மனிதர்களில் சிறந்தவர் இவர்!

மதுரை மணிக்குறவர்' என்ற படம் வரை 1,700 பாடல்கள் எழுதியிருக்கிறேன் என்றால் அதற்கு அடித்தளம் போட்டுக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.
மனிதர்களில் சிறந்தவர் இவர்!

புலவர்களில் சிறந்தவர் வள்ளுவர். அரசர்களில் சிறந்தவர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். (இவர்தான் கண்ணகி காலத்தில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்). நடிகர்களில் சிறந்தவர் சிவாஜி கணேசன். மனிதர்களில் சிறந்தவர் எம்.ஜி.ஆர். என்கிற எம்.ஜி. இராமச்சந்திரன்.
"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்' என்று ஒரு படத்தில் பாடுவார். அதுபோல் எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்துத்தான் தமிழ் மக்கள் உள்ளத்தில் கல்வெட்டைப்போல் பதிந்திருக்கும் எழுத்தாக இன்னும் இருக்கிறது. 
எடுக்கும் பழக்கமுள்ள எத்தனையோ கைகளிடையே கொடுக்கும் பழக்கமுள்ள கொடைக்கைகள் இவர் கைகள். 1967-இல் தேர்தலில் தேர்தல் நிதியாக முப்பதாயிரம் ரூபாயை தி.மு.க.விற்கு எம்.ஜி.ஆர். கொடுக்க முன்வந்தபோது, "தம்பி ராமச்சந்திரன், நீங்கள் முப்பதாயிரம் ரூபாய் கொடுப்பதற்குப் பதில் ஒவ்வொரு தொகுதியிலும் உங்கள் முகத்தைக் காட்டுங்கள். அது முப்பதாயிரம் வாக்குகளைக் கொண்டு வந்து சேர்க்கும்' என்றார் அண்ணா.

எம்.ஜி.ஆர். செல்வாக்கு எப்படிப்பட்டதென்று அண்ணா அறிந்ததைப் போல் மற்றவர்கள் அறியவில்லை. அதனால்தான் கருணாநிதி கடைசி வரைக்கும் எம்.ஜி.ஆரிடம் தோற்றுக்கொண்டேயிருந்தார்.
உலக அளவில் ஒரு நடிகருக்கு முதன்முதல் ரசிகர் மன்றம் தோன்றியது என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான். உலகில் முதன்முதல் ஒரு நடிகர் நாடாள வந்தார் என்றால் அதுவும் எம்.ஜி.ஆர்.தான். நடிகராக இருந்த ரொனால்ட் ரீகன் அமெரிக்காவுக்கு அதிபர் ஆனது கூட எம்.ஜி.ஆர். இங்கே முதலமைச்சர் ஆன பிறகுதான்.

1965-ஆம் ஆண்டு, அப்போது இந்தியாவின் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி அந்தமானுக்குச் சென்றிருந்தார். அப்போது "பணத் தோட்டம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம்' என்ற மன்றத்தை உருவாக்கி, அதைத் திறந்து வைக்க வேண்டும் என்று சாஸ்திரியிடம் அந்தமானில் இருந்த எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

சாஸ்திரி, "நானும் எம்.ஜி.ஆருடைய மனித நேயத்தைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய மக்கள் செல்வாக்கையும் நான் அறிவேன். அதனால் அவசியம் திறந்து வைக்கிறேன்' என்று சொல்லி எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தைத் திறந்து வைத்துப் பெருமைப்படுத்தியிருக்கிறார். ஆக, ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தை ஒரு நாட்டின் பிரதமர் திறந்து வைத்துப் பெருமைப்படுத்தினார் என்றால் உலக அளவில் அந்தப் பெருமை எம்.ஜி.ஆர். ஒருவரையே சேரும்.
ஒருவன் நடந்து வருகின்ற நடையை வைத்தே அவனது குணத்தை அறிந்து கொள்ளும் கூர்த்தமதி அவருக்கு உண்டு. அவர் நாடக நடிகராக இருந்தபோது பத்து ரூபாய் சம்பளம் கிடைத்தால் அதில் இரண்டு ரூபாயை தருமத்திற்கு ஒதுக்கி வைத்து விடுவாராம். சினிமாவில் துணை நடிகராக நடித்தபோது, நூறு ரூபாய் சம்பளம் கிடைத்தால் அதில் பத்து ரூபாயை தர்மத்திற்கு ஒதுக்கி வைத்து விடுவாராம்.

"மந்திரி குமாரி' திரைப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு மாதச்சம்பளம் ஆயிரம் ரூபாய்தானாம். அதில் நூறு ரூபாயை தர்மத்திற்கென்று எடுத்து தனியே வைத்து விடுவாராம். நாங்களெல்லாம் அவர் படத்திற்குப் பாட்டெழுதும்போது இதையெல்லாம் எங்களிடம் சொல்லி, "நீங்கள் பொருளாதாரத்தில் வளமுள்ளவர்களாக ஆகும் காலத்தில் உங்களால் முடிந்தவரை மற்றவருக்கு உதவி செய்யுங்கள். நீங்கள் செய்யக்கூடிய தான தர்மங்கள்தான் கடைசிக் காலத்தில் உங்கள் கூட வரும்' என்பார். அவரது வார்தைக்கேற்பத்தான் என்னைப் போன்றவர்கள் வாழ்ந்து கொண்டிருக்
கிறோம்.

பூமி குளிர வேண்டும் என்பதற்காக மேகம் மழை பொழிவதைப்போல, காடு கரைகள் செழிக்க வேண்டும் என்பதற்காக நதிகள் பாய்ந்தோடிச் செல்வதைப் போல, இரவுக்கு விளக்கேற்ற நிலவு வருவதைப் போல ஏழை எளிய மக்கள் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தோற்றுவித்தார். அதன் மூலம் அடையாளம் தெரியாமல் இருந்தவர்களுக்குக்கெல்லாம் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். பேர் தெரியாமல் இருந்தவர்களையெல்லாம் சமுதாயத்தில் பெரிய மனிதர்களாக்கினார்.

இன்று சில கட்சிகளில் பணம் வாங்கிக் கொண்டு பதவிகள் கொடுக்கிறார்கள். பணம்தான் இன்று அரசியலை நிர்ணயிக்கிறது. இதை "ஜனநாயக அரசியல்' என்று சொல்வதை விட "பணநாயக அரசியல்' என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். எம்.ஜி.ஆர். காலத்தில் இப்படி எதுவும் நடந்ததில்லை. உண்மையான ஏழை பங்காளனாக அவர் வாழ்ந்தார். உழைப்பவர்களுக்கும் நன்றியுள்ளவர்களுக்கும் மட்டுமே முன்னுரிமை அளித்தார். அவர் இல்லை என்றால் என்னைப் போன்றவர்களெல்லாம் அன்றைக்கு சட்டமன்ற மேலவை உறுப்பினர்களாக ஆகியிருக்க முடியாது. அண்மையில் வெளிவந்த "மதுரை மணிக்குறவர்' என்ற படம் வரை 1,700 பாடல்கள் எழுதியிருக்கிறேன் என்றால் அதற்கு அடித்தளம் போட்டுக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.

அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் ஒரு வீடு கூட அவர் புதிதாக வாங்கவில்லை. வாங்க நினைத்ததும் இல்லை. தனக்கென்றிருந்த இராமாபுரம் தோட்ட வீட்டைக் கூட மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக எழுதி வைத்த மாமனிதர் அவர். அவருக்கு இணையாக எவரையும் சொல்ல முடியாது.
26 படங்களில் நடித்து முடித்த பிறகுதான் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து படிப்படியாக அனுபவம் பெற்று மக்களின் மிகப் பெரிய ஆதரவுடன் ஒரு கட்சியைத் தொடங்கி ஆட்சியில் அமர்ந்தார். தன் சொந்தப் பணத்தைக் கட்சிக்காகவும், மக்களுக்காகவும் செலவு செய்தவர் 
எம்.ஜி.ஆர்.


அப்படி தன் சொந்தப் பணத்தைக் கட்சிக்காகச் செலவு செய்யக்கூடிய நடிகர்கள் இன்று இருக்கிறார்களா? இல்லையே. அப்படிப் பட்டவர்கள் எப்படி வெற்றி பெற முடியும்? நடிகர்கள் அரசியலில் ஈடுபடலாம், அதில் தவறில்லை. ஆனால் அவர்களே ஒரு கட்சியைத் தோற்றுவித்து ஆட்சிக்கு வந்து விடலாம் என்று நினைப்பதெல்லாம் இனிமேல் நடக்காது. எல்லா நடிகர்களும் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. இதை உணர்ந்த காரணத்தால்தான் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கிவிட்டார்.
எம்.ஜி.ஆர் ஆட்சியில் எத்தனையோ அளப்பரிய சாதனைகளைச் செய்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு முன்பே பெண்களைப் பெருமைப்படுத்திய ஆட்சி அவர் ஆட்சிதான். காவல்துறையில் அதிக அளவில் பெண்களை முதன்முதல் நியமித்தவர் அவர்தான். அன்னை தெரசா பெயரில் தமிழ்நாட்டில் முதன்முதல் மகளிர் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் அவர். ஏழை எளிய விதவைப் பெண்களுக்கு சேலைகள் வழங்கியவர் அவர். தாய்மார்களெல்லாம் தங்கள் வீட்டுப் பிள்ளையாக எம்.ஜி.ஆரைத்தான் கருதினார்களே தவிர மற்றவர்களையல்ல.

சைக்கிளில் இருவர் செல்லலாம் என்று அனுமதி வழங்கியவர் அவர். சந்தேகக் கேஸ் போடுவதை நீக்கியவர் அவர். தன் சொந்த செல்வாக்கால் தெலுங்கு கங்கைத் திட்டத்தைக் கொண்டு வந்து சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்த்தவர் அவர். தனியார் பொறியியல் கல்லூரிகள் தோன்றுவதற்குக் காரணமும் அவர்தான். முதியோர் உதவித் தொகை வழங்கியவர் அவர். அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 56-லிருந்து 58-ஆக உயர்த்தியவரும் எம்.ஜி.ஆர்.தான்.

மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற வித்திட்டவர் அவர். ஈழத்தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்ததும், விடுதலைப் புலிகள் ஆயுதம் வாங்குவதற்கு நிதியளித்ததும் அவர்தான். எம்.ஜி.ஆரும், இந்திரா காந்தியும் உயிரோடு இருந்திருந்தால் தமிழ் ஈழம் எப்போதோ கிடைத்திருக்கும். கருணாநிதி காலத்தில் ஈழத்தமிழர்கள் அழிந்திருக்க வேண்டிய நிலை வந்திருக்காது. அவர்கள் அழிவுக்கு சோனியா தலைமை வகித்த காங்கிரஸ்தான் பெரும் காரணம்.
எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்திற்கு நிகரான மனிதாபிமானத் திட்டம் உலகில் வேறு எதுவும் இல்லையென்றும், இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்த எம்.ஜி.ஆரை ஏசுநாதரின் மறுவடிவமாகப் பார்க்கிறேன் என்றும் அன்னை தெரசாவே குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார். இதைவிட எம்.ஜி.ஆருக்கு என்ன பாராட்டு வேண்டும்?
அரசு அலுவலகங்களில், கோப்புகளில் தமிழில்தான் குறிப்பு எழுதவேண்டும் என்றும், தமிழில்தான் கையொப்பமிட வேண்டும் என்றும் கட்டளை இட்டவர் அவர்தான். அதுவரை, வங்கிப் படிவங்களில் ஆங்கிலத்தில் கையொப்பமிட்டுக் கொண்டிருந்த நான் அதன்பிறகுதான் தமிழில் கையொப்பமிடத் தொடங்கினேன்.

தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திரு.வி.க. விருது, பாரதியார் விருது, பாரதிதாசன் விருது, அன்றைய உயர்ந்த விருதான ராஜராஜன் விருது ஆகியவற்றை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். அவர் காலம் தமிழறிஞர்களுக்கும், கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் பொற்காலமாக அமைந்தது. அந்த வகையில் புரட்சித் தலைவர் வாடாத வசந்த முல்லை; அவர் புகழுக்கு எல்லையில்லை.

இன்று (ஜன.17) 
எம்.ஜி.ஆர். பிறந்தநாள்.
கட்டுரையாளர்:
முன்னாள் அரசவைக் கவிஞர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com