ஆசிரியரும் மாணவரும்!

முற்காலங்களில் பிள்ளைகள் ஐந்து வயது நிறைவடைந்த பின்புதான் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் தற்போது இரண்டரை வயதிலேயே குழந்தைகளை எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சேர்த்து விடுகின்றனர்.
ஆசிரியரும் மாணவரும்!
ஆசிரியரும் மாணவரும்!

முற்காலங்களில் பிள்ளைகள் ஐந்து வயது நிறைவடைந்த பின்புதான் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் தற்போது இரண்டரை வயதிலேயே குழந்தைகளை எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சேர்த்து விடுகின்றனர். அதாவது ஒரு குழந்தை பிறந்து முதல் இரண்டரை ஆண்டுகளைத் தவிர, கல்லூரியில் மேற்படிப்பை முடிக்கும் காலம் வரை ஆசிரியர்களிடமே இருக்கின்றனர். 

காலையில் ஏழு மணிக்கு பயணிக்கத் தொடங்கும் மாணவ கண்மணிகள் மாலை வரை பள்ளியில் படிப்பை முடித்து அதன் பின்பு டியூஷன் வகுப்பு, சிறப்பு வகுப்பு என்று இரவு ஏழு மணிக்கு மேல்தான் வீடு திரும்புகின்றனர்.
கல்லாக இருக்கும் ஒரு பாறையைத் தகர்த்து எப்படி ஒரு சிற்பி சிற்பமாக வடிவமைக்கிறானோ அதைப் போலத்தான் மாணவ கண்மணிகளை ஆசிரியர்கள் கல்வி தந்து அறிவாற்றல் மிக்கவர்களாக ஆக்குகின்றனர். தற்போது பெற்றோர் தம் குழந்தைகள் ஆங்கிலம் பேசுவதை பெரிதும் விரும்பி ஆங்கிலப் பள்ளிகளில் அதிகக் கட்டணம் செலுத்தி படிக்க வைக்கிறார்கள். 
தங்களால் படிக்க முடியவில்லை தங்கள் பிள்ளைகளாவது படித்து மருத்துவராகவோ, பொறியாளராகவோ, வழக்குரைஞராகவோ வரவேண்டும் என்று விரும்பி நிலத்தை விற்று, வீட்டை விற்று பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள்.

முன்பெல்லாம் தன் பிள்ளை டாக்டராகத்தான் வர வேண்டுமென்று பெரும்பாலான பெற்றோர் விரும்பினார்கள். ஆனால், படித்த பெண்கள் குடும்பத் தலைவிகளாக வந்த பின்பு, தம் பிள்ளை ஒரு மாவட்ட ஆட்சியராகவோ, காவல்துறை அதிகாரியாகவோ வந்திட எவ்வளவு வேண்டுமானாலும் செலவுச் செய்யத் தயாராக இருக்கின்றனர்.
ஆனால், அந்தப் பிள்ளைகள் உயர் நிலைக்கு வந்த பின்பு தமது வயதான பெற்றோரை கவனிப்பது மிகவும் குறைந்துவிட்டது. அதுவும் அயல் நாடுகளுக்குச் சென்று பணிபுரிபவர்கள்,  பெற்றோர் இறந்த செய்தி வந்தால்கூட, "நான் செலவுக்கு பணம் அனுப்புகிறேன் நீங்களே அடக்கம் செய்து விடுங்கள்' என்று உறவினரிடம் கூறி, தம்மைப் பெற்றவர்களை அனாதைப் பிணங்களாக ஆக்கி விடுகின்றனர்.

ஆசை ஆசையாக பிள்ளையை வளர்த்திடும் பெற்றோரில் பெரும்பாலோர் அந்தப் பிள்ளைகளாலேயே முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுகிறார்கள். அதுவும் உள்ளூரில் பிள்ளைகள் வசிக்கும்போதே பெற்றோர் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுவது கொடுமையிலும் கொடுமையன்றோ!
சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று. பெற்றோர், தங்கள் பெயரில் உள்ள சிறிய அளவு நிலத்தை விற்று, பணத்தை தனக்குத் தரவேண்டும் என்று மகன் கேட்கிறான். பெற்றோர், நிலத்தை விற்க மாட்டோம் என்று மறுக்க, கோபமடைந்த மகன் அவர்களை அடிக்கிறான். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, காவலர்கள் விரைந்து வந்து மகனை கைது செய்து அழைத்துச் செல்கின்றனர்.  உடனே அவனுடைய பெற்றோர் பதறுகின்றனர். அவனுடைய தாய் காவலரின் காலைப் பிடித்து "என் மகனை ஒன்றும் செய்யாதீர்கள். அவன் எங்களை அடிக்கவில்லை' என்று கதறி அழ காவலர்கள் அவனை கைது செய்யாமல் விட்டுச் சென்றனர். 

தற்போதெல்லாம் செய்தித்தாள்களில் மனம் பதறும் செய்திகள் அன்றாடம் வெளிவருகின்றன. அண்மையில், ஒரு மாலை பத்திரிகையில், "மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மாணவன்', "ஐ.ஐ.டி. மாணவியை வன்கொடுமைக்கு ஆளாக்கிய மாணவனும் ஆசிரியரும்', "ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர் பாலியல் வன்முறை செய்த கொடுமை', "ஒரு பெண்னை பலர் கூட்டு பாலியல் வன்முறை', "கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்', "சொத்திற்காக தனது தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன்' என செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது. இதனைப் படிக்கும் மாணவர்களின் மனம் எந்த அளவு பாதிக்கப்படும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.  

கருணாநிதி, எம்.ஜி.ஆர். இருவரும் முதல்வராக இருந்தபோது மாணவர்களுக்கு நிறைய சலுகைகளை வழங்கினர். நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மட்டுமே மதிய உணவு வழங்கப்பட்டது. அதை நீட்டித்து, சாப்பிட வசதியில்லாததால் பள்ளிக்கு வராமல் இருந்த பிள்ளைகளை பள்ளிக்கு வரவழைக்க, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மதிய உணவு வழங்கினார் காமராஜர். எம்.ஜி.ஆர். அதையே மேலும் விரிவுபடுத்தி சத்துணவு வழங்கினார். பின்னர் முதல்வரான கருணாநிதி சத்துணவோடு முட்டை, முட்டை அல்லது வாழைப்பழம் வழங்கிட வழிவகுத்தார்.

அதற்குப் பிறகு முதல்வரான ஜெயலலிதா பதினான்கு வகையான சலுகைகளை மாணவ செல்வங்களுக்கு வழங்கினார். சீருடை, புத்தகம், மடிக்கணினி, மிதிவண்டி, நல்ல உணவு என்று ஏராளமாக வழங்கினார். இன்றைய முதல்வரோ அதிக மாணவியர் உயர்கல்வி பெறும் வகையில், அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக்குச் செல்லும் மாணவியர்க்கு மாதம் ரூ.1,000  தமிழக அரசு வழங்குமென்று அறிவித்தார். மேலும் ஐ.ஐ.டி., எய்ம்ஸ் கல்லூரிகளில் படிக்கும் மாணவ செல்வங்களின் அனைத்து படிப்புச் செலவையும் அரசே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் "உங்களால் மறக்க முடியாத மனிதர் யார்' என்று கேள்வி எழுப்பியபோது "என்னால் மறக்க முடியாத மாமனிதர் எனக்கு ஆரம்பக் கல்வி கற்றுத்தந்த ஆசிரியர்தான்' என்று பெருமைப்படக் கூறினார். "உன்னிடம் இருக்கும் சிறந்ததையெல்லாம் மாணவர்களுக்குக் கொடு. அவை மீண்டும் உனக்கே வந்து சேரும்' என்று தயானந்த சுவாமிகள் கூறியுள்ளார். டாக்டர் ராதாகிருஷ்ணன், "மாணவர்கள் மீது அன்பு கொண்டவர்கள் மனித  குலத்தின் மீது அன்பு கொண்டவர்கள் ஆவர்' என்று  கூறியுள்ளார்.

பள்ளிகளுக்கு மாணவர்கள் பள்ளிச் சீருடையில்தான் வரவேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பள்ளிப் பருவத்தில் யார் என்ன ஜாதி, மதம் என்ற வேறுபாடே மாணவர்களுக்குத் தெரியாது. அங்கே  ஹிஜாப் அணிந்துதான் பள்ளிக்கு வருவோம் என்று சில மாணவிகள் கூறுகின்றனர். இதனை பலர் தங்கள் அரசியல் அறுவடைக்காக ஆதரிக்கின்றனர்.

இஸ்லாமியர் புனித நூலான குர்ஆனில் எந்த இடத்திலும் ஹிஜாப் அணிவது கட்டாயம் என்றோ, ஆண்கள் தாடிவளர்ப்பது கட்டாயமென்றோ குறிப்பிடப்படவில்லை.

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு, அரசு ஊழியர்களும் ஆண்களும் கட்டாயம் தாடி வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன் தாடி வைத்துக் கொண்டதில்லை. பாகிஸ்தான் அதிபராக இருந்த இம்ரான் கான் தாடி வைத்துக் கொண்டா இருக்கிறார்? இந்தியாவில் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமும், பக்ருதீன் அலிஅகமதுவும்கூட தாடி வைத்திருக்கவில்லை. அண்மையில் துபை சென்ற தமிழக முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பலரும் தாடி வைத்துக்கொள்ளாமல்தான் இருந்துள்ளனர். 

உலகை வென்றவன், மாவீரன், அடக்க முடியாத குதிரையை அடக்கி தன் ஆளுமைத் திறனைக் காட்டியவன் என்றெல்லாம் போற்றப்படும் அலெக்ஸôண்டருக்கு போரிடும் தன்மையையும் வீரத்தையும் விளங்க வைத்தவன் புருஷோத்தமன் என்ற போரஸ் மன்னன்தான். அப்படிப்பட்ட அலெக்ஸôண்டரின் வெற்றிக்கும், அறிவுக்கும், திறனுக்கும், ஆளுமைக்கும் காரணமாக இருந்தவர் என்று இன்றும் போற்றப்படுபவர் அவருக்கு அறிவூட்டிய ஆசிரியர் அரிஸ்டாடில்தான். அலெக்ஸôண்டர் புகழ் இருக்கும் வரை அரிஸ்டாடில் புகழும் இருக்கும்.

அண்ணாவின் பேச்சாற்றலால் ஈர்க்கப்பட்டவர்கள் ஏராளமானோர். அதிலும் குறிப்பாக மாணவர்களே அதிகம். ஒருமுறை அண்ணாவிடம் "மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா' என்று கேட்டபோது, "மாணவர்களுக்கு அரசியல் என்பது அத்தை மகள் போன்றது. அத்தை மகளை சுற்றிச் சுற்றி வரலாமே தவிர, தொட்டு விடக் கூடாது. அப்படித்தான் மாணவர்களுக்கு அரசியல் என்பதும்' என்று பதிலளித்துள்ளார். அந்த அண்ணா முதல்வரானது 1965}இல் மாணவர்கள் தாய்மொழி தமிழைக் காத்திட செய்த புரட்சியால்தான் என்பதே உண்மை.

இன்றைய குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு அடிக்கடி "மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும். அதுவே அவர்கள் அறிவை வளர்த்திடும்' என்று கூறுவார். மகாத்மா காந்தி "சத்திய சோதனை' என்கிற தனது வாழ்க்கை வரலாற்றை ஹிந்தியிலோ ஆங்கிலத்திலோ எழுதிடவில்லை. அவருடைய தாய்மொழியான குஜராத்தி மொழியில்தான் எழுதினார். அவர் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள பெரிதும் விரும்பினார்.

மூதறிஞர் ராஜாஜி தனது மகளுக்கு வழக்கமாக ஆங்கிலத்தில்தான் கடிதம் எழுதுவாராம். ஒருநாள், இதனைப் பார்த்துவிட்ட காந்திஜி ராஜாஜியிடம், "உங்கள் தாய்மொழியான தமிழ்மொழி எவ்வளவு இனிமையான மொழி. இனிமேல் நீங்கள் தமிழிலேயே கடிதம் எழுதுங்கள், அதுவே நல்லது' என்றாராம்.
"கல்வியே ஆன்மாவின் உணவு. அது இல்லையென்றால், நம் சக்திகள் எதுவும் நமக்குப் பயன் தாரது' என்று மாணவர்களுக்கு கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார் இத்தாலிய அறிஞர் மாஜினி. "கல்விச்சாலை ஒன்றைத் திறப்பவன் சிறைச்சாலை ஒன்றை மூடுபவன் ஆவான்' என்று அறிஞர் விக்டர் ஹியூகோ கூறியுள்ளார். "ஜீவராசிகள் அனைத்திடமும் அன்பு செய்யத் தூண்டுவதே உண்மையான கல்வி; ஆனந்தம் அளிப்பது அதுவே' என்று அறிஞர் ரஸ்கின் கல்வியின் அவசியத்தை கூறியுள்ளார்.

இன்றைய மாணவ சமுதாயம், இப்படிப்பட்ட கல்வியை நன்கு கற்று, நல்வழியில் செல்வத்தை ஈட்டி, அனைவரிடமும் அன்பு செலுத்தி, முதுமையில் பெற்றோரைக் காப்போம் என்று உறுதியேற்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com