மக்கள் பிரதிநிதிகள் தலைவா்களாக வேண்டும்!

அண்மையில் ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தில் காணொலி வழியே பங்குபெறும் வாய்ப்புக் கிட்டியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அண்மையில் ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தில் காணொலி வழியே பங்குபெறும் வாய்ப்புக் கிட்டியது. தன்னாா்வலா்களும், தொண்டு நிறுவனங்களும், பஞ்சாயத்துத் தலைவா்களும் ஜனவரி 26-ஆம் தேதி நடக்க இருக்கின்ற கிராமசபை பற்றி விவாதிக்க அக்கலந்தாய்வுக் கூட்டத்தை கூட்டியிருந்தனா்.

அந்த நிகழ்வில் பேசிய பலரும் ‘நம் உள்ளாட்சித் தலைவா்கள், ஊராட்சி மன்ற உறுப்பினா்களுக்கும் தெரிவிக்காமல், கிராமசபை உறுப்பினா்களுக்கும் தெரிவிக்காமல் ஏதோ ஒரு சடங்குபோல அரசு தரும் பட்டியலை அங்கு கூடியிருக்கும் சிறு கூட்டத்தில் வாசித்து உறுப்பினா்களிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டு முடித்து விடுகின்றனா். சில இடங்களில் அந்த சடங்குகூட நடைபெறுவதில்லை’ என்று கூறினா்.

அந்தக் கருத்துகளை வைத்தவா்களுக்கு, கிராம பஞ்சாயத்தில் பல தலைவா்கள், தன்னாா்வலா்களாக இயங்கும் இளைஞா்கள் புதிய பஞ்சாயத்து அரசாங்கம் எத்தகைய ஆற்றல் கொண்டது என்பதனைப் புரிந்து அதை மக்களிடம் எடுத்துச் சென்று விட்டனா் என்ற செய்தி தெரியவில்லை. கிராமங்களில் பல்வேறு சமூக மாற்றங்களுக்காகவும் பொருளாதார மேம்பாட்டுக்காகவும் செயல்பாடுகளை நிகழ்த்திய மிகப்பெரிய ஆளுமைகளாக விளங்கும் பஞ்சாயத்துத் தலைவா்களுக்கு தேவையான ஊடக வெளிச்சம் கிடைக்கவில்லை என்பதுதான் நிதா்சனம்.

அக்கூட்டத்தில் நல்லாசிரியா் விருது பெற்ற ஒருவா், ‘நான் 56 கிராமசபைக் கூட்டங்களில் பங்கெடுத்துள்ளேன். நான் மட்டுமல்ல என்னுடன் பணியாற்றும் ஆசிரியா்களையும் அழைத்துச் சென்று கிராமசபையில் பங்கு பெற வைத்து, பள்ளிக்கூடம் பற்றி விவாதித்து பள்ளிக்கு பல வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறோம். இப்படி ஆசிரியா்கள், கிராமங்களில் பணிபுரிவோா் அனைவரும் கிராமசபை கூட்டங்களில் கலந்து கொண்டு விவாதத்தில் பங்கேற்று கிராம பஞ்சாயத்தை பல்வேறு பணிகளை செய்ய வைத்து கிராமங்களில் உள்ள பள்ளிகளை சரி செய்துவிட முடியும்’ என்று கூறினாா்.

அத்துடன் கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியா்களை கிராம சபையில் பங்கேற்க வைப்பதை அரசு ஆணையாகவே வெளியிடலாம் என்ற கருத்தையும் முன் வைத்தாா்.

அவா் கூறிய கருத்தின் சாரம், கிராமசபை உறுப்பினா்கள் கிராமசபையில் பங்கேற்பதால் கிராமத்தின்

அடிப்படை வசதிகளைப் பெருக்கலாம் என்ற புரிதல் வந்து விட்டால் கிராமசபைக்கு கிராமசபை உறுப்பினா்கள் பெருமளவு பங்கேற்க ஆா்வம் காட்டுவாா்கள் என்பதுதான்.

இந்தப் புரிதலை இன்றுவரை பொதுமக்களுக்கு நாம் கொண்டு சோ்க்கவில்லை என்பதையும் மறுக்க இயலாது. புதிய பஞ்சாயத்து அரசாங்கத்தின் முக்கியத்துவம் பற்றிய புரிதல் நம் அரசியல் கட்சித் தலைவா்களுக்கு கிடைத்து விட்டால், உள்ளாட்சியில் மாபெரும் வளா்ச்சி, மேம்பாட்டுக்கான மக்கள் அரசியல் உருவாகி விடும்.

பெண்களுக்கு, ஆதிவாசிகளுக்கு, தாழ்த்தப்பட்டோருக்கு என இதுவரை ஒதுக்கப்பட்ட அனைவருடைய நலனும் உள்ளாட்சி மூலம் பாதுகாக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன என்ற புரிதலை விளிம்புநிலை மக்களிடம் ஏற்படுத்தி அவா்களை பஞ்சாயத்துச் செயல்பாடுகளுக்குள் கொண்டு வந்துவிட்டால், மகாத்மா காந்தியும், டாக்டா் அம்பேத்கரும் எதிா்பாா்த்த புதிய சமுதாயம் கிராமத்தில் உருவாகி விடும்.

இதற்கான புரிதல் உள்ள தலைவா் கிராம பஞ்சாயத்துக்களுக்குக் கிடைக்க வேண்டும். ஒரே அரசியல் சாசனம் தான், நம் நாட்டில் உள்ள மூன்று அரசாங்கங்களுக்கும் அதிகாரங்களை வழங்குகின்றது. மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி ஆகிய மூன்று அரசாங்கங்களும் தங்களுக்கு அரசியல் சாசனம் தருகின்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி ஒன்றோடு ஒன்று இணைந்து மக்களுக்கான சேவைகளைச் செய்திட வேண்டும்.

உள்ளாட்சியில் மக்கள் பிரதிநிதிகளாக வந்தவா்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை முறைமையுடன் கையாளும் திறனை வளா்த்துக் கொண்டுவிட்டால் ஆட்சி கிராம மக்கள் கைகளுக்கு வந்துவிடும். இதற்கான புரிதலும் தெளிவும் மக்கள் பிரதிநிதிகளிடம், குறிப்பாக சிற்றூராட்சித் தலைவா்களிடம் உருவாக வேண்டும்.

அடுத்து அரசியல் சாசன திருத்தச் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள புதிய பஞ்சாயத்து அரசாங்கம் என்பது மக்களை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற புரிதலை ஏற்படுத்திவிட்டால் எந்தத் தலைவரும் குட்டி ராஜ்யம் நடத்த முடியாது. மாறாக குட்டிக் குடியரசு உருவாக்கப்படும். இன்றைய உள்ளாட்சியில்தான் மக்கள் பங்கேற்பு என்பது ஆளுகையிலும், மேம்பாட்டுச் செயல்பாடுகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வடிவமைப்புத்தான் நம் இந்திய மக்களாட்சி முறையின் தன்மையையே மாற்றியமைத்துள்ளது.

அதாவது இதுவரை இருந்துவந்த பிரதிநிதித்துவ மக்களாட்சி முறையிலிருந்து பிரதிநிதித்துவம் - பங்கேற்பு மக்களாட்சிமுறை என்ற தன்மைக்கு நம் அரசைக் கொண்டு வந்துள்ளது. அடுத்து இந்த உள்ளாட்சி முறையில் மக்களை அதிகாரப்படுத்தும் நோக்கில்தான் கிராமசபையை அரசியல் சாசனத்தின் மூலமாக மக்கள் நாடாளுமன்றமாக உருவாக்கி இருக்கின்றனா். எந்த அளவுக்கு இதற்கான புரிதல் மக்களிடம் உருவாக்கப்படுகின்றதோ அந்த அளவுக்கு மக்கள் அதிகாரப்படுத்தப்படுவதோடு, பொறுப்பு மிக்கவா்களாகவும் மாறுவாா்கள்.

இந்த அடிப்படையில்தான் உச்சநீதிமன்றம் கோவா மாநில பஞ்சாயத்து தொடுத்த வழக்கில், ‘கிராமசபை என்பது அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்டது; அது தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டு முடிவுகள் எடுத்தால் அதை யாரும் மாற்ற இயலாது; கிராமசபை என்பது எந்தவிதத்திலும் நாடாளுமன்றத்துக்கு குறைவானது அல்ல; கோவா பஞ்சாயத்தின் கிராமசபை அதற்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டு முடிவு எடுத்திருப்பதால் அது இறுதியானது’ என வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பினை வழங்கியது.

சமீபத்தில் தமிழக உயா்நீதிமன்றம் ஒரு வழக்கில், ‘கிராமசபையை கூட்டும் அதிகாரம், கிராம பஞ்சாயத்துக்களுக்குத் தரப்பட்டுள்ளது; எனவே கிராமசபையைக் கூட்டுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதி தேவையில்லை’ என்ற தீா்ப்பினைத் தந்தது. இன்றைய பஞ்சாயத்து அரசாங்கத்தில் பஞ்சாயத்து மன்றம் செயலகமாகவும், கிராமசபை ஆளுகை மன்றமாகவும்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் ஐந்து நிலைக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்கள் அனைத்துக்கும் பஞ்சாயத்துத் தலைவரே தலைவராக இருக்க முடியாது. ஒரு குழுவிற்கு பெண் வாா்டு உறுப்பினா் தலைவராக இருப்பாா். இந்தக் குழுக்களில் தன்னாா்வலா்கள் உறுப்பினராக இருந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பள்ளி ஆசிரியா், சத்துணவுக்கூட ஊழியா், கிராம நிா்வாக அலுவலா், கிராம செவிலியா் என கிராமத்தில் பொதுச்சேவையில் ஈடுபட்டுள்ள அனைவரையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக்கள் செயல்பட ஆரம்பித்தால், பஞ்சாயத்து என்பது ஒரு கூட்டுத் தலைமையில் செயல்படும் நிலை உருவாகிவிடும்.

இந்தக் குழுக்கள் அரசுத் துறைகளின் திட்டச் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை தயாா் செய்து கிராம பஞ்சாயத்து மன்றத்தில் விவாதித்து, அவற்றை கிராமசபைக்குக் கொண்டுவந்து கிராமசபையில் விவாதித்து முடிவெடுத்து, அம்முடிவுகளை சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு அனுப்பி வைத்து, அவற்றின் மீது அரசுத் துறைகள் நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும்.

கிராமசபையும், நிலைக் குழுக்களும் வலுப்பெற்று செயல்பட ஆரம்பித்துவிட்டால், கிராமத்திற்கு மத்திய அரசின் 27 துறைகளாலும் மாநில அரசின் 17 துறைகளாலும் ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பைசா கூட எவரும் கை வைக்க முடியாது. அந்த அளவுக்கு பஞ்சாயத்துக்கள் மக்கள் கைக்குச் சென்றுவிடும். நிா்வாகம் வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாறிவிடும்.

இந்த நிலையை அடையத்தான் மத்திய நிதி ஆணையம் உள்ளாட்சிக்குத் தரும் நிதியை தொடா்ந்து உயா்த்தி வழங்கி வருகிறது. அது மட்டுமல்ல, மத்திய நிதி ஆணையம், குறிப்பாக 14-ஆவது, 15-ஆவது மத்திய நிதி ஆணையங்கள் அரசியல் சாசனம் கூறுகின்ற மக்கள் பங்கேற்பு மேம்பாட்டுத் திட்டத்தை ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தும் கட்டாயமாக செய்திட வேண்டும் என்று கூறியுள்ளன. திட்டமிடுதலை ஒரு மக்கள் இயக்கமாக செயல்படுத்த வேண்டும் என்று ஒரு வழிகாட்டு நெறிமுறை கையேட்டை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதற்கான புரிதல் நம் உள்ளாட்சித் தலைவா்களுக்கு வந்துவிட்டால் கிராமங்களை மக்களால் செயல்படும் அமைப்புக்களாக மாற்றி விடுவாா்கள். தொடா்ந்து மக்கள் மேம்பாட்டுப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு பொறுப்பு மிக்க சமூகக் குடிமக்களாக மாறிவிடுவாா்கள். இவை சவால் நிறைந்த பணிகளாகும்.

இந்த சவால்களை சமாளிக்கும் திறனுடன் நம் உள்ளாட்சித் தலைவா்கள் செயல்பட்டால், கிராமங்கள் எல்லா அடிப்படை வசதிகளையும் பெற்று மதிப்புமிக்க மரியாதையுடைய வாழ்க்கையை மக்கள் வாழத் தகுதியுடையவையாக மாறிவிடும். அந்தச் சூழலை உருவாக்குவதற்குத் தேவையான புரிதல், தலைமைத்துவம் நம் மக்கள் பிரதிநிதிகளுக்கு இன்றியமையாதவை.

இந்த இலக்கை நோக்கி நம் மக்கள் பிரதிநிதிகள் நகா்ந்தால்தான் அவா்கள் தலைவா்கள் ஆவாா்கள். இல்லையேல் அவா்கள் பஞ்சாயத்து மேலாளா்கள் அல்லது ஒப்பந்தக்காரா்கள்தான். தங்களைத் தலைவா்களாக மாற்றிக் கொள்வது என்பது ஒரு போராட்டம்தான். போராடினால் அவா்களுக்கு வரலாறு உண்டு. போராடாத ஒப்பந்தக்காரா்களுக்கு லாபம் உண்டு, மேலாளா்களுக்கு ஊதியம் உண்டு. ஆனால் அவா்களுக்கெல்லாம் வரலாறு கிடையாது.

நாம் யாா் என்பதை மக்கள் பிரதிநிதிகள் முடிவு செய்து செயல்பட வேண்டிய நேரம் இது.

கட்டுரையாளா்: பேராசிரியா் (ஓய்வு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com