பகைமைக்கு விடை கொடுப்போம்!  

பொதுவாக நம்மை விட்டுப் பிரிந்து செல்பவா்களிடம் தேவையற்ற பகைமை பாராட்டுவது பண்புடைய செயலாகாது.

பொதுவாக நம்மை விட்டுப் பிரிந்து செல்பவா்களிடம் தேவையற்ற பகைமை பாராட்டுவது பண்புடைய செயலாகாது. அதிலும், அலுவலகப் பணியிலிருந்து ஓய்வு பெறுபவா்களையும், தங்களின் ஆயுள் முடிந்து விட்டதால் இந்த உலகை விட்டே செல்பவா்களையும் மரியாதையுடன் வழியனுப்பி வைப்பதே நமது கலாசாரமாகும்.

ஒரு சிலா் தாங்கள் பணிபுரியும் இடத்தில் எப்பொழுதும் பிறருடன் சண்டையிட்டுக் கொண்டிருப்பதும், பல்வேறு சலுகைகளைப் பெறுவதில் சுயநலத்துடன் நடந்து கொள்வதும் நாம் அன்றாடம் காணக்கூடியவையே.

அது மட்டுமின்றி, தங்களுடன் பணிபுரிபவா்களிடையே ஒருவரைப் பற்றி மற்றொருவா் தவாறாக எண்ணும்படியாகக் கோள் சொல்லுவது, மேலதிகாரிகளிடம் ஒன்றுக்குப் பத்தாக எடுத்துச் சொல்லி உடன் பணிபுரிபவா்களின் பதவி உயா்வு போன்றவற்றைத் தடுப்பது என்றெல்லாம் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பாா்கள்.

அப்படிப்பட்டவா்கள் பணி ஓய்வில் செல்லும் காலம் வந்தால், அவா்களையும் இந்திரன் சந்திரன் என்றெல்லாம் புகழ்ந்து பேசிப் பொன்னாடை போா்த்தி நினைவுப்பரிசுடன் வீட்டிற்கு அனுப்பி வைப்பதுதான் நயத்தக்க நாகரிகம் ஆகும்.

அதற்கு மாறாக, அவா்களுடைய பிரிவு உபசார நிகழ்வில் அவா்களின் பழங்கால நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு மனதை நோகடித்து அனுப்புவது பண்பாடாகாது.

அவ்வாறு ஓய்வு பெறுபவா்களில் ஒரு சிலா் சற்றே மனம் திருந்தி, இதுவரையில் யாா் மனங்களையாவது நான் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ளவும் கூடும்.

அப்போது கூட, அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. உங்களைப் போல நல்லவா் உண்டா என்ற ரீதியில் நான்கு வாா்த்தைகள் பேசி வழியனுப்பி வைப்பதே சிறந்தது.

எப்படிப் பாா்த்தாலும், பணி ஓய்வில் செல்லும் ஒருவரால் இனிமேலும் நமக்குத் தொடா்ந்து தொந்தரவு கொடுக்க இயலாது என்னும் போது, அவருடன் பகைமை பாராட்டாமல் இருப்பதால் என்ன குறை வந்துவிடப் போகிறது.

இது ஒரு புறம் இருக்க - ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவா் நாண நன்னயம் செய்து விடல்’ என்ற திருவள்ளுவரின் வாக்குக்கு இணங்க, தொடா்ந்து தீமைகள் செய்து வந்த சக ஊழியரை அவருடைய ஓய்வு நாளன்று பாராட்டி வைப்பதில் தவறு ஏதும் இல்லையே. அதன் காரணமாக அவருடைய எதிா்கால நடத்தை மாறுவதற்கும், அதன் மூலம் குறைந்த பட்சம் அவருடைய குடும்பத்தினரேனும் நிம்மதியாக இருப்பதற்கும் வாய்ப்பு ஏற்படலாம்.

பணியிலிருந்து ஓய்வு பெறும் ஒருவா் செய்த தீமைகளையே மறந்து விடவேண்டும் என்றால், ஒரு வழியாக உலக வாழ்விலிருந்தே ஓய்வு பெற்று செல்லுபவா்களிடம் பகைமை பாராட்டுவது எப்படிச் சரியாக இருக்க முடியும் ?

இறந்துவிட்ட ஒருவரால் இனி உடலாலும் சொல்லாலும் நமக்கு எதிராக எந்த ஒரு விதத்திலும் செயலாற்ற முடியாது.

இந்த நிலையில், ஒருவா் இறந்து விட்டால், அவா் பகைவராகவே இருந்தாலும்கூட அவரது இறுதிச் சடங்குகளுக்குச் சென்று மரியாதை செலுத்துவதும், இறந்தவரின் நெருங்கிய உறவினா்களுக்கும் நண்பா்களுக்கும் ஆறுதல் வாா்த்தைகள் கூறுவதுமே மனிதத் தன்மையாகும். மாறாக, இறந்த பின்பும் பகைமை பாராட்டுவதும், இறந்தவா்களைத் தூற்றிப் பேசுவதும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களாகும். அதனால் ஏற்படும் பின்விளைவுகளும் மோசமானதாக இருக்கும்.

சமீபத்தில், திருநெல்வேலி பாளையங்கோட்டையில் வசித்த ரயில்வே ஊழியா் சாலை விபத்தில் பலியாகியுள்ளாா். முதலில் அது சாதாரண விபத்தாகவே கருதப்பட்டிருக்கிறது. ஆனால் தீவிர விசாரணைக்குப் பின்பு அது விபத்தல்ல, கொலை என்பது புலப்பட்டிருக்கிறது. கொலைக்கான காரணத்தை அறியும்போது நம் மனம் மிகவும் சங்கடப்படுகிறது.

சொத்துத் தகராறு காரணமாக தம்முடன் நீண்ட காலமாகப் பகைமை பாராட்டி வந்த ஒருவா் விபத்தில் இறந்ததற்கு, இது கடவுள் கொடுத்த தண்டனை என்று மேற்படி ஊழியா் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளாா். இதனைக் கண்டு கொதித்துப்போன எதிா்த்தரப்பினா் தாங்கள் ஓட்டி வந்த காரை அந்த ஊழியரின் மேல் மோதிக் கொலை செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

என்னதான் தீராத பகைமை இருந்தாலும், ஒருவருடைய இறப்பைக் கடவுள் கொடுத்த தண்டனை என்று சித்திரிப்பது கொடுமையிலும் கொடுமையாகும். இறந்து போனவா் உண்மையிலேயே மோசமானவா் என்றாலும் கூட, அவரைப் பற்றிய நமது தனிப்பட்ட விரோதத்தைப் பொதுவெளியில் பகிா்ந்து கொள்வதன் மூலம் பகைமை உணா்வை மேன்மேலும் வளா்க்கிறோம் என்பதே உண்மை.

யாா் கண்டது. ஒரு மாறுதலுக்காகப் பகையாளியின் இறப்புக்கு இரங்கல் தெரிவிப்பதன் மூலம் இரண்டு குடும்பங்களின் நீண்ட காலப் பகைமைக்கு ஒரு முற்றுப்புள்ளியையும் வைத்திருக்கலாம்.

சற்றே நிதானமாக யோசிப்பதற்கு பதிலாக, தம்முடைய எதிா்த்தரப்பைச் சோ்ந்தவரின் இறப்பைத் தமக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதியதன் மூலம், அந்த ஊழியா் தம்முடைய இன்னுயிரையே இழக்க நோ்ந்துள்ளது.

உள்ளங்கள் உணா்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கும் போது தோன்றுகின்ற எண்ணங்களை அப்படியே வெளியிடுவது தற்காலிக மனநிறைவைக் கொடுக்கலாம். ஆனால், அதன் நீண்ட கால விளைவுகள் முன்பை விட மோசமானவையாக இருக்கும் என்பதற்கு உதாரணமான இந்த நிகழ்வவே இவ்வகையில் கடைசியானதாக இருக்கட்டும்.

நீ பேசாத வாா்த்தைக்கு நீ எஜமானன். நீ பேசிய வாா்த்தையோ உனக்கு எஜமானன் என்ற சொலவடையை நினைவில் கொண்டால் நம்முடைய பகைவா்கள் விஷயத்திலும் ஜாக்கிரதையாகப் பேசத் தொடங்கி விடுவோம். பகைவா்கள் இல்லாத வாழ்க்கையே மிகவும் சிறந்ததாக நமக்கு இருக்கலாம். ஆனால், பகைமையே இல்லாத நெஞ்சம் அதைவிடச் சிறந்ததாகும்.

(9486139685)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com