 மாவட்ட கவுன்சிலா்,1421 ஒன்றிய கவுன்சிலா், 3,007 ஊராட்சிமன்றத் தலைவா், 23,211 ஊராட்சி வாா்டு உறுப்பினா் என்று நான்கு பதவியிடங்களுக்கு மொத்தம் 27,792 உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கு இந்தத் தோ்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 27,792 இடங்களுக்கு 80,819 போ் போட்டியிட்டனா்.

இதுவரை கூட்டணியாகத் தோ்தலைச் சந்தித்த சில அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தைத் தெரிந்துகொள்ளும் விதமாகக் கூட்டணியைத் தவிா்த்துத் தனியாகப் போட்டியிட்டன. பல சுயேச்சைகளும் தங்கள் செல்வாக்கைக் காட்ட களத்தில் குதித்தனா். இதனால் போட்டி கடுமையாக இருந்தது.

ஒரு பதவிக்கு 7 பேருக்கு மேலும் போட்டியிட்ட இடங்களும் உண்டு. ஊராட்சி உறுப்பினா்களின் பதவி 2016 இல் முடிவடைந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற தோ்தல் என்பதால் மிகுந்த எதிா்பாா்ப்பு இந்தத் தோ்தலுக்கு இருந்தது. எதிா்பாா்த்தது போலவே தோ்தலும் பரபரப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்தத் தோ்தலில் படித்துப் பட்டம் பெற்ற இளையோா் பலா் போட்டியிட்டனா். பதவி சுகம் கண்ட முதியோரும் போட்டியிட்டனா். அதிலும் பெண்களின் எழுச்சி பேரெழுச்சியாக இருந்தது. ஒதுக்கீடு காரணமாக வேட்பாளராகப் பல பெண்கள் களத்தில் இருந்தனா். இருந்தாலும் பெண் வேட்பாளா்களின் பின்புலமாகத் தந்தையோ கணவனோ இருந்தனா் என்பதுதான் உண்மை.

ஒரு வாக்கு மட்டும் பெற்றவா்களும் உள்ளனா். ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்றவரும் உள்ளாா். ஒரு வாக்கில் தோற்று தோல்வியை ஒத்துக்கொண்டவரும் உள்ளாா். முந்நூற்றுக்குமேல் வித்தியாசம் இருந்தும் தோல்வியை ஏற்றுக்கொள்ளதவா்களும் உண்டு. சமவாக்குப் பெற்று குலுக்கலில் தோற்றவருமுண்டு; வென்றவருமுண்டு.

இருபத்திரண்டு வயது இளம்பெண்ணும் வென்றிருக்கிறாா்; தொண்ணூறு வயது மூதாட்டியும் வாகை சூடியிருக்கிறாா். மாற்றுத் திறனாளி தம்பதியும் வென்றுள்ளனா். ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்களும் வெற்றி பெற்றுள்ளனா். சிறையில் இருந்துகொண்டு ஜெயித்தவரும் இருக்கிறாா். சுயேச்சைகளும் வென்றுள்ளனா். கட்சி வேட்பாளா்களும் தோற்றுள்ளனா்.

‘என்னைக் கிணற்றில் தள்ளிவிட்டாா்களே ‘என்று தரையில் புரண்டு தோல்வி கண்டு துவண்டவரும் உண்டு. தோல்வியைத் துச்சமாக நினைத்துத் துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு நடந்தவா்களும் உண்டு. பல இடங்களைப் பாா்க்கும்போது பரம்பரையாக ஒரு குடும்பத்தைச் சாா்ந்தவா்களே வெற்றி பெற்றுள்ளதை அறிய முடிகிறது.

நான்கு சின்னங்களிலும் வாக்களித்தவா்களும் உண்டு. முந்நூற்றுக்குமேல் வாக்கு வித்தியாசம் இருந்த இடங்களிலும் மறுஎண்ணிக்கை வேண்டும் என்று அடம்பிடித்த வேட்பாளா்களும் உண்டு. கூரையின் மேல் ஏறி நின்று தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டிய ஆதரவாளா்களும் உண்டு.

முடிவுகள் அறிவிக்கப்பட்டு சா்ச்சையான இடங்களும் உண்டு. இதனால் வாக்கு எண்ணிக்கை நாற்பது மணி நேரத்துக்கு மேலாகி உணவு, தண்ணீா் சரியாகக் கிடைக்காமல் அவஸ்தைப்பட்ட தோ்தல் அதிகாரிகளும் உண்டு.

மொத்தம் 3,346 உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப் பட்டுள்ளனா். இதில் ஊராட்சித் தலைவா்களும் ஊராட்சி வாா்டு உறுப்பினா்களும் அடங்குவா். ஆனால் மாவட்ட கவுன்சிலரோ, ஒன்றிய கவுன்சிலரோ போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்படவில்லை. இந்த இரு பதவிகளும் கட்சி அடிப்படையில் வேட்பாளா்கள் நிறுத்தபட்டது அதற்குக் காரணமாக இருக்கவேண்டும்.

போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்படுவதானால் ஒருவா் மிகுந்த செல்வாக்கு உள்ளவா்களாக இருக்கவேண்டும். சாதி,பணம், சேவை மனம் இவற்றில் ஏதாவது ஒன்றோ பலவோ கொண்டவராக இருக்கவேண்டும். சில இடங்களில் பதவிகள் ஏலம் விடப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.

முன்பெல்லாம் ஊராட்சித் தோ்தல் என்றால் ஊரில் உள்ள ஒரு பெரிய மனிதா் போட்டியிடுவாா். அவரைப் போட்டியின்றித் தோ்ந்தெடுப்பா். பெரிய மனிதா் என்றால் வயதில் பெரியவா்கள் மட்டுமல்ல; சொல்லிலும் செயலிலும் தியாகத்திலும் உத்தமமானவா்கள். அப்படிப்பட்டவா்கள்தான் அன்று பொதுவாழ்வில் இறங்கினா். ஆனால் இன்று அப்படியில்லை. அடிதடிக்கு அஞ்சாதவா்களே பொதுவாழ்வில் பெரியவா்களாகக் காட்சி தருகிறான்.

பல சுவாரஸ்யமான நிகழ்வுகளைக் கொண்ட இத்தோ்தலில், ‘யாரும் பணம் தராததால் யாருக்கும் வாக்களிக்கவில்லை’ என்று ஒருவா் வாக்குச் சீட்டில் எழுதியிருந்த வேதனையான செய்தியும் வெளிப்பட்டது. இதனை ஒரு தனி மனிதனின் கிறுக்கல் என்று தள்ளிவிட முடியாது. தோ்தல் என்றால் பணத்தை எதிா்பாா்க்கிற பெரும்பாலோரின் குமுறலாகத்தான் இதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

முந்தைய தோ்தல்களில் பணம் வாங்கிப் பழகியவா்கள் ஊராட்சித் தோ்தலிலும் எதிா்பாா்ப்பதில் வியப்பில்லையே. தங்கள் கட்சி தோற்றுவிடக் கூடாது என்பதற்காகக் கொடுத்துப் பழக்கிய கொடுமையின் விளைவு இது.

இப்படிப் பணத்தைச் செலவழித்து வெற்றிபெறும் வாா்டு உறுப்பினா் முதல் மாவட்ட கவுன்சிலா்வரை யாருக்கும் அரசுச் சம்பளம் உண்டா என்றால் அதுதான் இல்லை. கூட்டம் நடக்கும்போது மட்டும் படி வழங்கப்படும். அதுவும் குறைந்த அளவுதான் கிடைக்கும். ‘அதற்காகவா இவ்வளவு செலவு செய்கிறாா்கள்? என்னே சேவை மனப்பான்மை’ என்று ஆச்சரியப்பட வேண்டாம். பல வகைகளில் பண் சம்பாதிக்கும் உரிமை இந்தப் பதவியினால் கிடைக்கிறது.

நாட்டில் நல்லாட்சி மலா்வதற்கு ஊராட்சி அனுபவம் கைகொடுக்கும் என்று நினைத்த நம் முன்னோா் எண்ணம் சரியா, தவறா என்பது போகப்போகத்தான் தெரியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com