நிலக்கரியும் பொருளாதாரமும்

உலக நாடுகள் பலவற்றுக்கும் பசுமை மின் உற்பத்தி என்பது எளிதில் எட்ட முடியாத ஒரு கனவாகவே உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உலக நாடுகள் பலவற்றுக்கும் பசுமை மின் உற்பத்தி என்பது எளிதில் எட்ட முடியாத ஒரு கனவாகவே உள்ளது. முன்னேறிய பல ஐரோப்பிய நாடுகளும் கூட 2030-ஆம் ஆண்டுக்குப் பிறகே ஐம்பது சதவீத பசுமை மின் உற்பத்தியை எட்டுவதற்கான இலக்கினை நிர்ணயித்துள்ளன. இந்த இலக்குக்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியக் காரணம், மின் கட்டமைப்புக்கு ஏற்ற இலகுவான, சமச்சீரான மின் உற்பத்தியாக பசுமை மின் உற்பத்தி மாறவில்லை என்பதே.

சூரிய ஒளி மின் நிலையங்கள் தினமும் ஆறு அல்லது ஏழு மணி நேரம் மின் உற்பத்தி செய்யக்கூடியவை. பகலில் மட்டுமே இவை இயங்கும் என்பது ஒரு குறை. காற்றாலை மின் உற்பத்தியோ பருவம் சார்ந்த மின் உற்பத்தி. நீர் மின் நிலையங்களோ மொத்தத் தேவையில் ஒரு சிறு அளவையே நிறைவு செய்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே பெருமளவில் நீர் மின் ஆதாரங்கள் கட்டமைக்கப்பட்டு விட்டன. மழை அதிகரித்தால் மட்டுமே இவை கூடுதல் பலனை அளிக்கும்.

தாவர எரிபொருள் மின் உற்பத்தி நிலையங்கள் ஏற்ற இறக்கம் இன்றி சீராக மின் உற்பத்தியைத் தரக்கூடியவை. ஆயினும் இவற்றுக்கான எரிபொருள்களான கரும்புச் சக்கை, விவசாயக் கழிவு போன்றவை அதிகமாகக் கிடைப்பதில்லை. மேலும், இவற்றின் ஆற்றலடர்த்தி நிலக்கரியைப் போலன்றி குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக இவற்றைக் கையாளும் செலவும் கொண்டு செல்லும் செலவும் கூடுதலாக உள்ளது.

இன்றைய நிலையில் இந்தியாவின் மொத்த பசுமை மின் உற்பத்தியின் நிறுவுதிறன் ஒரு லட்சம் மெகாவாட்டுகளாக உள்ளது. இது நிலக்கரி மின் உற்பத்தி நிறுவுதிறனில் பாதி அளவாகும். ஆனால் இந்த நிறுவுதிறன் அளவுக்கு மின் உற்பத்தியை அவற்றால் எப்போதுமே தர இயலாது. பகலில் மட்டுமே கிடைக்கும் சூரிய ஒளி, பருவங்களில் மட்டுமே வீசும் காற்று எனப் பல குறைபாடுகளுடன் இவை உற்பத்தி செய்யும் மின்னாற்றலின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால் நிலக்கரி மின் உற்பத்தியோ உலக அளவில் நம்பகமான மின் உற்பத்தியாக உள்ளது.

இன்று உலக அளவில் ஒரு நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கு முக்கிய ஆதாரமாக நிலக்கரி மின் உற்பத்தி உள்ளது. நிலக்கரி, எரிவாயு, டீசல் போன்ற எல்லா எரிபொருள்களையும் சேர்த்து இந்தியாவில் அனல் மின் நிலையங்கள் 2,36,000 மெகாவாட் திறனுடன் மின்னுற்பத்தி செய்து வருகின்றன. இதில் உள்ள இரண்டு லட்சத்து பத்தாயிரம் மெ.வா. திறன் கொண்ட நிலக்கரி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டால் நம் நாட்டின் தொழில்துறையும் விவசாயமும் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

உலக அளவில் ஒரு விவாதப் பொருளாக மாறிவிட்ட அனல் மின் உற்பத்தி இந்தியாவிலும் சிந்தனைகள் பலவற்றை உருவாக்கி உள்ளது. குறிப்பாக சாம்பல் மாசு என்பது மட்டுமே அனைவரின் மனதில் பதிந்துவிட்ட ஒரு சுற்றுச்சூழல் மாசு ஆகும். உண்மையில் இது தொழில்நுட்ப அளவில் முழுமையாக சரி செய்யக் கூடியதே. அதி திறன் கொண்ட மின் வடிகட்டிகள் சாம்பலை பெருமளவில் புகையிலிருந்து பிரித்து விடுகின்றன. கையாள்வதில் கவனக் குறைவு இல்லாதபோது புகையில் வெளியேறும் சாம்பல் மாசினை நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள்ளேயே நிறுத்துவது கடினமான செயல் அல்ல.

நைட்ரஸ் ஆக்சைடு உற்பத்தியைக் குறைப்பதற்கும் புகையில் இருந்து கந்தக ஆக்சைடை நீக்குவதற்குமான அமைப்புகள் தற்போது கட்டாயம் ஆக்கப்பட்டு அவற்றுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் கரியமில வாயு வெளிப்பாட்டை நம்மால் எதுவும் செய்ய இயலாது என்பதே உண்மை. இந்த ஒரு காரணத்துக்காகவே உலக அளவில் அனல் மின் உற்பத்தி பசுமை ஆதரவாளர்களால் எதிர்க்கப்பட்டு வருகின்றது. பசுமைக்குடில் வாயுவான கரியமில வாயுவைத் தவிர்க்க உடனடித் தீர்வு நம்மிடம் ஏதுமில்லை. மின் வாகனங்கள் கூட எங்கோ ஓரிடத்தில் கரியமில வாயுவின் வெளிப்பாட்டுக்குக் காரணமாகவே இருக்கின்றன.

பகலில் சூரிய மின்னுற்பத்தி மிகும் நேரத்தில் மின்பயன்பாடு கூடும்போது இது போன்ற விளைவுகளைக் குறைக்க இயலும். மேலும் தற்போதைய பசுமை உற்பத்தியில் உள்ள ஏற்ற இறக்கங்களால் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் தொழில்நுட்ப ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. ஏனெனில் எல்லா நிலக்கரி மின் நிலையங்களும் நிலையான உற்பத்தியை எதிர்நோக்கியே வடிவமைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு நாளும் பசுமை மின் உற்பத்தியை முழுமையாகப் பயன்படுத்தவேண்டி அனல் மின் நிலையங்களின் உற்பத்தியை அடிக்கடி ஏற்றவும் இறக்கவும் வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. இதனால் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி கொதிகலனின் ஆயுளும் வெகுவாகக் குறைகின்றது.

இத்தகைய இடர்ப்பாடுகள் நீங்கி பசுமை மின் உற்பத்தியை ஒரே சீரான அளவில் செய்யும் நிலை ஏற்பட இன்னும் பத்தாண்டுகளுக்கு மேல் ஆகலாம். அது வரையிலும் நம்மால் அனல் மின் உற்பத்தியைக் குறைப்பது சாத்தியமற்றது. மேலும் பசுமை உற்பத்தி சூழலில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பதும் தவறான கணிப்பாகும். 660 மெ.வா. திறனுடைய மூன்று அலகுகள் (மொத்தம் 1980 மெ.வா) கொண்ட ஓர் அனல் மின் நிலையத்துக்கு 2,050 ஏக்கர் நிலம் தேவை. இதே அளவு நிலத்தில் சூரிய ஒளி மின் நிலையம் அமையும்போது அதில் நம்மால் 500 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்ய இயலும்.

மேலும் சூரியப்பலகைககளைப் பொருத்துவதற்கு நிழலற்ற இடம் வேண்டுவதால் அங்குள்ள மரங்கள் முழுமையாக நீக்கப்படவேண்டும். மின் உற்பத்திக்காக அந்த மரங்கள் வெளியிடும் ஆக்சிஜனை நாம் இழந்தே ஆகவேண்டும். அதே நேரம், தற்போது சுற்றுச்சூழல் அமைச்சக விதிகளின்படி, அனல் மின் நிலையங்களில் உள்ள கட்டடக் கூரைகளில் சூரியப் பலகைகள் கொண்டு பல மெகாவாட்டுகள் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும், மொத்த நிலத்தில் பத்து சதவீத அளவில் மரங்கள் நடப்பட்டு பசுமைப் போர்வையும் உருவாக்கப்படுகின்றது.

இருவித உற்பத்தியிலும் பல நிறை குறைகள் இருப்பினும் நம்முடைய இலக்கு நூறு சதவீத பசுமை மின் உற்பத்தியே. ஆயினும் நிலக்கரி அனல் மின் நிலையங்களின் தடையற்ற முழுமையான உற்பத்தி தற்போதைய நிலையில் நாட்டின் பொருளாதாரத்துக்கும் வேளாண் உற்பத்திக்கும் இன்றியமையாதது என்பது மறுக்கவியலா உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com