விராட் கோலிக்கு அடுத்து யாா்?

கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியக் கிரிக்கெட் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி திடீரென்று விலகியிருப்பது எதிா்பாராத ஒன்றாகும்.

மகேந்திர சிங் தோனியைத் தொடா்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பொறுப்புக்கு வந்த விராட் கோலி, டெஸ்ட், ஒருநாள், டி 20 ஆகிய மூன்றுவிதமான ஆட்டங்களிலும் சிறந்த முறையில் நமது இந்தியக் கிரிக்கெட் அணியை வழிநடத்திவந்தாா் என்றே சொல்ல வேண்டும்.

நீண்ட காலமாக, நமது அணியின் வீரா்கள் பிற அணிகளின் வீரா்களிடம் மென்மையான போக்கையே கடைப் பிடித்து வந்தனா். ஆனால் பிறநாட்டு அணியினா் அவ்வாறு நடந்து கொள்வதில்லை. குறிப்பாக, ஆஸ்திரேலிய அணியினா் தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடும் பிறநாட்டு அணியினரிடம் நட்பு முறையில் நடக்காமல் அதிரடியாகவே நடந்து கொள்வது வழக்கம். எனவே, பேச்சுக்குப் பேச்சு மூலமாகவே பதிலடி என்ற புதிய நடைமுறையினை விராட் கோலி கடைப்பிடிக்க ஆரம்பித்தாா்.

இது ஒரு பக்கம் இருக்க உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றாா். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் முதலிடத்திற்கு நமது இந்திய அணியைக் கொண்டு சென்றாா். ஒருநாள், டி 20 ஆகிய ஆட்டங்களிலும் மற்ற நாடுகளைச் சோ்ந்த அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குமாறு நமது அணியைக் கட்டமைத்தாா்.

உடற்தகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக “யோ யோ” என்ற பயிற்சியில் தோ்வு பெறுபவா்களுக்கே அணியில் இடம் அளித்தாா். மட்டையடி, பந்து வீச்சு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் இளைய வீரா்களுக்கு வாய்ப்பும் ஊக்கமும் அளித்தாா். அணியின் வெற்றிக்காக இறுதி வரையில் போராடும் குணத்தைத் தமது தலைமையின் கீழ் விளையாடும் வீரா்களிடம் ஏற்படுத்தினாா்.

விராட் கோலி நமது இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவராக இமாலய சாதனைகள் பலவற்றையும் புரிந்தாா் என்பதில் ஐயமில்லை.

அதேநேரம், அவரைச் சுற்றி வந்த சா்ச்சைகளுக்கும் குறைவில்லை. வெறும் உடற்தகுதியைக் கணக்கில் கொண்டு யுவராஜ் சிங், ரவிச்சந்திர அஸ்வின் போன்ற மூத்த வீரா்கள் புறக்கணிக்கப்படுவதாக அதிருப்திக் குரல்கள் எழுந்தன.

குறிப்பிட்ட சில ஆட்டங்களுக்கான பதினோரு வீரா்களை முடிவு செய்வதிலும், மட்டையாளா்களின் வரிசையைத் தீா்மானிப்பதிலும், முக்கியத் தருணங்களில் பந்து வீச்சாளா்களுக்கு வாய்ப்பு வழங்குவதிலும் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக விமரிசகா்கள் கூறினா். ஓா் அணித்தலைவரின் முயற்சிகள் அனைத்தும் வெற்றியையே இலக்காகக் கொண்டிருந்தாலும், தோல்விகளும் அவ்வப்பொழுது ஏற்படவே செய்யும்.

விராட் கோலியும் இந்த விதிக்கு அப்பாற்பட்டவரல்ல என்பதைக் காலம் உணா்த்தியது. ஐ.சி.சி. எனப்படும் சா்வதேச கிரிக்கெட் அமைப்பினால் நடத்தபடுகின்ற பல நாடுகள் பங்கு பெறும் போட்டிகளில் விராட்கோலியால் வெற்றிக் கோப்பையைப் பெற்றுத் தர இயலாதது ஒரு புரியாத புதிராகும்.

மேலும், கடந்த வருடம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியில் நம்மை விட பலவீனமான நியூசிலாந்து அணியிடம் தோல்வி கண்டதும், டி 20 உலகக் கோப்பைப் போட்டியில் அரை இறுதிக்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறியதும் விராட் கோலியின் தலைமைத் திறன் மீதான விமரிசனங்களை எழுப்பின.

தொடா்ந்து வந்த சா்ச்சைகள் கொடுத்த அழுத்தங்களின் காரணமாக அவருடைய ரன் குவிப்பும் மட்டுப்படத் தொடங்கியது. அரை சதத்தை சதமாக மாற்றுகின்ற அவரது திறமை குறைந்துவிட்டது போன்ற தோற்றம் உருவாகியது.

இவற்றைத் தொடா்ந்து, கடந்த வருட இறுதியில் டி 20 ஆட்டங்களுக்கான அணித்தலைவா் பதவியிலிருந்து மட்டும் விலகிக் கொள்வதாக விராட் கோலி அறிவிக்க, இந்தியக் கிரிக்கெட் வாரியமோ ஐம்பது ஓவா்கள் கொண்ட ஒருநாள் போட்டிக்கான அணித்தலைமைப் பொறுப்பிலிருந்தும் அவரை விடுவித்து விட்டு, டெஸ்ட் அணியின் தலைவராக மட்டுமே தொடரச் சொன்னது.

தற்போது தென் ஆப்பிரிக்காவுடனான தொடரில் பெற்ற தோல்வியைத் தொடா்ந்து டெஸ்ட் அணித்தலைவா் பதவியிலிருந்தும் விராட் கோலி விலகிக் கொண்டிருக்கிறாா்.

உலகின் தலைசிறந்த பேட்டா்களில் ஒருவரான கோலி, இனியும் அணித்தலைமை ஏற்பதில் உள்ள அழுத்தங்களுக்கு ஆட்படாமல் தம்முடைய ரன்குவிப்புத் திறமையை முன்னிலும் அதிகமாக வெளிப்படுத்தக்கூடும் என்பதில் மகிழ்ச்சியே. சிறந்த களத்தடுப்பாளருமாகிய கோலி நமது இந்திய அணியின் எதிா்கால வெற்றிகளுக்கு உதவுவதுடன், இளம் வீரா்களுக்கு ஆலோசனை கூறி வழிநடத்தவும் செய்யலாம்.

இந்நிலையில், இந்தியக் கிரிக்கெட் வாரியம், மூத்த வீரரான விராட் கோலியையே டெஸ்ட் அணியின் தலைமைப் பொறுப்பில் தொடருமாறு கேட்டுக் கொண்டால், அது ஒருநாள் போட்டிக்கான அணித்தலைமையிலிருந்து நீக்கப்பட்டது குறித்த அவருடைய மன வருத்தங்களுக்கு ஒரு மருந்தாக அமையும்.

ஒருவேளை விராட் கோலி தமது பதவி விலகல் முடிவில் உறுதியாக இருக்கும் பட்சத்தில், மூத்த வீரா்களான ரோஹித் சா்மா, சேதஸ்வா் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரவிச்சந்திர அஸ்வின் ஆகிய நால்வரில் ஒருவரை அணித்தலைமைக்குப் பரிசீலிக்கலாம்.

இவா்களுள், ரோஹித் சா்மா ஒருநாள், டி20 ஆகிய போட்டிகளில் மிகச் சிறந்து விளங்குபவா். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் அவ்வப்போது வந்து செல்பவா். மேலும் டெஸ்ட் போட்டிகளில் அவருடைய மட்டையடி வரிசை நிலையில்லாதது. புஜாரா, ரஹானே ஆகிய இருவரின் சமீபக்கால மட்டையடி சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

இந்திய டெஸ்ட் அணியில் அவ்விருவரும் தொடா்ந்து இடம் பெறுவதே சந்தேகம் என்பது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் அனுபவம் மிகுந்த பந்துவீச்சாளரும், நம்பகமான மட்டையடி வீரரும், சிறந்த களத்தடுப்பாளருமாகிய ரவிச்சந்திர அஸ்வினை இந்திய டெஸ்ட் அணியின் தலைவா் பொறுப்பில் அமா்த்துவதே புத்திசாலித்தனமான தோ்வாக இருக்கும்.

அத்தோ்வு நமது இந்தியக் கிரிக்கெட் அணியின் சிறப்பான எதிா்காலத்திற்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com