தடை செய்ய தாமதம் ஏன்?

கோப்புப்படம்
கோப்புப்படம்

அண்மையில் நடந்தேறிய இரு சம்பவங்கள் இரு வெவ்வேறு மனிதர்கள் தொடர்பானவையாக இருந்தபோதிலும், இரு நிகழ்வுகளுக்குமான அடிப்படைக் காரணம் ஒன்றாகவே அமைந்திருக்கிறது.

சென்னையைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் ஒருவர் தம்முடைய பொறுப்பில் இருந்த அலுவலகப் பணத்தைக் கையாடல் செய்ய முயன்றுள்ளார். அதற்கான திட்டத்தைச் செயல்படுத்துவதில்  ஒத்துழைப்பதற்குத் தம் மனைவியையும் ஆயத்தப்படுத்தியிருக்கிறார். 

யாரோ சிலர் தம்மைக் கட்டிப்போட்டுவிட்டு அந்தப் பணத்தைக் களவாடிச் சென்றுவிட்டதாகப் பொய்யான புகார் கொடுத்தவரின் சாயம் விசாரணையில் வெளுத்து விட்டது. 'காதல் ஒருவனைக் கைப்பிடித்தே, அவன் காரியம் யாவினும் கைகொடுத்து' என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளைத் தவறாகப் புரிந்து கொண்டு செயல்பட்ட அவருடைய மனைவிக்கும் இதனால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது போலவே, சென்னையைச் சேர்ந்த தனியார் வங்கி அதிகாரி ஒருவர், மனைவிக்கும் தனக்கும் ஏற்பட்டுவிட்ட வாய்த்தகராறை அடுத்துத் தன் மனைவியையும், தம்முடைய குழந்தைகள் இருவரையும் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். 

இரண்டு நிகழ்வுகளுக்கும் அடிப்படைக் காரணம் ஒன்றேதான். இணையவழிச் சூதாட்டத்தால் ஏற்பட்டுவிட்ட கடன்சுமைதான் அந்தக் காரணம். இணையவழிச் சூதாட்டத்தில் ஏற்படும் பண நஷ்டம், கடன்சுமை ஆகியவற்றைச் சமாளிக்க இயலாதவர்கள், தங்களின் வீடு அல்லதுஅலுவலகத்திலேயே பணத்திருட்டில் ஈடுபடுவதும், இனி மீள்வதற்கு வழியே இல்லை என்கின்ற பட்சத்தில் தனியொருவராகவோ குடும்பத்தினருடனோ தற்கொலை செய்துகொள்வதும் புதிய செய்தியல்ல. 

கணினியும் நவீனவகை கைப்பேசிகளும் வழங்கும் எண்ணற்ற சேவைகளில் இணையப் பயன்பாடு மிகவும் முக்கியமானதாகும். பொது அறிவுத் தேடல்கள் தொடங்கி, வங்கிப் பரிமாற்றங்கள், பயணச்சீட்டு முன்பதிவு, மின்னஞ்சல் என்று பல்வேறு வடிவங்களில் கணினியும் நவீனவகைக் கைப்பேசிகளும் நம்முடைய அன்றாடத் தேவைகளுக்கு உதவுகின்றன.

ஒரு நாணயத்திற்கு இன்னொரு பக்கமும் உண்டு என்பதை நிரூபிப்பது போன்று, நேரத்தை வீணடிக்கும் விளையாட்டுகள், அரட்டைகள், ஆபாசக் காணொளிகள், ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்கள் ஆகியவையும் இணையவெளியில் கொட்டிக் கிடக்கின்றன. 

இவற்றில் எவை எவை நமக்கு நன்மை பயக்கும் என்பதைச் சிந்திக்கும் பக்குவமின்றி, கேளிக்கை ஒன்றே குறியாக ஈடுபடுபவர்கள் அனைவருமே தங்களின் பொன்னான நேரத்தையும், செல்வத்தையும் இழக்கிறார்கள். மேலும், நெருங்கிய சொந்தங்களே தங்களைப் புறக்கணிக்கும் நிலைமைக்கும் அவர்கள் ஆளாகின்றனர்.

சூதாட்ட இணையதளங்கள் என்பவை மிகவும் வளர்ந்துவிட்ட இன்றைய மின்னணுத் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டவை. அவை முதலில் நமக்குச் சிறிய அளவில் வெற்றிகளைக் கொடுப்பதன் மூலம் நம்மை அடிமைப்படுத்திவிடுகின்றன. அதன் பிறகு நாம் தொடர்ந்து தோற்கின்ற போதும் அவ்விளையாட்டுகளை விட்டுவிட முடியாத மனநிலைக்கு அவை நம்மை வழி நடத்திச் செல்வதில் வெற்றி அடைகின்றன என்பது இந்தத் துறையைச் சேர்ந்த வல்லுநர்களின் கருத்தாகும் அலுவலகச் சூழல், குடும்ப வாழ்க்கை ஆகிய இரண்டின் நிதர்சனங்களையும் நன்கு உணர்ந்த பெரியவர்களே இத்தகைய கொடிய பொழுதுபோக்கிற்கு இரையாகும்போது, வாழ்க்கையின் நன்மை தீமைகளை உணராத பதின்பருவத்தினர் இவற்றில் ஈடுபட்டுப் பெரும் பணத்தை இழப்பதில் வியப்பு எதுவும் இல்லை.  

அலுவலகம் சென்றும், தொழில் புரிந்தும் சம்பாதிப்பவர்கள் அங்கே இங்கே கடன் வாங்கிச் சூதாட்டங்களில் ஈடுபடுகின்ற அதே வேளையில், சிறார்கள் தங்கள் பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டிலிருக்கும் பணத்தையும், நகைகளையும் எடுத்துச் செலவழிக்கின்றனர். மேலும் அச்சிறுவர்கள் தங்கள் பெற்றோர்களின் வங்கி அட்டைகளையும் அவர்கள் அறியாத வண்ணம் எடுத்துப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர்.  

வீட்டிலிருந்தபடியே பெரியவர்கள் அலுவலகப் பணிகளைப் பார்ப்பதும், மாணவர்கள்  வகுப்புப் பாடங்களைக் கற்றுக்கொள்வதும் தவிர்க்க இயலாததாகிவிட்டது.

கரோனா முதல் அலையின் தீவிரப் பரவல் சமயத்தில் உருவான இந்தச் சூழல் இன்னும் முழுவதுமாகத் தணிந்தபாடில்லை. இதோ கரோனாவின் மூன்றாவது அலையும் ஒமைக்ரான் என்ற உருமாற்றமாகத் தொடங்கியிருக்கிறது.

வீட்டிலிருந்தபடியே பணியையும் படிப்பையும் கவனிப்பவர்களுக்குச் சற்றே ஓய்வு கிடைத்தால் அவர்களை வசப்படுத்த இணையதள விளையாட்டுகள் அணிவகுத்து நிற்கின்றன. பலரும் விட்டில் பூச்சிகளாக அவற்றில் போய் விழுகின்றனர்.

தங்களைச் சேர்ந்தவர்களுக்கு விளக்காக விளங்க வேண்டியவர்கள் விட்டில் பூச்சிகளாக மாறாமல் இருப்பதைத் தடுக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. சட்டரீதியாக இத்தகைய இணையதள விளையாட்டுகளைத் தடைசெய்வதே அந்த வழியாகும்.

தமிழ்நாட்டில், கடந்த ஆட்சியில் இவற்றைத் தடைசெய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட தடைச் சட்டம் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இணையதள விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்கான விரிவான நெறிமுறைகளுடன், அவ்விளையாட்டுகளைத் தடை செய்வதற்கான முழுமையான புதிய சட்டத்தையும் இயற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் கூறிவிட்டது. 

அவ்வாறு கூறி பலமாதங்கள் கடந்து விட்டன. அதே நேரம் இணையதளச் சூதாட்டங்களால் பலரும் கடன்தொல்லைக்கு ஆளாகி விபரீத முடிவெடுப்பதும் குறையாமல் தொடர்கின்றது.

இணையதளச் சூதாட்டங்களை முழுமையாகத் தடைசெய்வதற்குரிய விரிவான சட்டத்தை நமது மாநில அரசு விரைவில் கொண்டுவருவதுடன், உடனடியாக அச்சட்டத்திற்கு உயர்நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெறவும் முயற்சி எடுக்க வேண்டும்.

வீட்டிலிருந்தபடியே அலுவலகப் பணியாற்றுவதும், கல்வி கற்பதும் இன்னும் சிறிது காலத்திற்குத்  தொடர இருக்கின்ற சூழலில், இணையதளச் சூதாட்டங்களை உடனடியாகத் தடைசெய்ய வேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com