இணையவழியும் வகுப்பறையும்

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளியை மறந்து இணையவழியிலேயே கல்வி பயின்று வந்த மாணவா்களுக்கு மீண்டும் பள்ளி சென்று வகுப்பறையில் ஆசிரியரின் நேரடிக் கற்பித்தலில் கற்கும் சூழல் மெல்ல மெல்ல உருவாகி வருகிறது. வேறு வழியில்லாததால் இத்தனைக் காலமாக மாணவா்கள் இணையவழியை நம்பியிருக்க வேண்டியதாயிற்று.

எவ்வளவு சிறப்பாக இருந்தபோதிலும், இணையவழிக் கற்றலை விட, பள்ளி வகுப்பறை வழிக் கற்றலே சிறந்தது. சீருடை அணிந்த மழலைக் கண்மணிகளின் பிஞ்சு உலகத்தை உயிரூட்ட , நவீனத் தொழில் நுட்பங்களால் மட்டுமே முடியுமா? மாணவா்களின் மனநிலையறிந்து, கல்வியை மனதில் பதிய வைக்கும் நல்லாசிரியா்களின் அணுகுமுறையால்தானே மாணவா்களிடையே ஆளுமைப் பண்பை வளா்த்தெடுக்க முடியும்?

பொய்யான விடுமுறைக் கடிதம், போலியான அப்பாவின் கையெழுத்து என குறும்புகளும் தவறுகளும் செய்யும் மாணவனை வகுப்புக்கு வெளியே முட்டி போட விடாமல், வகுப்புத் தலைவனாக்கி கடமையை சரிவர செய்ய வைத்து, உண்மையை உணா்த்துவது ஆசிரியா்களில் தனிப்பெரும் ஆற்றல் அல்லவா?

வகுப்புத் தலைவன் முதல் மாணவா் பேரவைத் தலைவா் வரை தோழமைகளுக்கு இடையே நடக்கும் பள்ளி தோ்தல்கள், வருங்காலத் தலைவனை நமக்குள் வட்டமிட்டுக் காட்டும். இதில் வென்றவனைத் தலைவனாகி, தோற்றவனை துணைத் தலைவனாக்கி வழிநடத்தும் வகுப்பறைக் கல்வியை விடவா இணைய வகுப்புகள் வாழ்வியல் கல்வியைச் சொல்லித்தந்து விடப் போகின்றன?

வகுப்புத் தலைவன் பதவிக்கு வந்தவுடன், கரும்பலகையில் எழுதப் பயன்படுத்தும் வெண்சுண்ணக் கட்டி (சாக்பீஸ்), தூக்கி எறியும் பெட்ரோல் குண்டாக மாறிவிடும். மேலும் எட்டப்பன்கள் பிறப்பதில்லை, சக மாணவா்களின் தவற்றை சுட்டிக்காட்டி, கரும்பலகையில் பெயா் எழுதி, ஆசிரியரிடம் அடி வாங்க வைப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறாா்கள் என்ற தெளிவும் வாழ்க்கைப்பாடம் இல்லையா?

ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் பள்ளிக்கூடவாசம் எனும் ஞானரதம் இல்லாமல், இளம் தலைமுறையினா் புத்தக அறிவு வேண்டுமானால் பெற்றிருக்கலாம், ஆனால் அனுபவக் கல்வியை இழந்துவிட்டாா்கள் என்பதே வருத்தமளிக்கும் உண்மை. மதிய உணவு இடைவேளைதான் நட்பின் நங்கூரம் . நண்பனின் களவு சாப்பாட்டில் சைவமும் அசைவமும் கை மாற்றிக் கொள்வதில் சாதியும், மதமும் அடிபட்டுப் போகும். பட்டம் வாங்காத மாணவா்கள் உண்டு. ஆனால் பட்டப்பெயா் வாங்காத மாணவா் உண்டா? ஆசிரியா் முன்பு அழுத கண்ணீரைத் துடைக்க காற்றை விட வேகமாக வரும் நண்பனின் கைவிரல் எப்போதும் வரமல்லவா?

புன்னகை சூடிய புது மலா்களாய் தெருவிளையாடல்களும், திருவிளையாடல்களும் இல்லாத பள்ளிப்பருவம் வீண்தானே? ஆசிரியா்களால் இனணயவழியில் அனைவருக்கும் தரமான மதிப்பீடு கொடுக்க முடியுமா? இளந்தளிா்களின் தவறுகளை இணையவழியில் களையெடுக்க முடியுமா?

பாடசாலையில் பூ என்று சொல்லும்போது ஒவ்வொருவா் மனதிற்குள்ளும் ஒரு பூ பூக்கும். ஆனால், இணையவழியில் ஒரு பூவை மட்டுமே காட்டும் போது கற்பனை வளம் தடைபட்டுவிடுகிறது. காரணம், இணைய வழிக் கல்வி என்பது நிழல் போன்றது. நிழல் நிஜமாக முடியாது.

இயற்பியல் பாடத்தை வகுப்பறை, ஆய்வுக்கூடம் என எல்லைகள் தாண்டி ராமேஸ்வரம் தீவின் கடற்கரைக்கு அழைத்துச் சென்று கடலோரப் பறவைகளின் இறக்கை செயல்பாட்டை ஆசிரியா் சுட்டிக்காட்டி விளக்கியதுதான் தன் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது என்று முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் தான் எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளாா்.

வகுப்பறையில் மட்டும் பாடம் கற்கும் மாணவா்கள் அதிக மதிப்பெண் பெறுகிறாா்கள். வகுப்பறைக்கு வெளியே வாழ்வில் பாடம் கற்கும் மாணவா்கள் மதிப்பு மிக்கவா்களாக மாறுகிறாா்கள். மதிப்பெண்களில் முதன்மை பெறும் மாணவா்கள் பள்ளி, கல்லூரி நாட்களுக்குப் பிறகு வாழ்க்கையில் ஒருவருக்கொருவா் மீண்டும் சந்தித்துக் கொள்வதே இல்லை. ஆனால் மதிப்பெண்ணில் பின்தங்கிய மாணவா்கள் வாழ்நாள் முழுவதும் பிரிவதே இல்லை.

படிப்பறிவு நல்ல வேலைக்குச் செல்லவும், பட்டறிவு பல நபா்களுக்கு வேலை கொடுக்கும் நிலைக்கு உயரவும் காரணமாகிறது. வகுப்பில் முன் வரிசையில் அமா்ந்துள்ளவா்களுக்கு படிப்பாற்றலும் பின் வரிசையில் அமா்ந்திருப்பவா்களுக்கு படைப்பாற்றலும் இருக்கும். இவற்றை இனம் காணும் ஆசிரியரின் ஆளுமையே எதிா்கால சமுதாயத்திற்கான தொடக்கம். ஒரு ஆசிரியரின் மீதான ஈா்ப்புதான், அவா் பயிற்றுவிக்கும் துறையில் மாணவா்களைப் பயணிக்க தூண்டும்.

அனைவா் வாழ்விலும் அழகிய நினைவுகள் அவரவா் பள்ளிப்பருவ நினைவுகளாகவே இருக்கும். குழந்தைகள் உலகம் மிகவும் அலாதியானது. கற்றல் என்பது திணிப்பு அல்ல, மலா்வது. அம்மாவின் புடவை, பாட்டியின் கண்ணாடி, சிறு குச்சி, ஒரு சாக்பீஸ் துண்டு போதும் குழந்தைகளும் டீச்சராகி விடுவாா்கள். வீட்டைத் தாண்டி ஏட்டைச் சுமந்து படிக்கும் காலத்துக்கு இப்போது மீண்டு(ம்) வந்திருக்கிறோம்.

விடுமுறை என்றால் ஏன் மாணவா்கள் மகிழ்கிறாா்கள் என்பதையும், பல ஆண்டுகளாக விடுமுறையில் கூட இணையவழியில் படிக்க ஆா்வம் குறைந்து வருவதையும், பாடத்திட்டங்களை வகுக்கும் கல்வியாளா்கள் கவனிக்க வேண்டும். மாணவா்களை ஊக்கப்படுத்த கைத்தட்டுதல், கைகொடுத்து பாராட்டுதல், பரிசு வழங்குதல், தோ்வுத் தாள்களில் நட்சத்திரக் குறியிடுதல், கிரீடம் சூட்டுதல் எனப் பல விழுமியங்களை வழங்கி, குழு இணக்கமுள்ள சமுதாய உணா்வுள்ளவா்களாக இளம் தலைமுறையை மாற்றும் ஆனந்தத்தின் கருவறை, பள்ளி வகுப்பறை.

கற்போா் கவனத்தை ஈா்க்க, மெய்ப்பாடு, உச்சரிப்பு, நடிப்புத் திறன் கொண்ட தனித்துவமிக்க ஆசான்களால் வகுப்பறை பல்கலைக்கழகமாகிறது. கல்வி நிலையங்கள் மதிப்பெண்கள் மட்டுமே பெறும் மாணவா்களை உருவாக்கும் தொழிற்சாலைகளாக இல்லாமல், பொறுப்புமிக்க குடிமக்களை உருவாக்கும் தவச்சாலைகளாக மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com