அமைதியே ஆன்மிகத்தின் அடையாளம்!

அமைதியே ஆன்மிகத்தின் அடையாளம்!

 கற்காலத்தில் மனிதர்கள் எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி வாழ்ந்து வந்தார்கள். நாகரிகம் வளர வளர அவர்கள் தாங்களாகவே சில குறிக்கோள்களையும் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். தங்கள் வாழ்க்கையை நன்முறையில் எடுத்துச்செல்ல, அவர்களுக்கு ஒரு பற்றுக்கோல், ஒரு பிடிமானம் தேவைப்பட்டது. அதுவே பக்தி நெறி அல்லது ஆன்மிகம். அதன் வெளிப்பாடாக அவர்கள் தங்களுக்கு நன்மை செய்யும் காற்று, சூரியன், நெருப்பு, நீர் முதலானவற்றை வணங்க ஆரம்பித்தார்கள். மெல்ல மெல்ல தாம் காணும் மரங்கள், மிருகங்கள், கோள்கள், இடி, மின்னல், மழை ஆகியவற்றையும் வணங்கலானார்கள்.
 அவை எல்லாவற்றுக்கும் வடிவமும் பெயரும் கொடுத்து அவற்றுக்குத் தனிப்பட்ட சக்திகளைத் தொடர்புபடுத்தித் தங்கள் வாழ்க்கையை இச்சக்திகளோடு இணைத்துக் கொண்டார்கள். நல்லவை செய்தால் இச்சக்திகளின் அருள் கிடைக்கும் என்றும், தீயவை செய்தால் இச்சக்திகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று நம்பி, முடிந்த வரையில் நல்லறம் பேணி வாழ்ந்தார்கள்.
 இவ்வாறு, மனித குலத்தை ஆற்றுப்படுத்த மனிதனால் தோற்றுவிக்கப்பட்டதே ஆன்மிகம் எனும் பக்திநெறி. ஆன்மிகம் என்னும் பற்று, தான் வளர்ந்ததோடல்லாமல், சமயம், கலை, மொழி, இலக்கியம், அறிவியல், நல்லொழுக்கம் என்று பலவற்றையும் சேர்த்து வளர்த்தது. ஆன்மிகத்தின் பாதையிலேயே மனித குலத்தின் பயணம் தொடர்ந்தது.
 ஆனால், அதே ஆன்மிகம், இன்று மனிதர்களை அச்சுறுத்தும் வகையில் மாறிவிட்டிருக்கிறது என்பதே கசப்பான உண்மை. அன்றைக்கு மனித குலத்துக்கு அமைதியையும் அடக்கத்தையும் போதித்த ஆன்மிகம், இன்று ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றின் பாதையில் செல்வது மிகவும் வருந்தத்தக்கது.
 பல்வேறு மதங்களும் சமயங்களும் மொழிகளும் வழக்கிலிருக்கும் நமது நாட்டில், அவற்றையெல்லாம் ஒருங்கிணைக்க வேண்டிய பக்தி நெறி, பிரிவினைக்கு வித்திடலாமா? ஒரு சாராரின் பக்தி சார்ந்த நடைமுறைகள், பிற சாராருக்கு இடையூறாக இருக்கலாமா? ஆன்மிகம் தற்போது எப்படியெல்லாமோ உருமாறியிருப்பதால் சமுதாயத்தில் பல்வேறு சிக்கல்கள் விளைந்திருக்கின்றன.
 முதலாவதாக, ஒலி மாசு. தற்போது அனைத்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களிலும் பக்திப் பாடல்களை ஒலிபெருக்கிகள் மூலம் மிகுந்த சத்தத்துடன் ஒலிபரப்புவது வாடிக்கையாகிவிட்டது. முன்பு, கோயில்களில் ஓதுவார்கள் பக்திப் பரவசத்துடன் தேவாரத்தையும் திருவாசகத்தையும் மனமுருகிப் பாடுவார்கள். அவற்றைக் கேட்கும்போதே நம் மனதில் அமைதியும் ஆனந்தமும் உண்டாகும். இப்போது குறுந்தகடுகளில் பதிவு செய்யப்பட்ட இரைச்சலான பாடல்களை ஒலிபெருக்கியின் மூலம் அலற விடுகிறார்கள். அவற்றைக் கேட்கும்போது எரிச்சலும் ஆத்திரமுமே உண்டாகின்றன.
 கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுகிறது. இரு மதங்களுக்கான பண்டிகையும் சேர்ந்து வரும் காலங்களில் இரு மத வழிபாட்டுத் தலங்களிலும் ஒலிபெருக்கி சத்தம் காதைத் துளைக்கிறது. வேறு வேறு மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் ஒரே பகுதியில் இருக்கும் பட்சத்தில் பல சமயங்களில் இது மோதலுக்கு வழி வகுக்கிறது.
 திருவிழாக் காலங்களில் கேட்கவே வேண்டாம். இரவு முழுதும் பாட்டு, கூத்து, விடிய விடிய பட்டாசுகளை வெடிப்பது என்று எல்லோருக்கும், குறிப்பாக முதியவர்களுக்கும் நோயாளிகளுக்கும் குழந்தைகளுக்கும் பெரும் இடையூறாகி விட்டிருக்கிறது இன்றைய பக்தி!
 ஒலி மாசு உண்டாக்கும் காரணத்தால் வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் 2018-இல் ஒரு பொதுநல வழக்கின் தீர்ப்பில் உத்தரவிட்டது. மேலும், அவ்வாறு பயன்பாட்டில் இருக்கும் அனைத்து ஒலிபெருக்கிகளையும் உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டது.
 இந்த உத்தரவுகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் "ஒலிபெருக்கி பக்தி' கொடிகட்டிப் பறக்கிறது. ஒரு வழிபாட்டுத் தலம் கட்டப்படும்போதே, ஒலிபெருக்கிக்கென பிரத்யேகமாக கம்பம் வைக்கப்படுகிறது. சில வழிபாட்டுத் தலங்களில், திசைக்கொன்று என்று நான்கு திசைகளிலும் நான்கு ஒலிபெருக்கிகளின் துணையுடன் பக்தி நெறி பரப்பப்படுகிறது.
 ஒலி மாசு ஏற்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்பது தெரிந்தும் யாரும் இந்த வழக்கத்தை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை. இது குறித்து காவல் துறையிடமோ மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமோ புகார் அளித்தாலும் இந்த பிரச்னை, மத நம்பிக்கை தொடர்பானது என்பதால் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள்.
 இரண்டாவதாக, ஆக்கிரமிப்புகள். ஒரு சாதாரண கட்டடத்தைக் கட்டுவதற்கும் கோயிலைக் கட்டுவதற்கும் மிகுந்த வித்தியாசம் உள்ளது. கோயில்களைக் கட்டுவதற்கென்று சில ஆகம விதிகள் இருக்கின்றன; வழிபடுவதற்குரிய கால நேரங்கள் உள்ளன; வழிபாட்டு முறைகள் உள்ளன. ஆனால் இன்று இவையெல்லாம் புறந்தள்ளப்பட்டு யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஒரு கோயிலைக் கட்டலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது.
 சாலையோரம் திடீரென்று ஒரு சூலம் முளைக்கும்; அடுத்த நாள் இரண்டு சாமி படங்கள் காணப்படும்; பிறகு ஒன்றிரண்டு கடவுள் சிலைகள் வந்து சேரும்; இரும்பினால் மறைப்பு தோன்றும்; யார்யார் வீட்டிலிருந்தோ வீட்டுக்குப் பயன்படுத்தியது போக மிச்சமிருந்த செங்கற்களும் ஓடுகளும் பளிங்குக் கற்களும் வந்து சேர, ஒரே மாதத்தில் கலவையான ஒரு கட்டடம் எழும்பி, கோயில் என்ற பெயருடன் சாலையையே மறைத்து நிற்கும். யாரோ ஒருவர் மணியடித்து பூசை செய்ய, பக்தி மயமான கூட்டம் ஒன்று சாலை வரை நின்று கன்னத்தில் போட்டுக்கொண்டு போகும்.
 இதுதான் இன்றைய ஆன்மிகம்; இன்றைய பக்தி. இப்படி சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில்களில் உள்ள சுவாமிக்கு காலத்துக்குத் தகுந்தாற்போல் பெயர்களை வைத்து ஊரறிய ஆன்மிக சேவை நடந்து கொண்டிருக்கிறது.
 இப்படிப்பட்ட கோயில்கள் காடுகளையும் விட்டுவைப்பதில்லை. நம் நாட்டு வனங்கள் எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு தெய்வம் இருக்கிறது. மக்கள் குறிப்பிட்ட காலங்களில் வனங்களுக்குள் சென்று அத்தெய்வங்களை வழிபட்டு வந்திருக்கிறார்கள். சபரிமலை, திருவண்ணாமலை, அழகர் கோயில், சதுரகிரி, வெள்ளியங்கிரி, மருதமலை, திருப்பதி போன்ற கோயில்களுக்கு பத்தர்கள் முறைப்படி விரதமிருந்து, புலால் தவிர்த்து, நாட்கணக்கில் நடந்தே சென்று கடவுளை வழிபட்டனர். அப்போது மிகவும் கடினமான பயணம் என்ற காரணத்தால் குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் சென்றனர்.
 அதனால் வனங்களுக்கும் விலங்குகளுக்கும் எந்தச் சேதமும் இல்லாமலிருந்தது. இப்போதோ சிறியனவாக இருந்த கோயில்களெல்லாம் பெரிதாக வளர்ந்து, பக்தர்களின் வசதிக்கெனச் சாலைகள், வாகன நிறுத்துமிடங்கள், கடைகள் எல்லாம் வந்துவிட்டன. மக்களும் பக்தியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பொழுபோக்கும் புதுமையும் வேண்டி கூட்டம் கூட்டமாக கூச்சலிட்டும் கும்மாளமிட்டும் செல்கிறார்கள். இதன் பெயரா பக்தி?
 இந்த ஆக்கிரமிப்பு பிரச்னையிலும் நீதிமன்றம் தலையிட்டு நம்பிக்கையூட்டும் வகையில் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நாமக்கல்லில் ஒரு பொதுப் பயன்பாட்டு வீதியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கோயிலுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. "ஒரு பொது இடத்தை ஆக்கிரமிப்பது கடவுளே என்றாலும், அதை அகற்ற இந்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்,' என்று கூறியதோடல்லாமல், " நமக்குப் போதுமென்ற அளவில் கோயில்கள் உள்ளன. எந்தக் கடவுளும் பொது இடத்தை ஆக்கிரமித்துத் தனக்குக் கோயில் கட்டுமாறு கேட்கவில்லை. ஆகவே இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகளை இந்நீதிமன்றம் அனுமதிக்காது' எனக் குறிப்பிட்டு இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகளை இடித்துத்தள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.
 ஆன்மிக வளர்ச்சியில் இன்னொரு பரிமாணமும் இருக்கிறது. ஒரு வங்கிக்குச் சென்றிருந்தேன். காலை பத்துமணி. அன்று வெள்ளிக்கிழமை. வங்கி ஊழியர் ஒருவர் நிதானமாக மணியடித்து பூசை செய்து எல்லோருக்கும் பிரசாதம் தந்தார். வாடிக்கையாளர்கள் எரிச்சலோடும் கோபத்தோடும் ஒன்றும் சொல்ல முடியாமல் காத்துக் கொண்டிருந்தனர். வேலை அப்படியே நின்று விட்டது. ஒருவரின் தனிப்பட்ட பக்தி உணர்வால், ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகள் தடைப்படுவது, அதுவும் பணி நேரத்தில் தடைப்படுவது சரியா?
 இன்னொரு நிகழ்ச்சியையும் குறிப்பிட்டாக வேண்டும். மாநாகராட்சியின் மண்டல அலுவலகத்திற்குத் துணை ஆணையாளரை, பணி நிமித்தம் சந்திக்கச் சென்றிருந்தேன். காலை பதினொரு மணி. அவ்வலுவலகத்துக்கு இரண்டு வாசல்கள் உண்டு. நான் ஒரு வாசல் வழியாக உள்ளே சென்று பார்த்தால் யாரையும் காணோம். மற்றொரு வாசலருகில் சென்று பார்த்தால் ஒரே கூட்டம்.
 அங்கு ஒரு சிறு கோயில் உண்டு. அன்று ஆடி வெள்ளியாம். அதனால் ஒரு ஊழியர் பூசை செய்ய, துணை ஆணையாளர் வழிபட, ஊழியர்களும் பார்வையாளர்களும் மற்றவர்களும் பக்தி வழிய கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
 பிறகு தட்டு தட்டாக பொங்கலும் புளி சாதமும் வழங்கப்பட்டன. எல்லோரும் சாப்பிட்டு முடித்து அலுவலகப் பணியை ஆரம்பிக்க மணி பன்னிரண்டு ஆகிவிட்டது. "செய்யும் தொழிலே தெய்வம்' என்று முன்னோர் கூறியிருப்பதை மறந்து, தொழிலை, கடமையை புறக்கணிக்கச் செய்வதா ஆன்மிகம்?
 மனிதனை நல்வழிபடுத்த வேண்டிய ஆன்மிகம், பாதை மாறி, பக்தி நெறி பக்தி வெறியாக மாறுவது நாட்டுக்கு நல்லதன்று. அரசும், உண்மையான இறை பக்தர்களும் சேர்ந்து, சில கட்டுப்பாடுகளை வகுப்பது நலம் பயக்கும்.
 
 கட்டுரையாளர்:
 சமூக ஆர்வலர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com