இஸ்ரேல்: நிலையான அரசு தேவை

இஸ்ரேல்: நிலையான அரசு தேவை

 மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில் பிரதமர் நாஃப்டாலி பென்னட் தலைமையிலான அரசு கடந்த வாரம் கவிழ்ந்ததால், 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு நான்கு ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக அந்நாடு பொதுத்தேர்தலை சந்திக்கவுள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான மசோதாவின் மீது கடந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 92 எம்.பி.க்கள் வாக்களித்தனர். எதிர்த்து ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.
 நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த யாயிர் லபீட், அந்நாட்டின் காபந்து பிரதமராக பதவியேற்றார். வரும் நவம்பரில் இஸ்ரேலில் பொதுத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 எட்டு கட்சிகளைக் கொண்ட இந்த கூட்டணி அரசு, உள்நாட்டு அரசியலில் ஏகப்பட்ட அசாதாரண மாற்றங்களைக் கொண்டு வந்தது. குறிப்பாக, இடதுசாரி, வலதுசாரி கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் அரசில் அங்கம் வகித்தனர். இஸ்ரேல் வரலாற்றில் முதன்முறையாக அரபு கட்சிக்கும் அரசில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது.
 ஓராண்டுக்கு முன்னர் பிரதமர் பதவியை ஏற்றபோது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாஃப்டாலி பென்னட், "என்னைப்போல் அல்லாமல் வேறுபட்ட சித்தாந்தங்களைக் கொண்ட உறுப்பினர்களுடன் இணைந்து ஆட்சி அதிகாரத்தை நடத்தப் போவதை எண்ணி பூரிப்படைகிறேன்' என மகிழ்ச்சியாகக் கூறினார். மேலும் "மாற்று சிந்தனை கொண்ட அரசியல் தலைவர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிப்பேன்' என அவர் உறுதியளித்தார்.
 அதே வேளையில், தேசிய ஒற்றுமை குறித்து வருத்தமுற்ற அவர், உள்நாட்டிலேயே இடதுசாரி, வலதுசாரிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தல், கிழக்கத்திய யூதர்களான மிராஹிம் யூதர்களாலும், ஐரோப்பிய யூதர்களான அஷ்கனாசிம் யூதர்களாலும் இஸ்ரேலில் கடந்த பல ஆண்டுகளாக நிலவும் அரசியல் நிலையற்றத் தன்மை ஆகியவற்றை அவர் தெளிவாக கணித்தார்.
 இதன் காரணமாகவே அடுத்த பொதுத்தேர்தலிலும் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சி உள்பட எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைப்பது கடினம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
 இஸ்ரேல் தனி நாடாக விளங்கினாலும், கடந்த 1992-ஆம் ஆண்டில்தான் இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பரஸ்பர ராஜீய ரீதியிலான உறவு மலர்ந்தது. இதன் காரணமாக நிகழாண்டு ஏப்ரலில் அதன் 30-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா வர இஸ்ரேலின் அப்போதைய பிரதமர் நாஃப்டாலி பென்னட் முடிவு செய்திருந்தார். ஆனால், இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்ததாலும், ஆட்சி அதிகாரத்துக்கு ஆபத்து ஏற்பட்டதாலும் அந்தப் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
 குறிப்பாக அரபு கட்சியுடன் இணைந்து தேசிய ஒற்றுமை அரசை நிறுவியதற்காகவும், காஸாவைச் சேர்ந்த பாலஸ்தீனியர்களுக்கு பணி ஒப்புதல் வழங்கியமைக்காகவும் நாஃப்டாலி பென்னட்டும், அவரது வலதுசாரி கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சித் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கேள்விக் கணைகளுக்கு ஆட்பட்டனர்.
 மேலும் அரசிலிருந்து வெளியேறிய அதன் கொறடா இடிட் சலீம், இந்த அரசு யூத அரசு அல்ல என்றும், வலதுசாரி தொகுதிகளுக்கு விசுவாசமாக இல்லை என்றும் குற்றம்சாட்டினார். மேலும் சித்தாந்த ரீதியாக இஸ்ரேல் அரசு சமரசம் செய்து கொள்வதாகக் கூறிய அவர், இதுவே இஸ்ரேல் அரசு பலவீனமடைய அடிப்படை காரணம் என்றும் தெரிவித்தார்.
 அதன்பின்னர்தான் தேசிய ஒற்றுமை அரசை தக்கவைக்க இயலாத நாஃப்டாலி பென்னட், பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான மசோதாவும் நிறைவேறியது.
 தொடர்ந்து "தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "உள்நாட்டுக் கிளர்ச்சியை எதிர்கொள்ளும் ஒரு நாட்டில், வேறெந்த வாய்ப்புக்கும் இடமில்லாததால் கடைசியில் அந்த கிளர்ச்சிதான் வெற்றி பெறுகிறது' என்று வேதனையுடன் தெரிவித்தார்.
 அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்ட் நிக்ஸனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸ்ஸிங்கர், ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்பே "இஸ்ரேலிடம் தெளிவான வெளியுறவுக் கொள்கை கிடையாது' என கணித்தார். உள்நாட்டு அரசியல் நிலையற்ற தன்மையை எதிர்கொண்டுவரும் அந்நாடு, தெளிவான பார்வை கொண்ட நீண்டநெடிய வெளியுறவுக் கொள்கையை வகுக்க இயலாமல் போனதில் வியப்பில்லை. இதை ஒப்புக்கொண்ட நாஃப்டாலி பென்னட், சர்வதேச தலைவர்களான உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ùஸலென்ஸ்கி, ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத் ஆகியோருடன் நட்பு பாராட்டிய தன்னால், உள்நாட்டில் தனது சொந்தக் கட்சியையும், அரசியல் சூழலையும் நிர்வகிக்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்திருந்தார்.
 ரஷியா- உக்ரைன் இடையே போர் தொடங்கியதும் இருநாடுகளுக்கும் இடையே அவர் மத்தியஸ்தம் செய்ய முயற்சித்ததையும் குறிப்பிட்டாக வேண்டும். இதுதவிர ஐக்கிய அரபு அமீரகத்துடனும் இஸ்ரேல் வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. இதேபோல இஸ்ரேல்-துருக்கி இடையிலான உறவிலும் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. சவூதி அரேபியா, பாகிஸ்தான் உடனும் இஸ்ரேல் நட்பு பாராட்டி வருகிறது. அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதன்முறையாக இஸ்ரேலுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
 இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் க்வாட் மாநாடு விரைவில் நடைபெறவுள்ளது. ஆகையால், இந்தியா - இஸ்ரேல் இடையிலான 30-ஆவது ஆண்டு ராஜீய ரீதியிலான உறவைக் கொண்டாடும் வேளையில், சர்வதேச அளவிலும் இஸ்ரேலின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது என்பதால், அந்நாட்டில் நிலையான அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com