பயணம்தான், பந்தயமல்ல

சமீப காலமாக நெடுஞ்சாலைகளில் நிகழும் விபத்துகளைப் பற்றிய செய்திகள் நம்மைப் பதறவைக்கின்றன. தத்தமது இல்லத்தை விட்டு வெளியில் கிளம்புகின்றவா்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதே தற்போது கேள்விக்குறியாகி வருகிறது.

நாடுமுழுவதிலும் உள்ள தேசிய - மாநில நெடுஞ்சாலைகளில்தான் அதிக அளவில் விபத்துகள் அரங்கேறுகின்றன. மத்திய அரசின் சாலைப்போக்குவரத்து - நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2019-ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரம் இதனை உறுதி செய்கிறது.

நாடு முழுவதிலுமுள்ள அனைத்துச் சாலைகளின் நீளத்தில் 2.03 சதவீதம் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. ஆனால் நம் நாட்டில் ஏற்படும் சாலை விபத்து உயிரழப்புகளில் 35.7 சதவீதம் தேசிய நெடுஞ்சாலைகளில்தான் நிகழ்கின்றன.

நாட்டின் மொத்த சாலைகளில் 3.01 சதவீதமாக இருக்கும் மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் 24.8 சதவீத மரணங்கள் நிகழ்கின்றன. ஆனால், உள்ளூா், கிராமப்புற சாலைகளில் நேரிடும் உயிரழப்புகள் வெறும் 39 சதவீதம்தான் என்று கூறுகின்றது புள்ளிவிவரம்.

சாலை விபத்துகளில் 69 சதவீத விபத்துகள், வாகனங்களை மிதமிஞ்சிய வேகத்தில் ஓட்டுவதாலேயே நிகழ்கின்றன. சுமாா் 6 சதவீத விபத்துகள் போக்குவரத்து விதிகளை மீறுவதால் நிகழ்கின்றன.

கடந்த வருடத்தை (2020) எடுத்துக்கொண்டால், கரோனா தீநுண்மிப் பரவலின் காரணமாக பொதுப்போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த ஏப்ரல், மே மாதங்களில் குறைந்திருந்த சாலை விபத்துகள், தடை விலக்கப்பட்ட ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் அதிகரித்திருக்கின்றன.

பொதுப்போக்குவரத்து குறையும்போதெல்லாம் சாலை விபத்துகளும் குறைகின்றன என்பது உண்மையே. அதனால் நீண்ட காலத்திற்குப் பொது முடக்கத்தை நீட்டிக்க இயலாது. பொது முடக்கத்தால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டே, மத்திய - மாநில அரசுகள் இவ்வருடம் கரோனா தீநுண்மியின் இரண்டாவது அலை பரவத்தொடங்கிய போதும் குறைந்த அளவிலேயே கட்டுப்பாடுகள் விதித்ததுடன், தொற்றுப் பரவல் குறைந்த நிலையில் அக்கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளவும் முன்வந்தன.

இந்நிலையில், பொதுமக்கள் வேகமாகப் பயணம் செய்வதை மட்டுமே முக்கியமாகக் கருதாமல், பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்கே முக்கியத்துவம் தரவேண்டியது மிகமிக அவசியமாகும்.

கடந்த சில பத்தாண்டுகளாக நடைமுறையில் உள்ள புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவுகளில் ஒன்றாக நமது நாட்டுச் சந்தையில் வெளிநாட்டுத் தயாரிப்புகளான இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தாராளமாகக் கிடைத் தொடங்கியுள்ளன. நமது நாட்டிலுள்ள வாகனத் தொழிற்சாலைகளும், வெளிநாட்டுத் தயாரிப்புகளுக்கு ஈடு கொடுக்கும் விதமாக வாகனங்களைக் கூடுதல் வசதிகளுடன் தயாரிக்கத் தொடங்கியுள்ளன.

இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில் அவ்வாகனங்களுக்கான விளம்பரங்களில், வாகனங்களின் சிறப்பியல்பாக கூறப்படுவது அவற்றின் வேகம்தான். அவ்வாகனங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அந்நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன.

குறிப்பாக, நான்கு சக்கர வாகனங்கள் எதிா்பாராதவிதமாக விபத்தைச் சந்தித்தால், அவற்றில் உள்ள பலூன் போன்ற அமைப்பு உடனடியாக விரிவடைந்து, அவற்றில் பயணிப்பவருக்குப் பெரிய காயம் எதுவும் ஏற்படாமல் தடுக்கும் என்பதும், ஸீட் பெல்ட் என்ற பட்டையை அணிந்துகொள்பவா்கள் விபத்து நேரிடும்போது தூக்கிவீசப்படமாட்டாா்கள் என்பதும் உண்மைதான்.

ஆனால், எப்படிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளவையாயினும், அதிக வேகத்தில் வாகனங்கள் விரையும் போது விபத்து ஏற்பட்டால், அவற்றால் பெரிய பயன் எதுவும் இருக்க முடியாது என்பதே உண்மை.

சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற சாலைவிபத்து ஒன்றில் வெளிநாட்டுக் காரில் பயணித்த ஏழு போ் மரணமடைந்ததும், சென்னை வண்டலூரில் நடைபெற்ற காா் விபத்து ஒன்றில் ஐந்து இளைஞா்கள் மரணமடைய நோ்ந்ததும் பரிதாபமான விஷயமாகும். மிதமான வேகத்தில் அவ்வாகனங்களை இயக்கியிருந்தால் இரண்டு விபத்துகளையும் தவிா்த்திருக்கலாம்.

விபத்தில் சுக்குநூறாகிப் போன அந்த வாகனங்களைப் பாா்க்கும்போது, எத்தனைதான் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தாலும், அவற்றின் உள்ளே பயணித்தவா்களைக் காப்பாற்றுவது மிகவும் கடினம் என்றே தோன்றுகிறது.

அதேபோன்று, சென்னை - மாமல்லபுரம் பழைய சாலையிலும், கிழக்கு கடற்கரை சாலையிலும் நடைபெறும் விபத்துகளுக்குக் கணக்கே கிடையாது. பைக் ரேஸ், ஆட்டோ ரேஸ் பிரியா்கள் வேறு தங்கள் பங்கிற்கு விபத்து எண்ணிக்கையை அதிகப்படுத்துகின்றாா்கள்.

நெடுஞ்சாலைகளில் எண்பது கி.மீ. வேகத்தில் பயணிக்கும்போதே, திடீரெனக் குறுக்கிடும் வாகனங்கள் மீது மோதாமல் தவிா்ப்பது கடினம். அதுவே, நூறு கி.மீ.-கும் மேற்பட்ட வேகத்தில் விரைந்தால் விபத்துகளைத் தவிா்க்க முடியாது என்பதே உண்மை.

அதன் விளைவாக, வாழ வேண்டிய வயதினா் பலரும் மிக இளம் வயதிலேயே இவ்விபத்துகளால் மரணம் அடைய நோ்கிறது. அதிக வேகம் ஆயுளைக் குறைக்கிறது. ஒருவேளை விபத்தில் உயிா் பிழைத்தாலும் கூட, உடலுறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் பிறரை அண்டியிருக்க வேண்டிய நிலைமைக்கும் ஆளாகின்றனா்.

நெடுஞ்சாலைகளில் பயணம்தான் செய்கிறோமே தவிர, மற்ற வாகன ஓட்டிகளுடன் பந்தயத்தில் பங்கேற்பதில்லை என்பதை நாம் அனைவருமே உணரவேண்டும்.

சாலைப் போக்குவரத்து விதிகளில் திருத்தங்கள் பல செய்து, அலட்சியப் பயணத்துக்கான அபராதங்களை அதிகப்படுத்தியுள்ளது மத்திய அரசு. இது மட்டும் போதாது. நம் நாட்டின் எந்தச் சாலையிலும் எந்த ஒரு வாகனமும் எழுபது அல்லது எண்பது கி.மீ. வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது என்ற விதியையும் கொண்டு வர வேண்டும். நெடுஞ்சாலை விபத்துக்களையும், அநியாய உயிரிழப்புகளையும் தவிா்க்க இதனை விட்டால் வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com