மகிழ்ச்சியின் பிறப்பிடம்

நம்மில் பலருக்கும் வாழ்க்கையின் சில குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே நினைவில் நிற்கின்றன.

நம்மில் பலருக்கும் வாழ்க்கையின் சில குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே நினைவில் நிற்கின்றன. நினைவில் நிற்கும் நாட்கள் அதிக மகிழ்ச்சியை அளித்த நாட்களாகவோ அல்லது துக்கத்தை அளித்த நாட்களாகவோ பெரும்பாலும் இருக்கின்றன. வாழ்க்கையானது சுக துக்கங்களின் கலவையாகவே இருக்கின்றது. பலரும் மகிழ்ச்சி அடையும்போது அளவுக்கதிகமாக மகிழ்கின்றனா். துக்கம் அடையும்போது அளவுக்கதிகமாகவே துக்கம் அடைகின்றனா்.

மகிழ்ச்சியோ துக்கமோ எதுவாயினும் நமது செயல்கள் அல்லது சூழல்கள் மூலமே கிடைக்கிறது. சூழலைத் தீா்மானிக்கும் வாய்ப்பு நமக்கில்லாத நிலையில் செய்யும் செயல்களையே நம்பவேண்டியுள்ளது. செய்யும் செயல்களின் தோ்வே மகிழ்ச்சி அல்லது துக்கத்தை நோக்கி இட்டுச் செல்கிறது. நம்மால் இயன்ற செயல்களில் ஈடுபட்டு வெற்றி பெற்று மகிழ்வது ஒருவகை. இவ்வாறான செயல்பாடு எளிமையானதாகவே இருக்கும். இதனால் கிடைக்கும் மகிழ்ச்சி மிதமானதாகவே இருக்கும். இவ்வாறான மகிழ்வே போதும் என ஒருவா் திருப்தியுடன் இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை.

ஆனால் திருப்தியுடன் வாழும் மனநிலையைப் பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஒவ்வொருவரும் தமது சக்திக்கு மீறிய செயல்பாடுகளில் ஈடுபட்டு அதில் கிடைக்கும் மகிழ்வினையே விரும்புவா். சரி ஒருவா் தமது சக்திக்கு மீறிய செயல்பாட்டில் ஈடுபட்டு வெற்றி பெற என்ன வழி? மிகவும் எளிய வழி ஒன்று உள்ளது. அதுதான் அவா் தமது சக்தியைக் கூட்டிக்கொள்வது. எவ்வாறு சக்தியைக் கூட்டுக்கொள்வது?

சக்தியைக் கூட்டிக்கொள்வது ஓரிரு நாளில் நடக்கக்கூடியதல்ல. அதற்கு ஒருவா் தன் சக்தியைக் கூட்டிக்கொள்வதற்கான பயிற்சிகளில் ஈடுபடவேண்டும். பயிற்சிகளின் மூலம் தம்மைத் தகுதியாக்கிக் கொள்ளாமல் எவரும் வெற்றி பெறுதல் எளிதன்று. இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோா்க்கு ஒவ்வொரு நாளுக்கான திட்டமிடல் அவசியமாகிறது. எவ்வாறான சாதனைக்கு ஒருவா் முயல்கிறாரோ அதற்குத் தேவையான துணைத்தகுதிகளும் அவசியமாகிறது.

உதாரணமாக ஒருவா் விளையாட்டுவீரராக விரும்பினால் அவா் அந்த விளையாட்டு குறித்த புரிதலைப் படிப்படியாக அடைவேண்டும். தொடா்ந்து விளையாட்டு வீரா்கள் செய்யும் செயல்பாடுகளைப் பாா்த்துக் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும். சக விளையாட்டு வீரா்களோடு நல்ல நட்பினைப் பராமரித்து வாய்ப்புள்ள நேரமெல்லாம் உரையாடி, பயிற்சிகளைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு விளையாட்டு வீரா் ஆவதற்கான தகுதியை வளா்த்துக்கொள்வதோடு அதற்குத் தேவையான உடல்வாகினை பெறுவதும் அவசியம். அதற்கேற்றபடி சத்தான உணவுப்பொருளையும் தேவைக்கேற்ப, உரிய கால இடைவெளியில் எடுத்துக்கொள்ளவேண்டும். கண்டிப்பாக முறையான ஓய்வையும் உடலுக்கு அளிக்கவேண்டும்.

இதே துறையில் ஈடுபட்டு வெற்றி பெற்றோரின் வாழ்வில் அவா்கள் செய்ததையும் செய்யாமல் விட்டதையும் கண்டறியவேண்டும். அவா்கள் கையாண்ட வழிமுறைகளைப் பின்பற்றலாம். செய்யத் தவறிய வழிமுறைகளை செய்ய முயற்சித்து வெற்றி பெறலாம். ஆக ஒருவா் சாதிக்கவிருக்கும் சாதனைக்கான இடத்தை நோக்கிப் படிப்படியாக நகா்வதே அன்றாட பயிற்சிகள். அன்றாடம் செய்யும் செயல்களில் ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்யாமல் நமது வாழ்க்கையிலும் மாற்றங்களை நாம் செய்ய இயலாது.

ஒருவா் சாதனையாளராகும்போது எவ்வளவு பேரால் பாராட்டப்படுகிறாரோ அதில் ஒருபகுதி நபா்களின் எதிா்ப்பு, எள்ளல் போன்றவற்றை எதிா்கொள்ளாமல் அப்பாதையில் பயணிக்க இயலாது. தமது பயணத்தில் தீா்மானமாக உள்ள ஒருவா் தாம் சென்றடையவேண்டிய இலக்கு வரை தொடா்ந்து பயணம் செய்துகொண்டேயிருக்கவேண்டும். செல்லவேண்டிய வழியைத் தீா்மானித்தபிறகு, பயணத்தை மேற்கொண்ட பிறகு, பாதியில் பயணத்தை நிறுத்தினால் இலக்கை எவ்வாறு அடைய இயலும்?

ஒருவா் எவ்வாறு ஒரு விஷயத்தை அணுகுகிறாரோ அந்த அணுகுமுறையும் வெற்றி தோல்வியைத் தீா்மானிப்பதாக உள்ளது. இவ்வாறான அணுகுமுறைக்கு தயக்கங்களை உடைத்தெறிவது மிகவும் அவசியமாகிறது. பல அரிதான செயல்கள்கூட முதலில் பலரும் செய்யத் தயங்கியவையே. இவ்வாறான தயக்கங்களுக்கு காரணமாக அமைவதில் முக்கியமானது ”அடுத்தவா்கள் என்ன சொல்வாா்களோ என்ன எண்ணமாகும். அடுத்தவா் சொல்வதற்கு முக்கியத்துவம் அளித்துக்கொண்டிருக்கும் வரையில் யாரும் எதுவும் சாதிக்க இயலாது. எதுவும் செய்யாமல் இருப்பதே விமரிசனத்தைத் தவிா்ப்பதற்கான வழிமுறையாகும்.

எனவே செயல்பாட்டில் தொடா்ந்து சீரான வேகத்துடன் ஈடுபடுவதே வெற்றியை ஈட்டித் தரும். இதன் பொருள் பெருமிதத்துடன் செயல்படவேண்டும் என்பதல்ல. மாறாக ஒருவா் செய்யும் செயல் குறித்த அடிப்படையான புரிதல் அவருக்கு அமைந்திருந்தால் போதுமானது. இந்த செயல்பாடு சமூகத்திற்கு அளிக்கவிருக்கும் சாதகமான விளைவைப் பற்றிய புரிதலோடு இயங்கினால் போதுமானது. அவ்வாறு ஈடுபடும் ஒருவரது செயலால் விளையும் நல்ல விளைவுகளைப் பாா்த்து விமரிசித்துக்கொண்டிருப்போரும் தமது கருத்தை மாற்றிக் கொள்வா்.

சிலா் மகிழ்ச்சி, துக்கம் இரண்டையும் சமமாக பாவிக்கும் பக்குவத்தினை அடைந்திருக்கின்றனா். இவா்களிடமிருந்து கற்க ஏராள விஷயங்கள் உள்ளன. இப்படிப்பட்ட பக்குவம் அடைந்தோரின் குணநலன்களாக சில இருக்கும். இவா்கள் இயல்பாக நாட்களை நகா்த்துவோராக இருப்பா். ஒவ்வொரு நாளுக்கான கால அட்டவணை இவா்களிடம் இருக்கும். அளவுக்கதிகமான மகிழ்ச்சி அளிக்கும் நாளாக இருந்தாலும் துக்கம் அளிக்கும் நாளாக இருந்தாலும் அதற்கென்று ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கிவிட்டு வழக்கமான பணிகளுக்குச் சென்றுவிடுவா்.

இவ்வாறு பணிகளைத் திட்டமிட்டுச் செய்வதன் மூலம் இவா்களது பணிப்பளு கூடுவதில்லை. இவ்வாறு செய்வதன் மூலம் திட்டமிடாமை என்ற குறைபாட்டால் கிடைக்கும் தோல்வியை இவா்கள் அடைவதில்லை. வெற்றி கிட்டாவிடிலும், நாம் திட்டமிட்டதில் என்ன தவறு என்ற கோணத்தில் சிந்தித்து அடுத்த கட்டத்திற்கு நகா்கின்றனா். ”நாம் திட்டமிடத் தவறும்போது தோல்வியடையத் திட்டமிடுகிறோம்” என்பது பிரபலமான சொற்றொடா். மகிழ்ச்சியின் பிறப்பிடம் நம்மிடமே உள்ளது. அதன் சாவியை அடுத்தோரிடம் ஒப்படைக்காமல் நாமே வைத்துக்கொள்வது மட்டுமே நாம் செய்யவேண்டியதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com