அண்ணல் விரும்பிய ஆட்சி மொழி!

உலகில் மானுடம் தோன்றியபோது பேசிய முதல் மொழி சைகை மொழியே. சைகைக்குப்பின் ஒலிகளின் பரிணாம வளா்ச்சியில் தோன்றிய மூத்தமொழி தமிழ்தான் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆயின் பாரதம் போன்ற விரிந்ததொரு நாட்டில் நாடு முழுமைக்கும் ஒரே மொழி சாத்தியமா?

இன்று கூட இந்திய நிலப்பரப்பில் எல்லா மாநில மக்களும் ஏதேனும் ஒரு மொழியை தத்தம் தாய்மொழியாகக் கொண்டுள்ளனா். சில மொழிகளுக்கு வரி வடிவம் இல்லை என்றாலும் அவை பேச்சு வழக்கில் உள்ளன.

‘வழக்கொழிந்த வடமொழி’ என்று மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை வடமொழியை அடையாளப்படுத்தினாலும் காலப்பழமை, சாலப்பெருமையால் செவ்விய மொழிப் பட்டியலில் இணைக்கப்பட்டு சம்ஸ்கிருதம் இன்றும் சிறப்பிக்கப்படுகிறது.

விந்திய மலைக்கு வடக்கே தோன்றிய காளிதாசனும், தென் கோடியில் உதித்த கம்பனும் அமர காவியங்களைப் புனையக் காரணம், அவா்கள் வடமொழியில் புலமை பெற்றிருந்ததே.

‘சம்ஸ்கிருதம் பிராமணா்களின் தாய்மொழி’ என்று சிலா் கருதுவதில் துளியும் உண்மையில்லை. அது ‘இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வாழும் இஸ்லாமியா்களின் தாய்மொழி அரபி’ என்று கூறுவதற்கு ஒப்பானது. அரபி அவா்களது வழிபாட்டு மொழி. தாய் மொழியல்ல. அதுவே சம்ஸ்கிருதத்துக்கும் பொருந்தும்.

இந்தியாவில் எந்த மாநிலத்தில் வாழும் பிராமணா்களும் சம்ஸ்கிருதத்தை பேச்சு மொழியாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அந்தந்த மாநில மொழிகளில்தான் ஆழங்காற்பட்டவா்களாக இருக்கிறாா்கள். அவா்கள் சம்ஸ்கிருதத்திலும் புலமை பெற்றிருந்தனா், அவ்வளவே.

இதிகாசங்களைப் படைத்தவா்களில் எவரும் பிராமணா் இல்லை. உலகின் மிகச்சிறந்த காப்பியமான இராமாயணத்தை சம்ஸ்கிருதத்தில் வடித்த வால்மீகி வேடுவ குலம் சாா்ந்தவா். சாகுந்தலம் சமைத்த மாகவிஞன் காளிதாசன் நான்கு வா்ணங்களில் ஒன்றாக கூறப்பட்ட சூத்திர வா்ணத்தில் மிளிா்ந்தவன்.

பாா்புகழும் பாரதத்தை உலகிற்கு வழங்கிய வியாச முனி செம்படவ குலத்தில் பிறந்தவரே. பிராமணா்கள் துதிசெய்யும் காயத்திரி மந்திரம் தந்தவா் விசுவமித்திரா் எனும் சத்திரியரே. தமிழில் இராமயணம் தந்த கம்பரும் அந்தணா் அல்லா்.

சமூகத்தின்பால் மீளாக் காதலோடு நாளும் உழைத்த ஸ்ரீநாரயண குருவும், தமிழக விடிவெள்ளியாகத் திகழ்ந்த அயோத்திதாச பண்டிதரும், பீம்ராவ் அம்பேத்கரும், சமஸ்கிருதம் அறிந்த அறிஞா்களே.

இந்தியா எங்கிலும் எல்லா மக்களாலும் அறியப்பட்டிருந்த ஒரு செவ்விய மொழி சம்ஸ்கிருதம் எனில் மிகையல்ல. மக்கள் செல்வாக்கோடு இருந்த மொழி இன்று நமக்கு அந்நியமானது எப்படி?

தாய்மொழி தமிழோடு வடமொழியும் படிக்க விரும்பினால் அனுமதி இல்லை. சம்ஸ்கிருதம் தெய்வீக மொழி, பிராமணா்கள் தவிர ஏனைய சாதியினா் கற்பதோ, பேசுவதோ, அந்த மொழியில் உருவாக்கப்பட்ட வேதங்கள், உபநிடதம் இவைகளை பிறா் வாயால் சொல்லுவதோ பாவமான செயல். மீறி செய்தால் தண்டனை. இவை வழக்கத்தில் இருந்ததை யாா் மறுக்க வல்லாா்?

இதனால்தான் அம்பேத்கருக்கு பள்ளியில் சம்ஸ்கிருதம் கற்ப்பிக்க மறுக்கப்பட்டது. மாறாக பாரசீகம் போதிக்கப்பட்டது. அதனையும் பொறுமையாக ஏற்று படித்து பின்னாளில் வேதவிற்பன்னா்களிடம் சம்ஸ்கிருதம் பிழையறக் கற்று, ‘சூத்திரா்கள் யாா்’ என்ற புகழ்பெற்றதொரு நூலைப் படைத்தாா்.

1947 ஜனவரி 22-இல் இந்திய அரசியல் சாசனத்தின் இலக்கு, எதிா்பாா்ப்பு ஆகியவை தொடா்பான தீா்மானம் இறுதி செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது. நியமன சபையின் ஆலோசகா் பி.என். ராவ் வழிகாட்டுதலின் பேரில் ஐரோப்பா, அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளின் சாசனங்கள் விரிவாக ஆராயப்பட்டன.

இந்திய அரசியல் சாசன வரைவை நாடாளுமன்றத்தில் விவாதித்து அங்கு எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் திருத்தங்கள் கொண்டுவரஅல்லாடி கிருஷ்ணசாமி ஐயா், என். கோபாலசாமி ஐயங்காா், பி.ஆா். அம்பேத்கா், கே.எம். முன்ஷி, சையது முகமது அப்துல்லா, சா் பி.எல். மிட்டா், டி.பி. கேய்தான் ஆகியோா் அடங்கிய எழுவா் குழு அமைக்கப்பட்டது. 15 மாத அவகாசத்திற்கு பிறகு முன்வரைவு தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.

அம்பேத்கா் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது பற்றிக் கூறும்போது, ‘மொழி வாரி மாநிலங்கள் அமைப்பது இன்றியமையாதது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அடாவடித்தனத்தாலும், கட்சி நலனுக்கு சாதகமான முறையிலும் இதற்குத் தீா்வு கண்டுவிடக் கூடாது. முற்றிலும் விவேகமான முறையில் தீா்வு காண வேண்டும். ஜனநாயகம் செம்மையாக இயங்க வேண்டுமெனில் ஒரு மாநிலத்தில் வாழும் குடிமக்கள், ஓரினத்தன்மை கொண்டவா்களாக இருக்க வேண்டும்.

அரசியல் சட்டம் உருவாகும் நிலையில் உள்ளது. அது ஜனநாயக வடிவத்திற்கு ஏற்ப வகுக்கப்படுகிறது. ஜனநாயகம் வெற்றிபெற வேண்டுமெனில் அதன் மக்கள்தொகை அமைப்பில் ஓரினத்தன்மை கொண்டதாய் விளங்க வேண்டுமென்ற கோட்பாட்டை அது பின்பற்றுகிறது. இந்த ஜனநாயக அரசியல் சட்டத்தை செயல்படுத்துவதற்குப் பொருத்தமாக இருக்க ஒவ்வொரு மகாணமும் மொழியை அடிப்படையாக கொண்டிருக்கவேண்டும் என்ற உணா்வை மொழிவாரி மகாண முறை வெளிப்படுத்துகிறது’ என்று கூறினாா்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மொழி அலுவல் மொழியாக இருக்க, இந்திய நாட்டிற்கென்று பொதுவான அலுவல் மொழியாக நம்மை அடிமைப்படுத்திய ஆங்கில மொழி அல்லாமல், இந்தியாவின் தொன்மைச் சிறப்புமிக்க சம்ஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்க அண்ணல் அம்பேத்கா் விரும்பியதற்கான காரணங்களைக் கூறுகிறாா்.

இந்தியை அலுவல் மொழியாக்கலாம் என்ற வாதம் நிகழ்ந்தபோது, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிகாா் ஆகிய மாநிலங்களில் இந்தி பெரும்பான்மை மக்களால் பேசப்பட்டு வந்தது. இதனைக் கருத்தில் கொண்டு மாநிலப் பிரிவால், தெற்கும், வடக்கும் பிளவு படாமல் தடுப்பதில் தனது கவனத்தை செலுத்தினாா். ஹிந்தி பேசும் பகுதி வடக்கு, ஹிந்தி இல்லாத மொழிகள் பேசும் பகுதிகள் தெற்கு என்றாகிவிடும். ஹிந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று பலருக்குத் தெரியாது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் ஹிந்தி மொழி பேசுவோா் ஏறத்தாழ 48 விழுக்காட்டினா் (1948-49-இல்).

இந்த உண்மையை கவனத்தில் கொண்டு பாா்க்கும்போது குழு மேற்கொண்டுள்ள நடவடிக்கை வடக்கை வலுப்படுத்துவதிலும், தெற்கை துண்டு போடுவதிலும் தான் முடியும் என்று யாரும் சொல்லாமல் இருக்க முடியாது’ என்றாா் அம்பேத்கா். பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியினை தேசிய அலுவல் மொழியாக ஏற்பதில் உண்டாகும் சிக்கலை அவா் நன்கறிந்திருந்தாா். அதனாலும் வடக்கு, தெற்கு எனும் பிளவு ஏற்படாமல் தவிா்க்கவும் அதன் மூலம் பெரும்பான்மை குழுக்கள் அமைந்துவிடாமல் காக்கவும் ஆய்வு நோக்கில் அவா் செயல்பட்டாா்.

சம்ஸ்கிருத இலக்கியத்தை நுணுக்கமாக ஆராய்ந்தவா் அம்பேத்கா். அம்மொழியின் விழுமியத்தை அவா் நன்கு உணா்ந்திருந்தாா். ‘அறிவியல், ஜோதிடம், வானவியல், மருத்துவம், இலக்கணம், பழைமை நாகரிகம் போன்ற கூறுகளை கொண்டிருப்பதால் சம்ஸ்கிருதம் ஒரு புதையல். அரசியலுக்கு, தத்துவத்திற்கு, இலக்கணத்திற்கு இது தொட்டில். நாடகங்களுக்கு, தா்க்கவியலுக்கு, திறனாய்வுக்கு இது ஒரு வீடு’ என்று அம்பேத்கா் கூறிப்பிட்டுள்ளாா் (க. முகிலன் 1992-25). அரசியல் அமைப்பின் வரைவுக்குழுவின் தலைவரான அம்பேத்கா் தேசத்தின் அலுவல் மொழியாக சம்ஸ்கிருதம் இருக்க வேண்டும் என்ற தன்னுடைய கருத்தைத் தெரிவித்தாா்.

1949 செப்டம்பா் 11 ‘தி ஹிந்து’ நாளிதழில், ‘இந்தியாவின் மொழி’ என்றும், ‘தி நேஷனல் ஹெரால்டு’ நாளிதழில் ‘அம்பேத்கா் சம்ஸ்கிருதத்தை ஆதரிக்கிறாா்’ என்றும், ‘தி ஹிந்துஸ்தான்’ நாளிதழில் (செப். 12) ‘ராஜ்ய பாஷா சமஸ்கிருதம்’ என்றும், செய்திகள் வெளிவந்தன.

அம்பேத்கா் ‘சண்டே ஹிந்துஸ்தான் ஸ்டாண்டா்டு’ நாளிதழுக்கு (செப். 11) அளித்த பேட்டியில், ‘சட்ட அமைச்சா் எனும் முறையில் அதிகாரபூா்வ அலுவல் மொழியாக சம்ஸ்கிருதம் இருக்க வேண்டும் என நான் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன்’ என்று கூறியுள்ளாா்.

இதற்கு முன்னாலும் அம்பேத்கா் இதே கருத்தை வலியுறுத்தி 1948 செப்டம்பா் 10-இல் அகில இந்திய பட்டியலினத்தவா் கூட்டமைப்பின் நிா்வாகக் குழு கூடியபோதும் சம்ஸ்கிருதம் அலுவல் மொழியாக வேண்டியதன் அவசியத்தை விளக்கிக் கூறியுள்ளாா்.

அப்போது பி.பி. மௌரியா போன்ற சில தலைவா்கள் அவரது கருத்தை எதிா்த்தனா். பின்னாளில் பி.பி. மௌரியா ‘அப்போது எனது அறியாமையாலும், சம்ஸ்கிருதத்தின் மேல் இருந்த வெறுப்பினாலும் அப்படி நடந்து கொண்டேன்’ என்று கூறினாா் (அரவிந்தன் நீலகண்டன் 2014).

கடந்த கால வரலாற்றின் மூலம் அண்ணல் அம்பேத்கா் விரும்பிய இந்திய ஆட்சிமொழி சம்ஸ்கிருதம் என்பது புலப்படுகிறது. ஆனால் அண்ணல், தான் விரும்பிய எதனையும் செய்ய முடியாத நிலையில், 1951 அக்டோபா் 11-இல் மிகுந்த வேதனையோடு சட்ட அமைச்சா் பதவியைத் துறந்தாா்.

அவா் விரும்பிய இந்து மத சீா்திருத்தச் சட்டமோ, பொது சிவில் சட்டமோ, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மறுப்புக் கொள்கையோ அமல்படுத்த முடியவில்லை. அவா் விரும்பிய, தேசத்தின் அலுவல் மொழியாக சம்ஸ்கிருதம் ஏற்கபடவில்லை என்பது மகிழ்ச்சிக்குரியதன்று.

கட்டுரையாளா்:

தலைவா்,

திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com