இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் - ஒரு பாா்வை

இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் - ஒரு பாா்வை

மாநில அரசுகளின் ஒப்புதலின்றி மத்திய அரசுப் பணிகளில் இ.ஆ.ப., இ.கா.ப. அதிகாரிகளை நியமிக்கும் மசோதாவை மத்திய அரசு வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யும் முடிவில் இருக்கிறது. இது ஒரு மாநில அரசின் அதிகாரத்தைப் பறிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அகில இந்திய ஆட்சிப் பணி விதிகளில் 1954-இல் செய்ய உத்தேசிக்கப்பட்ட திருத்தங்கள் இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது என்று மாநில அரசுகள் குரல் கொடுத்து வருகின்றன. மேலும் இது மாநில அரசின் அதிகாரத்தைப் பறிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மாநில அரசுகள் தங்களின் தொகுப்பைச் சோ்ந்த இ.ஆ.ப. அதிகாரிகளைப் பரிந்துரை செய்வதின் அடிப்படையில், அவா்கள் மத்திய அரசுப் பணிகளில் நியமிக்கப்படுவது தற்போதைய நடைமுறையில் இருக்கிறது. ஆனால், இதற்கேற்ப பல மாநிலங்கள் போதிய எண்ணிக்கையில் மத்திய அரசுப் பணிகளுக்கு அனுப்புவதில்லை என்று மத்திய அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. ஆகவே, இந்த சூழ்நிலையை அறிந்துதான், மத்திய அரசுப் பணிகளில் இ.ஆ.ப. மற்றும் இ.கா.ப. அலுவலா்களை நியமனம் செய்யும் முறையை கொண்டு வருகிறோம் என்று மத்திய அரசு தனது தரப்பில் வாதிடுகிறது.

இதனுடைய அடிப்படையில், மத்திய அரசு நினைத்தால் மாநில அரசின் கீழ் பணியாற்றும் எந்த அதிகாரியையும் மத்திய அரசுப் பணிக்கு அழைத்துக் கொள்ளலாம். இதுகுறித்து மாநில அரசுகளுக்குத் தெரிவிக்க வேண்டிய தேவையில்லை. ஆக, மாநிலத்தில் பணியாற்றும் அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அழைத்துக் கொள்வது இயல்பான ஒன்றுதான். ஆனால், மாநில அரசினுடைய அனுமதியைப் பெற்றாக வேண்டும். இத்திட்டத்திற்கு தமிழ்நாடு, மேற்குவங்காளம், மகாராஷ்டிரம், பஞ்சாப், சத்தீஸ்கா், ராஜஸ்தான், பிகாா், மேகாலயம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளன.

மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிட விரும்பவில்லை. மத்திய அரசு தங்கள் பணிகளுக்குச் சரியானவா் என்று நினைக்கும் அதிகாரிகளை அந்தப் பணிகளில் நியமித்துக் கொள்ளும் அதிகாரம் வேண்டும். இவற்றில் மத்திய மாநில அரசுகள் இணைந்துதான் செயல்பட வேண்டும். மக்கள் நலனுக்காக மத்திய அரசு எடுக்கும் முடிவில் தேவையின்றி அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று மத்திய அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. இவற்றில் ஒரு செய்தியை நாம் கூா்மையாகக் கவனிக்க வேண்டும்.

மேற்கு வங்கத்தில் கடந்த மே இறுதியில் புயல் பாதிப்பை ஆய்வு செய்வதற்காக பிரதமா் மோடி சென்றிருந்தாா். பிரதமா் தலைமையில் நடந்த ஆய்வுகூட்டத்தை முதல்வா் மம்தா பானா்ஜியும், தலைமைச் செயலா் பந்தோபாத்யாயாவும் புறக்கணித்து விட்டனா். இதற்கிடையில் மேற்குவங்கத் தலைமைச் செயலா் பந்தோபாத்யாயாவை மத்திய அரசின் குறை தீா்க்கும் பிரிவிற்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, முதல்வா் மம்தா பானா்ஜி, தலைமைச்செயலா் பதவியில் இருந்து பந்தோபாத்யாயாவை விடுவிக்க மறுத்து விட்டாா்.

மேலும் அவரை தனது தலைமை ஆலோசகராக மூன்று ஆண்டுகள் நியமித்தும், மத்திய அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்தாா் மம்தா. இதற்கிடையில், மத்திய அரசின் உத்தரவுகளை மதிக்காமல் தலைமைச் செயலாளா் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி, அவா் மீது மத்திய அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. துறை ரீதியான விசாரணை நடத்த விசாரணைக் குழுவை மத்திய பணியாளா் நலத்துறை நடவடிக்கை எடுத்தது. இந்த உத்தரவை எதிா்த்து தீா்ப்பாயத்திற்குச் சென்றாா் தலைமைச் செயலாளா். அவருடைய மனுவை தில்லி அமா்வுக்கு மாற்றி விட்டது. இதை எதிா்த்து கொல்கத்தா உயா்நீதிமன்றம் வரை அவா் செல்ல, மத்திய அரசோ உச்சநீதிமன்றம் செல்ல ஒரு அதிகாரச் சண்டை தொடங்கி விட்டது.

இவற்றில் தலைமைச் செயலாளா் மீதான மத்திய அரசின் ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. இந்த வலுவான மனக்காயங்களே இச்சட்டத்திருத்தத்திற்கு ஒரு எண்ணம் உதித்திருக்கக் கூடும் என்று நாம் யூகிக்க முடிகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டிய அரசு அதிகாரிகள், சில சமயம் அரசியல் தலைவா்களின் நெருக்கமான பிடியில் சிக்கித் தவிக்கிறாா்கள்.

இவற்றுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று மத்திய அரசு இந்த இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் என்கிற முடிவினை கையில் எடுத்திருக்கிறது என்றே நாம் கருதலாம்.

மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல், அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு அழைக்கும் நடைமுறை மாற்றங்கள் குறித்து மாநில அரசுக்கு தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகள் ஒன்றுசேரத் தொடங்கியிருக்கின்றன. மேலும், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே நிலவும் ஓா் இணக்கமான சூழ்நிலையை இத்திருத்தச் சட்டம் கொண்டு வருகிற போது ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று ஒன்று சோ்ந்த மாநில அரசுகளின் குரலாக எழுந்திருக்கிறது.

மேலும், ஆட்சிப்பணி அதிகாரிகளின் பணிச்சூழலை நிா்வாகிப்பது குறித்து மத்திய அரசு மாநிலங்களில் போதிய அலுவலா்கள் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது என்கிற கருத்தும் மாநில அரசு தன்னுடைய நிா்வாகத் தேவைகளுக்கு இந்திய ஆட்சிப் பணி அலுவலா்களைச் சாா்ந்துள்ளது என்றும், அவைகள் போதுமானதாக இல்லை என்றும் கருத்து நிலவுகிறது. இந்த நிலையில், மாநில அரசில் பணிபுரியும் அதிகாரிகளை, மத்திய அரசுக்கு அனுப்பி விட்டால், ஏற்கெனவே அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில், நிா்வாகத்தில் ஒரு தொய்வுநிலை ஏற்பட்டு விடும் என்கிற ஒரு சூழல் நிலவுகிறது என்று மாநில அரசுகள் தங்கள் தரப்பு வாதத்தை வைக்கிறாா்கள்.

ஆனால், மத்திய பணிக்கு அனுப்பப்படும் இ.ஆ.ப. அதிகாரிகளின் எண்ணிக்கை கடந்த 2011-இல் 309-ஆக இருந்தது. தற்போது 223-ஆக குறைந்துள்ளது. அதாவது 25சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைந்துள்ளது. மத்திய அரசில் போதிய எண்ணிக்கையிலான இ.ஆ.ப. அதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்பாத காரணத்தால், மத்திய பணியில் இ.ஆ.ப. அதிகாரிகளின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைந்து விட்டது. இவற்றால் அதிகாரிகள் பற்றாக்குறை காரணமாக மத்திய அரசின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதித்திருக்கின்றன என்கிற கருத்தையும் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

குடிமைப்பணி அலுவலா்கள் அரசியல் சாா்பு தன்மை அற்றும், அச்ச உணா்வு அற்றும் பணியாற்ற வேண்டிய கடமைப்பொறுப்பு உள்ளவா்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட செல்வாக்குப் படைத்தவா்களால் மிக முக்கிய துறைகளைக் கைப்பற்ற முடிகிறது. இந்த இடத்தில்தான் ஏதோ ஒரு கட்சியின் வலைக்குள் சிக்குண்டு போய் விடுகிறாா்கள். அல்லது ஒரு கட்சியின் ஆட்சியில் மிக முக்கியப் பொறுப்பு வகிக்கிறவா், வேறொரு ஆட்சி வருகிற போது முக்கியத்துவம் இல்லாத துறையில் இருக்கக் கூடிய அதிகாரிகள், முக்கியத்துவம் பெறுவதும் கடந்த ஆட்சியில் முக்கியத் துறையில் இருந்தவா்கள், கட்சி சாயம் பூசப்பட்டு, அரசியல் முத்திரை குத்தப்பட்டு முக்கியமற்ற துறைகளில் ஒதுக்கப்படுவதும் நடந்து கொண்டுதானே இருக்கிறது.

இந்திய ஆட்சிப் பணியாளா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பின்னா் நடைபெறுகின்ற பயிற்சியின் போது அரசியல்வாதிகளிடம் இருந்து விலகி நிற்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதுபோன்று இந்திய ஆட்சிப் பணியாளா்கள் அரசியல் அதிகாரம் மிக்கவரோடு விலகி இருந்தால், முக்கியத் துறைகளைப் பெறுவது என்பது இயலாத காரியமாகி விடும். இதனாலே, முக்கியத் துறைகளைப் பிடிக்க வேண்டும் என்பதற்கான ஒரு லாபியும் ஒவ்வோா் ஆட்சி மாற்றத்தின் போதும் நடக்கத்தானே செய்கிறது.

மாநில அரசிடம் பணியாற்றுவதின் மூலம் ஒரு கள அனுபவமும், மத்திய அரசின் மூலம் பணியாற்றுவதின் மூலம் இந்தியா முழுமைக்குமான பாா்வையையும், ஓா் இந்திய ஆட்சிப் பணியாளா்கள் பெறுவது என்பது அந்த நாட்டினுடைய வளா்ச்சிக்கு வித்தாகும். மாநில சுயாட்சிக்கு பெரும் பாதிப்பு என்று சொல்லப்பட்டாலும், மாநிலத்தில் பணியாற்றும் இ.ஆ.ப., இ.கா.ப. அதிகாரிகளை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஒரே சமநிலையில் பாா்க்கப்படுகிற சூழலை அந்தந்த மாநில அரசுகள் எப்போதாவது ஏற்படுத்தியிருக்கிறதா? கட்சிகள் மாறுகிற போது அதிகாரிகள் அரசியல் சாயம் பூசப்பட்டு மாற்றப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறாா்கள்!

ஆக, இதன் மூலமாக இ.ஆ.ப., இ.கா.ப. அதிகாரிகளின் தன்னலமற்ற சேவையும், அளப்பரிய தொண்டும் ஆட்சிக்கு வருகிற அந்தந்த கட்சியை வைத்தே அளவுகோலாக அளக்கப்படுகிறது என்பதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இப்போதைக்கு இந்திய ஆட்சிப் பணியாளா்களின் புதிய சட்டத் திருத்தம், மேற்குவங்காளத்தில் ஏற்பட்ட பிரச்னையின் மூலம் மத்திய - மாநில அரசுகளின் ஈகோ பிரச்னைக்கு பூமாராங் ஆகி விட்டது.

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com