இலவசமே, உன் விலை என்ன ?

கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது என்ற பழமொழிக்கு நம் நாட்டின் அரசியல் கட்சியினரின் செயல்பாடுகளையே உதாரணமாகக் கூறலாம்.
இலவசமே, உன் விலை என்ன ?


கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது என்ற பழமொழிக்கு நம் நாட்டின் அரசியல் கட்சியினரின் செயல்பாடுகளையே உதாரணமாகக் கூறலாம். ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகச் செலவிட வேண்டிய வரிப்பணத்தின் பெரும்பகுதியை அர்த்தமற்ற இலவசங்களுக்காகச் செலவிடும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இருப்பவர்களையும் இல்லாதவர்களையும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்க முடியாது.

தங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஒருவேளை உணவிற்கான வருமானத்தைக் கூட ஈட்ட இயலாத ஏழை எளியவர்களுக்குச் சலுகை விலையிலோ, இலவசமாகவோ தானியங்களை வழங்குவதை யாரும் எதிர்க்கப் போவதில்லை. பல தலைமுறைகளாகக் கல்வியறிவைப் பெறாதவர்களின் வாரிசுகளுக்கு இலவசக் கல்வி வழங்குவதைத் தவறு என்று யாரும் கூறப் போவதில்லை. ஆனால், அரசு கஜானா காலியானாலும் பரவாயில்லை, தாங்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று சலுகை மழையாகப் பொழிந்து தள்ளும் கட்சியினரை யாராலும் பாராட்ட முடியாது.

சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ள மின்கட்டணச் சலுகை என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. ஆம் ஆத்மி கட்சி தன்னுடைய அறிக்கையில் வீடுதேடிச் சென்று குடிமைப் பொருட்களை வழங்குதல், உடனடியாக இருபத்தையாயிரம் அரசுப் பணியிடங்களை நிரப்புதல், வீடுகளுக்கான மின் இணைப்பு ஒன்றுக்கு ஒவ்வொரு மாதமும் முன்னூறு யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குதல் ஆகிய மூன்று பெரிய வாக்குறுதிகளை அளித்திருந்தது. முதல் இரண்டு வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே செய்யப்பட்டுவிட்டன. 

பதவியேற்று ஒரு மாதம் நிறைவடையும் நிலையில் மூன்றாவது வாக்குறுதியான முன்னூறு யூனிட் இலவச மின்சாரத்திற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. வரும் ஜூலை மாதத்திலிருந்து  இச்சலுகை வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டிலும் முன்னர் இரண்டு வெவ்வேறு கட்சிகளின் ஆட்சிக் காலங்களில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரமும், இரண்டுமாத காலத்தில் ஐந்நூறு யூனிட்டுக்கு மிகாமல் பயன்படுத்தும் வீடுகளுக்கு முதல் நூறு யூனிட்டுக்கான மின்கட்டணத் தள்ளுபடியும் நடைமுறைப் படுத்தப் பட்டன. 

இந்தச் சலுகைகளே கூட மிக அதிகபட்சமானவை என்றும், விவசாயிகள் என்ற பெயரில் வசதியுள்ள பெருநிலக்கிழார்களுக்கும் சலுகை கிடைக்கிறது என்றும், விவசாய மின்மோட்டாருக்கான சலுகையைப் பயன்படுத்தித் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது என்றும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. பல போர்ஷன்களைக் கட்டி வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டுச் சொந்தக்காரர்கள் மின்கட்டணச் சலுகையைத் தாங்கள் அனுபவித்துக் கொண்டு அதிகக் கட்டணத்தை வாடகைதாரர்களிடம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக இச்சலுகைகளின் விளைவாக தமிழக அரசின் மானியச்செலவு மிகவும் அதிகரிக்கும் என்ற ஆட்சேபமும் எழுந்தது. மாதாந்திர மின் கணக்கீட்டு முறைக்கு மாற முடியாமல் இருப்பதற்கு இந்த நூறு யூனிட் மின்கட்டணச் சலுகையே காரணம் என்பதை மறுக்க இயலாது.

இப்போது பஞ்சாப் மாநில அரசின் அறிவிப்பிற்கு வருவோம். மாதம் முன்னூறு யூனிட் இலவசம் என்ற அறிவிப்பினால் சுமார் 61 லட்சம் வீடுகள் பயனடையப் போகின்றனவாம்.  தமிழ்நாட்டைப்போலவே, பஞ்சாபிலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீடு செய்யப்படுவதால் ஒவ்வொரு கணக்கீட்டிற்கும் அறுநூறு யூனிட் மின்சாரம் இலவசமாகக் கிடைக்குமாம். அறுநூறு யூனிட்டுகளுக்கு மேல் போனால் மொத்த யூனிட்டுகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இந்த விதி எல்லோருக்கும் பொருந்தாது. பட்டியல் இனத்தவர்கள், பிற்படுத்த வகுப்புகளைச் சேர்ந்தவர்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோர் தங்களின் இரண்டுமாத மொத்தப் பயன்பாடு அறுநூறு யூனிட்டுக்கு மேல் போனால், அதில் அறுநூறைக் கழித்துக்கொண்டு மீதமுள்ள யூனிட்டுகளுக்கு மின்கட்டணம் செலுத்தினால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்ட நான்கு பிரிவினருக்கு ஏற்கெனவே மாதம் இருநூறு யூனிட் மின்சாரம் இலவசமாம். அவர்கள் கூடுதலாக நூறு யூனிட் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவை தவிர விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற இலவச மின்சாரச் சலுகை தொடரும் என்றும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் காரணமாக மின்கட்டண உயர்வு ஏதும் இருக்காது என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பஞ்சாப் மாநிலத்தில் அளிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணச் சலுகைகளுக்கான மானியமே வருடத்திற்குப் பதினான்காயிரம் கோடி ரூபாயாக உள்ள நிலையில், இந்தப் புதிய சலுகைகளினால் மேலும் ஐந்தாயிரம் கோடி ரூபாய் மானியத்தை மாநில அரசு மின்வாரியத்திற்கு அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாம். 

சென்ற முறை பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தபோது மாநிலத்தின் மொத்தக் கடன் ரூ.1.82 லட்சம் கோடியாக இருந்தது. காங்கிரஸ் ஆட்சியிலிருந்து விலகி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்த நேரத்தில் அந்தக் கடன் தொகை ரூ.2.82 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 

இந்த நிலையில், ஆட்சியில் அமர்ந்து முதலாவது ஆண்டு வரவு செலவு அறிக்கையையே இன்னும் சமர்ப்பிக்காத பஞ்சாப் அரசு எந்த தைரியத்தில் இத்தகைய சலுகைகளை வாரி வழங்குகின்றது என்று புரியவில்லை.

அரசியல் கட்சியினர் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகளைக் கட்டுப்படுத்த இயலாது என்று சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையமும் கூறியுள்ளது. தகுதியுள்ள ஏழைகளுக்கு மட்டுமே சலுகை என்ற எண்ணத்திற்கு எல்லா அரசியல் கட்சிகளும் உடனடியாக மாறவேண்டும். இல்லையேல், பஞ்சாப் மாநிலத்தைப் பீடித்துள்ள இலவச வியாதி இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் பரவி மாநிலங்களின் நிதி ஆதாரத்தை அரித்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com