மா‌ந்​த‌ர் பெ‌ற்ற‌ மக‌த்​தான‌ வர‌ம்!

தாய்மொழி என்பது உலகில் மாந்தர் மட்டும் பெற்ற மகத்தான வரமாகும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தாய்மொழி என்பது உலகில் மாந்தர் மட்டும் பெற்ற மகத்தான வரமாகும். மனித இனத்தில் உணர்தல், புரிதல் என்ற நிலையிலிருந்து அறிதல் என்ற அடுத்த உயர்நிலைக்குப் புலன்கள் பெற்ற உணர்வுகளைத் தரும் உள்ளுணர்ச்சியின் ஊற்றாகும். எண்ணங்களுக்கும் மனத்தின் ஓட்டத்திற்கும் அடிப்படையாக நாம் நமக்குள்ளேயே பேசிக் கொள்வதற்கும் பயன்படும் உள்ளோசையே, மெüனத்திலும் நம் மனத்தின் குரலாக உருவாகி உள்ளோடிக் கொண்டிருக்கும் என்பர். 

தாயின் வயிற்றுக்குள்ளிருக்கும் குழந்தைக்குத் தாயின் இதய ஒலி கேட்கும்; வெளியே பேசப்படும் மக்களின் மொழி தெரியாவிட்டாலும், அதன் ஒலியினை மூளை உள்வாங்கும்; எதிர்வினையும் செய்யும். அது ஒலியின் அதிர்வினைப் பொறுத்ததாகும். அந்தச் செயல், வெளிவந்த குழந்தையின் ஆழ்மனங்களிலும் பதிவாகியிருக்கும். தாய் முகம் பார்த்துப் புன்னகைத்து வாயசைவை உற்றுநோக்கித் திரும்பத் திரும்பச் செய்து, மழலையாக உதிர்த்துப் பழகும் மொழி உணர்ச்சியுடன் வளர்வதனால் தாய்மொழி வடிவமும் வளர்ச்சியும் பெறுகிறது.

ஒவ்வொரு குழந்தையும் பிறக்கிறபோதே தாய்மொழியின் கூறுகளுடன் பிறப்பதால்தான், எளிதாக தாய்மொழியைக் கற்றுக்கொள்ள முடிகிறது என்று மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி குறிப்பிடுவது இங்கு கருதத்தக்கது.
வாழ்கிற இடத்தின் சூழலுக்கு ஏற்றபடிதான் நம் மொழி அமைகிறது. இந்த மொழி எங்கே மூளையில் அமைகிறது என்றால், யார் குழந்தைக்கு அதிகமான ஒலிக்குறிப்புகளை அறிவிக்கிறார்களோ அவர்களே முதலிடம் பெறுகிறார்கள். காதுதான் மூன்றாவது மாதத்திலேயே செவிப்புலன் கொண்டுள்ளது. கருப்பையிலும் கூட ஒலியைக் கேட்கிற பழக்கம் உள்ளது. திருவள்ளுவர், " செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை' என்று கூறுகிறார்.

நம் மூளையின் வளர்ச்சியில் நடக்கும் மாற்றம் அறிவியல் அதிசயங்களில் ஒன்று. பிறக்கும்போது உள்ள செல் அமைப்புகள் இணைப்புகள், இணைப்புகளின் இடைவெளிகள் ஒன்றுக்கொன்று செய்தி பரவுவதற்கும், பரிமாறிக் கொள்வதற்கும் உருவாகும் புரத மூலக்கூற்று குமிழ்கள், சோடியம் - பொட்டாசியம் அயான்கள் எனப்படும் மூலகப் பகுதிகளின் பாதைகள், வேதியல் - மின்னணு உருவாக்கங்கள், செல்களுக்குள் சென்று சேமித்து வைக்கப்படும் கருத்தாக்கங்கள் எனக் கணக்கிலடங்கா வேதியியல்-பெüதிக செயல்முறைகள் மூளையில் நடந்து கொண்டே இருக்கும்.

மூளையியல் வளர்ச்சி மிக நுட்பமானது. மூளை இணைப்புகளிலும், சுற்றுப்பொறி இயல்புகளிலும் ஏற்படும் மாற்றங்கள், சொல், பொருள் வாக்கியங்களாகப் பதிவாக ஏற்படும் புதுப்புது அமைப்புகள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்காகவும் ஒன்றுக்குள் ஒன்றான சுழலமைவாகவும் நுண்ணிய அளவில் அமைகின்றன. 

அவை கற்றுக்கொள்ளும் பகுதி , நினைவுப் பகுதி என உள்மூளையில் அமைந்துள்ளன. குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே தன்னைச் சுற்றி வரும் ஒலியில் பேச்சு ஒலியையும் மொழியற்ற ஓசைகளையும் பிரித்தறியக் கற்றுக்கொண்டு விடுகிறது. அது கேட்கும் முதல் மொழி, மூளைக்குள் பதியத் தொடங்கி, கருத்துருவாக்கங்களை உருவாக்கித் திரும்பத் திரும்ப அச்சொற்களைக் கேட்பதனாலும் உணர்ந்து கொள்வதாலும், புரிந்து கொள்வதாலும்தான் சொந்தமொழி, அம்மொழியின் ஒலி இவற்றைப் பதிந்து வைத்துக் கொள்ளத் தொடங்குகிறது. அதனைத் தாய்மொழி எனக் கூறுவதைவிட, தன் இன மொழி என்று சொல்வது பொருத்தமாக இருக்குமோ? 
"ஒருவரின் மொழிதான் அவரின் எண்ணத்தின் இயற்கையையும், உட்கருவையும் உருவாக்குவதைத் தீர்மானிக்கின்றது. எனவே ஒருவரின் சிந்தனையையும், சிந்தனை சார்ந்த எண்ணத்தையும், கருத்தையும் மொழிதான் தீர்மானிக்கிறது எனக் கொள்ளலாம்' என்பது அறிஞர் பெஞ்சமின் லீ வார் கூறியுள்ள கருத்தாகும்.

ஒருவன் கற்றுப் பழகி, அன்றாட வாழ்வில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மொழி அவனின் சிந்தனையை ஆட்சி செய்து கொண்டிருப்பதால் அவனின் மொழிதான் அவனின் ஆளுமையை உருவாக்கும். இதற்கு மொழியின் "தீர்மானிக்கும் பண்பு' (லிங்குஸ்டிக் டெட்டர்மினேஷன்) என்பது புதிய பெயராகும்.     

ஒரு மொழியின் சிந்திக்கும் பண்பு, அம்மொழியின்படி இருப்பவற்றை அறிந்து அதற்கேற்றவாறுதான் சிந்திக்க உதவும். சிறுவயது முதல் ஒருவரின் தொடக்க மொழியாகவும், உள்ளத்திலும் உணர்விலும் ஒன்றாய்க் கலந்த மொழியாகவும், அவரின் குணத்தையும், ஆளுமையையும் உருவாக்கும் சக்தி படைத்ததாகவும் இருப்பதே அவரின் தாய்மொழியாகும்.

பின்னர் கற்றுப் பழகும் அலுவலக மொழியானது, அயல் மொழி அல்லது இரண்டாம் மொழியாகும். அந்த மொழியை தாய்மொழியாகக் கொண்டவர் போன்றோ அல்லது அதே ஆழத்திலோ சிந்திப்பது மற்றவர்களுக்குக் கடினமானது. 

மொழி வெளிப்படுத்தும் இடர்ப்பாட்டால், இச்சிந்தனையில் வேறுபாடு உண்டாகிறதே தவிர, சிந்தனை வளையத்தின் ஆற்றல் குறைவினால் அல்ல. பண்பாட்டு சூழ்நிலை ஒரே அளவில் இருக்கும் இடங்களில் சிந்திக்கும் திறனுடன் வெளிப்படும் சக்தியை வளப்படுத்திக் கொள்பவர்களுக்கு இந்த வேறுபாடு அதிக மாற்றம் தருவதில்லை.

அறிஞர்கள் சூ - காரி ஆகியோரின் ஆராய்ச்சி முடிவுகளின்படி, குழந்தைகள் ஒரு வயதிலிருந்தே சொற்களின் பொருள் புரிந்து எதிர்வினை செய்யத் தொடங்குவர். எனவே அப்போதே தெரிந்துகொண்ட மொழிதான் தாய்மொழியாகும். அடுத்துக் கற்கும் இரண்டாம் மொழியின் சொல் அமைவுகளும், வாக்கிய அமைப்புகளும், உருவாவது கண்கூடு.

தமிழல்லாத, தெலுங்கு, கன்னட, உருது, செüராஷ்டிர சமூகக் குழந்தைகள், அவர்கள் பெற்றோரிடம் பேசிக்கொள்ளும் தாய்மொழியில்தான் சிந்திப்பர். ஆனால், பழகு மொழியாலும், வளரும் சூழ்நிலையாலும் வளமான அறிவு பெற்று எடுத்துச் சொல்லும் திறனையும் வெளிப்படுத்தும் செயலின் கூர்மையையும், உறுதிப்படுத்திக் கொண்டு சிறந்த சிந்தனையாளர்களாக அவர்கள் வளர்ந்து வருவதைக் காணலாம்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் குடும்பங்களிலும், பெற்றோர் பேசும் தமிழிலிருந்து, மொழியைக் கற்றுக் கொள்ளும்போது, அதன் அழகைப் புரிந்து கொண்டு வளரும்போது நம் பண்பாட்டு விழுமியங்களை விளங்கிக் கொள்கின்றனர்.

வெளிப்புறச் சூழ்நிலைகளால், நாடு, அலுவலகம், வேற்றுமொழியாக இருந்து, கற்றுக்கொள்ளும்போது வேற்று மொழியையும் எளிதாக அவர்கள் கற்று, அறிந்து பழகி, சிந்தித்துச் செயல்களை வளர்த்துக் கொள்ள இயலும் என்பது அறிஞர் ஸ்டீவன் பிங்கரின் கூற்றாகும்.
ஆனால் அதனை ஆரம்ப மொழி என புலம்பெயர்ந்தோர் புரிந்து கொண்டு, சூழ்நிலை மொழியையும், அலுவலக மொழியையும் ஆரம்ப மொழியாக ஆக்கி விடுவதும், சிந்தனை வளத்தினைக் கூர்மையாக்குவதும் இன்னலைத் தரும் என உணர்ந்து தங்கள் இனத்தையும், பண்பாட்டையும் ஆர்வத்தோடு ஊட்டி வளர்ப்பது மிகவும் நல்லது.

பாவியர் கேட்டால் எடால் என்ற அறிஞர் "கொரியக் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்ட சிறுவயது முதலே பிரெஞ்சு நாட்டில் பிரஞ்சு மொழி பேசி வளர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களைப் பொறுத்தமட்டில் பிரெஞ்சு மொழிதான் அவர்களின் தாய்மொழி; அவர்கள் கொரிய மொழியினைக் கேட்கும்போது, மூளையின் கேட்கும் மொழி அணுக்களில் மாறுதல்கள் ஏற்படுகின்றன' என்று விளக்கினார். 

இங்கிலாந்தில் பஞ்சாபியர்கள் அதிகமாக உள்ள "சௌத் ஹால்' பகுதிக்கு ஆங்கிலேயர்கள் செல்ல வேண்டுமென்றால் கூடப் பஞ்சாபி மொழி தெரிந்திருக்க வேண்டும். அதே போல, கோயில் வளாகங்களைக் கொண்டுள்ள "ஈஸ்டாம்' பகுதியில் தமிழ்மொழி தழைத்துள்ளது.

நம்மையும் அறியாமல் தாய்மொழியின்மீது நம் ஆழ்மனத்தில் பற்று ஒன்று படிந்து விடுகிறது. அதனால்தான் தாய்மொழி அரவமே கேட்காத அந்நிய தேசத்திற்கு நாம் சென்றால் யாராவது தாய்மொழியில் திட்டினால்கூட நமக்குத் தித்திக்கிறது. 

சூழல் மூலம் இரண்டாவது மொழி கற்றல் மிக எளிதாகக் குழந்தைகளுக்கு வந்து விடும் என்பதை நன்கு உணர வேண்டும். மக்கள் பேசிக் கொண்டிருக்கும் மொழிதான் உயிருள்ள மொழியாகும். காலங்காலமாகப் பேசிப் படித்து இலக்கியம் படைத்து வளரும் மொழி செவ்விலக்கிய மொழியாகும்.

வளரும் தலைமுறையினர் பலருக்கு தாய்மொழிச் சொற்களே தெரியாத நிலை ஏற்படும்போது, மொழியின் வளர்ச்சி  அச்சம் தரத்தக்க நிலையை எட்டி, காலப்போக்கில் தேய்வுற்று, தடுமாற்ற மொழியாக வழக்கொழிந்து விடுகிறது.
வங்காளத்தில் வங்க மொழிதான் ஆட்சி மொழியாக வரவேண்டுமென்று இளைஞர்கள் போராடியபோது அன்றைய அரசு நால்வரைச் சுட்டுக்கொன்றது. சுடப்பட்ட இளைஞர்களுக்கு ஒரு பெரிய நினைவுச் சின்னம் அமைத்தார்கள். வங்க இளைஞர்களின் எழுச்சி மற்றும் புரட்சியைத் தொடர்ந்து  "மொழியால் தானே வங்க நாடு உருவானது' என்பதை நினைவுபடுத்தும் விதமாக ஐக்கிய நாடுகள் அவை ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ஆம் நாளை தாய்மொழி நாள் என்று இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. 

இன்று உலகெங்கிலுமுள்ள இருநூறு நாடுகள் இந்நாளைக் கொண்டாடி வருவது பெருமிதமான நிகழ்வாகும். மொழி என்பது வரலாற்று சான்றாக விளங்குவதால், தாய்மொழி காக்க பேச்சுமொழியாக மட்டுமின்றி, எழுத்தறிந்து ஏனைய இலக்கியமறிந்து, தொன்மையில் நின்று, பண்பாட்டுடன் தலைநிமிர்ந்து வாழ இத்திருநாளை நினைந்து போற்றுவோம் !


இன்று (பிப். 21) உலக தாய்மொழி நாள்.
கட்டுரையாளர்:
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com