பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம்

இந்தியாவில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரம் ஒன்று சொல்கிறது. 

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்களும், துன்புறுத்தல்களும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. இந்த நிலை இந்தியா முழுவதும் காணப்படுகிறது. இந்தியாவில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரம் ஒன்று சொல்கிறது. 

உலகில் சீரும் சிறப்பும் நிறைந்தவர்கள் பெண்கள். தாய்மை என்பது பெண்களுக்கே உரிய தனிச்சிறப்பு. மனித குலத்தின் ஆரம்ப காலகட்டத்தில் சமூகத்தை வழிநடத்தியவர்கள் பெண்கள்தான். 

இன்றைக்கும் கூட சமூகத்தில் பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு சமுதாய வளர்ச்சிக்கு வித்திடுபவர்கள் பெண்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அப்படி வளர்ச்சிப் பாதையில் சமுதாயத்தை எடுத்துச் செல்லும் பெண்கள் பாதுகாப்போடு நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

பெண்கள் கல்வி கற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்பது கண்கூடு. ஆனாலும், அப்படிப் பணியாற்றும் பெண்கள் பாதுகாப்போடு, அச்சமின்றி பணியிடங்களில் தங்கள் பணியில்  ஈடுபட முடிகிறதா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

பெண்கள் வன்கொடுமையால் பாதிக்கப்படும்போது, அவர்கள் புகார் அளிக்க காவல் நிலையத்திற்குத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. அப்படிச் செல்லும் காவல் நிலையத்திலேயே  வன்கொடுமை சம்பவம் நடந்தால் அவர்கள் எங்கே சென்று புகார் அளிப்பார்கள்? நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே பெண்களுக்கு எதிரான வன்கொடுமை என்பது பெரிய பிரச்னையாக இன்று உருவெடுத்துள்ளது. 

அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தின் ஆளுநர் மீது 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். இது அவர் மீது சுமத்தப்படும் நான்காவது பாலியல் குற்றச்சாட்டு  என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுதலை செய்து சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதிக்கு பதவி உயர்வு பரிந்துரையை கொலீஜியம் திரும்பப் பெற்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமையை முடிவுக்குக் கொண்டுவர ஆந்திர சட்டப்பேரவையில் 2019-ஆம் ஆண்டு புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அதன் பெயர் 'திஷா' சட்ட மசோதா. இந்த சட்டத்தின்படி பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஆதாரங்கள் இருந்தால் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் 21 நாள்களில் மரண தண்டனை விதிக்கும். காவல்துறையினர் ஏழு நாளில் விசாரணையை முடிக்க வேண்டும், அடுத்த 14 நாள்களில் நீதிமன்ற விசாரணையை முடிக்க வேண்டும், இறுதியில் 21 நாள்களில் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும். 

இதேபோல் தமிழ்நாட்டிலும் பாலியல் வழக்குகள் விரைந்து விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. 20 வயது கூட நிரம்பாத இளைஞனும், 70 வயதை தாண்டிய கிழவனும் பாலியல் வன்முறையில் ஈடுபடும் கொடுமை நாள்தோறும் அரங்கேறுகிறது. இவர்களை மனிதத்தன்மை அற்றவர்களாக மாற்றியது எது? இதற்கு பதில் தேடாமல் பெண்களை எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி விளம்பரம் செய்வது சரிதானா?

பள்ளியில் படிக்கும் சிறுமி, வயது வந்த குமரி, குழந்தை பெற்ற தாய் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இப்படிப்பட்ட கொடூர நிகழ்வுகளால் பெண்கள் எப்போதும் எச்சரிக்கையுடனும் அச்சத்துடனுமே வாழ வேண்டியிருக்கிறது. பள்ளி, கல்லூரி, பணியிடம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் என எங்கு சென்றாலும் பெண்கள் பயத்துடனே சென்று வருகின்றனர். இந்த அச்சம் அவர்களின் வீட்டிலும் தொடர்கிறது.

பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை நிகழ்வுகள் அனைத்தும் மனித உரிமை மீறல்களே. அத்தகைய மனித உரிமை மீறலை செய்யும் நபர் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். நாட்டில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமெனில் பெண்கள் வேலை செய்யும் இடங்களிலும், பள்ளி, கல்லூரிகளிலும் அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பெண்களின் ஒட்டுமொத்த நலனை வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ள மத்திய அரசின் முயற்சிகளுக்கு உதவியளிக்கும் வகையில் தேசிய மகளிர் ஆணையத்தின் 24 மணி நேர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை மத்திய பெண்கள் - குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்களை காவல்துறை, மருத்துவமனை, மாவட்ட சட்ட சேவை ஆணையம், உளவியல் சேவை அமைப்பு போன்றவற்றோடு இணைப்பதே இந்த இணையவழி உதவி எண் அறிவிக்கப்பட்டதன் நோக்கமாகும். காணொலி வாயிலாக இந்த சேவையைத் தொடங்கி வைத்த அமைச்சர் ஸ்மிருதி இரானி, தேசிய மகளிர் ஆணையத்தின் புதிய முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர், ஆணையத்தின் தற்போதைய புகார் அமைப்பு முறையை இந்த புதிய உதவி எண் வலுப்படுத்தும் என்று கூறினார். இந்த உதவி எண்ணை பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தொடர்பு கொள்ளலாம். 

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் எண்ம (டிஜிட்டல்) இந்தியா நிறுவனத்துடன் இணைந்து இந்த மின்னணு உதவி எண் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இதே போல் பதினெட்டு வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கும் 24 மணி நேர உதவி எண் சேவை வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின்  கோரிக்கையாகும். 

பெண்கள் பல்வேறு துறைகளில் பாதுகாப்பற்ற சூழலில் பல்வகைப் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது மத்திய-மாநில அரசுகளின் தலையாய கடமை. பெண்களின்  பாதுகாப்பே நாட்டின் பாதுகாப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com