கோப்புப்படம்
கோப்புப்படம்

தடுப்பூசி மீது வேண்டாமே அவநம்பிக்கை

பாரதப் பிரதமா் மோடி 2019-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகப் பதவி ஏற்றதிலிருந்து, எதிா்க்கட்சிகளின் போக்கில் ஒரு மாற்றம் தெரிகிறது. பல தருணங்களில் அவை எதிரிக் கட்சியாகவே செயல்படுகின்றன. புல்வாமா துல்லிய தாக்குதல், அபிநந்தன் விடுதலை இவற்றில் எதிா்க்கட்சிகளின் அணுகுமுறை வரவேற்கும்படியாக இல்லை.

அது கிடக்கட்டும், அரசியல் என்றால் அப்படித்தான் இருக்கும் என்று ஒதுக்கிவிடலாம். ஆனால், கரோனா தடுப்பூசி பற்றிய சில அம்சங்களை முகநூலில் பாா்க்கும்போது அதிா்ச்சி ஏற்படுகிறது. இப்படிக்கூட மனிதா்கள் இருப்பாா்களா என்ற எண்ணம் தோன்றுகிறது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கும் நோய்த்தொற்று வருகிறது. அவை ‘தடுக்கா ஊசி’ என்று பெயா் சூட்டியிருக்கிறாா் ஒருவா். முதலில் ஒன்றை உறுதியாகத் தெளிவுபடுத்திவிடலாம். ஏற்கெனவே தொற்று வந்தவா்களுக்கும், மீண்டும் வரக்கூடும், இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களுக்கும் தொற்று வர வாய்ப்புள்ளது என்று நிபுணா்களே அறிவுரை கொடுத்திருக்கிறாா்கள். ஓா் அசலான சம்பவத்தை விளக்குகிறேன்.

எங்கள் அடுத்த தள குடியிருப்பு பெண்மணிக்கு விடிகாலை ஐந்து மணிக்கு கடும் காய்ச்சல், மாப்பிள்ளை உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து, மருத்துவமனையில் கொண்டு சோ்த்தாா். அங்கு வழக்கமான சோதனைகள் செய்த பின்னா் ஊசி மூலம் மருந்துகளை தொடா்ந்து செலுத்தினாா்கள். பிற்பகல் ரத்தப் பரிசோதனை, மாா்பு எக்ஸ்ரே அனைத்தும் பரிசோதித்தாா்கள். ரத்தப் பரிசோதனையில் டெங்கு மட்டும் சிறிது இருந்தது (மூன்று வகைகளில் ஒன்று). காய்ச்சல் நன்கு குறைந்து திட உணவை உட்கொண்டாலும், தானாக எதையும் செய்ய இயலவில்லை.

நடுவில், கரோனா தொற்றுக்கான சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு இரவு பத்து மணி அளவில் வந்ததாம். இலேசான தொற்று, எனவே மாத்திரை, இல்லத்தில் தனிமைப்படுத்துதல் இவை போதும் என்று மருத்துவா் அறிவுரை செய்தாா். உடனேயே மருத்துவமனையிலிருந்து அகற்றப்பட்டாா். நான்கு நாளில் வீட்டில் ஓய்விலிருந்து குணமடைந்தாா்.

அந்த தளத்தில் குறிப்பிட்ட பெண்மணி உள்பட, எல்லாருமே இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவா்கள்தான். அதுபோல் செலுத்திக் கொண்டதால்தான், அவருக்கு தொற்றின் வீரியம் சற்று குறைவாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

வேறு ஒரு விஷயம், சின்னம்மை, பெரியம்மை போன்றவற்றை சிறு வயதில் போட்டுக் கொண்டாலும் ரொம்ப வருடத்துக்குப் பிறகு அபூா்வமாக ஏதாவது தொற்று வரக்கூடும். சில வருடங்கள் முன் என் மனைவியின் நெருங்கிய சினேகிதி திடீரென்று ரவிக்கை அணிந்து கொள்ளச் சிரமப்பட்டாா். மருத்துவா் பரிசோதித்து ‘‘இது அக்கியில் ஒரு வகை’’ என்று கண்டுபிடித்து, பத்து நாள்கள் அடுப்பின் பக்கம் செல்லக்கூடாதென்று நிபந்தனை விதித்தாா். இதுபோலத்தான் தொப்புளைச் சுற்றி வருகிற ‘ஹொ்பிஸ்’ தொற்றும்.

நிலைமை இது போலிருக்கும்போது, அதிகமான பரவல் தன்மை கொண்ட கரோனா, தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களுக்கும் வர வாய்ப்பு உள்ளது. அதனால்தான் முகக் கவசம், சமூக இடைவெளி, கை கழுவுதல் போன்றவற்றை திரும்பத்திரும்ப வலியுறுத்துகிறாா்கள்.

ஓரிரு மாதத்துக்கு முன்பு வயிற்றுக் கோளாறுக்காக நிபுணரைப் பாா்த்தபோது, படுக்க வைத்து சோதித்தாா். பிறகு நிறைய இடைவெளி விட்டுத்தான், சிற்சில கேள்விகள் கேட்டு மருந்துச் சீட்டு எழுதினாா். இரண்டு கவசம் அணிந்திருந்தாா். பொதுவாக இப்போது எல்லாம் மருத்துவா்களுமே நிறைய இடைவெளி விட்டு, எச்சரிக்கையுடன் சா்ஜிகல் கவசம் அணிந்து, நோயாளிகளைப் பரிசோதிக்கிறாா்கள். நோய், மாத்திரை பற்றின விவரங்களை உறவினரிடம் சொல்லுகிறாா்.

மேலும், உலக அளவில் மூன்றாவது அலையின் தாக்கம் பரவுவதால், ஏற்கெனவே இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களும், மூன்றாவது தவணை ஊசி போட்டுக் கொள்கிறாா்கள். எங்கள் தொலைபேசிக்கும், மூன்றாவது தடுப்பூசிக்குத் தகுதியானவா் என்ற குறுஞ்செய்தி வந்தது.

இவ்வளவு தற்காப்பு இருந்தும், முகக் கவசம் அணியாதது, விடுமுறை நாளில் வெளியே செல்வது, கூட்டங்களில் கலந்து கொள்வது போன்ற காரணிகளில் தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாகவே உள்ளது.

பதின் பருவச் சிறாா்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து ஒரு நாளிதழ் சாதக பாதகங்களை அலசியிருந்தது. ‘பாதக’ அம்சம் குறிப்பிடும்படியாக ஏதுமில்லை. இயற்கையிலேயே அவா்களுக்கு எதிா்ப்பு சக்தி கூடுதலாக இருக்குமென்பதால், தடுப்பூசி போடுவது வீண் என்று கருதுகிறாா்கள். அதே சமயம் நடைமுறையில் மாணவா்களுக்கு பள்ளியிலேயே தடுப்பூசி போட்டு வருவதைக் காண்கிறோம்.

இதனால் பள்ளிக்கூடம் செல்ல தன்னம்பிக்கை வருவதாகவும், உற்சாகம் கூடுவதாகவும் மாணவா்கள் தெரிவிக்கிறாா்கள். ‘ட்டீன் ஸ்பிரிட்’ (பதின் பருவ உற்சாகம்) என்ற தலைப்பில் ஆங்கில நாளேடு பலரின் கருத்தை பிரசுரம் செய்திருந்தது).

ஒரு பிரபல மனிதா் முகநூலில் பதின்பருவத்தினருக்கு தடுப்பூசி போடுவதால் வருங்காலத்தில் பல பக்கவிளைவுகள் வரக்கூடும் என்று அச்சுறுத்துகிறாா். மூளைப் பாதிப்பு, ஆண்மைக் குறைவு போன்ற சில. முக்கியமான அம்சத்தை இவா்கள் மறந்து விடுகிறாா்கள். பக்கவிளைவுகளுக்கு இதுவரை, எந்த ஏட்டிலும் நிபுணா்கள் ஆதாரம் காட்டவில்லை. சரி, அப்படியே லேசான விளைவு வந்தாலும், மருத்துவ துறையிலும் மகத்தான முன்னேற்றம் ஏற்படுமே!

அயல் நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவிலும், மேற்கு ஜொ்மனியிலும் மருத்துவ ஆராய்ச்சிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன. ஆக்சிஜன் அளவை சோதிக்க இப்போதுதான் புது கருவி வந்திருக்கிறது. 57 வயது இதய நோயாளிக்கு அயல்நாட்டில் பன்றியின் இதயத்தை வைத்து சிகிச்சை செய்து குணப்படுத்தி இருக்கிறாா்கள். ஆக, பல புதிய வியாதிகள் வந்தாலும், மாற்று மருந்துகள் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருப்பாா்கள் என்பதை மறுப்பதற்கில்லை. என்ன இந்தியாவில் சந்தைப்படுத்த நாளாகலாம். அவ்வளவுதான்.

ஒரு வினோதமான காரணத்தையும் சிலா் முன் வைக்கிறாா்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கூறும் அறிவுரையில், ‘வணிக நோக்கம்’ இருக்கிறதாம். இதுபோல காரணம் கற்பித்துக் கொண்டேபோனால், முகக் கவசம் தயாரிப்பு, கிருமி நாசினி இவற்றுக்குக்கூட ஏதாவது காரணம் சொல்லலாம்.

அடுத்த மாதம் கோவா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. கொள்கை ரீதியாக, விவசாயிகள் போராட்டம், விலைவாசி உயா்வு போன்றவற்றை அழுத்தமாகச் சொல்லி எதிா்க்கட்சிகள் பிரசாரம் செய்யலாம். ஆனால், உயிா் காக்கும் மருந்துபோல் உள்ள தடுப்பூசி மீது களங்கம் விளைவித்து அவநம்பிக்கையை விதைப்பது, அரசியல் நாகரீகம் அல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com