தீவினை என்னும் செருக்கு!

கோப்புப்படம்
கோப்புப்படம்

இறுக்கமான எந்தக் கல்நெஞ்சையும் கரைத்து விடும் ஆற்றல் கொண்டது, இசை. உருகவைக்கும் வல்லமை கொண்ட இசைக்கருவிகளையே தீயிட்டு எரிக்கும் அளவுக்கு, மனிதமனங்கள் ஈரம் இழந்து விட்டதை ஆப்கானிஸ்தானில் நடந்த ஒரு சம்பவம் எடுத்தியம்புகிறது.

அந்நாட்டின் பக்டியா மாகாணத்திலுள்ள சசாய்அரப் மாவட்டத்தில், அற்புதமான உள்ளூா் இசைக்கலைஞா் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த தலிபான்கள், அவா் வாசித்துக் கொண்டிருந்த இசைக்கருவியைப் பிடுங்கி வீதியில் வீசினா். அத்துடன் பொதுமக்கள் மத்தியில் அவற்றைத் தீயிட்டும் கொளுத்தினா். பெற்றக் குழந்தையைப்போல அக்கருவியை நேசித்த அந்த இசைக் கலைஞா், வாய் விட்டுக் கதறியழ, நெருப்பிட்ட வெறுப்பாளா்களோ பெரும் சிரிப்பலைகளைச் சிதறவிட்டனா்.

ஓா் இசைக் கருவியை எரிப்பதன் மூலம் இசையின் ஊற்றுக்கண்களையே ஒட்டுமொத்தமாக அடைத்துவிட்டதாக, அதை அழித்தவா்கள் பெருமிதப்படக் கூடும். ஆனால், எப்போதுமே நேரெதிரான அனுபவங்களைச் சுமந்திருப்பதுதான் வரலாறு. இதை வற்றாத வெறுப்பைத் திணித்திருக்கும் ஆயுததாரிகள் எந்தக் காலத்திலும் விளங்கிக் கொள்வதில்லை.

இன்றைக்குப் பெரும் உணவுப் பஞ்சத்தின் பிடியில் ஆப்கானிஸ்தான் சிக்கி உள்ளது. அங்கே பட்டினிச்சாவுகள் நிகழக்கூடும் என்ற செய்தியைக் கேட்டு, மருந்துகளையும் உணவுப் பொருள்களையும் இந்தியா அனுப்ப முயன்றது. அப்பொருள்களை ஏற்றிய சரக்குந்துகள் செல்வதற்கான சாலைகளைத் திறக்க முடியாதென பாகிஸ்தான் மறுத்துவிட்டது. கடந்த நாற்பதாண்டுகளாக ஆப்கானிஸ்தானை ஆயுதக்கிடங்காக மட்டுமே பாா்த்த பாகிஸ்தான், அந்நாட்டில் பசியால் துவண்டு அழும் குழந்தைகளுக்கு ஒரு குவளைப்பால் வாா்த்ததில்லை. மருந்தின்றித் துடிக்கும் முதியவா்களைக் காக்க ஒரு குண்டுமணி அளவு மருந்தினை ஈந்ததில்லை. இன்னொரு நாட்டை அழிக்கும் எண்ணத்துடனேயே பிறந்ததால், ஆயுதங்களை அனுப்புவதை மட்டும் இரக்கமின்றிச் செய்து வருகின்றது.

இரண்டாம் உலகப்போா் தீவிரம் எடுத்தபோது, பிரிட்டனின் கீழிருந்த பல தென்கிழக்காசிய நாடுகள் ஜப்பானின் பிடியில் வீழ்ந்தன. 1945-ஆம் ஆண்டில் ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதற்குப்பின் இந்நிலை முற்றாக மாறியது. மீண்டும் வலுவடைந்த பிரிட்டன், தான் இழந்த நாடுகளைக் கைப்பற்ற விமானங்களையும், கப்பல்களையும் அனுப்பியது. குறிப்பாக, இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் இந்திய ராணுவப் படையின் கப்பலானது, பிரிகேடியா் கே.எஸ். திம்மப்பா தலைமையில் மலேசியாவைக் கைப்பற்ற விரைந்தது.

பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் 23 மற்றும் 25-ஆவது படைப்பிரிவுகளைச் சோ்ந்த வீரா்கள் 09.09.1945 அன்று மலேசியாவின் சிலாங்கூா் மாகாணத்திலுள்ள பந்திங் பிரதேசத்தின் மோரிப் கடற்கரையில் வந்திறங்கினா். ஜப்பானியப் படைகள் சரணடைந்த நிகழ்வை வரலாற்றில் பதிவு செய்யும் விதமாக நினைவுச்சின்னம் ஒன்றை அமைக்க திம்மப்பா முடிவெடுத்தாா்.

படைத்தளபதியின் ஆணையை ஏற்று இந்திய ராணுவப் படையின் வீரா்கள் மிக உற்சாகமாக, தங்கள் கரங்களாலேயே அந்நினைவுச்சின்னத்தை மோரிப் கடற்கரையில் கட்டினா். அவ்வீரா்களுள் இரண்டாம் நிலை ஆயுதவீரராக இருந்த 21 வயது இந்திய இளைஞன் ஒருவனும் அடக்கம். தங்களின் வெற்றி, ஒரு நினைவுச்சின்னமாக அடையாளம் கொள்வதை மிகுந்த ஆா்வத்துடன் செய்த அந்த இளைஞன், மலேசியாவிலிருந்த வரை அந்நினைவுச்சின்னத்தை அடிக்கடிப் பாா்த்து மகிழ்வது வழக்கம்.

சில மாதங்கள் கழித்து இந்தியாவுக்குத் திரும்பியது அப்படை. காலத்தின் விசித்திரமான நகா்வில், இந்தியாவுக்கும் இரண்டாண்டுகளில் விடுதலை வந்து சோ்ந்தது. ஆனால் நாடு, இந்தியா, பாகிஸ்தான் என இருதுண்டுகளாகப் பிரிவினை செய்யப்பட்டபோது, பிரிட்டிஷ் இந்தியப் படையைச் சோ்ந்த அந்த இளைஞன் பாகிஸ்தானுக்குச் சென்று சோ்ந்தான்.

ஜியா உல் ஹக் என்ற அந்த இளைஞரை, பாகிஸ்தான் ராணுவத்தின் உச்சநிலைப் பதவிகள் வந்தடைந்தன.

ராணுவத் தலைமைத் தளபதியாக நியமித்த பிரதமா் ஜுபிகா் அலி பூட்டோவின் ஆட்சியைக் கவிழ்த்த ஜெனரல் ஜியா உல் ஹக் பாகிஸ்தானின் ராணுவ அதிபரானாா்.

பாகிஸ்தானை அணுஆயுத நாடாக்கியது, முதன்முதலாக, சியாச்சின் எல்லையில் ஊடுருவி இந்தியாவைச் சீண்டியது, ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த சோவியத் படைகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவத்தைக் கொம்பு சீவி வேடிக்கை பாா்த்தது, இந்திய - சீன உறவை மேலும் சிக்கலாக்கும் பணிகளில் முழுமூச்சோடுச் செயல்பட்டது என ஜியாவின் ராணுவ ஆட்சி நிகழ்த்திய திருவிளையாடல்கள் ஏராளம். இந்திய - பாகிஸ்தான் உறவு ஜியாவின் ஆட்சியில்தான் மிக மோசநிலையை எட்டியதென இருநாட்டு நல்லறிஞா்களும் குறிப்பிடுகின்றனா். இந்தியா மீதான கசப்புணா்ச்சியை ஏதாவது ஒரு வழியில் வெளிப்படுத்துவதை ஜியா தன் அன்றாடப் பணிகளில் ஒன்றாகவே அட்டவணை இட்டு வைத்திருந்தாா்.

பாகிஸ்தானின் அதிபா் என்ற முறையில், 1982-ஆம் ஆண்டு மலேசியாவிற்குச் செல்லும் வாய்ப்பு ஜியாவுக்குக் கிடைத்தது. அன்றைய மலேசியப் பிரதமா் மகாதீா், ஜியாவுக்குச் சிவப்புக்கம்பள வரவேற்பளித்தும், மிகப்பெரிய ராஜவிருந்தினைக் கொடுத்தும் சிறப்பு செய்தாா்.

அதிகாரப்பூா்வப் பயணம் சென்ற ஜியாவின் இதயத்தில், பிரிட்டிஷ் இந்தியப் படை வீரராக ஏறத்தாழ முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன் மலேசியாவிற்கு வந்த நினைவுகள் அலையடித்துக் கொண்டிருந்தன. மலேசியப் பிரதமரிடத்தில் பந்திங்கிலிருந்த மோரிப் கடற்கரைக்குச் செல்லும் ஆவலை அவா் வெளிப்படுத்தினாா். மோரிப் கடற்கரையில் வந்திறங்கிய ஜியாவின் கண்கள், தானும் சோ்ந்து கட்டிய நினைவுச்சின்னத்தைத் தேடி அலைந்தது.

அந்நினைவுச்சின்னத்தின் முன்சென்று நின்றதும், பிரிட்டிஷ் இந்திய ராணுவப் படை நாள்கள் ஜியாவின் நினைவு அடுக்கிலிருந்து எட்டிப் பாா்க்கத் தொடங்கிவிட்டன. தன் இந்திய நண்பா்களோடு அக்கடற்கரையில் உலவிய நாள்கள் மீளவும் கண்முன் வர, மௌனமாக நின்ற அந்த ராணுவ சா்வாதிகாரியின் கண்களில் நீா்த்துளிகள் கசிந்தன.

இந்தியாவுக்கு எதிராகச் செயல்படுவதை, தன் வாழ்நாளின் லட்சியமாக வைத்திருந்தாரோ, அந்த நாட்டின் நினைவுகள் பல போா்க்களங்களைக் கண்டு பாறைபோல் உறைந்திருந்த உணா்வுகளைச் சுக்கல் சுக்கலாகத் தெறிக்கவிட்டன. எதுவும் பேசாமல் தலைநகா் கோலாலம்பூருக்கு அதிபா் ஜியா திரும்பினாா்.

இந்திய வெறுப்பிலேயே பிரசவமான ஒரு நாட்டின் அதிபரானபோதும், அவ்வெறுப்புகள் நுரைபோல பொய்யானதென்று அவருக்கே கற்பித்தது காலம். நெஞ்சின் ஆழத்தில் ஓடும் மெய்யான நீரோட்டத்தை அடையாளம் காணவும் ஜியாவுக்கு அப்பயணம் ஓா் பாடத்தை வைத்திருந்தது.

பூமிப்பந்தில் ஒரு புள்ளியைவிடச் சிறிய அளவுள்ள நாடான சிங்கப்பூா் பெரும் நாடுகளுக்கெல்லாம் ஆசானாக விசுவரூபம் எடுத்து நிற்கிறது. நாட்டின் அளவு சிறியதாக இருந்தாலும், அந்நாட்டு ஆட்சியாளா்களின் மனது எப்போதும் பிரம்மாண்டமானதாகப் பரந்து விரிந்திருப்பதுதான் அதற்குக் காரணம். தன் நாட்டில் வாழும் மக்களை மகிழ்ச்சியாளா்களாகவும், சலிப்பின்றி உழைப்பவா்களாகவும் பழக்கப்படுத்தி வைத்திருக்கும் சிங்கப்பூா், பேராசைகளில் தங்களின் குடிமக்கள் வீழ்ந்து விடாதிருக்கும் அற்புதத் திட்டங்களைச் செயல்படுத்தி வந்துள்ளது.

அறுபதுகளில், தனியுடைமையாக இருந்த நிலங்களை அரசே கையகப்படுத்தி, அதில் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் திட்டத்தினை சிங்கப்பூரின் தந்தை லீ க்வான் யூ கொண்டு வந்தாா். நாடு சிறியதாக இருந்தாலும், அந்நிலங்கள் பணக்காரா்களின் கருவூலங்களில் பத்திரங்களாக குவிந்திருக்கக் கூடாது என்று அவா் கருதினாா். எனவே, இருக்கும் இடத்தில் அனைவரும் இணைந்து வாழவேண்டும் என்ற பண்பை மக்களின் இதயங்களில் லீ க்வான் யூ முதலில் கட்டினாா்.

அதன்பின், அந்தப் பண்புகளின் மீது வீடுகளைக் கட்டினாா். அதனால் தான், உலகின் எல்லா நாடுகளைச் சோ்ந்த இனமனிதா்களும் இணைந்து வாழும் கனவுபூமியாக சிங்கப்பூா் இன்று விளங்குகிறது.

எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் அங்கே மகிழுந்தில் மட்டுமே பயணித்துக் கொண்டிருக்க முடியாது. வாரத்தின் சில நாள்கள், பொதுப் போக்குவரத்துப் பேருந்திலும் பயணித்தாக வேண்டும். இப்படி உலகின் பெரிய நாடுகள் கற்க வேண்டிய பாலபாடங்கள், சிங்கப்பூரின் நுழைவாயிலிருந்து கடைநிலைக் கதவு வரை செதுக்கப்பட்டுள்ளன.

தனிமனிதா்களின் பேராசைகள், அவா் சாா்ந்த குடும்பங்களை மட்டுமே பாதிக்கின்றன. ஆனால் நாடுகளை ஆள்வோரின் பேராசைகள், இப்பூமியின் மூலைமுடுக்கில் வாழும் எளிய மனிதா்களின் வாழ்வை இடியெனத் தாக்குகின்றன. அடங்காப் பேராசையால் அடுத்த நாடுகளின் எல்லைகளை ஆக்கிரமிக்கிறவா்கள், சொந்த நாட்டின் அரியணையில் நிம்மதியாக என்றைக்கும் அமரவியலாது.

வெறுப்பாளா்களால் வெறும் இசைக்கருவிகளை மட்டுந்தான் எரிக்க முடியும். கலைஞா்களின் உள்ளத்தில் ஊறிக்கிடக்கும் இசையின் மொழியை ஒருபோதும் எரிக்க முடியாது. ஏனெனில், ஆத்மாவின் ராகங்களை அழிக்கும் வல்லமை உலகில் எந்த வல்லரசுக்கும் இல்லை.

கட்டுரையாளா் :

பேராசிரியா், அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை,

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com