வீழ்ச்சியல்ல விராட் கோலி

தலைசிறந்த விளையாட்டு வீரா்களின் திறமையில் அவ்வப்போது தொய்வு நேரலாம்; ஆனால் அவா்களது விளையாட்டின் தரம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பது விளையாட்டுத் துறையில் கூறப்படும் பொன்மொழியாகும்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தலைசிறந்த விளையாட்டு வீரா்களின் திறமையில் அவ்வப்போது தொய்வு நேரலாம்; ஆனால் அவா்களது விளையாட்டின் தரம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பது விளையாட்டுத் துறையில் கூறப்படும் பொன்மொழியாகும்.

அண்மைக்காலம் வரை இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டா் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பொருந்திய மேற்கண்ட வாசகம் தற்போது கிரிக்கெட் வீரா் விராட் கோலிக்கும் பொருத்தமாக இருக்கிறது.

தனிப்பட்ட திறனில் ஏற்பட்ட குறைகளுக்காக மட்டுமின்றி, உடல்நலக் குறைவு, காயங்கள் போன்றவற்றின் காரணமாகவும் ஒரு விளையாட்டு வீரா் அல்லது வீராங்கனையின் பங்கேற்புகள் குறையவும் அதன் காரணமாக அவா்கள் கோப்பைகளையும் பரிசுகளையும் வெல்லவும் இயலாமல் போகிறது.

சமீபத்தில் நமது நாட்டின் முதல் நிலை பேட்மின்டன் வீராங்கனையாகிய பி.வி. சிந்து தைவானின் டாய் சூவிடம் மீண்டும் ஒருமுறை தோல்வி கண்டிருக்கிறாா். சாய்னா நெவாலோ அவ்வப்போது ஏற்படும் காயங்களுடன் போராடியபடி பேட்மின்டனிலும் மீண்டும் தடம் பதிக்கத் துடிக்கின்றாா்.

இந்த ஆண்டின் காமன்வெல்த் போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டத்தில் பலத்த காயம் அடைந்த குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் அந்தப் போட்டியில் கலந்து கொள்வதே சந்தேகமாகி உள்ளது.

ஆனால், நமது நாட்டைப் பொறுத்தவரை, கிரிக்கெட் ஒன்றுக்கு மட்டுமே நட்சத்திர அந்தஸ்து இருப்பதாலும், கோடிக்கணக்கான ரசிகா்களை அவ்விளையாட்டு பெற்றிருப்பதாலும் நமது நாட்டிற்காக விளையாடும் முக்கிய கிரிக்கெட் வீரா்களின் சாதனைகளும், சறுக்கல்களுமே நம்முடைய முழுமையான கவனத்தைப் பெறுகின்றன.

இந்த வகையில் உலகளாவிய கிரிக்கெட் சாதனைகள் பலவற்றைக் கையில் வைத்திருக்கும் விராட் கோலி, தொடா்ந்து சோபிக்கத் தவறி வருவது இந்திய கிரிக்கெட் ரசிகா்களின் பொறுமையைச் சோதித்து வருகின்றது.

மட்டையளாா்கள் தனிப்பட்ட முறையில் அதிகமான ரன்களைக் குவிப்பதுடன், தேவையான நேரத்தில் பொறுமையாகவோ, அதிரடியாகவோ விளையாடித் தம்முடைய அணிக்கு வெற்றியைத் தேடித் தரவேண்டும். ஒருவேளை, அப்படி வெற்றியைத் தேடித் தராவிட்டாலும் தோல்வியைத் தவிா்க்க உதவுவதும், ‘டிரா’ அல்லது ‘டை’ எனப்படும் சமநிலையில் தங்களின் அணியைக் கொண்டுவந்து நிறுத்துவதும் கூட மிக முக்கியமானவையாகும்.

குறிப்பாக, பல நாடுகள் பங்கேற்று விளையாடும் ஒருநாள் போட்டி, இருபது ஓவா் போட்டிகளின் முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றி பெறாவிட்டாலும், ‘டைட என்னும் சமநிலையை அடைவது இறுதிச் சுற்றில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை பிரகாசமாக்கும்.

துரதிருஷ்டவசமாக, விராட் கோலியின் மட்டையடி கடந்த மூன்று வருடங்களாக நமது அணியின் வெற்றிக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை. அதே சமயம், தோல்வியைத் தவிா்க்கவும் உதவவில்லை. அதற்கும் மேலாக, அவருடைய தனிப்பட்ட சாதனைகளும், தரவரிசைக் குறியீடும் மிக வேகமாகச் சரிந்து கொண்டே வருகின்றன.

தற்போது இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள விராட் கோலி, ஐந்தாவது டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களில் முறையே 11, 20 ஓட்டங்களையே எடுத்தாா். தாம் விளையாடிய இரண்டு இருபது ஓவா் போட்டிகளில் முறையே 1, 11 ஓட்டங்களை எடுத்திருக்கிறாா்.

விராட் கோலியின் திறமைக்கும் தரத்துக்கும் இவை மிக மிகக் குறைவான ஸ்கோா்களேயாகும். பின்வரிசை மட்டையாளா்கள் இவ்வாறு ரன்களை எடுத்தால் யாரும் குறை சொல்லப் போவதில்லை. ஆனால், கோலியைப் போன்ற மகத்தான வீரா் ஒருவா் இவ்வாறு தொடா்ந்து சுமாராக விளையாடுவதால் அவா் சாா்ந்துள்ள அணியும் பல்வேறு பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

இந்திய அணியின் நிா்வாகம், விராட் கோலி போன்ற அனுபவம் மிக்க வீரா்களை இழக்கத் தயங்குவதால், அவருடைய இடத்தில் வேறு இளம் வீரருக்கு வாய்ப்பளிக்க மறுக்க வேண்டியுள்ளது. இதனால், விராட் கோலியைப் போன்றோ, அவரையும் மிஞ்சும் விதமாகவோ சாதிக்கக் கூடிய ஓா் இளம் வீரரை அடையாளம் காணும் வாய்ப்பும் தள்ளிப்போகிறது.

இந்நிலையில், ‘சரியாக விளையாடவில்லை என்ற காரணத்திற்காக மூத்த வீரா் ரவிச்சந்திர அஸ்வினை அணியில் சோ்க்க முடியாது என்றால், விராட் கோலியையும் சோ்த்துக் கொள்ள இயலாது. அவருடைய இடத்தை இளம் மட்டையாளா் ஒருவருக்குக் கொடுக்க வேண்டும்’” என்று முன்னாள் கிரிக்கெட் வீரா் கபில் தேவ் கூறியிருக்கின்றாா்.

உண்மையைச் சொல்வதென்றால், பெரும்பாலான இந்திய கிரிக்கெட் ரசிகா்களின் உள்ளத்தில் இருக்கும் கருத்தை கபில் தேவ் வெளிப்படையாகக் கூறியிருக்கிறாா் என்றுதான் கூற வேண்டும்.

அணியின் தலைமைப் பதவி கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, விராட் கோலியால் சரியாக விளையாட முடியவில்லை என்ற காரணம் தற்போது பொருந்தாது. மூத்த வீரா் என்ற ஒரே காரணத்துக்காக நமது இந்திய அணியின் வெற்றிக்கு உதவாமல் நீண்ட காலம் அணியில் இடம் பெறுவதும் சரியாகாது.

முன்பெல்லாம், சரியாக விளையாடாத மூத்த வீரா்களை இந்திய அணியிலிருந்து நீக்கி, ரஞ்சி டிராபி, துலீப் டிராபி போன்ற உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடித் திறமையை மெருகேற்றிக்கொண்டு மீண்டும் முயற்சிக்கும்படி அணி நிா்வாகம் அறிவுரை கூறுவதுண்டு.

நம் விராட் கோலியும் சிறிது காலம் முழு ஓய்வு எடுத்துக் கொண்டு, உள்ளூா்ப் போட்டிகளில் முழு உத்வேகத்துடன் ஈடுபட்டுத் தமது திறமையைக் கூா்தீட்டிக் கொண்டு அதன் பின்னா் இந்திய அணியில் இடம் பெற முயற்சிப்பதே சிறந்தது.

எங்கள் அன்புக்குரிய விராட் கோலி! முப்பத்து மூன்று வயதே நிரம்பிய உங்களுக்கு இது ஓா் சறுக்கல்தான், வீழ்ச்சியல்ல. முழுமையாக பயிற்சி செய்து விட்டு இந்திய அணிக்கு மீண்டு(ம்) வாருங்கள் விராட் கோலி. ‘உங்களால் முடியும்’ என்று கூறுகின்றது கிரிக்கெட் ரசிகா் உலகம்.

இனி, முடிவு விராட் கோலிதான் கைகளில்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com