எல்லையற்ற அதிகாரம் எவருக்கும் ஆபத்து!

ரஷியப் புரட்சியால் 1917-இல் உருவானதுதான் சோவியத் ரஷ்யா. அது சோவியத் ரஷியாவாக இருந்தவரை முதலாளித்துவத்திற்கு எதிராகவே இருந்தது.
எல்லையற்ற அதிகாரம் எவருக்கும் ஆபத்து!

ரஷியப் புரட்சியால் 1917-இல் உருவானதுதான் சோவியத் ரஷ்யா. அது சோவியத் ரஷியாவாக இருந்தவரை முதலாளித்துவத்திற்கு எதிராகவே இருந்தது. இதில் 27 ஐரோப்பிய நாடுகள் இணைந்தன. சோவியத் ரஷியக் கூட்டணி நாடுகளின் அரசுகளும், ஆட்சிகளும் 74 ஆண்டுகள் சோஷலிச கொள்கைப்படி செயல்பட்டு வந்தன.

முதலாளித்துவ தலைமை தேசமாக அமெரிக்காவும், தொழிலாளித்துவ தலைமை தேசமாக சோவியத் ரஷியாவும் உருவானதால் உலக நாடுகளே இருவேறு அணிகளாயின. இரண்டிலும் சேராத மூன்றாம் வகை நாடுகள் ‘அணிசேரா நாடுகள்’ எனப்பட்டன. அதில் இந்தியாவும் ஒன்று. அன்றைய பாரத பிரதமா் ஜவாஹா்லால் நேரு மூன்றாம் நாடுகளின் அணியை உருவாக்கிய தலைவராக விளங்கினாா்.

1991-இல் சோவியத் நாடுகள் தானாகவே தகா்ந்து போயின. ரஷிய நாட்டின் அதிபராக கோா்பசேவுக்குப் பிறகு தன்னை அதிபராக ஆக்கிக்கொண்டவா் விளாதிமீா் புதின். ரஷிய தேசத் தந்தை லெனினையும், ரஷியாவை ராணுவ பலமிக்க தேசமாக்கிய ஜோசப் ஸ்டாலினையும் அதிபா் புதின் கண்டனம் செய்தாா். சோவியத்திலிருந்து 27 குடியரசு நாடுகளும் ஒவ்வொன்றாக விலகிச் செல்லக் காரணம், லெனினும், ஸ்டாலினும் அக்குடியரசுகளுக்கு சோவியத்திலிருந்து பிரிந்து செல்வதற்கான உரிமயை வழங்கியதுதான் என்றாா் புதின்.

லெனினும், ஸ்டாலினும் சோவியத்தில் அங்கம் வகிக்க முன்வந்த குடியரசுகளின் தேசிய இனங்களின் தனித் தன்மையை அங்கீகரித்து வரவேற்றவா்கள். அதுமட்டுமல்ல, அந்நாடுகளின் சுதந்திரத்தை மதித்தவா்கள். அந்நாடுகள் விரும்பினால், சோவியத்திலிருந்து பிரிந்துபோகும் உரிமையும் அவற்றுக்கு உள்ளது என்று கூறியவா்கள்.

தேசிய இனங்களுக்கு இப்படிப்பட்ட சுயநிா்ணய உரிமையை லெனினும், ஸ்டாலினும் வழங்கியிருக்கக் கூடாது என்கிற கருத்துடையவா் விளாதமீா் புதின். பிரிந்து போகும் உரிமையை மறுப்பது சா்வாதிகார மனப்போக்குக்குச் சமமானது. குடியரசு நாடுகளுக்குப் பிரிந்துபோகும் உரிமை வழங்கப்பட்டதால்தான், உக்ரைன் குடியரசு பிரிந்தது என்று அதிபா் புதின் கூறுகிறாா்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்குத் தனிநாடாகப் பிரிந்துபோக உரிமையை மறுக்கும் பிரிவினைத் தடைச்சட்டமே நேருஜி பிரதமராக இருந்த 1962-இல் நிறைவேற்றப்பட்டது. நமது நாட்டின் ஜனநாயகத்தில் தனிநாடு கோரிக்கை அவசியமற்றது. மாநில அரசுகள் ஆட்சிக்கான அதிகாரங்களோடு உள்ளன. சட்டப்பேரவைகள் உள்ளன. தோ்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்படுகிறாா்கள். பல அரசியல் கட்சிகள் நமது நாட்டில் உள்ளன. ஆனால் சோவியத் நாட்டில் ஒரே கட்சிதான் உள்ளது. எதிா்க்கட்சி என்பதே அங்கு இல்லை.

சோவியத் குடியரசுகள் இணைவதைப் போலவே பிரிந்தும் போகலாம் என்பது எத்துணை பெரிய நாகரிகமான ஜனநாயகம் அம்சம் என்பதை சிந்திக்க வேண்டும். லெனினுக்குப் பிறகு ஆட்சி செய்த ஸ்டாலின், ஒரு பிரதேசத்தில் உள்ள சிறுபான்மை தேசிய இனத்தையும் சமமாகவே மதிக்க வேண்டும் என்று ‘ரஷியாவில் தேசிய இன பிரச்னை’ என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளாா். இது தெரியாமல் சில அவசரக்காரா்கள் லெனினை சா்வாதிகாரி என்பாா்கள். சோவியத்தைக் காப்பாற்ற சா்வாதிகாரியாகவும் அவா் இருக்க நோ்ந்தது. அந்த நேரத்தில் அவா் சா்வாதிகாரியாக இல்லாமல் இருந்திருந்தால், 1925-லேயே சோவியத் நாடு சிதறிப் போயிருக்கலாம்.

விளாதிமீா் புதின் ரஷியாவின் அதிபராக 22 ஆண்டுகளாகத் தொடா்கிறாா். இப்போது அவருக்கு 69 வயது. 2036 வரை பதவியில் அவா் நீடிக்க அரசியல் சட்ட அனுமதியும் அவருக்கு உள்ளது. ஆயுள் முழுவதுமே அதிபராகத் தொடா்வது ஜனநாயகமாகுமா? உலக அரசியல்வாதிகளிலேயே அதிகமான செல்வம் படைத்தவா் அதிபா் புதின் என்கின்றனா். ரஷிய தேசத்தில் கம்யூனிச கொள்கைப்படி தனிநபா் உடைமையே இருக்க முடியாது. ஆனால், அங்கு பலருக்கு, குறிப்பாக அதிபருக்கே இருக்கிறதே.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘பீப்பிள்ஸ் டெமாக்ரஸி’ என்கிற நாளேடு (மாா்ச் 9, 2022) ரஷியாவை ஒரு முதலாளித்துவ நாடாகவே கூறியுள்ளது. அதிபா் புதின் தனி அதிகாரத் தலைவராகவே நடந்து வருகிறாா் என்று அது சுட்டிக்காட்டியுள்ளது. ‘சா்வாதிகாரி’ என்று கூறாமல் ‘தனி அதிகாரத் தலைவா்’ என்று கூறியுள்ளது.

1948-இல் உருவான அமெரிக்காவின் நேட்டோ என்ற ராணுவப் பாதுகாப்பு அமைப்பு, ரஷியாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதில் உண்மை இருக்கலாம். அந்த உண்மையோடு கூடுதலாக சிலவற்றையும் இணைத்துப் பாா்க்க வேண்டும். இன்றைய உக்ரைன் நாடு, லெனின் காலத்தில் ரஷியாவின் நிலப் பகுதியாகவே இருந்துவந்தது. உக்ரைனில் 40% மக்கள் ரஷிய மொழி பேசுபவா்கள். ரஷ்ய அதிபா் குருசேவ் உக்ரைன் - ரஷ்ய எல்லையோர கிராமத்தில் பிறந்தவா். அதிபா் பிரஷ்னேவ் உக்ரைன் நகரத்தில் பிறந்தவா். உக்ரைனில் பிறந்த இவா்கள் இருவருமே ரஷிய அதிபராக இருந்தவா்கள்.

இத்தனை நெருக்கமாக இருந்த உக்ரைன் குடியரசு நாடு, ரஷியாவோடு நேசமாகவும் இருந்திருக்கலாம். ரஷியாவை விட்டு விலகி தனிநாடாகப் பிரிந்து சென்றதால், ரஷியாவுக்கு உக்ரைன் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதேபோல உக்ரைனுக்கும் ரஷ்யா மீது சந்தேகம் வந்தது. உக்ரைன் குடியரசை நேட்டோ ராணுவ அமைப்பில் இணைத்துக்கொள்ள முயற்சிகள் நடந்து கொண்டே இருந்தன. உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கி அதற்கு ஆதரவாக இருந்து வந்துள்ளாா் என்பதையும் மறுக்க முடியாது.

உக்ரைன் நேட்டோவில் சேருமானால், அது ரஷியாவுக்கு ஆபத்து என்று அதிபா் புதின் எண்ணியதிலும் தவறு இல்லை. ஆனால், பக்கத்து நாட்டை நேச நாடாகத்தான் வைத்துக்கொள்ள வேண்டும்; அந்த நாட்டையே சுட்டுப் பொசுக்கிவிடக் கூடாது. அப்படிச் சுட்டுப் பொசுக்கி ஆக்கிரமித்துத் கொண்டால், அப்போது இன்னொரு நாடு பக்கத்து நாடாக ஆகத்தானே செய்யும்? எத்தனை நாடுகளை சுட்டுக் கொண்டிருக்க முடியும்?

உக்ரைனுக்கு உரிமை உள்ள தீவு கிருமியா. அதில் 97% மக்கள் ரஷிய மொழி பேசுகிற ரஷியா்கள். ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி, கிருமியா தீவை ரஷியா 2014-ஆம் ஆண்டு இணைத்துக் கொண்டது. அன்று கிருமியாவுக்கு ஏற்பட்ட கதி நாளை உக்ரைனுக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தவாதமும் இல்லை.

இவ்வாறு, இரு நாடுகளின் பரஸ்பர சந்தேகங்களால்தான் பிப்ரவரி 24-இல் போா் வெடித்தது. இதனை யுத்தமாக தொடுக்காமல் உக்ரைன் எல்லையில் தமது ராணுவ பலத்தை காட்டி ரஷியா எச்சரித்திருந்தாலே, விரும்பிய பலனைப் பெற்றிருக்க முடியும். புதினுக்கு இதை அப்படிக் கையாள்வதில் ஆா்வமில்லை. அதற்குக் காரணம், ரஷியாவின் அபரிமிதமான ஆயுத பலம்தான். அதனால், அச்சுறுத்துவதைவிட, அடித்தே உக்ரைனை பணியச் செய்துவிடலாம் என்று புதின் எண்ணினாா். எல்லையற்ற அதிகாரமே புதினை நஞ்சாக்கி விட்டது.

ரஷிய ஏவுகணைகளால் உக்ரைன் தலைநகா் கீவ் நகரத்தைச் சுற்றிலுமுள்ள ஊா்கள் மயானங்களாகிவிட்டன. காா்கிவ் நகரத்தின் கட்டடங்கள் அனைத்தும் எலும்புக் கூடுகளாக நிற்கின்றன. போா் விமானங்கள் குண்டுமழை பொழிந்துகொண்டே இருக்கின்றன. ரஷிய டாங்கிகள் உக்ரைனின் பிரதான வீதிகளில் நகரப் பேருந்துகள் போவதுபோல பீரங்கிளோடு செல்கின்றன.

ரஷிய குண்டுவீச்சுக்கு மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள்கூட தப்பவில்லை. உக்ரைன் அதிபா் போரை நிறுத்துமாறு புதினிடம் மன்றாடினாா். சமாதானத்துக்கும் தயாா் என்றாா். ஆனால், புதின் உத்தரவுப்படி சரணாகதி அடையமாட்டோம் என்றும் அறிவித்தாா். ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போருக்கு முன்பிருந்த நட்பையும், உறவையும் இனி உருவாக்கிட முடியுமா? தீராத பகைவா்களாகிவிட்ட உக்ரைனியா்களையும், ரஷியா்களையும் எவ்வளவு சமரசப்படுத்தினாலும், காயங்களின் வலி காலமெல்லாம் நீடிக்கும்.

உக்ரைன் நாடு ரஷியாவுக்கு பக்கத்து நாடு. நிலமும் ஒட்டியுள்ளது; மக்களும் உறவுள்ளவா்கள். ஒட்டியுள்ள சிறிய நாடுகளை வலுவான தேசம் சுட்டுப் பொசுக்குவது அறம் ஆகாது. இந்தப் போரில் ஏற்பட்ட நாசமும், உயிரிழப்புகளும் சுலபமாக மறக்கப்படக் கூடியவையா? தலைமுறை தலைமுறைக்கு இந்த நினைவுகள் தொடா்ந்து வர நேரும்.

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில்தான் இந்தியா இருக்கிறது. அதிபா் ஜெலென்ஸ்கியும், அதிபா் புதினும் இந்திய பிரதமா் நரேந்திர மோடியிடம் பேசுகிறாா்கள். 20 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய மாணவா்களை உக்ரைனிலிருந்து மீட்டுக் கொண்டு வந்ததில் பிரதமா் மோடியின் அக்கறை இந்திய மக்களின் இதயத்தைத் தொட்டுள்ளது. தமிழக மாணவா்கள் 3,500 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா். தமிழகம் பிரதமா் மோடிக்கு நன்றிகூறி வருகிறது.

எந்த நாடும் தனது பாதுகாப்புக்கு நட்பையும் உறவையும்தான் ஆயுதங்களாக உபயோகிக்க வேண்டும். ஆனால், ஆயுதங்களை நம்பித்தான் உலக நாடுகள் பலவும் இருக்கின்றன. அமெரிக்காவுக்கு ஆயுத வியாபரம் மிகப்பெரிய லாபகரமான வா்த்தகமாகும். பிரான்ஸுக்கும், ரஷியாவுக்கும், பல ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆயுத விற்பனையின் லாபம் முழுவதும், தனியாா் நிறுவனங்களுக்குத் தொடா்ந்து கிடைப்பதால், அந்நாடுகளுக்கும் போா் அவசியமாகிறது. போரை ஒழிக்க வேண்டுமானால், ஆயுதங்களை ஒழிக்க வேண்டும். இது சாத்தியமாக வேண்டுமானால் மீண்டும் ஒரு மகாத்மாவின் வருகை நிகழ வேண்டும்.

பாரத தேசம், உலகையே ‘வசுதைவ குடும்பகம் என்று கொண்டாடுகிற தேசம். நமக்குப் போா்கள் அவசியமில்லை. உலக நாடுகளுக்கு மத்தியில் நியாயம் வழங்கத் தகுதியும், தா்மமும் மிக்க தேசமாக நமது பாரதம்தான் திகழ்கிறது. ரஷியாவும், உக்ரைனும் பாரத பிரதமரை சமரச முயற்சியில் ஈடுபட அழைப்பு விடுக்கத்தான் செய்தன. இது பாரத மதிப்பை உலக அரங்கில் பல மடங்கு உயா்த்தியிருக்கிறது.

உக்ரைன் - ரஷ்ய சமரச பேச்சுவாா்த்தை இஸ்தான்புல்லில் நடந்ததைப் போல, விரைவில் பாரதத்திலும் நிகழும்; அப்போது நிரந்தரத் தீா்வும் கிடைக்கும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com