உள்ளக் கசடுகளை நீக்கலே உண்மைக் கல்வி!

கரோனா தீநுண்மிக் காலத்தில் இல்லத்தில் இருந்தபடி கைப்பேசி வழியாகப் பாடம் படித்து, எழுதி, பிள்ளைகள் பட்ட பாடு பெரும்பாடு. ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும் வீட்டில் ஒரேயொரு கைப்பேசியை வைத்துக்கொண

ஒருவழியாகப் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. கரோனா தீநுண்மிக் காலத்தில் இல்லத்தில் இருந்தபடி கைப்பேசி வழியாகப் பாடம் படித்து, எழுதி, பிள்ளைகள் பட்ட பாடு பெரும்பாடு. ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும் வீட்டில் ஒரேயொரு கைப்பேசியை வைத்துக்கொண்டு பெற்றவர்கள் பட்ட சிரமமும் சொல்லி மாளாது.

பள்ளிகள் திறந்துவிட்டன என்று நிம்மதி கொள்ள முடியாத நிலையில் இன்னும் சில சிக்கல்கள் நீடிக்கத்தான் செய்கின்றன. "இதுநாள் வரையில் கைப்பேசி வாயிலாகவே அனைத்தையும் பார்த்து, கேட்டு, படித்துப் பொழுதைக் கழித்த பிள்ளைகளுக்கு, அந்தக் கருவியிடமிருந்து முற்றாக விடைபெற முடியவில்லை. இவர்களின் கவனத்தை ஈர்த்துப் பாடங்களைப் புரிய வைப்பதற்குள் படாதபாடு படவேண்டியிருக்கிறது' என்கின்றனர் ஆசிரியர்கள்.

எவ்வளவுதான் கண்காணித்துப் பாடம் நடத்திக் கொண்டிருந்தாலும், புத்தகத்துக்குள்ளோ,நோட்டுக்குள்ளோ கைப்பேசியைப் பதுக்கிவைத்துக் கொண்டு பார்க்கிற பிள்ளைகளைக் கண்டுபிடித்து, ஒழுங்குபடுத்துவது சிக்கலாக இருக்கிறது. அப்போது அவர்களிடம் ஒருவித பதற்றமும், எதையோ இழந்ததுபோன்ற படபடப்பும், அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாத நிலையில் வெறித்தனமான ஒரு எதிர்ப்புணர்வும் அவர்களிடமிருந்து வெளிப்பட்டுவிடுகிறது.

அந்த நேரத்தில், அவர்களைச்  சரியாகக் கையாளத் தெரியாவிடில் அவர்கள் எந்தச் செயலுக்கும் இறங்கிவிடுவார்கள் என்றே தோன்றுகிறது. காரணம், பழக்கம் அவர்களை அக்கருவிக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறது. சிறியவர்கள் என்ன பெரியவர்களே கூட, காலையில் எழுந்ததும் கைப்பேசியை எடுத்து இரவு வந்த செய்திகள் என்ன என்பதைப் பார்க்காமல் இருக்க முடிகிறதா, என்ன?

உலகத்தோடு உறவுகொள்ளத்தக்க ஊடகமாக அது ஆகிவிட்டபின், அதில் அனைத்தும் வந்து நிரம்பிவிடுகின்றன. தக்கன எவை, தகாதன எவை என்று கண்டு தேர்வதற்குப் பெரியவர்களாலேயே முடியாத பொழுது பிள்ளைகள் என்ன செய்வார்கள்? 

இவையெல்லாம் காலத்தால் வந்து எய்தும் கட்டாயங்கள். இவற்றையும் கடந்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ளத்தக்க ஆளுமைகளாகப் பிள்ளைகளை உருவாக்குவது இன்றியமையாத சவாலாக இருக்கிறது.

காலந்தோறும் தேவைக்கேற்பப் புதுப்புதுக்கருவிகள் வந்துகொண்டுதான் இருக்கும். அவற்றில் நல்லனவும் இருக்கும்;அல்லனவும் இருக்கும். அல்லவை போக்கி, நல்லன ஆக்கிக் கொள்ளும் ஆளுமையை வளர்த்துக் கொள்வதுதான் அறிவுடைமை. அந்தத் திசைநோக்கி, பிள்ளைகளை வழிநடத்தப் பெற்றோரும் ஆசிரியப் பெருமக்களும் இணைந்து செயல்படவேண்டியது இன்றியமையாதது.

சமூக ஊடகங்களது நம்பகத்தன்மையின் விகிதத்தையும், அவற்றை நாம் பயன்படுத்துவதால் ஏற்படும் சாதக பாதகங்களையும் விளக்கி, உளவியல் ரீதியான ஒரு தெளிவை அவர்களுக்கு அளிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். "ஒரு காலத்தில் தொலைக்காட்சிப் பெட்டியின் வரவு இத்தகு சிக்கல்களை உண்டாக்கி இருந்தது.

இன்று அதைக் கடந்து வரப் பழகியிருக்கிறோமே! அதுபோல்தான் இதுவும்' என்று நினைக்க முடியாது. அது ஒருவழி இயக்கம்; இது பலமுனைத் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. என்னதான் நவீனக் கருவிகள் வந்து வாழ்க்கைப் போக்கை மாற்றிவிட்டாலும், நம் கல்வி, புத்தகங்களோடு தொடர்புடையது; வாசித்தல், படித்தல், கற்றல் ஆகிய படிநிலைகளை உள்ளடக்கியது. வாசித்தல் (ரீடிங்) என்பது கண் முன் விரிந்த புத்தகத்தின் வாசகங்கள் உதட்டசைவில் உயிர்பெற்று, செவிப்புலன்களில் பதிவாகிச் சிந்தையில் நிறைவது; படித்தல் (ஸ்டடியிங்) என்பது, தனக்குத்தானே வாசித்து, மனம் கொண்ட செய்திகள் படிப்படியாகப் பதிவுறும் வண்ணம் செயல்படுவது படித்தல்; இவ்விரண்டுக்கும் அடுத்த நிலையில் அமைவதுதான் கற்றல் (லேனிங்) ; இது உறுதிப்பாடு மிக்கது.
"கல்' என்னும் சொல்லை அடியாகக் கொண்டு பிறந்தது கல்வி. கல்லுதல் என்ற சொல்லுக்குத் தோண்டுதல் என்று பொருள்.

தனக்குள் படிப்படியாக இறங்கும் வாசகங்களின் பொருள் கூர்மை, மனத்தைத் தோண்ட வேண்டும். அப்போது அங்கிருந்து வெளிப்படுவன கசடுகள். அவை முற்றாக நீங்கும் வரை கட்டாயம் தோண்டும் பணி தொடர்ந்தாக வேண்டும். பின்னரே, சிந்தனையின் ஊற்றுக் கண் திறக்கும்; அது அறிவின் வெளிப்பாடாய்ப் புறத்தே விளங்கும்; அதற்குப் பின்னரே அனைத்தும் நிகழும்.

இதைத்தான், "தொட்டனைத்தூறும் மணற்கேணி' என்ற குறளை எடுத்துக் காட்டித் திருவள்ளுவர் விளக்குகிறார். "மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு' என்று முடிகிற இக்குறளில், தொட்டனைத்து ஊறுவது எது என்று அவர் சொல்லவே இல்லை. அதுபோல, அறிவின் ஊற்றைத் தோற்றுவிக்கக் கற்க வேண்டியவை எவையென்றும் சொல்லவில்லை. முன்னது நீர் என்றும் பின்னது நூல் என்றும் நமது அனுபவ அறிவால் நாம் புரிந்துகொள்கிறோம். நீரின் தேவை எவ்வளவு இன்றியமையாததோ அதுபோல் அறிவின் தேவை மிக மிக இன்றியமையாததது என்று அழுத்தமாகத் திருவள்ளுவர் இந்தக்குறள் வழியாக மக்களுக்கு எடுத்துரைத்திருக்கிறார். 

அதற்கான வாயில்கள்தான் கல்வி நிலையங்கள். அங்கே கற்க வருபவர்கள் வயதால் வேண்டுமானால் ஒத்திருக்கலாம். வாழ்க்கைத் தரத்தால், சமூகப் பின்புலத்தால், மனப்பாங்குகளால் வெவ்வேறு நிலைப்பாடு உடையவர்கள். அவர்களை ஒருமுகப்படுத்தி, கல்வியின்பால் நாட்டமுடையவர்களாக ஆக்குவது அருஞ்செயல்.

"எழுத்தறிவித்தவன் இறைவனாகும்' என்றார் அதிவீரராம பாண்டியர். எளிவந்த நிலையில், கற்பிக்கும் ஆசிரியர்கள் இறங்கி வந்தாலும், அவர்கள் இறைவன் நிகர்த்தவர்கள்; அதற்கான தகுதிப்பாட்டைத் தன்வயப்படுத்திய பீடத்தில் அமரத்தக்கவர்கள். அவர்களுக்கான பணியை இன்னும் மேன்மைப்படுத்தி அதிவீரராமர்  சொன்னார்: "கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்'. தன்னளவில் கசடுகள் இல்லாமல், தன்னிடம் பயில வருவோரின் கசடுகள் அறும்படியாக மொழிதல் ஆசிரியர்களின் கடப்பாடு.

உள்ளக் கசடுகளும் உலகக் கசடுகளும் நிரம்பிக் கிடக்கும் மனங்களைத் தூர்வாருதல் கல்வியின் முதற்பணி. அப்படித் தோண்டுகிறபோதெல்லாம் வெளிவருவன கசடுகளே. அதனால்தான், "கற்க கசடு அற' என்று கட்டளையிட்டார் வள்ளுவர். ஆசிரியர், கசடு அற மொழிதலைக்கேட்டு, தான் கசடு அறக் கற்றலே நன்மாணாக்கரின் செயல். அதற்கான களம், கல்வி நிலையத்து வகுப்பறை. அது நான்கு சுவர்களுக்கு நடுவில் இருக்கும் ஒரு வெற்றிடம் அல்ல; நாலாதிசைகளிலும் பரந்து விரிந்த அனுபவங்களைக் குறுகச் சொல்லிப் பயிற்றுவிக்கும் கலைக்கூடம். நின்று, நடந்து, இருந்து, எழுதி, சொல்லி திறம்பட மொழியும் ஆசிரியர்களால் அந்தக் கசடுகள் நீங்க வேண்டும்.

"கசடு' என்பதற்கு, "குறைபாடு', "குற்றம்', "ஐயம்' என்றெல்லாம் பொருள் உண்டு. இளம்பருவத்தினர் தவறு செய்யும் இயல்பினர். தவறுகள் இவையென்று அவர்களுக்குக் காட்டி, அவர்களை அவற்றினின்றும் விடுவிப்பவர்கள் ஆசிரியர்கள். ஆசு+இரியர் ஆகிய இருபெயர்க்கூட்டே, ஆசிரியர் என்னும் அழகிய பெயராகியது. ஆசு- குற்றம். இரியர்-நீக்குபவர். தவறுகள் குற்றங்கள் ஆகிவிடாமல் அவர்களைப் பாதுகாக்கிற அறவாணர்கள் ஆசிரியர்கள்; அவர்களும் மனிதர்கள்தாம்; அவர்களுக்குள்ளும் குறைபாடுகள் உண்டு.

அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு

என்கிறார் திருவள்ளுவர். 

"கற்பதற்குரிய அறநூல்கள் பலவற்றையும் கற்று குற்றங்கள் அற்றவர்களிடத்திலும் நுட்பமாக ஆராய்ந்தால் அறியாமை முதலிய குற்றம் இல்லாமல் இருப்பது அரிது. அறிவு வளர வளர அறியாமை தென்படுதல் இயற்கை. ஆயினும் தேவைக்கேற்ற அறிவும் இன்றியமையாப் பண்புகளும் இருக்கின்றனவா என்று ஆய்வு செய்து எடுத்துக் கொள்ளலாம் என்பது கருத்து. முழுதும் அறிந்தவர்களையும் குற்றமே அற்றவர்களையும் காண்பதரிது என்பதறிக' என்று இதற்கு விளக்கம் தருகிறார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
ஆக, தன் தவறு நீக்கித் தன் மாணாக்கர் குறை நீக்கிச் சமுதாயத் தொண்டாற்றும் தொடர்பணி, கல்விப்பணி.

இந்தச் செயற்பாடு, இடைப்பட வந்த நோய்த்தொற்றுத் தற்காப்புச் செயற்பாட்டால் ஒருவித முடக்கத்திற்கு ஆளாகிவிட்டிருக்கிறது. எவ்வளவுதான் அட்டவணையிட்டுப் பாடம் படித்தாலும், ஊடகங்களின் வாயிலாகப் பாடங்கள் கவனித்து, வீட்டுப்பாடங்கள் எழுதிப் பயின்றாலும், ஒருவித அசட்டை மனப்பான்மை பிள்ளைகளுக்குள் வந்து சேர்ந்துவிட்டது. அதனை முற்றாக நீக்க முடியாது; படிப்படியாக நீக்குவது இன்னொரு வகை சிரமம்.

பாடம் ஒன்றுதான்; நடத்துகிற ஆசிரியர் ஒருவர்தான்; ஆனால், பயிலும் மாணாக்கர்கள் பலர். ஒற்றை நிலைப்பாட்டில் கையாளக்கூடிய இயந்திரங்கள் அல்லர்; அவர்கள் இதயங்கள் உடைய உயிர்ப் பிஞ்சுகள்; வெம்பிவிடாமல், காய்த்துக் கனிந்து பயன்தருபவர்களாகப் பக்குவப்படுத்தப்பட வேண்டியவர்கள். ஒரு வகுப்பறைக்குள் நுழையும் ஒற்றை மனிதரான ஆசிரியர், அவ்வகுப்பறைக்குள் நிறைந்திருக்கும் ஒவ்வொரு மாணவர்க்குள்ளும் ஊடுருவி, கூடுவிட்டுக் கூடு பாய்ந்து தன் கருத்துகளை நிலைநிறுத்துகிற கலையே கல்வி.

கனிவும் கண்டிப்பும் மிகுதியாகத் தேவைப்படுகிற இடம் இது. கனிவு மிகுந்தால் சில சலனங்களும், கண்டிப்பு மிகுந்தால் கடும் எதிர்ப்புணர்வும் தோன்றக்கூடும். இருபால் ஆசிரியர்கள் கூடி, இருபால் மாணாக்கர்களைப் பயிற்றுவிக்கிற இடம் கல்வி நிலையம். இது தவச்சாலை.

பயிற்றுவிக்கிறவர்களின் பண்பும் அன்பும், பயில வருகிறவர்களிடத்தில் ஒருவித மரியாதையையும் பக்தியுணர்வையும் உண்டாக்க வேண்டும். வகுப்பறையில் பயின்று வாழ்க்கைத் தளத்தில் நின்று நிலைபெற உதவுவதே கல்வி.

இதற்கு, இவ்விருசாராரிடத்தில் மட்டும் இணக்கம் இருந்தால் போதாது; பெற்றோரின் உதவியும், மற்றோரின் அக்கறையும் துணைபுரிய வேண்டும். ஏனெனில், கல்வி என்பது வகுப்பறைக்குள் மட்டும் கிடைக்கும் கனி அல்ல; உலகத்தோடு ஒட்ட ஒழுகப் பயிலும் கலைப்பணி; உயர்பணி; ஏன், அது உயிர்ப்பணியும் கூட.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com