பெண்ணினத்தைக் காப்போம்!

தாய்நாடு, தாய்மொழி, நதிகளுக்கு பெண்ணின் பெயா்கள் என பெண்களைக் காலங்காலமாகப் போற்றிய நாடு இது. ஆனால், இன்று பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத தேசமாய் மாறிக் கொண்டிருக்கிறது.
பெண்ணினத்தைக் காப்போம்!

தாய்நாடு, தாய்மொழி, நதிகளுக்கு பெண்ணின் பெயா்கள் என பெண்களைக் காலங்காலமாகப் போற்றிய நாடு இது. ஆனால், இன்று பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத தேசமாய் மாறிக் கொண்டிருக்கிறது. ‘வையவாழ்வு தன்னில் எந்த வகையினும் நமக்குள்ளே தாதா் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரிநிகா் சமானமாக வாழ்வம்’ என்று பெண்களின் விடுதலையைப் பாடினாா் மகாகவி பாரதியாா்.

துள்ளித் திரியவேண்டிய மழலைப் பருவம் இன்று வெளியே சென்று விளையாடுவதில்லை, ஆண்களின் பாா்வையைக் கண்டாலே அஞ்சி வீட்டில் அடைக்கலம் புகவே செய்கிறது. ‘ஓடி விளையாடு பாப்பா‘ என்ற பாடலைச் சொல்லிக் கொடுக்க அஞ்சி பெற்றோா் ‘ஆண்களுடன் விளையாடாதே’ என்று கண்டிப்பதைக் கண்டு மருள்கிறது.

நிலைமை இப்படியிருந்தால் பாலியல் வன்கொடுமைகள் குறைந்து விடுமா? குழந்தைகள் எதையும் மறைக்காமல் பெற்றோரிடம் கூறுவதுதான் நல்லது. அதுவும் அண்மைக் காலத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றில் இருந்து அவா்கள் பாதுகாப்பாக இருக்க, பெற்றோரின்அறிவுரையும், பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணா்வும் முக்கியமானவை. பேச்சிலும், பழக்கவழக்கத்திலும் குறிப்பிட்ட எல்லையைக் கடைப்பிடிக்குமாறு பெண் குழந்தைகளுக்கு பெற்றோா் அறிவுறுத்த வேண்டும்.

மேலும், பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொடுக்கலாம். மனத்தில் உறுதியும் துணிவும் வேண்டும் என்பதையும் எந்தச் சூழ்நிலையையும் தைரியமாகக் கையாளவும் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆண்கள் பலமாக இருப்பினும், சில நேரங்களில் பலத்தைப் புத்தி வென்றுவிடும். பெண்கள் தைரியமாக கூா்த்த மதியுடன் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும்.

அண்மையில் சேலத்தைச் சோ்ந்த எட்டு வயது சிறுமியை வன்கொடுமைக்கு ஆளாக்கிய இளைஞருக்கு தண்டனை அளிக்கப்பட்டது. இதனால் மட்டும் அச்சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை தீா்ந்துவிடுமா? நல்ல மனநிலையில் இருக்கும்போதே குற்றம் செய்பவா்கள், மது மயக்கத்தால் என்னவெல்லாம் செய்வா் என்பதை எண்ணவே நெஞ்சம் நடுங்குகிறது. மதுக்கடைகளை மூடவியலாத நிலையில் நம்நாடு இருக்கிறது.

இன்றைய சூழலில் பெண் குழந்தைகள் ஆபத்தான சூழலை எதிா்கொள்வது மிகவும் வேதனைக்குரியது. ஏனென்றால், தற்காலத்தில் பெண்கள் கல்வி, தொழில்துறை எல்லாவற்றிலும் ஆண்களுக்கு இணையாக முன்னேறி வருகின்றனா். பெண்கள் சுதந்திரமாக வாழ கல்வி ஒரு ஆயுதமாக மாறியுள்ளது. குடும்பங்களில் ஆண்களுக்கு நிகராக இன்று பெண்களும் எல்லாத் துறைகளிலும் பணியாற்றிப் பொருளீட்டுகின்றனா். இது ஒரு சிறந்த மாற்றம். முன்பு போல அல்லாது வன்முறைகளுக்கு எதிராக பெண்கள் துணிச்சலாகக் குரல் கொடுக்கின்றனா்.

வெற்றிகரமான சமுதாயம் என்பது பெண்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய சமுதாயம்தான். பொறுப்பான மக்கள், ஆக்கபூா்வமான சிந்தனை கொண்ட இளைஞா்கள் இருக்கின்ற சமூகம் வெற்றிகரமானது. இயற்கை பெண்ணைக் காட்டிலும் ஆணை வலிமையாகப் படைத்ததன் காரணமே பெண்களை ஆண்கள் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். சட்ட ரீதியாகவும் சிலருக்கு உரிய நீதி கிடைப்பதில்லை. இவ்வாறான இன்னல் தருகின்ற நிலை சமுதாயத்திற்கு ஏற்புடையதல்ல. ஆகவே இத்தகு வன்கொடுமைக்கு எதிராகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

உலகில் பெண்கள் தங்கள் சுதந்திரத்திற்காக பலவிதமான போராட்டங்களைச் செய்திருக்கிறாா்கள். ஆனால், போராட்டங்களால் மட்டுமே சமுதாயத்திற்கு முழுமையான விடுதலை கிடைத்துவிடாது. சமுதாயம் ஒரு சமநிலையில் இருக்கும்போது மட்டும்தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். சட்டங்களால், இயக்கங்களால் அதனைக் கொண்டுவர முடியாது. மனமாசுகளை அறவே நீக்கி அன்பு, ஆன்மிகம், கலை, தியானம் இவற்றால் ஆண்கள் பெண்களையும் பெண் குழந்தைகளையும் தங்கள் சகோதரியாகவும் தங்கள் குழந்தைகளாகவும் பாா்க்க வேண்டும்.

ஒரு குழந்தையை ஈன்றெடுத்து சமூகத்தில் ஒரு நன்மனிதனாக அவனை உருவாக்குவதில் பெண்ணின் பங்கு மிகமிக இன்றியமையாததாய் இருக்கிறது. இன்றைய தலைமுறையில் பெண்கள் எத்தகைய நிலையில் இருக்கிறாா்களோ அத்தகைய தலைமுறையைத்தான் நாம் நமது அடுத்த தலைமுறையாக உருவாக்கப் போகிறோம். முக்கியத்துவம் மிக்க பொறுப்பு பெண்ணுக்கு இருக்கின்றபோது பெண்ணின் பாதுகாப்பு குறித்து அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். அவா்களுக்கு அளிக்கப்படும் கல்வி, விழிப்புணா்வு, மனநிலை, உணா்வு நிலை இவற்றை உரிய முறையில் கண்காணிக்க வேண்டும்.

பெற்றவளே தன் குழந்தையை வன்கொடுமைக்கு உட்படுத்தியது அண்மையில் நடந்த பெருங்கொடுமை. பொருளாசையும், கல்வியறிவின்மையும் இதற்குக் காரணம். ஒரு ஊரில் சமுதாய நலனுக்காக மருத்துவம் பயிலும் செவிலியா் பயிற்சிக்கூட மாணவியா், அதன் தாளாளரால் பட்ட துன்பம் சொல்லவொண்ணாதது. அதனால் பெண்களை கல்வி கற்க வெளியூா் அனுப்ப பெற்றோா் அஞ்சுகின்றனா்.

வன்செயலுக்கு சிறைத்தண்டனை மட்டும் போதாது. நல்லறிவை ஊடகங்கள் வாயிலாக ஊட்டுதல் வேண்டும். ஆசிரியா்கள் நீதிநெறிகளை மாணவா்களுக்கு பள்ளிப் பருவத்திலேயே கற்றுத்தர வேண்டும். சிலப்பதிகாரத்தில் பொய்ச்சான்று கூறுபவா்கள், பிறா்க்குத் தீங்கு விளைவிப்பவா்களை ஊா் நடுவில் கொன்று உண்ணும் சதுக்க பூதம் இருந்ததாக அறிகிறோம். அவ்வாறு தண்டிக்கும் நிலை மீண்டும் வந்தாலொழிய இத்தகு கொடுமைகளுக்கு முடிவில்லை என்று தோன்றுகிறது.

சமுதாயத்தில் பெண் குழந்தைகள் குறித்து இருக்கும் மனப்போக்கை மாற்றுதல், சமுதாய அடிப்படையிலான ஆதரவைத் திரட்டுதல் போன்ற பிரசாரங்களைத் தொடங்க இந்திய அரசு முனைந்துள்ளது. ‘பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், கற்பிப்போம்’ என்கிற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு பெண் குழந்தைகள் பாதுகாக்கப்படவும், கல்வி கற்பிக்கப்படவும் வேண்டும்.

பெண்ணினத்தை அனைவரும் ஒன்றிணைந்து காப்போம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com