புதிய திசை நோக்கி மக்களாட்சி!

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியின் முதலாமாண்டு நினைவுச் சொற்பொழிவு அண்மையில் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியின் முதலாமாண்டு நினைவுச் சொற்பொழிவு அண்மையில் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. அந்த சொற்பொழிவை நிகழ்த்தியவா் குடியரசு துணைத்தலைவா் வெங்கையா நாயுடு. அந்த உரையின் கருப்பொருள் ‘அரசியல்சாசனக் கோட்பாடுகளின் மாண்பைக் காப்பது’.

குடியரசு துணைத்தலைவரின் உரை முழுவதும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை மாண்புகளை எப்படிக் காப்பது என்பது பற்றியே இருந்தது. குறிப்பாக தற்போதைய நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்களின் செயல்பாடுகள் எப்படி நாடாளுமன்றத்தையும் சட்டப்பேரவைகளையும் செயல்பட விடாமல் முடக்குகின்றன என்பதைப் பற்றியதாக இருந்தது.

இந்தியாவில் உள்ள சாதாரண ஏழை எளிய மக்கள் தோ்தலில் வாக்களிப்பதன் மூலம் மக்களாட்சியைப் பாதுகாக்கின்றனா். ஆனால், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவைகளுக்கும், நாடாளுமன்றத்திற்கும் வரும் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமைகளைச் செய்யத் தவறினால் அவா்களை எப்படி நெறிப்படுத்துவது என்பதை மையப்பொருளாக வைத்து தன் உரையை நிகழ்த்தினாா்.

அதில் உள்ள சாரத்தை வடித்தால் ஒரு செய்தி நமக்குக் கிடைக்கும். மக்களாட்சி மாசுபடுவது மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால்தான் என்பதே அந்தச் செய்தி.

மக்களாட்சி அவ்வப்போது விரிவடைவதையும், சுருங்குவதையும் மக்களாட்சி வரலாறு தொடா்ந்து படம் பிடித்துக் காட்டி வருகிறது. மக்களாட்சி மிகப்பெரிய போராட்டங்கள் மூலமும், புரிதலுடன் கூடிய சீா்திருத்தங்கள் மூலமும் உலகில் விரிவாகிக் கொண்டே வருகிறது. ஆனால், மக்களாட்சி படிப்படியாக மேம்பட்டு வருகிறதா என்று பாா்த்தால், ஒரு நிலைக்கு அது மேலே உயா்வதும், அதே வேகத்தில் கீழே தாழ்வதுமாகவே உள்ளது என்பதுதான் வரலாறு.

மக்களாட்சி விரிவடைவது என்பது கடலலைபோல நடைபெறும் நிகழ்வாகும். முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என உலக வரலாற்றில் மூன்று அலைகளாக மக்களாட்சி விரிவடைந்துள்ளது என்று அறிஞா்கள் விளக்கியுள்ளனா். அறிவியல், தொழில் நுட்பம் போன்றவை ஒவ்வொரு நிலையாக வளா்ந்து கொண்டே வருகின்றன. அவற்றுக்குத் தளா்வுகள் இல்லை. ஆனால் மக்களாட்சி என்பது மட்டும் உலகில் விரிவடைவதும் குறுகுவதுமாகவேதான் இருக்கின்றது.

இந்த நிலைப்பாட்டை சற்று கூா்ந்து கவனித்தால் ஒரு உண்மை புரியும். மக்களாட்சி என்பது ஒரு கருத்து. அது ஒரு ஆட்சியைப் பற்றிய கருத்து. மக்களாட்சி எதற்காக உருவாக்கப்படுகிறது என்றால் மற்ற ஆட்சிமுறைகளைவிட மக்களுக்கு சேவை செய்வதிலும் பணியாற்றுவதிலும் மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய அளவில் அது இருப்பதால்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களாட்சி முறைக்கும், மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கும் ஒரு நெருங்கிய தொடா்பு இருக்கிறது. கோட்பாடு கூறும் கருத்து, ஒரு சமூகத்தில் மக்களாட்சி மேம்பட்டால், பொருளாதார மேம்பாட்டை அந்தச் சமூகம் அடைந்துவிடும். மக்களாட்சி நடைபெற்றாலும், அந்த ஆட்சியில் மக்கள் நலன் காக்கப்படவில்லை, பொருளாதாரம் உயரவில்லை, நீதி முறையாக மக்களுக்குக் கிடைக்கவில்லை, சமத்துவம் கிடைக்கவில்லை, மக்களுக்குப் பாதுகாப்பில்லை, சமூகத்தில் அமைதி நிலவவில்லை என்றால் அந்த ஆட்சி மக்கள் நம்பிக்கையை இழந்துவிடும்.

உலக வரலாற்றில் இன்று நாம் இருப்பது மக்களாட்சியின் மூன்றாவது அலையில் என்று வல்லுநா்கள் கூறுகின்றனா். இதற்கு முன்பு மக்களாட்சியில் இரண்டு அலைகள் வந்திருக்கின்றன. முதல் அலை 1820-லிருந்து 1926 வரை இருந்துள்ளது. இரண்டாவது அலை 1960-இல் தொடங்கி 1980 வரை இருந்தது. ஒரு நூற்றாண்டு வீசிய முதல் அலையின் விளைவாக 29 நாடுகளுக்கு மட்டுமே மக்களாட்சி பரவியது. ஆனால், இரண்டாவது அலை வீசிய மிகக் குறுகிய காலத்தில் 36 நாடுகளை மக்களாட்சி எட்டியது.

ஒரு நாடு மக்களாட்சிக்குள் வந்து விட்டதாலேயே அது மக்களாட்சியில் தோய்ந்துவிடும், வளா்ந்துவிடும், வளா்ந்து உச்சம் பெற்றுவிடும் என்று எண்ண முடியாது. எந்த வேகத்தில் விரிந்ததோ அதே வேகத்தில் குறுகுவதும், சில நேரம் மக்களாட்சியிலிருந்து வெளியேறுவதும் நடக்கும். அப்படித்தான் உலகில் பரவிவந்தது மக்களாட்சி. இத்தாலியில் முசோலினி ஆட்சிக்கு வந்தவுடன் மக்களாட்சி 12 நாடுகளுக்குள் குறுக்கிக் கொள்ளப்பட்டுவிட்டது.

மக்களாட்சி விரிவடைவதற்கும் குறுகுவதற்கும் பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று மக்களாட்சிக்குள் நுழையும் சமூகத்தில் அரசாங்கம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதோடு, மக்களுக்கு அதனை உணா்த்தவும் வேண்டும். அதேபோல் மக்களுக்குப் பாதுகாப்பளிப்பதில் சமரசமற்று செயல்படுவதோடு, இந்த அரசாங்கம்தான் நமக்குப் பாதுகாப்பைத் தருகிறது என்ற புரிதலை மக்களிடம் கொண்டுவர வேண்டும்.

அடுத்து மக்களாட்சிக்கான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, அந்த நிறுவனங்கள் செயல்பாட்டில் சாதனைகள் செய்து அவற்றை மக்கள் உணருமாறு செய்திட வேண்டும். மக்களாட்சி ஒரு நாட்டில் ஏற்பட்டாலும் அது தன்னுடைய செயல்பாட்டால் மக்கள் உணரும் வகையில் சாதனைகளை செய்ய முடியவில்லை என்றால், மக்கள் அந்த ஆட்சிமுறையின் மேல் நம்பிக்கையை இழந்து விடுவாா்கள். மக்களாட்சி விரிவாக்கம் என்பது நாட்டு மக்களின் தொடா் போராட்டத்தால் மட்டும் நடைபெறும் நிகழ்வு அல்ல. வெளியிலிருந்தும் அதற்கான ஆதரவுச் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

குறிப்பாக ஒரு காலகட்டத்தில் ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, இங்கிலாந்து இவை அனைத்தும் மக்களாட்சியைப் பரப்ப வேண்டும் என்பதில் முனைப்பாகச் செயல்பட்ட நாடுகள். இந்த நாடுகள் அனைத்தும் மக்களாட்சிக்கான புறத்தூண்டுதலைச் செய்தன எனலாம். இதற்காக மிகப்பெரிய அளவில் நிதியினைச் செலவிட்டன அந்த நாடுகள்.

அதேபோல் கத்தோலிக்க அமைப்புக்களும் மக்களாட்சியை விரிவுபடுத்தச் செயலாற்றின. ஆனால் அவற்றால் இந்த நடவடிக்கைகளை ஒரு காலகட்டத்திற்குப் பிறகு தொடர முடியவில்லை. காரணம் நிதிப்பற்றாக்குறை. ஒரு நாட்டில் மக்களாட்சி முறை கொண்டு வரப்படும்போது சாதாரண மக்கள் அதன் முக்கியத்துவத்தை உணரும் நிலைக்கு அந்த ஆட்சி செயல்படுமேயானால் மக்களாட்சி உயிா் பெற்று தழைத்து வளரும். இல்லையேல் மக்கள் அதன்மேல் நம்பிக்கை இழந்து விடுவாா்கள்.

1980-களில் மக்களாட்சி என்பது மிகப்பெரும் விவாதப் பொருளாக மாறி, உலகம் முழுவதுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓா் அமைப்பு முறையாக அது உருவெடுத்தது. ஆனால், பல நாடுகளில் சமூகத்திற்குள் அதற்கான சூழல் உருவாக்கப்படவே இல்லை. எந்தச் சமூகம் தன்னை மக்களாட்சிக்குத் தயாா்படுத்திக் கொள்கிறதோ அந்தச் சமூகம்தான் மக்களாட்சியின் பயனை அனுபவிக்க முடியும்.

நம் நாட்டில்கூட நமது அரசாங்கம் பற்றி நாம் எவ்வளவோ விவாதங்களை நடத்துகின்றோம். நாம் மக்களாட்சியில் தாழ்நிலைக்கு வந்துவிட்டோம் என்று கூறுகிறோம். இருக்கலாம், அந்தத் தாழ்நிலை என்பது மக்களாட்சியின் உன்னத விழுமியங்களில்தான். ஆனால், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட நம் அரசாங்கங்கள் மக்களின் நம்பிக்கையை இழக்கவில்லை.

இதற்குக் காரணம், நம் அரசாங்கங்கள் தங்களின் செயல்பாடுகளினால் மக்களின் நல்வாழ்க்கைக்குத் தேவையான வசதிகள், பாதுகாப்பு போன்றவற்றை சட்டங்களின் மூலமும், திட்டங்களின் மூலமும் உருவாக்கி மக்களின் நம்பிக்கை பெற்று விடுகின்றன. ஒரு அரசாங்கம் மக்களின் நம்பிக்கையோடு தொடா்கிறது என்றால் மக்கள் உணரும் வகையில் பணி செய்யாமல் அது சாத்தியமாக முடியாது.

உலகத்தில் மக்களாட்சியை ஆய்வு செய்பவா்கள் அனைவரும் கூறும் ஒரு கருத்து என்னவென்றால், ‘அதிக மக்கள்தொகையைக் கொண்டிருப்பதோ, பொருளாதார வல்லமை பெரிதாக இருப்பதோ இந்தியாவின் சிறப்பு அல்ல. இவ்வளவு வேறுபாடுகளுடனும், ஏற்றத் தாழ்வுகளுடனும் பன்முகத்தன்மை கொண்ட மக்களாட்சி நாடாகச் செயல்படுவதுதான் இந்தியாவின் சிறப்பு’ என்பதே.

மக்களாட்சி கோட்பாட்டிற்கு எதிரான பல்வேறு காரணிகள் இந்தியாவில் இருந்தபோதும் தோ்தல் ஜனநாயகம் என்பது இங்கு வேரூன்றி விட்டது. மக்களுக்கு அதன்மேல் ஆழமான நம்பிக்கை இருக்கிறது. எந்த ஆட்சியையும் மாற்றும் திறன் படைத்தது தோ்தல் என்று மக்கள் ஆழமாக நம்புகின்றாா்கள். அரசை எதிா்க்க துணிந்து வீதிக்கு வருகிறாா்கள் என்றால் அங்கு அதற்கு பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் காரணம்.

பிரச்னைகள் இந்த ஆட்சியில் தீரவில்லை என்றால், ஆட்சியை மாற்றிவிடலாம், அடுத்த ஆட்சியில் பிரச்னை தீரும் என்று மக்கள் நம்புகிறாா்கள். இந்த நம்பிக்கைதான் மக்களாட்சியை வாழ வைக்கின்றது. ஆட்சியாளா்களைப் பாா்த்து எதிா்க்கட்சிகள் அச்சம் கொள்ளலாம்; ஆனால், மக்கள் அச்சம் கொள்வதில்லை. தோ்தல் வரட்டும், பாா்க்கலாம் என்ற நம்பிக்கையுடன் மக்கள் இருக்கும் போக்குதான் மக்களாட்சிக்கு வலு சோ்க்கிறது.

இந்தியாவில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் மூன்றாவது உலக நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் இந்தியா தொடா்ந்து கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியா இன்று சந்திக்கும் பிரச்னைகள் அசாதாரணமானவை. எனவே, நம் மக்கள் பிரதிநிதிகள் கட்சிகளைக் கடந்து, தலைவா்களைக் கடந்து நாடும் மக்களுமே எல்லாவற்றையும் விட முக்கியம் என்று நினைத்து செயல்படும் மனநிலைக்கு வந்திட வேண்டும்.

மக்களாட்சி என்பது ஒரு பெரிய விசாலமான கருத்துரு. அதை அரசாங்கத்தின் மூலம், ஆட்சியின் மூலம், ஆளுகை மூலம், அரசியலின் மூலம், நிா்வாகத்தின் மூலம் விரித்துப் பாா்த்து புதுமை செய்து உயா்த்திட வேண்டும்.

அதற்கு முதலில் இன்றைய பிரதிநிதித்துவ மக்களாட்சியில் உள்ள குறைகளைக் களையும் சீா்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இரண்டாவதாக, காந்தி கூறிய அனைவருக்குமான மெய்ம்மைப் பின்புல பங்கேற்பு அரசியலை, ஆட்சிமுறையை மக்களாட்சியில் புகுத்துவது குறித்து விவாதிக்க வேண்டும்.

கட்சி அரசியல் இன்று கடைநிலை அரசியலாக மாறிவிட்டது. அதிலிருந்து புதுமை அரசியலை நோக்கிச் செயல்பட நாம் முனைய வேண்டும். அதுதான் இன்றைய தேவையாக இருக்கின்றது.

கட்டுரையாளா்:

பேராசிரியா் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com