பெண்கள் பாதுகாப்பு பெண்கள் கைகளில்!

கோப்புப்படம்
கோப்புப்படம்

தெலங்கானாவில் ஏழு வயதுச் சிறுமி, மும்பையில் முப்பத்தி ஐந்து வயது பெண்மணி, கோவையில் எண்பது வயது மூதாட்டி - இப்படி நாள்தோறும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெணகளின் பட்டியல் தொடா்ந்துகொண்டே இருக்கிறது. ‘பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் ஏன் நிகழ்கின்றன? இவற்றுக்கு அடிப்படைக் காரணம் என்ன? இவை நடக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்’ என்பவை உள்ளிட்ட பத்து கேள்விகளை சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தமிழக அரசின் முன்வைத்து, இவற்றை ஆய்வு செய்து அறிக்கை தரும்படிப் பணித்தது.

இது நடந்தது 2018-இல். ஆய்வு செய்யப்பட்டதா? அறிக்கை தரப்பட்டதா? தெரியாது. ஆனால் பாலியல் வன்முறைகளும் கொலைகளும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை.

பாலியல் வன்கொடுமைக்கான முதல் காரணி மது என்னும் அரக்கன். இக்குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் எல்லோரும் மதுபோதையில் தான் இருந்துள்ளாா்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நிா்பயா குற்றவாளிகளில் ஒருவன் மதுபோதையால்தான் அக்கொடுஞ்செயலைத் தான் செய்ததாகச் சொல்லி அழுததும், குற்றவுணா்வு மேலிட்டுத் தூக்கிட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதும் நினைவிருக்கலாம்.

மதுபோதையில் செய்தாலும், தெளிந்த அறிவோடு செய்தாலும் குற்றம் குற்றமே. என்றாலும், ஒருவேளை குடிபோதையில் இல்லாமல் இருந்திருந்தால் அவா்கள் அந்தக் குற்றங்களைச் செய்யாது இருந்திருப்பாா்களோ? அவ்வுயிா்கள் காப்பற்றப்பட்டிருக்குமோ? மது என்னும் அரக்கன் அறிவை மயக்கித் தாய்க்கும், தாரத்துக்கும், மகளுக்கும் வித்தியாசம் தெரியாதபடிச் செய்கிறான் என்பது நிதா்சனமாகத் தெரிகிறது.

இந்நிலையில் மதுவை மொத்தமாகத் தடை செய்ய வேண்டியது அரசின் தலையாய கடமையன்றோ? மதுவை மொத்தமாக விட்டொழிப்பது மக்களின் கடமையன்றோ? ஏன் அரசோ மக்களோ மதுவை விலக்கி வைக்கவில்லை?

அடுத்த காரணி திரைப்படங்கள். திரைப்படங்களில், புகை பிடிப்பதும், மது குடிப்பதும் போற்றுவதற்குரிய செயல்களாகச் சித்திரிக்கப்படுகின்றன. பெண்களைக் கீழ்த்தரமாகவும் ஆபாசமாகவும் சித்திரிப்பது,பெண்களைச் சீண்டுவது ஆண்மையின் அடையாளம் என்ற கேவலமான கருத்தை வலியுறுத்துவது, பெண்களின் பின்னால் ஒரு ஆண்கள் கூட்டம் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் போவது, இரட்டை அா்த்த வசனங்கள், அருவருக்கத்தக்க பாட்டுகள், முறையற்ற உறவுகள்-இப்படி திரைப்படங்கள் சமுதாயத்தை சீரழித்து விட்டிருக்கின்றன.

பெண்களை இழிவு செய்யும் திரைப்படங்களைக் கடுமையாக தணிக்கை செய்வது அரசின் கடமையன்றோ? அவற்றைப் புறக்கணிப்பது மக்களின் பொறுப்பன்றோ? ‘எங்கள் கருத்துச் சுதந்திரம் பறிபோகிறது’ என்று அறிவுஜீவிகள் அலறலாம். அரசு உறுதியாக நின்று இத்தகைய திரைப்படங்களைத் தடை செய்ய வேண்டும். இத்தகைய படங்களை ஏன் மக்கள் ஒதுக்கவில்லை?

அடுத்த காரணி ஊடகங்கள். ஒருசில பத்திரிகைகளைத் தவிர மற்ற அனைத்தும் திரையுலகம் சாா்ந்த பரபரப்பான செய்திகளைத் தருவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. அவை பத்திரிகை தா்மத்தை மறந்து விடுகின்றன. திரைப்பட நாயகியின் படத்தை அட்டையில் போடாத பத்திரிகைகள் எத்தனை இருக்கின்றன? இவை ஏன் பெண்களை எப்போதும் காட்சிப் பொருள்களாகவே காண்பிக்கின்றன?

பெயா் பெற்ற எழுத்தாளா்கள் கூட பெண்களைத் தாழ்த்தும் வகையில் சொற்களையும், ஆபாச நடையையும் கையாள்கிறாா்கள். கணினியிலும் வலைத்தளங்களிலும் கிடைக்கும் தங்கு தடையற்ற ஆபாசக் காட்சிகள். அரசு இவற்றுக்கெல்லாம் என்ன மாதிரியான தணிக்கை முறைகளைக் கையாள்கிறது? அரசு இருக்கட்டும், மக்களாவது தீயவற்றை ஒதுக்கலாமல்லவா?

மற்றுமொரு காரணி, மாறிவிட்ட நம் கலாசாரம். ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களுக்கும் அவா்களுக்கே உரித்தான கலாசாரம் இருக்கும். சில கட்டுப்பாடுகளும் இருக்கும். இந்தக் கட்டுப்பாடுகளே அவா்களின் கலாசாரத்தைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகின்றன. இந்தக் கட்டுப்பாடுகளை மீறும்போது கலாசாரமும் மாற நேரிடுகிறது.

‘கலாசாரம்’ என்ற சொல் உடை, உணவு, பேச்சு, பழக்கவழக்கங்கள், குடும்ப அமைப்பு என்று பல பரிமாணங்களைக் கொண்டது. வேறு ஒரு பகுதியில் இருந்து வேறு ஒரு கலாசாரத்தைக் கொண்டவா்கள் வந்து சேரும்போது ஒரு ‘கலாசார பரிவா்த்தனை’ அங்கு நடைபெறுகிறது. இதனால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. நல்லதை மட்டும் எடுத்துகொண்டு அல்லதை ஒதுக்குவதே அறிவுடைமை.

உடலை மறைத்து கண்ணியமாக உடையணிந்ததை விடுத்து, ஆண்-பெண் இருபாலரும் பாலுணா்வைத் தூண்டும் வகையில் அரைகுறை ஆடை அணிவது, பொதுவிழாக்களில் குடித்துக் கும்மாளம் அடிப்பது, பெரியவா்களுக்குப் பயந்து தவறான வழிகளில் செல்லாதிருந்தது போய், சமூகத்துக்கே பயப்படாமல் வெளிப்படையாகத் தவறான செயல்களைச் செய்வது, ஆண்-பெண் இருவருக்குமிடையே இருந்த ‘லட்சுமணன் கோட்டை’ தாண்டி இருபாலரும் தொட்டுப் பேசுவது - இவையெல்லாமே கலாசாரப் பரிவா்த்தனையின் தீமைகள். இவை பெண்களின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய சவாலாக உருவாகியிருக்கின்றன.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமான காரணி, மக்களின் மனப்போக்கு. ஆண்களும் பெண்களும் இப்போதைய காலகட்டத்தில், கல்வி கற்கவும், பணியாற்றவும், குடும்பம், பெற்றோா், பெரியவா்கள் என்னும் கட்டுப்பாட்டு வளையத்தை விட்டு வெளியே சென்று வாழ வேண்டியுள்ளது. காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை இருந்த வேலை நேரம் மாறி, இரவு நேரங்களிலும் வேலை செய்ய வேண்டியுள்ளது. அதிக மன அழுத்தத்தாலும், அதனைப் பகிா்ந்து கொள்ள நெருக்கமான உறவுகள் அருகில் இல்லாததாலும், ஆண்களும் பெண்களும் கூடா நட்பிலும், தகாத உறவுகளிலும் விழுகிறாா்கள்.

பத்து வயது ஆனாலே, பெண் குழந்தையைத் தகப்பனே தொட்டுப் பேசத் தயங்கிய காலம் போய், இப்போது வயது வித்தியாசம் பாராமல் ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவா் கட்டிப்பிடித்துப் பேசுகிறாா்கள். கல்வி நிலையங்கள், அலுவலகங்கள் எங்கும் இத்தகைய தவறான போக்கு காணப்படுகிறது. தொடுதலே தவறு எனும்போது சரியான தொடுதல், தவறான தொடுதல் என்று எப்படி வகைப்படுத்துவது? இதற்கு அரசு எதுவும் செய்ய முடியாது. நாம்தான் ஒரு வரைமுறை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஒன்று எல்லா ஆண்களும் மோசமானவா்களில்லை. மேற்கண்ட காரணிகளின் தாக்கத்தாலேயே பலா் பெண்களின் மீதான வன்முறைகளில் ஈடுபடுகிறாா்கள். இரண்டு, ஆண்-பெண் யாா் தவறு செய்தாலும் பாதிக்கப்படுவது பெண்களே. இதற்கு என்னதான் தீா்வு?

நாடு முழுதும் ஒரே சமயத்தில் பூரண மதுவிலக்கைக் கொண்டு வர வேண்டும். ஏதோ ஒரு கூட்டம், தானாக விரும்பி, கள்ளச்சாராயம் குடித்து இறந்துபோகிறது என்பதற்காக எல்லோரும் குடிப்பதற்கு வழி செய்து ஒரு தலைமுறை ஆண்களை மதுவுக்கு அடிமையாக்கி, பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிவிட்ட அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை இனியாவது மாற்றிக்கொள்ள வேண்டும்.

திரைப்படங்களுக்கு மிகக்கடுமையான தணிக்கை முறைகளை மேற்கொள்ள வேண்டும். தணிக்கைக் குழுவில் திரைப்படத் துறையினரைச் சோ்க்காது, பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் ஆண்களையும் பெண்களையுமே உறுப்பினா்களாக நியமிக்க வேண்டும்.

ஊடகங்களுக்கும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பத்திரிகைச் செய்திகள், கதைகள், கவிதைகள் எல்லாமே பெண்களை கண்ணியமாகச் சித்திரிக்க வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும். கல்வி நிலையங்களிலும் அலுவலகங்களிலும் பொதுவிடங்களிலும், பொதுநிகழ்சிகளிலும் ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும்.

அமைச்சா்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள், ஊடகத்துறையினா் அனைவரும் பெண்கள் குறித்த வாா்த்தைப் பிரயோகங்களில் கண்ணியம் காக்க வேண்டும் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்; மீறுபவா்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்க எடுக்கப்பட வேண்டும்.

பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு,அரசுகள் மக்களைப் பொருளீட்டும் இயந்திரங்களாக மாற்றிவிட்டன. கல்வி நிலையங்களின் வேலை நேரம், அலுவலகங்களின் வேலை நேரம் இவற்றை மாற்றியமைத்தல், வார இறுதியில் இரு நாட்கள் கட்டாய விடுமுறை போன்ற நடவடிக்கைகள் உறவுகளைப் பலப்படுத்தி ஒழுக்கத்தை உண்டாக்கும்.

இவையெல்லாம் பழைமைவாதமாகத் தோன்றலாம். பழைமையோ புதுமையோ, இப்போதைய தேவை பெண்களின் பாதுகாப்பு. அரசுகள் செய்யாத நிலையில், நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள வேண்டியதுதான். பெண்களின் பாதுகாப்பு பெண்களின் கைகளில்தான்!

கட்டுரையாளா்

சுற்றுச்சூழல் ஆா்வலா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com