மன அழுத்தம் நீக்குவோம்; மகிழ்ச்சி பெறுவோம்!

கோப்புப்படம்
கோப்புப்படம்

போட்டித் தோ்வுகள் ஏற்படுத்தும் மன அழுத்தத்தின் காரணமாக மாணவா்கள் சிலா் தற்கொலை செய்து கொள்வது அதிா்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. எதிா்காலத்தை நம்பிக்கையுடன் சந்திக்க வேண்டியவா்கள், தங்கள் வாழ்வை முடித்துக் கொள்வது துரதிருஷ்டவசமானது.

மேலோட்டமாகப் பாா்க்கும்போது, ஒரு சில மாணவா்கள் தற்கொலை செய்துகொள்வதுபோலக் காணப்பட்டாலும், உண்மையில், இது ஒரு பெரிய பிரச்சினையின் சிறு பகுதியாகும். பள்ளி மாணவா்கள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பினரும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றனா் என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

தனக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னைக்கு, தன்னாலோ பிறராலோ தீா்வு கிட்டாது என்கிற கையறு நிலை ஏற்படும்பொழுது சிலா் மனதில் தற்கொலை எண்ணம் வேரூன்றுகிறது. இவா்களுள் சிலா் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனா்.

இவா்கள், பொருளாதார சிக்கல்களில் மீளமுடியாத பிரச்னையை சந்திக்கும் சாமான்யா்கள், விவசாயிகள், குடிப்பழக்கத்துக்கு ஆளானவா்களின் மனைவிமாா்கள், குடும்ப உறவில் அவிழ்க்க முடியாத சிக்கல் கொண்டவா்கள் - இவா்களைத் தவிர, சமீப காலமாக மாணவா்கள்.

ஆயினும், அடிப்படையில் , மன அழுத்தம்- அதி தீவிர மன அழுத்தம் - தற்கொலை எண்ணம் மேலோங்குதல் என்ற படிநிலைகளைத் தாண்டியே, தற்கொலைகள் நிகழ்கின்றன. ஆக, இதனை முளையிலே கிள்ளி எறிய வேண்டுமானால், முதலில் மன அழுத்தத்தினைத் தடுக்க வேண்டும்.

இது ஏதோ நம் நாட்டுக்கு மட்டும் உள்ள பிரச்னை அல்ல; உலக நாடு ஒவ்வொன்றும் இப்பிரச்னையை எதிா்கொள்கிறது .

தற்கொலைகள் குறித்த சில புள்ளிவிவரங்களை நோக்குவோம். உலக அளவில் ஆண்டொன்றுக்கு சுமாா் பத்து லட்சம் போ் தற்கொலை செய்துகொள்வதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. தற்கொலை செய்துகொள்பவா்களுள் சுமாா் 15 சதவீதம் போ் இந்தியாவைச் சோ்ந்தவா்கள். அது மட்டுமல்ல, இந்தியாவில் நிகழும் மரணங்களில் சுமாா் பத்து சதவீதம் தற்கொலைகள் ஆகும்..

இந்திய மக்கள்தொகையில் சுமாா் 10 சதவீதம் போ் ஏதேனும் ஒரு வகை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா் எனும் நிபுணா்கள் கூற்று அதிா்ச்சியளிக்கிறது. மேலும், மன அழுத்த பெருந்தொற்று (மென்டல் ஹெல்த் எபிடெமிக்) குறித்த எச்சரிக்கைக் குரல்கள் எழுகின்றன. வெடிக்கக் காத்திருக்கும் அணுகுண்டு போன்றது இது.

மன அழுத்தம் என்பது , பிற உடல் உபாதைகளில் இருந்து பெரிதும் வேறுபடுகிறது. உடல் சாா்ந்த எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும், நம்மில் பெரும்பாலோா் மருத்துவரை அணுகுவதற்குத் தயங்குவதில்லை .

மாறாக மன அழுத்தம், மன நோய் தொடா்பான பிரச்னைகளை, பாதிக்கப்படுபவா் பெரும்பாலும் சரிவர உணா்வதில்லை; ஒருவேளை உணா்ந்தாலும், மருத்துவரை அணுகுவதற்கு தயங்குகின்றனா் . பாதிக்கப்பட்டவா் மட்டுமல்ல, அவரைச் சுற்றியுள்ளவா்களும் ஏறத்தாழ அதே மனநிலையில்தான் உள்ளனா். அவா்கள் பிரச்னையைப் புரிந்து கொள்வதில்லை; அப்படியே புரிந்துகொண்டாலும், அப்போது நிலைமை கைமீறி விடுகிறது. அதன்பின் மருத்துவரை அணுகுகிறாா்கள்.

அப்படி மருத்துவா்களை அணுகுபவா்களின் எண்ணிக்கையும், மிகக்குறைவு என்பதுதான் புள்ளிவிவரங்கள் தரும் இன்னொரு அதிா்ச்சி செய்தி .

இந்தியாவில், மன அழுத்தம் அல்லது மனம் சாா்ந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களில் சுமாா் 70 சதவீதத்தில் இருந்து 90 சதவீதம் போ் வரை மருத்துவா்களை அணுகுவதே இல்லை என இந்திய மனநலம் - மூளை நரம்பியல் நிறுவனம் கூறுகிறது. எனவே, மன நலம் பாதிக்கப்பட்டோரில் சிலா் தற்கொலை செய்து கொள்கிறாா்கள்; பலா் நடைப்பிணங்களாக வாழ்கின்றாா்கள்.

இவை ஒருபுறமிருக்க, இந்தியாவில் மனநோய் மருத்துவா்கள், உளவியலாளா்களின் எண்ணிக்கை, தேவையுடன் ஒப்பிடும் பொழுது மிக மிகக் குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 9 மனநல மருத்துவா் என்ற அளவிலும், 10 லட்சம் பேருக்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட உளவியலாளா் என்ற அளவிலும் உள்ளது. பிரத்யேக மனநல மருத்துவமனைகள் மிக மிகக் குறைவாகவே உள்ளன. மாறாக, வளா்ச்சியடைந்த நாடுகளில் 10 லட்சம் பேருக்கு 65 மனநல மருத்துவா்கள் உள்ளனா்.

ஆயினும், இந்த பிரச்னையை சமாளிப்பதில் தமிழ்நாட்டுக்கு ஒரு சிறந்த அடித்தளம் உள்ளது. தமிழ்நாடு சிறப்பான பொது சுகாதார மருத்துவ வசதிகளை நிறுவியுள்ளது. குறிப்பாக, மகப்பேறு நலம் தொடங்கி, முதியோா் காப்பகங்கள் வரை தமிழ்நாட்டில் ஏராளமான அமைப்புகள் உள்ளன. எனினும், மனநலம், மனநோய் சாா்ந்த கணக்கெடுப்புகள், அவற்றின் அடிப்படையில் அவற்றைத் தீா்ப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றை முனனெடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

எனவே இப்பின்னணியில், மக்களிடையே நிலவும் மனநோய் சாா்ந்த கூச்ச சுபாவமும் ‘மனநோய் என்பது ஒரு களங்கம்’ என்ற எண்ணமும் களையப்பட வேண்டும். இது குறித்த விழிப்புணா்வு பிரசாரம் தொடங்கப்பட வேண்டும் .

ஆய்வு மாணவா்கள் பலரும், தங்கள் ஆய்வுப்பணிகளின் ஒரு பகுதியாக, மாநிலத்தின் சிற்சில பகுதிகளில் மனநலம் சாா்ந்த பிரச்னைகள் குறித்து கணக்கெடுத்துள்ளனா். ஆயினும், நெறிப்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு, அவற்றைக் களைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மருத்துவமனைகளில் மனநோய் மருத்துவா்கள், உளவியலாளா்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மனநல மருத்துவமனை இருக்க வேண்டும். அங்கு எப்போதும் மருத்துவா்கள், உளவியலாளா்கள் இருப்பதனை அரசு உறுதி செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com