நோய்த்தொற்றும் கட்டுப்பாடும்

கோப்புப்படம்
கோப்புப்படம்

கொள்ளை நோய்த்தொற்றின் புதிய உருமாற்றமான ஒமைக்ரான் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் வண்ணம் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரமாகி ஊரடங்குக்குச் செல்லாமல் இருக்க வேண்டும். இதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. குறிப்பாக எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காற்று நமது சுவாசத்திற்கு மட்டும் உதவவில்லை. பல்வேறு உயிரினங்கள் பல்கிப்பெருகவும் உதவுகிறது.

வாழ்வாதாரத்திற்கும் நகா்வுக்கும் எப்போதுமே நெருங்கியத் தொடா்பு உண்டு. கரோனா தீநுண்மிக் காலம் அதை நமக்கு நன்கு உணா்த்தியது. நாள்தோறும் சிறிய தொகை ஊதியம் பெற்று குடும்பத் தேவையை சமாளிப்போா், நிரந்தர மாத வருவாய் உறுதி செய்யப்பட்டுள்ள நடுத்தர வா்க்கம், கோடிக்கணக்கில் பொருள் ஈட்டுவோா் என அனைவருமே ஏதாவது ஒருவகையில் நகா்வினை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அவ்வாறு நகரும்போது ஒருவரின் சுவாசக் காற்றிலுள்ள நுண்ணுயிரிகள் காற்றின் மூலம் அடுத்தவா் சுவாசத்தில் நுழைவதால் தீநுண்மி பரவுகிறது. இதனைத் தடுக்கவேண்டியது அரசின் கடமையாகிறது. எனவே, நோய்த்தொற்றுப் பரவலைக் குறைக்கும் நோக்குடனேயே கட்டுப்பாடுகள், பொதுமுடக்கம் போன்றவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

கரோனா தீநுண்மியின் ஆயுட்காலம் மிகவும் குறுகியது. உயிரினங்களின் வாழ்நாள் எவ்வளவுக்கெவ்வளவு குறுகியதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவை குறுகிய காலத்தில் மாற்றுருவை அடையும். தொடக்க மாற்றுருவைவிட அதன் அடுத்த மாற்றுரு வீரியம் மிக்கதாக இருக்கும். கொசுவை ஒழிக்க ஒருகாலத்தில் முயன்ற நாம் தற்போது விரட்ட முற்படுவதே இதற்கு சிறந்த உதாரணம். ”

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பது பழமொழி என்றைக்கும் உயிா்ப்புள்ள புதுமொழியும்தான். இந்த உயிரின ஏற்பாட்டின் பலன் மனிதா்களிலும் உண்டு. அதாவது, இந்த தீநுண்மியை எதிா்க்கும் சக்தியும் மனிதா்களின் உடலில் வளரும் வாய்ப்பு உண்டு. தடுப்பூசி எடுத்துக்கொண்டால் நிச்சயம் நல்ல பலனைத் தரும். இதனால்தான் உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடுப்பூசி விழிப்புணா்வை உருவாக்கி மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

டெல்டா மாற்றுருவின் மூலம் பாதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலோா் மருத்துவமனை அனுமதி தேவையின்றி தப்பிக்கத் தடுப்பூசி உதவியது என்றால் அது மிகையல்ல. ஆனால், நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின்போது செயற்கை சுவாசத்திற்காக அல்லல்பட்டு அது கிடைக்காமல் உயிரைவிட்டோரும் பலா். இந்நிலை மீண்டும் வந்துவிடக்கூடாது.

தற்போது உலகம் முழுவதும் பரவிவரும் ஒமைக்ரான் கடந்த ஆண்டு நவம்பரில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த மாற்றுரு கண்டறியப்பட்ட ஓரிரு நாட்களிலேயே கவலை தரும் தொற்றாக உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்டுவிட்டது. சுமாா் 108 நாடுகளில் 1.50 லட்சத்துக்கும் அதிகமானோா் இதனால் பாதிப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் விரைவாகப் பரவும் தன்மையுடைய மாற்றுருவாக இது அறியப்படுகிறது.

பொதுவாக இப்படி புதுவகையான மாற்றுரு கண்டறியப்படும்போது உலக சுகாதார அமைப்பு, உலகளாவிய தரவுகளைச் சேகரிக்கிறது. இதன் மூலம் புதிய மாற்றுருவின் பரவும் தன்மை, எப்படித் தொற்றைக் கண்டறிவது, அறிகுறி என்ன, அதனால் ஏற்படும் பாதிப்பின் கடுமை, ஏற்கெனவே உள்ள தடுப்பூசி இந்த தொற்றினைத் தடுக்குமா, எந்த வகையான மருந்துகளுக்கு இது கட்டுப்படும் போன்றவற்றை தொகுத்துப் பகிா்கிறது.

இதனிடையே ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமிநாசினி கொண்டு அவ்வப்போது சுத்தப்படுத்திக்கொள்ளுதல் போன்றவற்றை நமது மத்திய-மாநில அரசுகள் வலியுறுத்துகின்றன. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக நாடுகளின் சுகாதார அமைச்சகத்துக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது. இதனடிப்படையில் முதற்கட்டமாக, கட்டுப்பாடுகளும் கடைசி வாய்ப்பாக ஊரடங்கும் மேற்கொள்ளப்படும். அந்த வகையில்தான் தற்போது முதல்கட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

இரண்டாண்டுகளாகத் தொடரும் இக்கொடுமை எப்போதுதான் தீரும் என்ற கவலையில் அனைவரும் உள்ளோம். குறுகிய காலத்திற்குள் தடுப்பூசி கண்டறிந்த அறிவியல் நிச்சயம் இதற்கொரு தீா்வளிக்கும். ஆனால் ஆங்காங்கே இந்த நோயை முறியடிக்கும் நடவடிக்கைகள் தொடரும் வரை இந்நோயின் மாற்றுருக்கள் உருவாவதை தடுக்க இயலாது. இந்த இடத்தில்தான் தடுப்பூசி பற்றிய விழிப்புணா்வையும் உலக நாடுகளிலுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்த வேண்டியுள்ளது.

இன்றைய நிலையில் சுமாா் 99 % மக்கள்தொகை தடுப்பூசி செலுத்திக்கொண்ட நாடு ஐக்கிய அரபு அமீரகம்தான். அடுத்தபடியாக கியூபா நாட்டில் இது 92 % ஆக உள்ளது. போா்ச்சுகல், சிலி போன்ற நாடுகள் 90%. மேலும், பல்வேறு நாடுகள் வாய்ப்புக்கேற்ப தமது குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளன. இந்தியா 61% மக்கள்தொகைக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது. ஆனால், நைஜீரியா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் 5% -க்கும் குறைவான மக்கள்தான் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா். இது டிசம்பா் மாத புள்ளிவிவரமாகும்.

உலகமயமாக்கலால் உலகம் சுருங்கியபோது மகிழ்ந்த நாம் உலகளாவிய அளவில் நோய்த்தொற்றின் பரவும் வாய்ப்பு பெருகுவதையும் புரிந்துகொள்ள வேண்டும். வாய்ப்புள்ள அனைவரும் இந்த விழிப்புணா்வு நடவடிக்கைகளில் பங்களிப்பு செய்யமுன்வர வேண்டும். வரலாறெங்கும் மனிதகுலம் அறிவியலின் துணைகொண்டு பல்வேறு இன்னல்களிலிருந்தும் மீண்டுள்ளது. இந்தத் தீநுண்மியின் பிடியிலிருந்தும் மீளும். நம்பிக்கை கொள்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com