மாணவர்கள் இழந்த இரண்டு ஆண்டுகள்

பள்ளி, கல்லூரிகள் இரண்டாண்டு மூடியிருந்ததால், பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படவில்லை; இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டன
மாணவர்கள் இழந்த இரண்டு ஆண்டுகள்
மாணவர்கள் இழந்த இரண்டு ஆண்டுகள்

பள்ளி, கல்லூரிகள் இரண்டாண்டு மூடியிருந்ததால், பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படவில்லை; இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டன என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்ளலாம். அவ்வளவே. வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்துவது, போதிப்பதுதான் கல்வி.

எழுதவும், பேசவும், வாசிக்கவும், மதிப்பெண் பெறவும் உதவுவது மட்டுமே கல்விக்கூடங்களின் பணி அல்ல. கல்விக் கூடங்கள் என்பது உயர்ந்து நிற்கும் கட்டடங்களோ, வகுப்பறைகளோ, கரும்பலகைகளோ, ஆய்வுக் கூடங்களோ, நூலகமோ, நவீன வசதியான உள்கட்டமைப்புகளோ, விளையாட்டுத் திடலோ மட்டும் கிடையாது. அங்கே கல் சிற்பமாகிறது. களிமண் உருவம் பெறுகிறது. ஆளுமைகள் உருவாகின்றன. 

தரிசு நிலங்களாக உள்ளே நுழைபவர்கள் செழிப்பான சோலைகளாக, தோப்புகளாக, கழனிகளாக மாறும் இடம் கல்விக் கூடங்கள். ஆக இணைய வழிக் கற்றலை ஒரு போதும் வகுப்பறை கல்விக்கு ஈடாகக் கருத முடியாது.
இரண்டாண்டு கால விடுமுறையைப் பிள்ளைகள் கொண்டாட்டமாக எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், அவர்கள் இழந்தது எவ்வளவு என்று அவர்களுக்குப் புரியவில்லை. பள்ளி / கல்லூரி வாழ்க்கை என்பது ஆனந்தத்தின் உறைவிடம். பள்ளிகளை எடுத்துக் கொண்டால் பல பள்ளிகளில் காலையில் எல்லா மாணவர்களும் இறைவணக்கத்திற்காக ஒன்று கூடுவார்கள். கடவுள் வாழ்த்து பாடிய பின்னர் சில பள்ளிகளில் "இன்று ஒரு முக்கிய செய்தி' என்ற பிரிவில் செய்தித்தாளில் அன்றைக்கு வந்த முக்கிய செய்தி ஒரு மாணவனால் வாசிக்கப்படும். "தினசரி சிந்தனை' என்று ஒரு நல்ல கருத்து கூறப்படும். வரிசை வரிசையாக, வகுப்பு வாரியாக பிள்ளைகள் நிற்பதே ஓர் அழகு. 

மாவட்ட அளவிலோ, மாநில அளவிலோ நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பரிசுகளை வென்று வந்துள்ள மாணவர்களை காலைக் கூட்டத்தின் போது அழைத்து அப்பரிசுகளைக் கொடுப்பது வழக்கம். அன்று முழுவதும் அந்த மாணவர்களின் கால்கள் தரையில் படாது. களிப்பின் உச்சத்தில் இருப்பார்கள். ஏனைய பிற மாணவர்களுக்கும் இது ஓர் உந்து சக்தியாக இருக்கும். எல்லோரும் கரவொலி எழுப்ப, பரிசைப் பெறுவது ஓர் இனிய அனுபவம்.

அடுத்து வகுப்பறை சூழல் முக்கியம். முதல் பெஞ்சில் அமர ஒரு சில பிள்ளைகள் விரும்பும், முதல் வரிசையில் உட்கார்ந்தால் ஆசிரியர்களின் கண் பார்வையிலேயே இருக்க வேண்டும். பாடத்தைக் கவனிக்காமல் வேறு எந்த சில்மிஷமும் பண்ண முடியாது. கல்லூரி வரை அவர்கள் முதல் வரிசையில் தான் அமர்வார்கள். கடைசி பெஞ்ச் அமர்க்களம் செய்வார்கள்; அதகளம் செய்வார்கள். அதுவும் ரசிக்கும் படி இருக்கும்.
பள்ளி, கல்லூரிகளில் பாடங்கள் நடத்துவதோடு நின்று விடுவதில்லை. வருடம் முழுவதும் பல்வேறு பாடத்திட்டம் சாராத செயல்பாடுகள் நடந்து கொண்டே இருக்கும். அவற்றைப் புறப்பாட நடவடிக்கை என்றும் சொல்லலாம். பாடங்கள், தேர்வு என்று மட்டுமே இருந்தால் மாணவர்களுக்கு சலிப்புத் தட்டி விடும். 
ஒவ்வொரு குழந்தையிடமும் பல்வேறு தனித் திறமைகள் ஒளிந்து கிடக்கும். அத்தகைய திறமைகளை பள்ளிகளும், கல்லூரிகளும் வெளிக் கொணர்கின்றன. படிப்பு முடிந்து வேலைக்குப் போய் விட்டால் அவர்களுடைய திறமைகளை வெளிக்காட்ட எந்தத் தளமும் இருக்காது. கற்கும் காலம் - வாழ்வின் வசந்த காலம். பத்தாம் வகுப்பில் இருந்து மேனிலைப் பள்ளிக்கு வந்தவர்களும், மேனிலைப் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேர இருந்தவர்களும் பாவம். முக்கியமான இரண்டு வருடங்கள் வீணாகி விட்டன. அதேபோல இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கும் பேரிழப்பு.

ஆண்டு தோறும் விளையாட்டு விழா நடத்தப்படும். அதற்காகப்  பல நாட்கள் முன்பிருந்தே போட்டிகள் நடத்தப்படும். மாணவர்களைப் பல அணிகளாகப் பிரித்திருப்பார்கள். ஒவ்வொரு அணிக்கும் நாம்,  தான் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி இருக்கும். உடற்பயிற்சி ஆசிரியருக்கு அப்போது கிடைக்கும் முக்கியத்துவம் அலாதி. 


விழா அன்று ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டப் பந்தயம், ஈட்டி எறிதல், உயரத் தாண்டுதல் போன்ற விளையாட்டுக்களின் இறுதிச் சுற்று மட்டும் நடக்கும். சிறப்பு விருந்தினர் முன்னிலையில் நடத்துவார்கள். கூச்சல், ஆரவாரம், கரவொலி, சீழ்க்கை என சப்தங்கள் விண்ணைப் பிளக்கும். வெற்றிக் கோப்பைகளுடனும், மனம் கொள்ளா மகிழ்ச்சியுடனும் விளையாட்டு வீரர்கள் வலம் வருவார்கள். படிப்பில் வெகு சுமாராக இருக்கும் மாணவர்கள் அன்று கதாநாயகர்கள், புத்தகப் புழுக்கள் ஓர் ஓரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்.

அடுத்தது அனைவரும் ஆர்ப்பாட்டத்துடன் கொண்டாடுவது ஆண்டு விழா. இதற்கான தயாரிப்புகளும் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கப்பட்டு விடும். கலை நிகழ்ச்சிகள் தான் அனைவரையும் ஈர்க்கும் என்பதால் மாணவ / மாணவியர் பாட்டு, தனி நபர் நடனம், குழு நடனம். நாடகம் என பலவற்றிலும் பயிற்சி செய்வார்கள். விழா அன்று பள்ளிகளும் கல்லூரிகளும் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். வண்ண உடைகளும், அலங்கார ஒப்பனைகளும், விண்ணின் தேவதைகள் மண்ணில் தோன்றியதைப் போல இருக்கும். எல்லாப் பிள்ளைகளுமே அழகாய் இருப்பார்கள். 

பன்முகத் திறமையாளர்கள் அந்த அரங்கில் அடையாளம் காணப்படுவார்கள். பள்ளி, கல்லூரி வாழ்க்கையை வறட்சி தட்டாமல் பசுமையாக மாற்றுபவை கல்லூரி விழாக்கள். 

இறுதி ஆண்டு மாணவர்களுக்காகப் பிரிவு உபசார விழா நடைபெறும். மிகவும் நெகிழ்ச்சியான தருணம். ஒன்றாக இருந்த பிள்ளைகள் வாழ்க்கையைத் தேடி வெவ்வேறு திசையில் பயணிப்பார்கள். எல்லோரும் நட்புடனும், உரிமையுடனும் பழகிக் கழித்த நாட்கள் கனவாகிப் போகும். இனி வேலை, அல்லது மேற் படிப்பு என அவரவர் பாதை அவரவர்க்கு என ஆகிவிடும். மனங்கள் கனத்துப் போக, விழிகள் கண்ணீரின் கனம் தாங்காமல் கன்னங்களில் வழிய விடும். எல்லோரும் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். அதே போல விடுதி மாணவர்களும் விடுதி விழா கொண்டாடுவார்கள். பலமான விருந்து, வேடிக்கைகள் என கலக்குவார்கள். ஒருபெரிய விழாவை மாணவர்களே முன்னின்று நடத்திக் காட்டுவார்கள். இந்த சந்தோஷங்கள் எதுவுமே கடந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர்களுக்குக் கிட்டவில்லை.
தேர்வுகளும் ஆன் லைனில் என்ற போது மாணவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால், உண்மையில் இது மகிழ்ச்சி தராது. கடின உழைப்பிற்குப் பின் கிடைக்கும் வெற்றியே அலாதியானது. அது தரும், சுகமும், மனநிறைவும் ஒப்பற்றது. 

அனைத்துத் தேர்வுகளையும் முடித்த பின்னர் மனம் துள்ளும், தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருப்பதும் கூட ஒரு சுகம். சிறந்த மதிப்பெண் பெற்ற செய்தி கிடைத்தவுடன் மனதில் மத்தாப்பூ மலரும். சிகரத்தின் உச்சியை அடைந்தது போல் இருக்கும். "நாம் சாதித்து விட்டோம்' என நம்மை நாமே தட்டிக் கொடுத்துக் கொள்வோம். நெஞ்சு பூரிப்பால் விம்மும், இதற்காக நாம் பட்ட சிரமங்கள், போட்ட உழைப்பு, உறங்கா இரவுகள் எல்லாம் மனதில் நிழற்படமாய் ஓடும். மனதும் அதை மீண்டும் மீண்டும் அசை போட்டு மகிழும். உண்மையான மகிழ்ச்சி வெற்றி பெறுவதில் மட்டும் அடங்காது. அதற்கான தயாரிப்புகளிலும், முனைப்புகளிலும், முயற்சிகளிலும் தான் உள்ளது. சுவாசத்தை உள்ளே இழுத்து மீண்டும் அதை வெளியேற்றி அந்தப் பரவசத்தை அனுபவிப்போம். தேர்வில்லா தேர்ச்சியில் என்ன மகிழ்ச்சி இருக்கிறது?
ஒரு போட்டி என்றால் நிறைய பேர் அதில் பங்கெடுக்க வேண்டும். கடுமையான போட்டியில் வென்றால் அது வெற்றி. அப்படி  இல்லாமல் கலந்து கொண்ட அனைவருமே வெற்றியாளர்கள் என்றால், அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது?

சிற்றூரில் மேனிலைப் பள்ளிப் படிப்பை முடித்து பெரிய நகரத்தின் மிகச் சிறந்த கல்லூரியில் சேர்ந்த சில மாணவர்கள் விடுதியில் தான் தங்க வேண்டும். திரைப்படங்களில் பார்த்தும், நண்பர்கள் மூலம் கேட்டும் விடுதி வாழ்க்கையை ஒரு கனவாக எண்ணி ஏங்கியிருந்தார்கள். ஏழ்மை நிலையில், படிக்கும் சூழல் இல்லாத வீட்டு மாணவர்களுக்கு விடுதியில் நன்கு படிக்க முடியும். நூலகத்தில் நிறைய நேரம் செலவழிக்கலாம். கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல முதலில் தவித்தவர்கள் சீனியர்களால் நெறிப்படுத்த, உதவ, வெகு விரைவில் புதிய சூழலுக்குப் பழகிக் கொள்வார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நாகரிகத்தைக் கற்றுக் கொண்டு, தாழ்வு மனப்பான்மை நீங்கி நம்பிக்கையுடன் முன்னேற்றப் பாதையில் அடி எடுத்து வைப்பார்கள். 

ஓரிரு மாதங்களிலேயே அந்த நகரம் அவர்களுக்குப் பழகிப் போய் விடும். ஊருக்குப் போகும் போது ஆளே மாறியிருப்பார்கள். விடுதியில் தங்கி இருப்பதனால் இன்னொரு சாதகமும் உண்டு. பல சீனியர் மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்து கொண்டிருப்பார்கள். இந்திய ஆட்சிப் பணித் தேர்வு பற்றி அதுகாறும் அரிச்சுவடி கூட தெரியாத மாணவர்கள் தற்போது அது குறித்து தெளிவு பெற்று தானும் அதற்கு முயற்சிப்பார்கள். அப்படி வெற்றி பெற்று சாதனை படைத்தவர்களின் பட்டியல் நீளும். இரண்டாண்டு காலம் என்பது நீண்ட நெடிய ஒன்று. இந்த காலத்தைப் பல பிள்ளைகள் பொறுப்பின்றி கழித்து விட்டார்கள். பாலின் ருசி அறியாத பூனைகளாக இருந்து விட்டார்கள். 

தற்போது கல்விக் கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆசிரியர், மாணவர் ஆகிய இரு தரப்பினருக்கும் இது பெரிய சவால். பள்ளங்களை இட்டு நிரப்ப வேண்டும். பொறுப்புடன் இளைய சமுதாயம் நடந்து கொண்டு இழந்ததைச் சரிசெய்ய முயல வேண்டும். உயிர் முக்கியம் என்பதால் தான் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. வேறு வழி இல்லை. இதில் யார் மீதும் தவறில்லை. இனி வரும் ஆண்டுகளில் இழந்ததையெல்லாம் ஈடு செய்ய வேண்டியது மாணவர்கள் கடமை.
 

கட்டுரையாளர்: 

வெ. இன்சுவை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com