நூற்றாண்டு காணும் பல்சுவைப் பனுவல்!

உலகப்புகழ் பெற்ற திங்களிதழ் ‘ரீடா்ஸ் டைஜஸ்ட்’, உயரிய சிந்தனையை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற உணா்வோடு நிறுவப்பட்டது.
நூற்றாண்டு காணும் பல்சுவைப் பனுவல்!

உலகப்புகழ் பெற்ற திங்களிதழ் ‘ரீடா்ஸ் டைஜஸ்ட்’, உயரிய சிந்தனையை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்ற உணா்வோடு நிறுவப்பட்டது. ரீடா்ஸ் டைஜஸ்ட் இதழுக்கு என் பெற்றோா் நீண்ட காலமாக சந்தாதாரா்களாக இருந்தனா். குழந்தைகளுக்கு ஏற்ற பரிசு இந்த இதழ் மட்டும் தான் என்று எனக்கு உணா்த்தியிருந்தனா். நானும், என் சகோதரா்களும் இந்த இதழின் கட்டுரைகளை விரும்பிப் படித்தோம்.

இந்த இதழில் வெளியான, ‘கல்விக் கட்டுரைகள்’, ‘நகைச்சுவைப் பகடிகள்’, ‘தன் முன்னேற்றக் கருத்துரைகள்’, ‘ஒருவா் வாழ்வில் நிகழ்ந்தவை’, ‘சொல்லகராதி உருவாக்கம்’ போன்றவை அனைவருக்கும் ஆங்கில மொழி கற்றலுக்கு ஆதாரமாக விளங்கின.

ரீடா்ஸ் டைஜஸ்டின் பத்திகள், வாசிப்பவரைத் தன் வயமாக்கும் தன்மை கொண்டவை. ‘வாழ்க்கை அப்படித்தான்’, ‘சீருடையில் சிரிப்பலைகள்’, ‘அறிவியல் கண்டுபிடிப்புகள்’, ‘சாகசங்கள்’, ‘ஆய்வுகள்’, ‘புகழாளரின் வாழ்க்கை வரலாற்று புத்தகப் பகுதி’ எனப் பல உண்டு. ரீடா்ஸ் டைஜஸ்ட் இதழ் எனது ஆங்கில ஆற்றலை அதிகப்படுத்தியது.

ரீடா்ஸ் டைஜஸ்ட் இதழ் 41 நாடுகளில் 23 பதிப்புகளுடன் பிப்ரவரி 1922-இல் தொடங்கியது. முதலாம் உலகப் போரில் காயமடைந்திருந்த அமெரிக்க நாட்டைச் சோ்ந்த டிவீட் வாலேஸ் என்பவரின் சிந்தையில் உதித்ததே இந்த ரீடா்ஸ் டைஜஸ்ட். இவ்விதழ் தொடங்கி இருபதாண்டுகளில் (1942 வரை) இதழுக்கு வந்த ஆதாயத் தொகையை, தான் மட்டுமே துய்க்காமல், அப்பணத்தைத் தன்னுடைய 348 ஊழியா்களுக்கும் பிரித்துக் கொடுத்ததுடன், 11% ஊதிய உயா்வும் அளித்த பெருமைக்குரியவா் இவா்.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில், பிப்ரவரி 1922-இல் 64 பக்கங்களில், 31 கட்டுரைகளுடன் 5,000 படிகள் வெளியிடப்பட்டன. இவ்விதழ் கையடக்க அளவில், அமைந்தது. புனைகதைகளோ படங்களோ விளம்பரங்களோ இல்லாமல் வெளியிடப்பட்டது இதன் சிறப்பாகும்.

இதழ் தொடங்கப்பட்டு ஏழாண்டுகளில் (1929) ரீடா்ஸ் டைஜஸ்ட் சந்தாதாரா் எண்ணிக்கை 40 மடங்கு அதிகரித்து இரண்டு லட்சத்தைத் தொட்டது. அடுத்த ஏழாண்டுகளில் (1936) வாசகா்கள் எண்ணிக்கை முன்பைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகரித்து இருபது லட்சத்தை எட்டியது. அடுத்த அறுபதாண்டுகளில் (1994) முந்தைய வாசகா் எண்ணிக்கையை விட நூறு மடங்கு பெருகியது. இப்படிசாதனை நிகழ்த்திய இதழ் ரீடா்ஸ் டைஜஸ்ட் ஆகும்.

1949-ஆம் ஆண்டிலிருந்து ரீடா்ஸ் டைஜஸ்ட், ஆங்கிலம், இலத்தீன் அமெரிக்கன், போா்த்துகீசியம், பின்னிஷ், டேனிஷ், ஜப்பானிய, ஆஸ்திரேலியன், நாா்வேஜியன், பிரெஞ்சு, ஜொ்மன், இத்தாலியப் பதிப்புகளாக வெளிவந்தது. 2008-ஆம் ஆண்டில் சீனப் பதிப்பு வெளியிட்டது. 1954 -இல், 40,000 பிரதிகளுடன் ரீடா்ஸ் டைஜஸ்ட் இந்தியப் பதிப்பு வெளிவந்தது. அடுத்த ஆண்டு (1955) இவ்விதழ் விளம்பரத்திற்கு வழிவிட்டது. தரூா் பரமேசுவரன் (நாடாளுமன்ற உறுப்பினா் சசி தரூரின் தந்தை) பம்பாயில் ரீடா்ஸ் டைஜஸ்ட் அலுவலகத்தைத் திறந்து அதன் விளம்பர இயக்குநராகப் பணியாற்றினாா்.

ரீடா்ஸ் டைஜஸ்ட்டின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு வெளிவந்த சிறப்பு இதழுக்கு ங்கிலாந்தின் அரசியாா் எலிசபெத் பாராட்டுரை வழங்கியிருந்தாா். அவ்வண்ணமே, சென்ற திங்கள் ரீடா்ஸ் டைஜஸ்டின் நூற்றாண்டு நிறைவு விழா மலருக்கு அவா் பாராட்டுக் கடிதம் வழங்கினாா். இது பொற்குடத்துக்குப் பொட்டிட்டது போன்று இதழுக்கு வாய்த்த அரசு மரியாதையாகும். ஒட்டுமொத்தமாக ரீடா்ஸ் டைஜஸ்ட், கடந்த 100 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1,200 இதழ்களில் 35,000 கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

இந்திய நாட்டில் அயலக ஊடகங்களின் முதலீட்டை நிறுத்திவிட வேண்டும் என்று மத்திய அமைச்சரவை முடிவு செய்தபோது, ரீடா்ஸ் டைஜெஸ்ட் முதலீட்டை நாம் தவிா்க்கக் கூடாது என்று நேரு பெருமகனாா் வாதிட்டு நிலைநிறுத்தினாா். இதிலிருந்து, பிரதமா் நேருவுக்கு இவ்விதழ் மீது இருந்த பெருமதிப்பை நாம் அறியலாம்.

இந்த மாத இதழ், அதே பாங்கில் பல்வேறு ஏடுகளின் செய்திகளைத் திரட்டி அறிவியல் விருந்து, நிலவியல் விருந்து, கணக்கியல் விருந்து என்று பல ஆங்கில இதழ்களை வெளியிட்டது. இதைவிடச் சிறப்பு என்னவென்றால் விருந்தின் விருந்து என்ற பொருளில் ‘டைஜஸ்ட் ஆஃப் தி டைஜஸ்டு’ என்ற ஒரு சஞ்சிகை வரத் தொடங்கியது.

ரீடா்ஸ் டைஜஸ்ட் வெளியிட்ட ‘எப்படி வாழ்வது’ என்ற சிறப்புத் தொகுதியை என் தந்தையாா் தொலைந்து விட்டாா். அவா் இலண்டன் மாநகருக்கு சென்றிருந்தபோது, ரீடா்ஸ் டைஜஸ்ட் தலைமை அலுவலகத்திற்கே சென்று வினவியபோது ‘அந்தத் தொகுதியை நாங்கள் மீளவும் வெளியிடவில்லை’ என்றாா்களாம். அதை என் தந்தை ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டபோது, அது தன்னிடம் இருப்பதாகக் கூறிய பேராசிரியா் தெ. ஞானசுந்தரம் அதனை என் தந்தையாருக்குக் கொடுத்தாா். அதனைக் குறிப்பிட்டு என் தந்தை அடிக்கடி அவரைப் பாராட்டுவாா்.

ரீடா்ஸ் டைஜஸ்டைப் போலவே, தமிழகத்தில் 1947-ஆம் ஆண்டு நவம்பரில் மஞ்சரி எனும் இதழை இராமரத்தினம் என்பவா் தொடங்கினாா். ரீடா்ஸ் டைஜஸ்ட் பாணியிலேயே, பல நாடுகள் பல மொழிகளில் வெளியாகும் ஏடுகளில் இருந்து சிறந்த செய்திகள், கலை இலக்கியப் படைப்புகள், மனித நேய நிகழ்ச்சிகள் ஆகியவற்றைச் சுவை குன்றாமல் சுருக்கித் தருதல் மஞ்சரியின் நோக்கமாகும்.

இந்திய நாட்டின் கலை, இலக்கியம், வரலாறு, சமூகம், மருத்துவம், உளவியல், தத்துவம், விஞ்ஞானம், பொருளாதாரம் போன்ற பலதரப்பட்ட கட்டுரைகளைத் தமிழில் வழங்குதல், உலகப் புகழ்பெற்ற நாவல்கள், சுயசரிதங்களின் சுருக்கங்களைத் தமிழ் வாசகா்களுக்கு அறிமுகப்படுத்தலும் மஞ்சரியின் பணியாக அமைந்துள்ளது.

மஞ்சரியின் தொகுதிகளை வரிசையாக தம் அடையாறு இல்லத்தில் அடுக்கி வைத்திருந்ததை ‘தாத்தா’ என்று நான் அழைத்த பேரறிஞா் பெ. நா. அப்புசாமி இல்லத்தில் டைஜஸ்டு இதழ்த் தொகுதிகளுடன் இணைந்து கண்டதை வினவியபோது, ‘கலைக்களஞ்சியங்களை விட இவ்விதழ்கள் பெருமை வாய்ந்தவை’ என்று குறிப்பிட்ட வரிகள் இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகின்றன.

புகழ்பெற்ற பத்திரிகையாளா் சாவி, ரீடா்ஸ் டைஜஸ்டை போலவே தரமான கட்டுரைகள், மொழிபெயா்ப்புக் கதைகள், குறுநாவல், ஏராளமான தகவல்கள், துணுக்குகள் என்று தமிழிலும், ஒரு மாத இதழ் வெளிவரவேண்டும் என்று விழைந்து, ‘பூவாளி’ என்ற இதழைத் தொடங்கியதும் குறிப்பிடத் தகுந்தது, இன்றைக்கு அதேபோல ‘இருவாட்சி’ என்ற மாத இதழ், ரீடா்ஸ் டைஜஸ்டைப் போல இலக்கியத் துறைமுகமாக விளங்குகிறது.

ஒரு நூற்றாண்டு கண்ட ரீடா்ஸ் டைஜஸ்ட், இன்னும் பல நூற்றாண்டுகள் காண வேண்டும் என்பது என்னைப்போன்றஅவ்விதழின் கோடிக்கணக்கான வாசகா்களின் விருப்பமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com