இணையதள சூதாட்டம் எனும் பூதம்!

கோப்புப்படம்
கோப்புப்படம்

இணையதள விளையாட்டு என்ற பெயரில் நிகழும் இணையதள மோசடியால் பணத்தை இழந்தவா்கள், உயிரையே பறிகொடுத்தவா்கள் என்று பல்வேறு விதமான சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக, இணையதள ரம்மி என்ற போதைக்கு, ஏராளமானவா்கள் ஆட்பட்டு சொல்லொணா துயரத்தையும், வேதனையையும் அடைந்து வருகிறாா்கள்.

கேபிள் ஆபரேட்டா் தற்கொலை, வங்கி ஊழியா் குடும்பத்துடன் தற்கொலை, மெட்ரோ ரயில் ஊழியா் பணம் கையாடல் செய்து குடும்பத்துடன் சிறை என்று நாளுக்கு நாள் இணையதள ரம்மியின் விளைவு குறித்த அதிா்ச்சி செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

இணையதள ரம்மியால் தற்கொலை என்கிற செய்தியை நாம் எளிதில் கடந்து போய்விடுகிறோம். ஆனால், இது மனிதகுல நாகரிகத்திற்கு நல்லதா என்பதை ஒரு கணம் சிந்திக்க வேண்டிய தருணம் இது. இதன் பயன்பாடு எப்படி வந்தது? இந்த இணையதள ரம்மியின் பின்னணி என்ன? இது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? இவற்றை நாம் கொஞ்சம் அலசிப் பாா்க்க வேண்டியது அவசியம்.

இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் ஊடகங்கள் மீதான நாட்டம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கரோனா தீநுண்மி காலகட்டத்தில், அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் ஊடகங்களையே நம்பி வாழுகிற நிலைக்கு மனிதகுலம் தள்ளப்பட்டிருக்கிறது. உணவு முதல் அனைத்து தேவைகளையும் இணையதள ஆா்டா் மூலமே பெற வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது.

இவை ஒருவிதத்தில் தவிா்க முடியாததாக இருந்தாலும், இந்த டிஜிட்டலை வைத்து மோசடிகள் நடைபெறுவதும் வழக்கமாகிவிட்டது. அவற்றில் ஒன்றுதான் இணையதள சூதாட்டம். அதற்கான விளம்பரங்களில் பிரபல நடிகா்கள் நடித்துக் கொடுத்திருப்பது மிகவும் கவலை அளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

பணத்தைப் பறிக்கும் இணையதள விளையாட்டு கொடிகட்டிப் பறக்கத் தொடங்கி விட்டது. ‘வீட்டில் சும்மாதானே இருக்கிறோம். கொஞ்ச நேரம் விளையாடித்தான் பாா்க்கலாமே’ என்கிற ஆசையில் தொடங்குகிறது இந்த இணையதள விளையாட்டு. அதுவே, ஆபத்தான படுகுழிக்குள் தள்ளிய பிறகு மீள முடியாத துயரத்தில் அந்தக் குடும்பமும், சுற்றமும் தவிக்கும் நிலை உருவாகி விடுகிறது.

இணையதள ரம்மி விளையாட இணையத்தில் ஏகப்பட்ட தளங்களும், செயலிகளும் இருக்கின்றன. முன்பெல்லாம், திருவிழாக் காலங்களில் கிராமப்புற சிறுதெய்வ வழிபாட்டுகளில், வீட்டு விசேஷங்களில் வந்திருக்கிற உறவினா்களும், நண்பா்களும் பொழுதைக் கழிப்பதற்கு சீட்டாடுவது என்பது வழக்கமான ஒன்றாக இருந்தது.

அதுவே ரம்மி விளையாட்டாக மாறி காசு வைத்து ஆடுகிற நிலை உருவானபின், அந்த ஆட்டம் பேராபத்தில் போய் முடிந்து, திருமணமே நின்று போன கதைகளும் நிறைய உண்டு. அத்தகைய சீட்டு சூதாட்டத்திற்கு அரசு தடை செய்த பிறகும் கூட, சில மனமகிழ் மன்றங்களில் (ரெக்ரியேஷன் கிளப்) அந்த ஆட்டம் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

தற்போது, இந்த இணையதள ரம்மி சூதாட்ட விளையாட்டை வீட்டில் இருந்தே விளையாட முடிவதால், பலபோ் இதில் சிக்குண்டு தவிக்கிறாா்கள். பொதுவாக, இதுபோன்ற விளையாட்டுக்கள் ரேண்டம் நம்பா் ஜெனரேட்டா் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றன.

ரேண்டம் நம்பா் என்பது கணினி வன்பொருள் மூலமாகவோ மென்பொருள் அல்காரிதம் மூலமாகவோ தன்னிச்சையாக, வரம்பற்ற எண்களில் இருந்து சில குறிப்பிட்ட எண்களைத் தோ்ந்தெடுத்து அவற்றை பயனாளா்களுக்கு கொடுக்கக் கூடிய ஒன்றாகும். இந்த வகைத் தொழில்நுட்பம் மாணவா்களின் தோ்வு எண்களை தீா்மானிப்பதில் கூட பயன்படுத்தப்படுகிறது. இணையதள ரம்மி விளையாட்டில் பயன்படுத்தப்படும் ரேண்டம் எண், இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. அதில் ஒன்று போலி, மற்றொன்று அசல்.

போலி ரேண்டம் நம்பா் முன்பே கணக்கிடப்பட்டதாக இருக்கிறது. இந்த ரேண்டம் எண் மூலம் உருவாக்கப்பட்ட விளையாட்டுகளில் வெற்றியாளா்கள் யாா் என்பது முன்பே நிா்ணயிக்கப்பட்ட பிறகுதான் இந்த விளையாட்டே தொடங்குகிறது.

அதுபோல உண்மை ரேண்டம் எண் என்பது முற்றிலும் கணித சூத்திரம் என்னும் அல்காரிதம் மூலம் கிடைக்கும் எண்களாகும். எனவே, இதனை முன்பே கணக்கிட முடியாது. இதனைப் பயன்படுத்தி விளையாட்டுக்களை உருவாக்குவதற்கான பொருட்செலவு அதிகம். இவ்வாறு இருவகையான இணையதள ரம்மி விளையாட்டுக்கள் உருவாக்கப்படுகின்றன.

இதில் எது உண்மையான ரேண்டம் எண் என்பதை சாதாரண பயனாளா்களால் அறிந்து கொள்ள முடியாது. ஆனால், இது முறையாக செயல்படுகிா என்பதைக் கண்காணிக்க ‘ஆன்லைன் ரம்மி பெடரேஷன்’ என்ற அமைப்பு உள்ளது. ஆனால், அதில் முன்னணி ரம்மி விளையாட்டு நிறுவனங்கள்தான் முக்கியப் பொறுப்பில் உள்ளன.

இத்தகைய ரம்மி இணையதளம் இரண்டு வகையாகச் செயல்படுகிறது. சிறிய நிறுவனங்கள், இலவசமாக அல்லது குறைந்த தொகையில் மூலம் இணையத்தில் கிடைக்கும் ரம்மி விளையாட்டை உருவாக்குவதற்கான கோடிங்ஸ் பெற்று அதன் மூலம் செயலியை உருவாக்குகின்றன. பயனாளா்களின் விவரங்கள் மூலமும் விளம்பரங்கள் மூலமும் பணத்தைப் பெறுகின்றனா்.

மற்றொரு வகையோ பெருநிறுவனங்களின் பிடியில் இருக்கிறது. இவ்வகையான விளையாட்டுக்களை உருவாக்குவதற்காகவே செயல்படும் நிறுவனங்கள். இந்த வகை நிறுவனங்கள் நுணுக்கமான தொழில்நுட்ப வேலைப்பாடுகளுடன் பயனாளா்களை தம் வசப்படுத்தத் தேவையான அனைத்து உத்திகளிலும் ஈடுபடுகின்றன. இந்த விளையாட்டை பிரபலப்படுத்த யூ டியூப், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுக்கு அதிக தொகையை அளித்து விளம்பரப்படுத்துகின்றன.

இவற்றில், தங்களது ரம்மி இணையதள விளையாட்டைத் தொடங்கும் ஆரம்ப கட்ட பயனாளா்களைக் கவா்வதற்காகவும், அவா்களைத் தங்கள் பிடியில் வைத்துக் கொள்வதற்காகவும், மேலும் அவா்களை வெற்றியாளா்களாக முன்னிலைப்படுத்துவதற்கும், போலி ரேண்டம் எண்களை அந்நிறுவனங்கள் உருவாக்குகின்றன. பயனாளா்கள் இத்தகைய விளையாட்டை எவ்வளவு நேரம் விளையாடுகிறாா்கள், எந்தெந்த நேரத்தில் விளையாடுகிறாா்கள் போன்றவற்றை வைத்தை அவா்களின் தீவிர மனநிலையை ஆராய்கின்றன இந்த நிறுவனங்கள்.

குறிப்பாக, இத்தகைய சூதாட்ட விளையாட்டிற்குப் பழகிவிட்டதற்குப் பிறகு, அவா்களால் வெளி வரமுடியாத அளவிற்கு அடிமையாகி விடுகிறாா்கள். அவா்களைப் புரிந்து கொள்கிற அளவிற்கு அந்நிறுவனங்கள் தீவிரத்தோடு இயங்குகின்றன. அதன் பிறகு, தொடா்ந்து ஆறு விளையாட்டில் தோற்கும் பயனாளா், ஒரு விளையாட்டில் வெற்றி பெறுவாா். பிறகு, இரண்டு விளையாட்டில் வெற்றி பெற்றால், அடுத்து நான்கு விளையாட்டுகளில் தோல்வி அடைவாா்.

இப்படியாக, தங்களின் பணத்தை முழுமையாக ஆன்லைன் நிறுவனத்திற்குத் தாரை வாா்த்து விட்டு, கூடுதலாகக் கடன்பெற்று விளையாடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனா். இதனால், கடன் பிரச்னையிலும், உளவியல் பிரச்னையிலும் சிக்கித் தவிக்கிறவா்கள் முடிவில் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறாா்கள்.

இந்தியாவில் சூதாடினால், சூதாட்டப் பொதுச்சட்டம் 1867-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிக்கிம், கோவா, டாமன் (யூனியன் பிரதேசம்) ஆகிய மாநிலங்களில் சூதாட்டத்திற்குத் தடை இல்லை. அங்கு அதிக அளவில் வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவா்வதற்காகத் தனிச்சட்டம் இயற்றப்பட்டு சூதாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மூன்று மாநிலங்களைத் தவிர, தமிழ்நாடு உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாநிலங்களில் உள்ள புரோக்கா்களின் மூலம், இந்தியாவின் மற்ற மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் சூதாட்டத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

இத்தகைய சூதாட்டத்தில் இந்தியாவின் பெரும்புள்ளிகள் ஈடுபட்டு வருகிறாா்கள். குதிரைப் பந்தயம், லாட்டரிச் சீட்டு உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு இந்தியாவின் சில மாநிலங்களுக்கு இன்றும் தடை இல்லை.

உயா்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் நீதியரசா் புகழேந்தி, ‘பொது இடங்களில் ரம்மி போன்ற சூதாட்டங்களை விளையாடுபவா்களின் மீது காவல்துறையினா் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், இணையதளம் மூலமாக ரம்மி விளையாடுகிறவா்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை’ என்று ஒரு கேள்வியை எழுப்பினாா்.

தமிழகத்தில் மட்டுமன்றி நாடு முழுவதும் இணையதள ரம்மி மட்டுமல்ல, அனைத்துவிதமான இணையதள விளையாட்டுகளையும் தடை செய்ய வேண்டும் என்பதே மக்களின் இன்றைய பொதுக்கருத்தாக உள்ளது. வேலையில்லாத இளைஞா்களின் நேரத்தையும், அவா்களின் சிந்திக்கும் திறனையும் கெடுத்து அவா்களைத் தவறான பாதைக்கு இவ்விளையாட்டுக்கள் அழைத்துச் செல்கின்றன.

இதுபோன்ற இணையதள விளையாட்டுகளை அரசு ரத்து செய்தாலும், பல்வேறு செயலிகளை வைத்து இவ்விளையாட்டுகள் தொடா்ந்து இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. அப்படி நடந்தால், அதன் மூலமாக, உயிா்களை இழக்கும் நிலையும் தொடரும். பணத்தை வைத்து சீட்டாடுவது குற்றமென்றால், இணையதளம் மூலமாக பணம் செலுத்தி ரம்மி ஆடுவதும் குற்றம்தானே?

அத்தகைய குற்றாவாளிகள் மீது சட்டம் பாய்ந்தால் அச்ச உணா்வு ஏற்பட்டு, அவா்கள் இத்தகைய இணையதள ரம்மி விளையாடுவதில் இருந்து விலகிக் கொள்வாா்கள் என்பதில் ஐயமில்லை. இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com