கடன் சூழ்ந்த இலங்கை!

ராம-ராவண யுத்தம் உச்சத்தைத் தொட்டு நிற்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து ராவணனைத் தாக்குகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ராம-ராவண யுத்தம் உச்சத்தைத் தொட்டு நிற்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து ராவணனைத் தாக்குகின்றன. ராவணனுடைய அஸ்திரங்கள் ஒவ்வொன்றாகத் தீர்ந்து போக அவனுடைய கிரீடமும், ராமர் விட்ட அம்பால் பூமியில் வீழ செய்வதறியாது திகைத்து நிற்கிறான் ராவணன். என்னதான் தவறிழைத்திருந்தாலும் சுத்த வீரன் அல்லவா ராவணன்? எனவே, ஓடாது நிற்கிறான். அதே சமயம் ராமரும் அவதாரம்அல்லவா? அப்போது ராமர் நினைத்திருந்தால், நிராயுதபாணியாக நின்ற ராவணனைக் கொன்றோ சிறை எடுத்தோ யுத்தத்தை முடித்திருக்கலாம். ஆனால், ராமர் அவ்வாறு செய்யவிலலை. 

மாறாக, "ராவணா! நீ களைத்திருக்கிறாய். உனக்கு ஓய்வு தேவை. ஆகவே, இப்போது உன்னுடன் யுத்தம் செய்தல் ஆகாது. ஆகவே, நீ போய் ஒய்வெடுத்துக் கொள். இன்று போய் போருக்கு நாளை வா' என்றார் ராமர். ராவணன் அவமானத்தால் துடிக்கிறான். ஐயகோ ராமன் இப்படிக் கூறியதற்கு பதிலாக தன்னைக் கொன்றே இருக்கலாமே என்று மனம் நொந்த நிலையில் அரண்மனை திரும்புகிறான் ராவணன். அப்போது ராவணனின் மனநிலை எப்படிக் கலக்கமடைந்திருந்தது என்பதைத்தான் ஒரு புலவர் "கடன் கொண்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று குறிப்பிடுகிறார். 

அது என்ன "கடன்கொண்டார் நெஞ்சம்?' அதற்கு தமிழகத்தின் அன்றைய காலகட்டத்தைப் பார்க்க வேண்டும். அப்போதெல்லாம் சோழ நாட்டில் ஒரு வழக்கம் இருந்தது. ஒருவர் வாங்கிய கடனைக் கட்ட முடியாதபோது, அவருக்குக் கடன் கொடுத்தவர் பொது இடத்தில் ஒரு வட்டம் வரைந்து அந்த கட்டத்திற்குள் கடன் வாங்கியவரை நிற்க வைத்துவிட்டு சென்றுவிடுவார். கடனைத் திரும்பத் தரும் வரை அவர் அக்கட்டத்தை விட்டு வெளிவர இயலாது. அப்படி ஆளாகும் நிலை, ஒருவருக்கு ஏற்பட்டால், அவர் மடிவதே மேல் என்று நினைப்பாரல்லவா?  அப்படிப்பட்ட நிலை ராவணனுக்கு ஏற்பட்டதைத்தான் அப்புலவர் "கடன்கொண்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று குறிப்பிட்டார். 

அன்று இலங்கை வேந்தனுக்கு ஏற்பட்ட நிலை இன்று இலங்கை அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. இலங்கையின் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஒரு கிலோ அரிசி 200 ரூபாய் கொடுத்தாலும் கிடைப்பதில்லை. பெட்ரோல், டீசல் விலை 200 ரூபாயைக் கடந்து விட்டது. ஒரு முட்டை 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 90 சதவீத ஹோட்டல்கள் மூடப்பட்டு விட்டன. கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மின்வெட்டு காரணமாக, பல மணி நேரம் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. மின்வெட்டு நீடிக்கக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. 

கிராமப்புற மக்கள் விலைவாசி சுமையையும், மின்வெட்டு பாதிப்பையும் தாங்கிக் கொள்ள முடியாமல், அகதிகளாகத் தஞ்சம் புகுவதற்கு தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். 

கடன் அதிகமாகி விட்டதால், அந்நியச் செலவாணி கையிருப்புத் தீர்ந்து போனதால், வெளிநாட்டுப் பொருட்களை ஏற்றி வந்த கப்பல்கள் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளும், மக்களும் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கி இருக்கிறார்கள். அதிபரின் மாளிகை முற்றுகையிடப்பட்டு போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கி விட்டன. நெருக்கடியை சமாளிக்க இந்தியா போன்ற நாடுகளிடம் கையேந்துவதைத்தவிர இலங்கைக்கு வேறு வழியில்லை. சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடன் பெறுவதற்கும் இலங்கை பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது.

அதிபர் கோத்தபய ராஜபட்சவைத் தவிர, அனைத்து அமைச்சர்களும் பதவி விலகி தேசிய அரசு அமைப்பதற்கான முயற்சிகள் அங்கு நடைபெற்று வருகின்றன. அதிபர் கோத்தபய பதவி விலக மறுத்து விட்டார். ஆகவே, இலங்கையில் உச்சகட்ட அரசியல் குழப்பம் உருவாகி விட்டது. நாடாளுமன்றத்தில் ஆளும் அரசின் பலம் குறைந்து விட்டது. இலங்கை முழுவதும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்குக் கூட தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து மருத்துவ நெருக்கடி நிலையை கோத்தபய ராஜபட்ச அறிவித்து விட்டார். இதனால் மருந்துப் பொருட்கள் வாங்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டனர். அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளின் விலை அதிகமாகி விட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை முற்றுகையிட்டு மக்கள்  போராடத் தொடங்கி விட்டார்கள். 

இதுவரை கோத்தபய ராஜபட்சவுக்கு ஆதரவாக இருந்த 11 கூட்டணிக் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றத் தொடங்கி இருக்கின்றன. மக்களுடைய கோபத்தின் உக்கிரத் தாக்குதலில் கோடை வெயிலை விட அனலாக தகித்துக் கொண்டிருக்கிறது இலங்கை. நாடாளுமன்றம் கூடிய நிலையில், பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. இலங்கை நாடாளுமன்றத்தில் கோத்தபய ராஜபட்ச ஆட்சி நீடிக்க வேண்டும் என்றால், 113 எம்பிக்களின் ஆதரவு வேண்டும். தற்போது 138 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக கோத்தபய ராஜபட்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி கூறியிருக்கிறது. அக்கட்சியும், அதனை ஆதரித்த கூட்டணிக் கட்சிகளும் சேர்த்து ஏறக்குறைய 60 எம்.பி.க்கள் கோத்தபய மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிய வருகிறது. ஆகவே, கவிழும் அபாயத்தில் இருக்கிறது கோத்தபய அரசு. 

ஆக, இனி வரும் காலம் கோத்தபய ராஜபட்சவுக்கு சோதனைக் காலம்தான். அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து கோத்தபய, மகிந்த ராஜபட்ச போன்றவர்கள் செய்த கொடுமையால், கண்ணீர் விட்ட தமிழர்களுடைய சாபம் துரத்தத் தொடங்கி விட்டது. அந்நிய செலாவணி குறைந்திருப்பதாலும், வெளிநாட்டுக் கடன் அதிகரித்திருப்பதாலும் பொருளாதார நிலையில் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது இலங்கை. எரிபொருள் இறக்குமதியையும், அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியையும் கையாள முடியாமல் இலங்கை திண்டாடி வருகிறது. இலங்கை மக்கள் தொடர்ந்து போராடி வருவது வெளியில் தெரியாமல் இருக்க   சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டன. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் பின்னர் அத்தடை திரும்பப் பெறப்பட்டது. பங்குச்சந்தை வர்த்தகம் அநேகமாக முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. 

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் இலங்கை மக்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்  பதவி விலக வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள், கோத்தபய ராஜபட்ச பதவி விலக வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இலங்கைக்கு மூன்று வழிகளில் வருவாய் வந்து கொண்டிருந்தது. ஒன்று தேயிலை, இரண்டாவது ஆடை உற்பத்தி, மூன்றாவது சுற்றுலா. இதை மூன்று "டி' என்கிறார்கள். அங்கு பொருளாதாரத்தில் இந்த மூன்று துறைகள்தான் பெரும் பங்களிப்பைத் தருகின்றன. இந்த வருவாயை உடைத்தது 2020-ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கரோனா. 2020 மார்ச் மாதம் முதல் இலங்கையும், அண்டை நாடுகளுடனான சர்வதேச விமான சேவையை நிறுத்தியது. அதனால் பொருளாதாரம் முடங்கியது. பொருளாதாரத்தின் தூண்களாக இருந்த தேயிலை, ஆடை உற்பத்தி, சுற்றுலா ஆகிய அனைத்தும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. இந்த மூன்றைத் தவிர வேறு எந்த வருமானமும் இல்லாத இலங்கை, படிப்படியாக பொருளாதாரப் பின்னடைவை சந்திக்கத் தொடங்கியது. 

பிற நாடுகளில் நாணய மதிப்பில் ஒரு நாடு வைத்திருக்கும் பணத்தின் அளவே அந்நிய செலாவணி கையிருப்பு எனப்படுகிறது. வங்கி பத்திரங்கள், கடன் பத்திரங்கள், வைப்புநிதி போன்ற பல வழிகளில் அந்நிய செலாவணி சேமிக்கப்படுகிறது. பொதுவாக ஒரு நாட்டின் மத்திய வங்கி இவற்றைப் பேணும். ஒரு குறிப்பிட்ட அளவில் அந்நிய செலாவணியைக் கையிருப்பில் வைத்திருப்பது பாதுகாப்பானது. தங்களது நாட்டின் நாணய மதிப்பு குறைந்தாலோ வேறு வகையிலான நெருக்கடி ஏற்படும்போதோ இவையெல்லாம் பெரிதும் துணையாக நிற்கும். பெரும்பாலும் அமெரிக்க டாலர்களிலேயே அந்நிய செலாவணி வைக்கப்படுகிறது. உலகத்திலேயே சீனாதான் அதிக அந்நிய செலாவணியைக் கையிருப்பில் வைத்திருக்கும் நாடாக இருக்கிறது. 

உலக வங்கியின் மதிப்பீட்டின்படி அந்த நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 3.35 டிரில்லியன் டாலர். இந்த மதிப்பு இலங்கையைப் பொறுத்தவரை 1.6 பில்லியன் டாலராகக் குறைந்து விட்டது. இலங்கைக்கான வரவு குறையத் தொடங்கியதால், இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பில் இருந்த அந்நிய செலாவணி வீழ்ச்சி அடையத் தொடங்கி விட்டது. இதுவே பொருளாதார நெருக்கடிக்கு மிக முக்கிய காரணமாகும். இதனால் இலங்கை நாணயம் மதிப்பு இழக்கத் தொடங்கி விட்டது. ஒரு டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 200 என்ற அளவில் இருந்து 275 ரூபாய்க்கு அதிகமாக சரிந்திருக்கிறது. இம்மதிப்பு சரிந்ததால் நாட்டின் பொருட்கள், சேவைகளுக்கான விலையும் கட்டணங்களும் அதிகரித்து விட்டன. 

அந்நாட்டில், அத்தியவசியப் பொருட்கள் அனைத்தும் இறக்குமதியை நம்பி இருப்பதால், அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. உதாரணத்திற்கு, கோழித்தீவனம் கூட அமெரிக்காவில் இருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. பால்மா, சர்க்கரை, முட்டை, பெட்ரோல், டீசல், எரிவாயு இவையும் இறக்குமதியால்தான் கிடைக்கின்றன. நாட்டின் முக்கியமான மின்உற்பத்தி நிலையங்கள் டீசலில் இயங்கக் கூடியவை. எனவே, டீசல் தட்டுப்பாட்டால் அங்கெல்லாம் உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் மின்வெட்டு நேரம் கூடி விட்டது. 

இலங்கைக்கு சுமார் 51 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டுக் கடன் இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. இதில் சுமார் 7 பில்லியன் டாலரை இந்த ஆண்டே செலுத்தியாக வேண்டும். ஆனால், அதைத் திருப்பித் தருகிற அளவுக்கு இலங்கையில் பணம் கையிருப்பில் இல்லை. 2.3 பில்லியன் அமெரிக்க டாலரே கையிருப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே, இலங்கையின் நாணயம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. முற்றிலுமாக அதன் மதிப்பை இழந்து ஒரு புதிய நாணயத்தை உருவாக்குகிற அளவுக்கு சூழ்நிலை சென்று விடுமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.  

அன்று  இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, அவர்கள் அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் கடல்போல் பெருகியது. இன்று இலங்கை கடனால் சூழப்பட்டு கண்ணீர் சிந்தி நிற்கிறது. 
 
கட்டுரையாளர்: முன்னாள் அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com