அரசு கட்டடத்துக்கு அழகு எது?

அண்மையில் தமிழக முதல்வர், அரசுப் பள்ளிகள், விடுதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சார்-பதிவாளர் அலுவலகங்கள், நகர் ஊரமைப்பு இயக்குநரக அலுவலக கட்டடங்கள் ஆகியவற்றுக்கான பொதுவான முகப்புத் தோற்றத்தின் மாதிரி
அரசு கட்டடத்துக்கு அழகு எது?



அண்மையில் தமிழக முதல்வர், அரசுப் பள்ளிகள், விடுதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சார்-பதிவாளர் அலுவலகங்கள், நகர் ஊரமைப்பு இயக்குநரக அலுவலக கட்டடங்கள் ஆகியவற்றுக்கான பொதுவான முகப்புத் தோற்றத்தின் மாதிரிகளை வெளியிட்டுள்ளார். 

அது போலவே, நியாயவிலைக் கடை கட்டடங்கள் அனைத்தையும் மேம்படுத்தி ஒரே மாதிரியான புதிய வடிவில் அமைக்க முடிவு செய்து அதற்கான மாதிரித் தோற்றத்தை மாநில உணவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் சொந்தக் கட்டடம் கட்டப்படும் என்றும், அனைத்து கடைகளும் புதிய வடிவமைப்பில் கட்டப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு கட்டடத்துக்கும் ஒரு வரலாறு உண்டு. தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்திலும், அதன் பிறகு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் கட்டப்பட்ட பல கட்டடங்கள் நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் அவற்றின் பாரம்பரியத்தையும், பெருமையையும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. 

திருநெல்வேலியில் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ள பாண்டியர் காலத்துக் கட்டடம் (ஆங்கிலேயர்கள் ஊமைத்துரையை சிறை வைத்திருந்த இடம்), மதுரையில் திருமலை நாயக்கர் மஹால், சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை, கொடைக்கானலில் கோஹினூர் மாளிகை என பல பழைமையான பாரம்பரிய கட்டடங்கள் குறித்து சொல்லிக் கொண்டே போகலாம். இவை எல்லாம், அக்காலத்திய கட்டடக் கலையின் அழகையும், கட்டியவர்களின் பெருமைகளையும் இன்றும் கூறிக் கொண்டு நிமிர்ந்து நிற்கின்றன.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு,  தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்களும்,  பண்டைக்கால பாரம்பரிய கட்டடங்களைப்போல எதிர்காலத்தில்  தமிழ்நாட்டின் கட்டடக் கலையின் அழகியலையும், ஆட்சியாளர்களின்  பெருமைகளையும் கூற வேண்டும் என நினைத்து தங்களது ஆட்சிக் காலத்தில் பல்வேறு  பெரிய, அழகிய கட்டடங்களைக் கட்டியுள்ளனர். அந்த வரிசையில் இப்போது சில அரசு கட்டடங்களின் புதிய தோற்றத்தின் மாதிரிகளை முதல்வரும், அமைச்சரும் வெளியிட்டிருக்கலாம்.

நம் நாட்டில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில், தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் அரசுப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், விடுதிகள், சார்-பதிவாளர் அலுவலகங்கள், நியாயவிலைக் கடைகள் சொந்தக் கட்டடங்களில்தான் இயங்கி வருகின்றன. ஆனாலும் தேவையுள்ள இடங்களிலும், பழுதடைந்த அல்லது பராமரிக்க முடியாத கட்டடங்களையும் அகற்றிவிட்டு புதிய கட்டுமானங்களை கட்ட வேண்டியது அவசியம்தான். 

அவ்வாறு கட்டும்போது அவை அரசு வெளியிட்டுள்ள புதிய வடிவங்களில் கட்டப்படும் என எதிர்பார்க்கலாம். அதைவிடுத்து "மாற்றம்' அல்லது "வளர்ச்சி' என்ற பெயரில் நல்ல நிலையில் பயன்பாட்டில் இருக்கும் கட்டடங்களை எல்லாம் இடித்து அகற்றிவிட்டு புதிய தோற்றத்தில் கட்டடங்களைக் கட்டுவது ஊழலுக்குத்தான் வழிவகுக்கும் என்பதை அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் உணர வேண்டும். 

திருநெல்வேலியில் கடந்த டிசம்பரில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில்  மாணவர்கள் மூன்று பேர் இறந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள 10 ஆயிரத்து 30 பள்ளிக் கட்டடங்களை இடித்து அகற்றிவிட்டு ரூ. 7 ஆயிரம் கோடி செலவில் புதிய கட்டடங்களை கட்ட  திட்டமிட்டுள்ளதாக அரசு அறிவித்தது. 

அரசு நிர்வாகத்துக்கு கட்டடங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் முக்கியம்தான். ஆனால் அதற்காக செலவிடப்படும் நிதி, பொதுமக்களின் வரிப்பணம் என்பதையும், அதை பொறுப்போடு செலவிட வேண்டும் என்பதையும் அரசு நினைவில் கொள்ள வேண்டும். அரசு நிதியில் கட்டப்பட்ட பல கட்டுமானங்கள் தரம் குறைந்தவையாகவும், திறப்பு விழா காணும் முன்பே சில கட்டுமானங்கள் இடிந்து விழுந்துள்ளதையும் நாம் கண்டு வருகிறோம். அவை ஆட்சியாளர்களுக்கு பெருமையை பெற்றுத்தருவதற்கு பதிலாக அவப்பெயரைத்தான் ஈட்டித் தரும் என்பதால் அரசுக்கு கவனம் தேவை.

அதே வேளையில், வெளிப்புறத் தோற்றமான இந்த கட்டடங்களின் தரத்தை மேம்படுத்தவும், அழகுபடுத்தவும் அளிக்கப்படும் அதே முக்கியத்துவம், கட்டடத்தின் உள்ளே பொதுமக்களுக்காக  அரசு ஊழியர்கள் ஆற்றும் பணிகளின் தரத்தை மேம்படுத்த அளிக்கப்பட்டால் நன்றாக இருக்கும். 

அரசுப் பள்ளிகள், விடுதி கட்டடங்களின் முகப்புப் தோற்றத்தை மட்டும் மாற்றினால் போதாது. மாணவர்களுக்கு பாடம் நடத்த போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆரம்பப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை தற்போது காலியாக உள்ள சுமார் 13 ஆயிரம் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். விடுதிகளில் மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்பட வேண்டும். 

அரசு தற்போது ஒதுக்கும் நிதியில் (பள்ளி மாணவர் ஒருவருக்கு மாதத்துக்கு ரூ. 1000, கல்லூரி மாணவருக்கு ரூ. 1,100 மட்டும்) மாணவர்களுக்கு தரமான உணவு அளிக்க முடியாத நிலையில்தான் விடுதி காப்பாளர்கள் உள்ளனர்.  விடுதிகளில் சுமார் 650 காப்பாளர் பணியிடங்களும், 50 சதவீத சமையலர் பணியிடங்களும் காலியாக உள்ளன.  சார்-பதிவாளர் அலுவலகங்களிலும் முறைகேடுகளுக்கு பஞ்சமில்லை.  எல்லாம் முகவர்மயம்தான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நியாயவிலைக் கடைகளை மாற்றி அமைப்பதைவிட, கடைகளில் தரமான பொருள்களைத் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கினாலே அரசு மீதும், ஆட்சியாளர்கள் மீதும் மக்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கடந்த காலங்களில் வழங்கிய அத்தியாவசியப் பொருள்கள் பல இன்று நியாயவிலைக் கடைகளில் விற்பனையில் இல்லை. விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் என்பது  மக்கள் மீதான ஆட்சியாளர்களின் அக்கறையை வெளிப்படுத்தும். 

கட்டடங்களின் தோற்றத்துக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில், பொதுமக்களுக்கான தரமான சேவைக்கு முன்னுரிமை அளித்தால் அரசு அலுவலகங்களின் அழகு, தானாகவே கூடிவிடாதா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com