சரிநிகர் சமானமாய்...

கோப்புப்படம்
கோப்புப்படம்

சங்க காலத்தில் பெண்பாற் புலவர்கள் அரசவையை தங்களது அறிவார்ந்த சிந்தையால் செழுமைப்படுத்தியிருக்கிறார்கள். பெண்ணரசிகள் செங்கோல் உயர்த்தி நாடாண்டுள்ளனர். ராஜா ராம்மோகன் ராய், மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், சகோதரி நிவேதிதை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்ற எண்ணற்றவர்கள் பெண் விடுதலைக்காகப் போராடினர். 

'தையலை உயர்வு செய்' என்றும் 'ஆணுக்கு பெண்ணிங்கே இளைப்பில்லை' என்றும் சமத்துவம் பேசினார் பாரதியார். விடுதலைக்குப் பின் ஏற்பட்ட விழிப்புணர்ச்சி காரணமாக பெண்கள் நிலை சற்று மேம்பட்டது. அதன் விளைவாக இன்று பெண்கள் கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்று, பல துறைகளிலும் ஞானம் பெற்றவர்களாக விளங்குகின்றனர்.

மத்திய அரசு, பெண் குழந்தைகள் நலனுக்காக மருத்துவ கருக்கலைப்பு சட்டம் (1971), குழந்தைத் திருமண தடைச் சட்டம் (2006), பெண் குழந்தைகளுக்கான இலவச - கட்டாயக் கல்வி அளிக்கும் சட்டம் (2009), பெண் குழந்தைகளை பாலியல் தொழிலிருந்து மீட்கும் சட்டம், பெண் குழந்தைகள் கடத்தல் தடுப்பு சட்டம் என்று பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளது. 

மேலும் 'செல்வ மகள் சேமிப்புத் திட்டம்', 'பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டம்', அரசுப்பணியில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, இவற்றோடு தமிழக அரசு சார்பில் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் மூலம் நிதி உதவி, தாய் - சேய் நலத்திட்டம், பெண்களுக்கான திருமண உதவித் திட்டம், பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் போன்ற நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்தியாவின் அனைத்து குடும்பங்களுக்கும் பொருந்துகிற, பெண் குழந்தைகளுக்கும் சொத்துரிமையில் பங்கு சட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மத்திய அரசின் சமீபத்திய முடிவான பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21-ஆக உயர்த்துவது, பெண்கள் உயர்கல்வி பயிலுவதற்கு உகந்த சூழலை உருவாக்கியுள்ளது.

இவையெல்லாம் இருப்பினும், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், அத்துமீறல்கள், பாலியல் வன்கொடுமைகள் ஆகியவை கவலையளிக்கின்றன. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அவர்களை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்ப மறுப்பது, இளம் வயதில் திருமணம் செய்து வைப்பது போன்றவை இன்றும் தொடர்கின்றன. தொன்மையான கலாசாரமும், நாகரிகமும் கொண்ட பாரதத் திருநாட்டில் நாள்தோறும் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளால் சர்வதேச அரங்கில் நம் நாட்டின் மதிப்பு சரியத்தொடங்கி உள்ளது. 

பெண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை அளிப்பதிலிருந்து, அவர்களுக்குத் தேவையானவற்றை வாங்கித் தருவது வரை பல இல்லங்களில் பாரபட்சம் காட்டப்படுவது மறுக்க முடியாத உண்மை. சத்துக் குறைபாட்டால், உடலியல் சார்ந்த பல பிரச்னைகளை பெண்கள் சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக, பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் ரத்த சோகை நோய்க்கு ஆளாகின்றனர். 

இதனைத் தடுப்பதற்கு, ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் சமமாக பாவிக்கிற மனநிலையை பெற்றோர் பெற வேண்டும். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு ஆண் குழந்தைகளின் ஒழுக்கமும் முக்கியம். 

வீட்டிற்கு தாமதமாக வரும் பெண் பிள்ளைகளைப் பற்றி கவலைப்படும் பெற்றோர் பலர், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் ஊர் சுற்றும் ஆண் பிள்ளைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை.

என்னதான் கல்வியில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் வளர்ந்தாலும், பெண் பிள்ளைகளைப் பெற்றால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகும் நிலை இன்னும் நீங்கவில்லை. வரதட்சணை கொடுமைகள் மாறுபட்ட வடிவத்தில் அந்தஸ்து என்ற பெயரில் தொடர்கிறது. பெண் பிள்ளைகளை இரண்டாம்பட்சமாக பார்க்கும் மனநிலையும் நம் நாட்டைவிட்டு இன்னும் முற்றாக நீங்கவில்லை. 

பூமியை, தேசத்தை, நதியைப் பெண்ணாகப் பார்க்கும் பாரம்பரியம் கொண்ட பாரதத்தில்தான் சிறுமிகள்கூட பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். 
இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் கைப்பேசி வழியாகவும், இணையதளம் மூலமாகவும் பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அதிகரித்ததாக சர்வதேச ஆய்வு ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகத்தில் உள்ள மொத்த குழந்தைகள் எண்ணிக்கையில் 19% பேர் இந்தியாவில் உள்ளனர். இவர்களை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வளர்க்க வேண்டிய பொறுப்பு, சமூகத்திற்கு மட்டும் இல்லை, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உள்ளது. 

பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளில் 99 விழுக்காடு, போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவு கூறுகிறது. இந்திய அளவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்திலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

பாலின சமத்துவத்தைப் பேணிக்காக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தனிமனிதருக்கும் உண்டு. ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதான் உலகம் என்பதை அறிவுறுத்தவே, இறைவன் மாதொருபாகனாகக் காட்சியளிக்கிறார்.
ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்ற நிலையை எய்துகின்ற நாளில்தான் நம் சமூகம் ஆறறிவு பெற்ற நாகரிக சமூகம் என்ற பெருமையைப் பெற முடியும். உயர்வான சிந்தனைகளையும், நல்ல பழக்க வழக்கங்களையும் நம் சந்ததியினருக்கு கற்றுத் தருவதே நாம் இப்பிறவியில் ஆற்ற வேண்டிய முக்கிய கடமை. 

இன்று (ஜன. 24)  தேசிய பெண் குழந்தை நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com