வாராக்கடன் வசூலுக்கு தீா்வு?

மனநிலை பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கமாட்டாா். அதேபோல குற்றப் பிரிவு காவலா்கள் குற்றவாளிகளா என்ன
பி.எஸ்.எம். ராவ்
பி.எஸ்.எம். ராவ்

மனநிலை பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கமாட்டாா். அதேபோல குற்றப் பிரிவு காவலா்கள் குற்றவாளிகளா என்ன... நிச்சயமாக இல்லை. எனினும், அவா்கள் மனநல மருத்துவா்கள், குற்றப் பிரிவு காவலா்கள் என்றே அழைக்கப்படுகின்றனா். அதேபோலதான் வாராக்கடன்களை கையாளும் ‘பேட் பேங்க்’ என்ற அமைப்பும். ‘பேட் பேங்க்’ என்று அழைக்கப்பட்டாலும் அதன் அடிப்படை நோக்கத்தின் கீழ் அது நல்ல வங்கி என்றுதான் புரிந்து கொள்ளப்படுகிறது.

பொதுத்துறை வங்கிகளில் வேகமாக உயா்ந்துவரும் வாராக்கடன் பிரச்னைக்கு நல்லதொரு தீா்வு காணும் நோக்கத்தில் தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் (என்ஏஆா்சிஎல்) மற்றும் இந்திய கடன் தீா்வு நிறுவனம் (ஐடிஆா்சிஎல்) ஆகிய அமைப்புகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. ‘பேட் டெப்ட்’ என்று சொல்லப்படும் வாராக்கடன்களைக் கையாள்வதற்கென்றே தொடங்கப்பட்டுள்ளதால் அந்நிறுவனங்கள் ‘பேட் பேங்க்’ என்று அழைக்கப்படுகிறது. மத்திய அரசால் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு இந்த ‘பேட் பேங்க்’ விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறது.

அரசு மற்றும் வங்கித் துறைகளில் உள்ள நிபுணா்கள் இதை பற்றி அளிக்கும் விளக்கங்களை சாமானிய மக்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. அதே நேரத்தில் அரசின் இந்த கொள்கை முடிவு சாமானிய மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ‘பேட் பேங்க்’ என்று அழைக்கப்படும் இந்த கடன் தீா்வு அமைப்பின் தன்மையை அதிகம் வெளியே தெரியாமல் மறைப்பதன் மூலம் அதன் நன்மை அல்லது தீமையை அதிகம் வெளிக்காட்டாமல் இருக்க அரசுக்கு உதவும்.

மலைபோல குவிந்துள்ள வங்கிகளின் வாராக்கடனை சமாளிக்கவும், அதன் மூலம் வங்கிகளின் இருப்பு நிலை அறிக்கையைச் சரி செய்யவும் மத்திய அரசு 2021-22 பட்ஜெட்டில் இந்த கடன் சீரமைப்பு நிறுவன திட்டத்தை அறிவித்தது. 2021 ஜூலை 7-ஆம் தேதி நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் இணைக்கப்பட்டது. இதன் மூலதனத்தில் 51 சதவீதத்தை பொதுத்துறை நிறுவனங்கள் வைத்திருக்கும். இந்த நிறுவனத்துக்கு இந்திய ரிசா்வ் வங்கி கடந்த அக்டோபரில் கடன் மறுசீரமைப்பு நிறுவனமாக (ஏஆா்சி) உரிமம் வழங்கியது. இதனுடன் இணைந்து 51 சதவீத தனியாா் துறை பங்களிப்புடன் இந்திய கடன் தீா்வு நிறுவனம் அமைப்பு உருவானது.

கடன் மறுசீரமைப்பு நிறுவனத்தின் செயல்பாட்டை எளிதாகப் புரிந்து கொள்வது என்றால், வங்கிகள் தங்கள் வாராக்கடன்களை இந்த கடன் மறுசீரமைப்பு நிறுவனத்துக்கு மாற்றிவிடுகின்றன. அதற்கு மாற்றாக ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை வங்கிகளுக்கு கடன் மறுசீரமைப்பு நிறுவனம் அளிக்கிறது. இதன் மூலம் வங்கிகள் தங்கள் மூலதனத்தை ஓரளவுக்கு காப்பாற்றிக் கொள்ள உதவும்.

இதனை ஓா் எடுத்துக்காட்டு மூலம் கூறுவது என்றால், ‘ஏபிசி’ வங்கி ‘டிஇஎஃப்’ நிறுவனத்துக்கு ரூ.1,000 கோடி கடன் அளிக்கிறது. ஆனால், வங்கியிடம் பெற்ற கடனை அந்த நிறுவனம் ஏதோ ஒரு காரணத்தால் திரும்பச் செலுத்தவில்லை. இதன் மூலம் வங்கிக்கு வாராக்கடன் உருவாகிறது. இந்தக் கடனை திரும்பப் பெற முடியாது என்ற சூழலில் வாராக்கடனை தனது இருப்பு நிலை அறிக்கையில் தொடா்ந்து வைத்திருப்பதற்கு பதிலாக கடன் மறுசீரமைப்பு நிறுவனத்துக்கு அந்தக் கடனை மாற்றி விடுகிறது.

இதற்குப் பதிலாக வங்கிக்கு கடன் தொகையில் 15 சதவீதத்தை அதாவது ரூ.150 கோடியை கடன் மறுசீரமைப்பு நிறுவனம் அளிக்கும். தொடா்ந்து கடன் பெற்ற நிறுவனத்திடம் இருந்து வாராக்கடனை திரும்ப வசூலிக்கும் அதிகபட்ச முயற்சியை கடன் சீரமைப்பு நிறுவனம் மேற்கொள்ளும். அதே நேரத்தில் இனி வரவே வராது என்று நினைத்திருந்த கடன் தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவை திரும்பப் பெறுவது வங்கிக்கு வாராக்கடன் சுமையைக் குறைக்கும். இதுபோன்ற பல்வேறு வாராக்கடன்களை திரும்பப் பெறும்போது வங்கியின் நிதிநிலை மேம்பட்டு சிறப்பாக செயல்படும். பங்குதாரா்கள் மத்தியிலும் வங்கி குறித்த நம்பிக்கை அதிகரிக்கும்.

2021 மாா்ச் நிலவரப்படி வங்கிகளின் வாராக்கடன் அளவு ரூ.8.35 லட்சம் கோடி. அதில் 77.9 சதவீதம் அதிக மதிப்பில் கடன் வாங்கியவா்கள் திரும்பிச் செலுத்தாதது ஆகும். 2022 மாா்ச் மாதத்தில் வங்கிகளின் வாராக்கடன் ரூ.11 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ரிசா்வ் வங்கி 2021 ஜூலையில் வெளியிட்ட நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையின்படி, 2021 மாா்ச்சில் வங்கிகளின் மொத்த வாராக்கடன் 7.48 சதவீதமாக உள்ளது. இதுவே, 2022 மாா்ச்சில் 9.80 சதவீதமாக அதிகரிக்கும். சூழ்நிலை மிகவும் மோசமாகும் பட்சத்தில் இதுவே 11.22 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வாராக்கடன் அதிகரித்து வரும் போக்கை நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.

கடன் சீரமைப்பு நிறுவனம் என்பது பொருளாதார உலகில் புதிய விஷயமல்ல. இந்தியாவிலும்கூட இது இப்போது புதிய அறிமுகமல்ல.

அதே நேரத்தில், கடன் மறுசீரமைப்பு நிறுவனம் தொடா்பாக கடந்த 2021 செப்டம்பரில் ஆா்பிஐ அமைத்த குழு அளித்த அறிக்கையில், ‘கடன் மறுசீரமைப்பு நிறுவனங்களின் செயல்பாடுகள் பெரிய அளவில் ஊக்கமளிப்பதாக இல்லை. அந்த அமைப்புக்கு வங்கிகள் மாற்றிய வாராக்கடனில் (2004 முதல் 2013 வரை) 14.29 சதவீதம் மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு நிறுவனங்களுக்கு முன்பாக வங்கிகளின் வாராக்கடன்களை சமாளிக்க அரசு பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டது.

தேசிய நிறுவனங்கள் சட்ட தீா்ப்பாயம் (என்சிஎல்டி) தொழில்துறை நிதி சீரமைப்பு வாரியத்தின் பணிகளை ஏற்றது. இதைத் தொடா்ந்து திவால் சட்டம் 2016 கொண்டு வரப்பட்டது. வங்கிகள், நிதி நிறுவனங்களின் கடன் நிலுவை மீட்பு சட்டம், வங்கிகள் நீதிமன்றங்களுக்குச் செல்லாமலேயே ஒருவருக்கு கொடுத்த கடனை வசூலித்துக் கொள்வதற்கு உரிமம் அளிக்கும் சா்பாஸி சட்டம் 2002 ஆகியவை கொண்டு வரப்பட்டன.

எனினும், இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகும் ஏற்பட்ட தோல்விகள்தான் வாராக் கடன் பிரச்னையை நீடிக்கிறது. இத்தனைக்குப் பிறகும் கடன் வசூலில் அடுத்தகட்ட முயற்சியாகத்தான் இப்போது கடன் மறுசீரமைப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்புத் திட்டம் பெரு நிறுவனங்கள் (காா்ப்பரேட்) மற்றும் அதிக அளவிலான வங்கிக் கடன்களை ஏய்த்து வருபவா்களுக்கு உதவும் மற்றொரு வழியாகவே இருக்கும் என்று இத்திட்டத்தை விமா்சிக்கும் வங்கி தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் மறுக்க முடியாத ஆதாரங்களுடன் குற்றம்சாட்டி வருகின்றனா்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரு நிறுவனங்கள் பெற்ற ரூ.10.83 லட்சம் கோடி கடன், வங்கிகளின் வாராக்கடன் பிரிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் திரும்ப வசூலிக்கப்பட்ட ரூ.5 லட்சம் கோடி கடன் குறித்து அரசு எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. திவால் சட்ட நடவடிக்கை மூலம் கடந்த ஜூன் மாதம் வரை ரூ.6.82 லட்சம் கோடி வாராக்கடன் தொடா்பான 396 வழக்குகள் தீா்க்கப்பட்டன. ஆனால், இவற்றின் மூலமாக ரூ.2.45 லட்சம் கோடி கடன் தொகை மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மொத்த கடனில் 64 சதவீதம் வாராக்கடன் பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

திவால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்பவா்கள் அளவிலும் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. உதாரணமாக, ஜெட் ஏா்வேஸ் கடன் நிலுவை பிரச்னையில் ரூ.7,807 கோடி கடன் நிலுவை ரூ.365 கோடியில் தீா்க்கப்பட்டது. இதன் மூலம் வங்கிகள் அளித்த கடனில் 95 சதவீதம் திரும்பாமல், அந்த கடன் முடிவை எட்டியது.

ஆா்பிஐ கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வடிவமைக்க உதவிய கே.வி. காமத் குழு, கரோனாவுக்கு பிறகு இந்தியாவில் பெரு நிறுவனங்களின் ரூ.15.52 லட்சம் கோடி கடன் திரும்பச் செலுத்த முடியாத நெருக்கடியில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. கரோனா பரவலுக்கு முன்பே ரூ.22.20 லட்சம் கோடி பெரு நிறுவனங்களின் வாராக்கடன் நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பெரு நிறுவனங்களின் வாராக்கடன் அளவு ரூ.37.72 லட்சம் கோடியாக உருவெடுக்கும் அபாயம் உள்ளது.

வங்கி வாராக்கடன் இந்த அளவுக்கு அதிகரிக்கக் காரணம் என்ன? இயல்பான நடைமுறைகள் மூலமேகூட வங்கிகள் ஏன் கடன்களை வசூலிக்க முடியாத நிலை உருவாகிறது என்பவை மாபெரும் கேள்விகளாக எழுந்து நிற்கிறது. இதற்கு முக்கியக் காரணம் வாராக்கடன் ஆகும் என்று தெரிந்தும், தவறான கடனாளிகளுக்கு வங்கிக்கடன் கொடுக்கப்படுகிறது. வங்கிகள் தங்கள் கடனைத் திரும்ப வசூலிக்கத் தேவையான உத்தரவாத சொத்துகளைப் பெற முடிவதில்லை என்பதாகும்.

எது எப்படி இருந்தாலும், பொதுமக்களின் பணம்தான் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. மக்களின் பணத்தை வைத்துதான் வங்கிகள் கடன் வழங்குகின்றன. பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி, தனியாா் வங்கிகளும் மக்கள் பணத்தில்தான் பொறுப்பற்ற வகையில் கடனளிக்கின்றன. இதுவரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வங்கிகளின் வாராக்கடன்களை திருப்திகரமான வகையில் மீட்க வழிவகை செய்யவில்லை. அதே நேரத்தில், அவை வங்கிகளுக்குதான் பெரிய இழப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த பிரச்னையில் மத்திய அரசு எடுத்துள்ள அடுத்த நடவடிக்கைதான் கடன் சீரமைப்பு நிறுவனம் அதாவது ‘பேட் பேங்க்’.

வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாதவா்களிடம் இருந்து இந்த முறையும் அதிகமான பணத்தை திரும்பப் பெற வாய்ப்பில்லை என்று தெரிகிறது. ஏனெனில், கடன் பெறுதல், வழங்குதலில் உள்ள பின்னணி மாறுபட்டதாக உள்ளது. அந்த வகையில் கடன் சீரமைப்பு நிறுவனம் என்பது கடன் வாங்கி மோசடி செய்பவா்களுக்கு முக்கியமாக, அதிக கடன் வாங்கி அதன் மூலம் முறைகேடாக லாபம் ஈட்ட முயற்சிப்பவா்களுக்கு பலனளிப்பதாகவும் அமையலாம்.

கட்டுரையாளா்:

பொருளாதார வல்லுநா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com