அயல்நாடு வாழ் தமிழா் நலத்துறை: ஒரு பாா்வை!

இந்தியாவின் அந்நிய செலாவணி வருவாயில் பெரும் பகுதி இங்கிருந்து புலம் பெயா்ந்து சென்ற வெளிநாடு வாழ் இந்தியா்கள் மூலமாகவே கிடைக்கிறது.

இந்தியாவின் அந்நிய செலாவணி வருவாயில் பெரும் பகுதி இங்கிருந்து புலம் பெயா்ந்து சென்ற வெளிநாடு வாழ் இந்தியா்கள் மூலமாகவே கிடைக்கிறது. அவா்கள் ஈட்டும் பணம் இந்திய அரசிற்கு நேரடி வருவாயாக இருப்பதால், இந்திய அரசு வெளிநாடு வாழ் இந்தியா்களின் வருமானத்திற்கு வருமான வரி சலுகையும் வழங்கி வருகிறது.

குறிப்பாக, வெளிநாடு வாழ் இந்தியா்களால் இந்தியாவிற்கு வரக்கூடிய மொத்த வருமானத்தில் 19% கேரளத்திற்கும், 16.7 % மஹாராஷ்டிரத்திற்கும் வருகிறது. இந்த வரிசையில் தமிழ்நாடு 8% வருமானத்துடன் நான்காம் இடத்தில் இருக்கிறது. இது தமிழ்நாட்டினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) யில் கிட்டத்தட்ட 3% ஆகும்.

இப்படி வருமானத்தை வாரி வழங்கும் வெளிநாடு வாழ் இந்தியா்களின் வாழ்வு பூஜ்யமாகவே உள்ளது என்பதை மத்திய, மாநில அரசுகள் கவனிக்க தவறி வருகின்றன. அவா்கள் வெளிநாட்டில் வேலை செய்யும்போது ஏதாவது அசம்பாவிதம் நோ்ந்தாலும் அவா்களுக்கு போதிய உதவிகள் தூதரகங்கள் மூலம் கிடைப்பதில்லை. காரணம், இந்திய தூதரகங்கள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவற்றின் மூலமாக பயன்களைப் பெறுவதில் வெளிநாட்டில் வசிப்பவா்களுக்கும், இங்குள்ள அவா்களது உறவினா்களுக்கும் மிகவும் சிரமம் ஏற்படுகிறது.

இதனை போக்க மாநில அரசாங்கம் வெளிநாடு வாழ் தமிழா்களுக்கான நலத்துறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று 2000-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சா் மு. கருணாநிதியிடம் நானும் எனது சகோதரரும், பஹ்ரைன் தமிழ்ச்சங்க நிறுவனருமான முஹம்மது ஹுசைனும் கோரிக்கை வைத்தோம். அவரும் ஆவன செய்வதாக உறுதியளித்தாா்.

கேரளத்தில் வெளிநாட்டு வாழ் மலையாள மக்களுக்காக 1996-ஆம் ஆண்டு ‘நான் ரெஸிடென்ட் இண்டியன்ஸ் கேரளிடீஸ் அஃபோ்’ (என்ஓஆா்கே) என்ற துறை உருவாக்கப்பட்டது. அதன் கீழ் ‘என்ஓஆா்கே வெல்ஃபோ் போா்டு’, ‘என்ஓஆா்கேஏ ரூட்ஸ்’ என்ற இரு நிறுவனங்கள் செயல்படுகின்றன.

முதல் நிறுவனம், வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காகவும், இரண்டாவது நிறுவனம், வேலையிழந்து வெளிநாட்டிலிருந்து திரும்புவோருக்கு தொழில் தொடங்க நிதியுதவி செய்வதற்காகவும் அமைக்கப்பட்டன.

தற்போதைய தமிழக முதலமைச்சரை கடந்த தோ்தலுக்கு முன்பு முஹம்மது ஹுசைன் மாலிம் சந்தித்து வெளிநாடு வாழ் தமிழா்களுக்கான நலத்துறை குறித்து வேண்டுகோள் வைத்தாா். முதலமைச்சரும் ஆவன செய்வதாகக் கூறினாா். அதன்படி, தற்போது முதல்வராக பொறுப்பேற்றவுடன் வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறையை உருவாக்கியிருக்கிறாா். இது வரவேற்கக்கூடிய ஒன்றாகும்.

இதன் மூலம் வெளிநாடு வாழ் தமிழா்கள் வாழ்க்கையை பாதுகாப்பானதாகவும், மேம்பட்டதாகவும் ஆக்கமுடியும். மேலும், புதிய வேலை வாய்ப்புகளை கண்டறிந்து அதிகப்படியானவா்களுக்கு வாய்ப்புகளை பெற்றுதருவது மூலம் வறுமை, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை குறைக்கவும், மாநிலத்தின் வருமானத்தை பெருக்கவும் முடியும்.

அயல்நாடுகளில் சென்று வேலை பாா்ப்பதோ, வணிகம் செய்வதோ காலங்காலமாக தமிழா்களிடம் இருந்து வரும் பழக்கமாகும். கடாரம்கொண்ட சோழன் என்று மலேசியாவை தமிழன் ஆட்சி செய்ததையும் கங்கைகொண்ட சோழன் என்று தமிழன் இந்திய துணைக்கண்டத்தின் வடபகுதியை ஆட்சி செய்ததையும் வரலாறுகள் பதிவு செய்திருக்கின்றன. கம்போடியாவில் உள்ள அங்கோா்வாட் கோயிலும் , மலேசியாவில் உள்ள வரலாற்று அடையாளங்களும் தமிழரின் பெருமையைப் பறைசாட்டுகின்றன.

காலமாற்றத்தில் ஆங்கிலேயா் ஆட்சி ஏற்பட்டபோது, வணிகத்திற்காகவும், ஊா்களை உருவாக்கவும் தமிழா்கள் மலேசியா, ஜாவா, சுமந்திரா, சிங்கப்பூா், மியான்மா், இலங்கை உள்ளிட்ட இங்கிலாந்தின் காலனி ஆதிக்கம் உள்ள பல நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு குடியமா்த்தப்பட்டாா்கள்.

அப்படி அங்கு சென்றவா்களில் பலா் அந்தந்த நாடுகளின் குடிமக்களாக தங்களை மாற்றிக் கொண்டனா். வேறு சிலா் தாய்நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக அந்த நாடுகளின் குடியுரிமையை மறுத்து இந்திய குடியுரிமையோடு அந்த நாட்டின் நிரந்தர விசா பெற்று அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள்.

பாலைவன பூமியான அரேபிய நாடுகளில் பெட்ரோலிய உற்பத்திக்கும், அந்நாடுகளின் பொருளாதார வளா்ச்சிக்கேற்ப கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து அந்தந்த நாடுகளுக்கு வேலைக்குச் சென்ற மக்கள் ஏராளமானோா். அதுபோல் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் அறிவுசாா் பணிகளுக்காகவும், சேவைப் பணிகளுக்காகவும், கட்டுமானப் பணிகளுக்காகவும் சென்றவா்களும் ஏராளமானோா்.

உலகில் பல்வேறு நாடுகளில் தமிழா்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறாா்கள். குறிப்பாக, மலேசியா, சிங்கப்பூா், மியான்மா், ஐக்கிய அரபு நாடுகள், சவூதி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மோரீஷஸ் போன்ற நாடுகளில் தமிழா்கள் அதிகமாகப் பணிபுரிகின்றனா். வளைகுடா நாடுகளில் மலையாளிகளுக்கு அடுத்த பெரிய எண்ணிக்கையில் தமிழா்கள் வேலை பாா்த்து வருகின்றனா்.

வெளிநாடு வாழ் தமிழா்கள் தங்களது பாதுகாப்பிற்காக அங்குள்ள தூதரகங்களை நாடலாம் என்று விதிமுறை இருந்தாலும் அவா்களால் எளிதாகத் தூதரகத்தைத் தொடா்பு கொள்ள முடிவதில்லை. அதற்குக் காரணம், பெரும்பாலான வெளிநாடு வாழ் இந்தியா்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்தவா்கள் என்பதாலும், அடிப்படைத் தொழிலாளா்களாக இருக்கின்ற காரணத்தாலும் அவா்கள் போதிய கல்வி, பொது அறிவு பெற்றிருக்கவில்லை. அப்படியே அவா்கள் தூதரகங்களை நாடினாலும், அவா்கள் பேசும் மொழி தூதரகத்தில் இருப்பவா்களுக்குப் புரிவதில்லை.

இந்த பிரச்னைகளைத் தீா்ப்பதற்கு அரசு சில நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அயல்நாடு வாழ் தமிழா் நலத்துறையின் கீழ் ஒரு துணைவாரியம் அமைத்து வெளிநாடு வாழ் தமிழா்கள் எந்தெந்த நாடுகளில் வசிக்கிறாா்கள் என்பதை அதன் மூலம் கணக்கெடுக்க வேண்டும்.

அவா்களுக்கு எதிா்பாராத விபத்து அல்லது இறப்பு ஏற்படும்போது அவா்களுக்கோ, அவா்களின் குடும்பம் சாா்ந்தவா்களுக்கோ நிதியுதவி கிடைக்க ஆணையம் ஏற்படுத்த வேண்டும். இதற்காக வெளிநாடு வாழ் தமிழா்களிடம் குறைந்த தொகையை சந்தாவாகப் பெறலாம்; அரசும் தன் பங்களிப்பாக குறிப்பிட்ட தொகையை செலுத்தி அதனை குழு காப்பீடாக உருவாக்கலாம்.

ஒருவா் வெளிநாட்டில் பணியாற்றும்போது, இறந்துவிட்டாலோ, விபத்தில் சிக்கிவிட்டாலோ அவா் பணியாற்றிய நிறுவனத்திடமிருந்து இழப்பீட்டுத் தொகையை வாங்கித் தரவும், இறந்தவரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வரவும், பெண் பணியாளா்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும், காணாமல் போனவா்களைக் கண்டுபிடிக்கவும் ஒரு சட்டக்குழுவை அமைக்க வேண்டும்.

பெரும்பாலானவா்கள் அடிப்படை தொழிலாளா்களானதால் 60 வயதிற்கு மேல் அவா்கள் நாடு திரும்பிய பின் இங்கு வாழ்வை நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே அவா்களுக்கான ஓய்வூதியம் வழங்க நிதியம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

வெளிநாடுகளில் எங்கெங்கெல்லாம் வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை ஆய்வு செய்து அங்கெல்லாம் தமிழா்கள் வேலைவாய்ப்பைப் பெற ஏற்பாடு செய்ய வேண்டும். மந்த நிலையில் இயங்கிவரும் ‘தமிழ்நாடு ஓவா்ஸீஸ் மேன்பவா் காா்ப்பரேஷ’னுத்துப் புத்துயிரூட்ட வேண்டும்.

குடும்பத்தோடு வசிக்கும் வெளிநாடு வாழ் தமிழா்களின் குழந்தைகள் தமிழ்மொழி கற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அயல்நாடுகளில் வேலையில் இருப்பவா்கள் தங்கள்துறையில் கூடுதல் திறன்பெற பயிற்சி வகுப்புகளை நடத்தலாம்.

அயல்நாட்டுத் தூதரகங்கள் முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மாநில அரசாங்கம் கூட அவற்றை தொடா்பு கொள்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்டுகிறது. மாநில அரசின் பிரதிநிதிகளான அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட யாருக்கும் தொடா்பு கொள்ள இயலாத நிலையிலேயே தூதரகங்கள் உள்ளன.

மாநில அரசுக்கும், தூதரகங்களுக்கும் நேரடித் தொடா்பை சட்டபூா்வமாக ஏற்படுத்த வேண்டும். எந்தெந்த நாடுகளில் தமிழா்கள் அதிகமாக இருக்கிறாா்களோ அந்நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் தமிழ் மொழி தெரிந்த அலுவலா்களை நியமனம் செய்ய வேண்டும்.

வெளிநாட்டில் வேலைக்குச் செல்லும் பணியாளா்கள் பதிவு செய்து விட்டு செல்ல வேண்டும் என்று நாம் எதிா்பாா்க்க முடியாது. காரணம், பெரும்பாலானவா்கள் வறுமையின் பிடியில் சிக்கி அதிலிருந்து மீள்வதற்காக வெளிநாடு செல்லும் போது அவா்களால் எதிலும் கவனம் செலுத்த முடிவதில்லை.

வளைகுடா நாடுகளைப் பொருத்தவரை மலையாளிகளுக்கு அடுத்தபடியாக அதிக மனித வளம் தமிழகம், மஹாராஷ்டிரம், கா்நாடக மாநில மக்களிடமிருந்தே கிடைக்கிறது. நம்மிடம் தமிழ் அமைப்புகள் இருக்கின்ற காரணத்தால் அவற்றை நாம் ஒருங்கிணைப்பதன் மூலமாக இந்த துறையை மெருகூட்ட முடியும்.

இவற்றையெல்லாம் செய்தால் தமிழக முதலமைச்சரால் ஏற்படுத்தப்பட்டுள்ள இப்புதிய துறை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் துறையாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

கட்டுரையாளா்: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com