என்கவுன்ட்டர் எதற்கும் தீர்வாகாது!

என்கவுன்ட்டர் எதற்கும் தீர்வாகாது!

 தமிழ்நாட்டின் வடமாவட்டம் ஒன்றில் அதிகரித்து வரும் கட்டப் பஞ்சாயத்து, ரௌடித்தனம் போன்ற சட்ட விரோத செயல்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் என்கவுன்ட்டர் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்ற செய்தி அண்மையில் பொதுவெளியில் பேசுபொருளாக வலம் வருகிறது.
 இந்த சூழலில், சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு நகரில் வெடிகுண்டுகள் வீசி நிகழ்த்தப்பட்ட இரண்டு கொலைகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் இரண்டு நபர்கள் உயிரிழந்தனர்.
 என்கவுன்ட்டர் என்றால் என்ன? காவல்துறையினர் என்கவுன்ட்டர் நடத்த சட்டம் இடமளிக்கிறதா? சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, பொதுமக்களைத் துயரத்தில் ஆழ்த்தும் கட்டப்பஞ்சாயத்து, ரௌடித்தனம், ஒப்பந்தக் கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற கொடுஞ்செயல்களுக்கு என்கவுன்ட்டர் தீர்வு ஆகுமா?
 நாட்டில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைப்பவர்களின் செயல்கள் இருந்தால், தற்காப்புக்காக அவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கையால் உயிரிழப்பு நிகழ்ந்தால், அச்செயல் குற்றம் ஆகாது என்று இந்திய தண்டனைச் சட்டம் கூறுகிறது.
 ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கக் கூடிய குற்றச் செயலைப் புரிந்த குற்றவாளியைக் கைது செய்ய காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கையில், அந்த குற்றவாளி உயிரிழக்க நேர்ந்தால், அச்செயலுக்கு காவல்துறை பொறுப்பாகாது எனக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் கூறுகிறது.
 ஒருவர், தன் மீது தொடுக்கப்படும் குற்றச்செயலில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் "தற்காப்புரிமை'யை காவல்துறையினருக்கு மட்டுமின்றி, அனைத்து குடிமக்களுக்கும் இந்திய தண்டனைச் சட்டம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 மரணத்தை ஏற்படுத்தும் தாக்குதலுக்கு உள்ளாவது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது, ஆள் கடத்தல், தன் மீது திராவகம் வீசுதல் போன்ற கொடுஞ்செயல்களில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள, அக்குற்றச் செயல்புரியும் எண்ணத்துடன் தாக்குதல் நடத்தும் நபர் மீது எதிர்த்தாக்குதல் நடத்தும் செயல் குற்றமாகாது. அந்த எதிர்த் தாக்குதலில், குற்றம் புரிய முயன்றவர் உயிரிழக்க நேரிட்டாலும், அது குற்றம் ஆகாது எனவும் இந்திய தண்டனைச் சட்டம் தெளிவுபடுத்துகிறது.
 தன்னைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்க முயன்ற புலம்பெயர்ந்த தொழிலாளியை, தற்காப்புக்காகத் தாக்கி கொலை செய்த பெண்ணின் செயலும், தன்னிடம் பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற உறவுக்காரப் பையனைக் கொலை செய்த இளம்பெண்ணின் செயலும் கொலையாகாது என உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் 2021-ஆம் ஆண்டில் திருவள்ளுர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளன.
 சென்னை மாநகரக் காவல்துறையைச் சார்ந்த தனிப்படைக் காவலர்கள், கொள்ளையர்கள் சிலரைப் பிடிக்க 2017-ஆம் ஆண்டில் ராஜஸ்தான் மாநிலம் சென்றிருந்தனர். இரவு நேரத்தில் கொள்ளையர்களை தமிழக காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். அப்போது நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் காவல்துறை ஆய்வாளரான பெரியபாண்டி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற இடத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூடும், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர்களைத் தாக்கி, உயிரிழக்கச் செய்த சம்பவங்களும் "என்கவுன்ட்டர்'கள் ஆகும்.
 தற்காப்புக்காகவும், கொடுங்குற்றச் செயல் நடைபெறாமல் தடுக்கவும், கொடுங்குற்றச் செயல் புரிந்த குற்றவாளியைப் பிடிக்கவும் நடத்தப்படும் என்கவுன்ட்டர்கள் உயிரிழப்பை ஏற்படுத்தினாலும், அவை குற்றமாகாது என சட்டம் தெளிவுபடுத்துகிறது.
 சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறைக்கு சவாலாக இருந்துவரும் குற்றவாளிகளை காவல்துறையினர் பிடித்து, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர், அக்குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்சியில் நிகழ்ந்த என்கவுன்ட்டரில் அவர்கள் உயிரிழந்ததாகச் சித்திரிக்கப்படும் சம்பவங்கள் நம் நாட்டில் கடந்த அரை நூற்றாண்டுகளாக தொடர்ந்து நிகழ்ந்துவருகின்றன.
 காவல்துறையினர், தங்களிடம் பிடிபட்ட குற்றவாளிகளை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமல், அவர்கள் மீது என்கவுன்ட்டர் நடத்தி, அவர்களை உயிரிழக்கச் செய்வதற்கு காவல்துறையினர் கூறும் காரணங்கள் என்னென்ன?
 கூலிப்படை, ஆள் கடத்தல், நில ஆக்கிரமிப்பு, கட்டப் பஞ்சாயத்து, ரௌடித்தனம் போன்ற கொடுங்குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க யாரும் முன்வருவதில்லை. அப்படி சாட்சியங்கள் இல்லாத நிலை ஏற்படுவதால், அத்தகைய குற்றவாளிகள் நீதிமன்ற விசாரணையில் தண்டனை பெறுவதில்லை.
 கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட ஏராளமான கொடுங்குற்ற வழக்குகள் 10 ஆண்டுகள் கடந்த பின்னரும் நீதிமன்ற விசாரணை முடிவு பெறாத நிலையில் இருப்பதால், அவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சமுதாயத்தில் சுதந்திரமாக உலவி வருகின்றனர் என்ற மனக்குமுறல் பொதுமக்களிடம் வெளிப்படுகிறது.
 இச்சூழலில், அக்குற்றவாளிகளின் அடாவடித்தனத்தை அனுசரித்து வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற மனநிலைக்குத் தள்ளப்படும் பொதுமக்களின் வேதனைக்குத் தீர்வாக என்கவுன்ட்டர்கள் நடத்தப்படுகின்றன என்பது காவல்துறையின் வாதம் ஆகும்.
 அரிதினும் அரிதாக ஒரு சில குற்றவாளிகள் ஏதேனும் ஒரு வழக்கில் தண்டனை அடைந்து சிறை சென்றாலும், சிறைக்குள் இருந்து கொண்டே கட்டப் பஞ்சாயத்து, கொலை போன்ற கொடுங்குற்றச் செயல்களை இயக்கி, அவற்றை திறம்பட நடத்திக்காட்டும் திறமை படைத்தவர்களாகவும் திகழ்கின்றனர். இத்தகைய குற்றவாளிகளுக்கு என்கவுன்ட்டர் மூலம் வழங்கப்படும் தீர்ப்புதான் மக்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும் என்றும் காவல்துறையினர் கருதுகின்றனர்.
 கொலை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் பலர், காலப்போக்கில் தங்களை சமுதாயத் தலைவர்களாகவும், அறக்கட்டளை நிறுவனர்களாகவும், பொது வாழ்வில் ஈடுபடுபவர்களாகவும் வெளிக்காட்டிக் கொள்ளும் கலாசாரம் தற்பொழுது நம் நாட்டில் அதிகரித்து வருகிறது.
 இத்தகைய சூழலில், குற்றச் செயலால் பாதிக்கப்பட்டவர்களின் மனவேதனையை ஆற்றுப்படுத்தும் விதத்தில், அக்கொடுஞ்செயலைச் செய்த குற்றவாளிக்கு என்கவுன்ட்டர் மூலம் உடனடி தண்டனையை காவல்துறையினர் வழங்குகின்ற காரணத்தால், என்கவுன்ட்டர்களுக்கு பொதுமக்களிடத்தில் வரவேற்பும், ஊக்கமும் தொடர்ந்து வெளிப்படுகிறது.
 தங்களிடம் பிடிபட்ட குற்றவாளிகளை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமல், காவல்துறையினரே என்கவுன்ட்டர் என்ற பெயரில் மரண தண்டனை வழங்கும் செயலானது இந்திய சட்ட விதிகளுக்கு முரணானது. இத்தகைய "போலி என்கவுன்ட்டர்கள்' இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கையைத் தவிர, உலக அரங்கில் வேறு எந்த நாட்டிலும் நடைபெறவில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 நம் நாட்டில் 2000 ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த போலி என்கவுன்ட்டர்கள் மீது 1,782 வழக்குகளை இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதிவு செய்துள்ளது. அவற்றில் 45% போலி என்கவுன்ட்டர்கள் உத்திர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளன. அதைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான போலி என்கவுன்ட்டர்கள் ஆந்திர பிரதேசம், பிகார் ஆகிய இரு மாநிலங்களில் நிகழ்ந்துள்ளன.
 சமீப காலமாக போலி என்கவுன்ட்டர்கள் நம் நாட்டில் அதிக அளவில் நடைபெறுகின்றன. அம்மாதிரியான செயல்களை நடத்த "என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்டுகள்' என்ற அடைமொழியுடன் காவல்துறை அதிகாரிகள் சிலர் செயல்படுகின்றனர். அத்தகைய அதிகாரிகள் உள்நோக்கத்துடன், நேர்மையற்ற முறையில் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து பொதுவெளியில் சொல்லப்படுகிறது. அக்குற்றச்சாட்டு முழுக்க முழுக்கப் பொய்யானது என்று புறந்தள்ளிவிட முடியாது.
 கடந்த கால் நூற்றாண்டில் நம் நாட்டில் நிகழ்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான என்கவுன்ட்டர்களால் நம் நாட்டில் ரௌடித்தனமும், கொடுங்குற்றங்களும் குறையவில்லை என்பதுதான் கள நிலவரம்.
 ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் ஒரு ரௌடியை என்கவுன்ட்டர் மூலம் இறக்கச் செய்வதால், அந்த பகுதியில் மீண்டும் ரௌடித்தனம் தலைதூக்காது என்று கூறிவிட முடியாது. அந்தப் பகுதியில் ரௌடித்தனம் நிகழ்வதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றைக் களைய உரிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், புதிய ரௌடிகள் அப்பகுதியில் உருவாவதைத் தவிர்க்க முடியாது.
 நாட்டின் எந்தப் பகுதியிலும் திடீரென்று சிலர் உருவாகி, சமுதாயம் நடுங்கும் வகையில் ரௌடித்தனம் செய்வதில்லை. ஒருசில கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காமலும், அவர்கள் மீதான வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை விரைவாக நடத்தி முடிக்காமலும் காலம் கடத்துகின்ற செயல்களே ரௌடிகள் பலரை உருவாக்குகின்றன.
 காவல்துறையில் பல்வேறு நிலைகளில் பணிபுரிபவர்கள் ரௌடிகளின் செயல்பாடுகளை அடக்க உரிய சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு பதிலாக, அந்த ரௌடிகளுக்கு உறுதுணையாக செயல்படுகின்ற நிலை தற்பொழுது அதிகரித்து வருகிறது.
 சென்னையை அடுத்துள்ள ஒரு மாவட்டத்தில் காவல் நிலைய பொறுப்பு வகிக்கும் ஆய்வாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ரௌடிகளின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்து வந்திருக்கின்றனர் என்பது கண்டறிப்பட்டு, அண்மையில் அவர்கள் அனைவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதிர்ச்சியளிக்கும் இந்த செய்தி, காவல்துறை தன்னை சீர்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தில் இருப்பதை உணர்த்துகிறது.
 ரௌடிகள் வளரும்வரை அமைதியாக இருந்துவிட்டு, பின்னர் என்கவுன்ட்டர் மூலம் அவர்களின் உயிரைப் பறிப்பது அறிவார்ந்த செயல்பாடு ஆகாது.
 காவல் நிலைய பொறுப்பு அதிகாரி நேர்மையுடன் கடமையாற்றுபவராக விளங்கினால், அவர் பொறுப்பு வகிக்கும் காவல் நிலைய எல்லைக்குள் ரௌடித்தனம் செய்ய யாரும் துணிய மாட்டார்கள். ஆனால், பதவியைத் தக்க வைத்துக்கொள்ள காவல்துறை அதிகாரிகள் செய்துகொள்ளும் சமரசமே, ரௌடித்தனத்திற்கு உரமாக அமைந்து விடுகிறது.
 அனைத்து குற்ற நிகழ்வுகளின் மீது காலதாமதம் இன்றி வழக்குப் பதிவு செய்தல், முறையான புலன் விசாரணை, தொய்வில்லாத நீதிமன்ற விசாரணை ஆகியவையே ரௌடித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வழிமுறைகளாகும்.
 
 கட்டுரையாளர்:
 காவல்துறை உயர் அதிகாரி (ஓய்வு).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com