இது வேத வாழ்வின் நீட்சி

வேதகாலம் தொடங்கி பெண்ணின் ஆற்றல் மதிக்கப்பட்டிருக்கிறது. சமூகத்திற்குத் தங்களின் பங்களிப்பை அவர்களும் சம அளவில் தந்திருக்கிறார்கள். 
திரெளபதி முர்மு
திரெளபதி முர்மு

காயத்ரி, துளசி, கங்கா, காமதேனு, அருந்ததி ஆகிய ஐந்து மாதாக்களையும் தினம் சிந்திப்பவர்களுக்கு மகா பாவங்களும் விலகும்; அகல்யா, திரெளபதி, சீதா, தாரை, மண்டோதரி ஆகிய ஐந்து பெண்களையும் அன்றாடம் நினைப்பவருக்கு சகல துன்பங்களும் தீரும் என்று பெண்களை தெய்வமாக வணங்கக் கற்றுக் கொடுத்திருக்கும் தேசம் நம் தேசம்.         

இந்திய சிந்தனை மரபு, ஆண் - பெண் பேதம் பார்க்கவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான வாய்ப்புகளையும் பொறுப்புகளையும் வழங்கியிருக்கிறது. வேதகாலம் தொடங்கி பெண்ணின் ஆற்றல் மதிக்கப்பட்டிருக்கிறது. சமூகத்திற்குத் தங்களின் பங்களிப்பை அவர்களும் சம அளவில் தந்திருக்கிறார்கள். 

உலகிலேயே கல்வியில் சிறந்த பெண்கள் வாழ்ந்ததும் பாரத தேசத்தில்தான். 33 பெண்கள் ரிஷிகளுக்கு நிகராக நான்கு வேதங்களிலும் தங்கள் படைப்பைத் தந்திருக்கிறார்கள். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் 30 பெண் கவிஞர்களைக் காண்கிறோம். 

ரிக் வேதமும் யஜுர் வேதமும் பெண்களைக் கடவுளராக வருணிக்கின்றன. "அதிதி' கடவுளர்களுக்கெல்லாம் தாய் என்று ரிக் வேதம் சொல்கிறது. வேதங்களால் போற்றப்படும் "காயத்ரி' மந்திரம் அன்றாடம் ஒவ்வொரு மனிதனாலும் போற்றி உச்சரிக்கப்பட வேண்டியது என்று முன்னோர் வகுத்து வைத்திருக்கிறார்கள். காயத்ரி தேவியை "வேதமாதா' என்றே அதர்வண வேதம் சுட்டுகிறது. 

உபநிஷத்துகளில் போற்றப்படும் மைத்ரேயி, தத்துவ மேதையாக இருந்ததை அவர் யாக்ஞவல்கியருடன் நிகழ்த்திய உரையாடலில் காண்கிறோம். சுக்ல யஜுர்வேதத்தின் ஒரு பகுதியான உபநிஷத்துகளிலேயே மிகப் பெரிய உபநிஷத்தான பிரகதாரண்யக உபநிஷத்தின் பெரும்பகுதியாக யாக்ஞவல்கிய மகரிஷியின் உபதேசங்களே உள்ளன.

மைத்ரேயி, யாக்ஞவல்கியரிடம், "அழிவற்ற நிலையை அளிக்காத ஒன்றை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது' என்று கேட்ட கேள்வி  இந்திய ஞானமரபில் சிறப்பு வாய்ந்தது. ஆத்ம தேடல், அதை உணர்வதற்கான அறிவு, அதன் வழி அழிவற்ற நிலையை அடைதல் என்று விரியும் இந்த உரையாடல் பாரதப் பெண்களின் ஞானத்திற்கு உதாரணம் என்றால், அதே உபநிஷத்தில் வரும் மூன்றாவது அத்தியாயம், எட்டாவது பிரமாணத்தில் கார்க்கி -  யாக்ஞவல்கியரின் விவாதம் நம் பெண்களின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. 

யாக்ஞவல்கியரோடு கார்க்கி விவாதிக்கையில், அவள் முன்வைக்கும் இரண்டு வினாக்களும் அவற்றுக்கு யாக்ஞவல்கியர் கூறும் விடையும்,  காலம், இடம் இரண்டையும் இணைக்கும் தொடர் நிகழ்வான கோட்பாடே (ஸ்பேஸ் டைம் கன்டின்யும்) என்று இன்றைய அறிவியல் அறிஞர்கள் வியக்கிறார்கள். அதற்கும் மேலே கார்க்கி தத்துவ மாநாட்டில் விவாதித்தது இன்றைய அறிவியலில் ஆராய்ச்சி நிலையில் இருக்கும் பிரபஞ்ச இயக்கத்தின் நுட்பத்தையே என்கின்றனர் உலக அறிவியலாளர்கள்.

"பிரம்மவாதினி' என்று அழைக்கப்பட்ட பெண் ரிஷிகள், எந்தத் தயக்கமும் இன்றி யாக்ஞவல்கியர் போன்ற மகரிஷியிடம் உபநிஷத் விவாதங்களில் தங்களது கேள்விகளைத் தொடுக்கின்றனர் என்பதைக் காணும்பொழுது வேத, உபநிஷத் காலத்தில் பெண்கள் மிக உயர்வாக,  கற்றறிந்த  சான்றோராக இருந்திருக்கிறார்கள் என்ற பெருமிதம் ஏற்படுகிறது.

சமூக அமைப்பிலும் அன்றாட வாழ்விலும் கூட பெண்கள் பிரித்துப் பார்க்கப்பட்டதில்லை. "குடும்பத்திற்கு பெண்ணே ஒளி தருகிறாள்' என்கிறது மனு ஸ்ம்ருதி. உலகம் முழுவதும் பெண் தன் பெயருக்குப் பின்னே ஆணின் பெயரைச் சேர்த்துக் கொண்டு, தன்னை அடையாளப் படுத்திக் கொள்வதே நடைமுறை. பாரத தேசத்தில் அப்படியான வழக்கம் இருக்கவில்லை. இங்கே இறைவனே அம்பிகையை முதன்மைப்படுத்தி "கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர்' என்றே அடையாளப்படுத்தப்படுவார். 

சீதாராமன், உமாமகேஸ்வரன், ராதாகிருஷ்ணன், லெட்சுமிநாராயணன் என்று பெண்ணுக்கு முதன்மை இடம் அளித்துப் பழகிய வழியில் வந்தவர்கள் நாம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மகாகவி காளிதாசர், தாம் எழுதிய ரகுவம்ச காவியத்தின் இறைவணக்கப் பாடலில், "ஜகத பிதரௌ வந்தே பார்வதீ பரமேஸ்வரெü (உலகின் தாய் தந்தையரான பார்வதி பரமேஸ்வரனை வணங்கித் தொடங்குகிறேன்) என்றே தொடங்குகிறார். நம்முடைய பண்பாட்டில்தான் பெண் முன்னிறுத்தப்படுகிறாள். 

பெண்களை ஆண்களின் மறுபாதி (அதர் ஹாஃப்) என்று அழைக்கும் சொல் சதபத பிரமாணத்தில் ஏறத்தாழ 3,000 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்திருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சாணக்கியர் தன் அர்த்த சாஸ்திரத்தில் பெண்ணை ஒரு மனிதனின் மறுபாதி என்றும் சிறந்த நண்பன் என்றும் கூறுகிறார். அதோடு வாழ்க்கையின் மூன்று லட்சியங்களான தர்ம, அர்த்த, காமம் (அறம் பொருள் இன்பம்) ஆகியவற்றின் ஆணிவேர் என்றும், மறுமைப் பயனை எய்த உதவும் வழிகாட்டி என்றும் பெண்ணைப் புகழ்கிறார். 

வேத காலம் தொடங்கி நம் நாட்டில் தேசம் காத்த மங்கையரும் இருந்து வந்திருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தில் மூதின் முல்லை துறையில், பெண் வீரத்தோடு தேசம் காப்பதற்காக தன் வாழ்வைக் கருதாது குடும்பத்தின் தந்தை, கணவன், தமையன் என அனைவரும் மாய்ந்த பின்னும் மகனின் கைகளில் வேல் தந்து தேசப்பணிக்கு அனுப்புகிறாள். இவர்கள்தான் இந்தியாவின் அடையாளம்.

விஜயநகரப் பேரரசின் இளவரசரான குமாரக் கம்பண்ணரின் மனைவி கங்காதேவி, குமாரக் கம்பண்ணரின் படைகளோடு மதுரை வரை வந்து, போர்க்களத்தில் நிகழ்ந்தவற்றை நேரடி சாட்சியாகக் கண்டு "மதுரா விஜயம்' எனும் வரலாற்று நூலைப் படைத்தார். 

அந்நியர்களின் படையெடுப்புகள் பெரும் கொடுமைகளை நிகழ்த்திய காலத்திலும், அஞ்சாது நின்ற ராணிமார்களைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். தமிழகத்தில் வேலு நாச்சியார், தன் கணவர், குடும்பம் அனைவரையும் இழந்த பின்னரும் தாய் மண்ணுக்காக இறுதிவரை போராடி வெற்றியும் கண்டவர். 

ராணி சென்னம்மா, தன் கணவர், மகன் என தன் குடும்பம் முழுமையும் மடிந்த பின்னரும், இறை சித்தம் என தன் துன்பங்களை ஏற்று, தேசப் பணியில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இப்படி பாரத தேசத்துப் பெண்கள் மன உறுதியும் தேசாபிமானமும் கொண்டு வாழ்ந்த வரலாற்றின் நீட்சியே இன்றைய பெண்களும்.

கடந்த மாதம் ஜெர்மனியில் நடைபெற்ற 48-ஆவது  ஜி7 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உலகத் தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றினார். இந்த உரை இந்தியாவின் பெருமையைப் பறைசாற்றியதோடு உலகையே நம்மை நோக்கித் திரும்பிப் பார்க்கவும் வைத்தது. 

பெண்களுக்கான வளர்ச்சி என்று உலகம் சிந்திக்கும் வேளையில், "இந்தியா பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற பாதையில் பயணிக்கிறது' என்று பிரதமர் பெருமிதத்தோடு பேசினார். அவர் சுட்டிக்காட்டிய உதாரணம் அனைவரையும் சிந்திக்கவும் சிலிர்க்கவும் வைத்தது. 

பாரத தேசத்தில் கரோனா பேரிடர் காலத்தில் அறுபது லட்சம் பெண்கள் முன்களப் பணியாளர்களாக இரவு - பகல் பாராது பணியாற்றி தேசத்தைக் காத்தார்கள். தடுப்பூசி ஆராய்ச்சியிலும் கண்டுபிடிப்பிலும் பெண் விஞ்ஞானிகள் பங்களிப்பு பெரியது. கிராமப்புறங்களில் சுகாதாரப் பணிகளில் நாடு முழுவதும் பத்து லட்சம் பெண்கள் தன்னார்வலர்களாக "ஆஷா' பணியாளர்கள் என்ற பெயரில் களத்தில் நின்றார்கள். இந்த தன்னார்வலர்களுக்கு உலக சுகாதார அமைப்பு "குளோபல் லீடர்ஸ்' விருது வழங்கி கெளரவித்தது.

இந்தியாவின் குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு அமர்ந்திருக்கிறார். மிக எளிய பழங்குடியின குடும்பத்தில் பிறந்து கல்வி கிடைப்பதற்கும் போராட்டங்களை சந்தித்தவர். தேசப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அர்ப்பணிப்போடு செயல்பட்டவர். சொந்த வாழ்க்கையில் பல இழப்புகளை சந்தித்த போதிலும் நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் கொண்டு அரசியல் களத்தில் சேவையாற்றியவர். மாநில ஆளுநராக திறம்பட செயல்பட்டவர். எளிமையாக வாழ்பவர். தனக்குக் கிடைத்திருக்கும் உயரிய பதவியை தன்னுடைய வெற்றி என்று கொண்டாடாமல், ஏழை மக்களின் வெற்றி என்றும், ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவராகும்  அளவுக்கு இந்திய ஜனநாயகம் உயர்ந்து நிற்கிறது என்றும் பணிவு காட்டி தேசத்தைப் பெருமைப்படுத்தியுள்ளார். 

பாரத தேசத்தில் பெண்களின் பங்களிப்பு வேத காலம் தொடங்கி இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. வேதவாழ்வென்பது அறிவின் துணை கொண்டு ஆராய்வது; பாரபட்சமற்றது. செல்வம் மிக்க மன்னரும் அனைத்தையும் துறந்த துறவியும் நின்றால் எளிய துறவியே மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரியவராவார். அந்த வாழ்வில் பெண்ணும் தலைமை ஏற்பாள். அதனால்தான் மகாகவி பாரதியார், "வியனுலகனைத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம்' என்று பாடினார். 

இன்று திரெளபதி முர்முவின் உயர்வு இந்தியாவின் பாரம்பரியம். தேசத்தின் முதல் குடிமகளாக ஓர் எளிய பெண் உயர்ந்திருப்பது வேத வாழ்வின் நீட்சியே.

கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com