நம்பிக்கையின்றி முன்னேற்றமில்லை

கோப்புப் படம்
கோப்புப் படம்

 பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கடந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதவில்லை. அதாவது, தேர்வை எதிர்கொள்ள பயந்து தேர்வு எழுத வரவில்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள் உடனடித் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று உயர்கல்வியைத் தொடர வாய்ப்பிருந்தாலும் எத்தனை மாணவர்கள் அப்படித் தொடரப்போகிறார்கள் என்பது கேள்விக்குறியே.
 இரண்டரை ஆண்டு கால கரோனா கோரத்தாண்டவம் வேறு எந்த துறையையும் விட கல்வித்துறையையே அதிகம் பாதித்துள்ளது. அரசின் கல்வித்துறை இந்த காலகட்டத்தில் முனைப்போடு செய்த செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை. பல்வேறு அமைப்புகளின் ஆய்விற்கு முக்கியத்துவம் அளித்து பள்ளிக்கல்வியிலிருந்து இடைநின்ற பல மாணவர்களும் அவர்கள் வயதுக்கேற்ற வகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 இவ்வாறு கற்றலுடனான தொடர்பை கூடுதலாக இழந்த மாணவர்களில் பலரே தேர்வுகளை எதிர்கொள்ள பயந்து தேர்வெழுத வரவில்லை என்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
 இது ஏதோ இந்த ஒரு கல்வியாண்டோடு முடிந்துவிடும் சிக்கல் அல்ல. இன்னும் குறைந்தபட்சம் மூன்றாண்டுகளுக்காவது தொடரப்போகும் சிக்கல். அதாவது கரோனா பெருந்தொற்று காலத்தில் 8, 9 வகுப்புகள் நேரடியாக நடைபெறாததால் ஏற்பட்ட கற்றல் இடைவெளி. அடுத்தடுத்த வகுப்பு மாணவர்களிடையேயும் கற்றல் இடைவெளி உள்ளது.
 இந்த கற்றல் இடைவெளியை மனதில் கொண்டுதான் தமிழக அரசின் கல்வித்துறை "இல்லம் தேடிக் கல்வி' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தொடக்கப் பள்ளிகளிலும் "எண்ணும் எழுத்தும்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 இந்த திட்டங்களின் வெற்றி என்பது எந்த அளவுக்கு ஆசிரியர்களும் சமூகமும் கற்றல் இடைவெளி பாதிப்பினை உணர்ந்துள்ளனர் என்பதைப் பொறுத்துதான் அமையும். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் அக்கறை செலுத்துவதில்லை என்பது காலங்காலமாக அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
 ஒருவர் தன் மனைவியிடம், "மகன் எங்கு வைத்தாலும் பணத்தை எடுத்துவிடுகிறான். என்ன செய்வது' என்று கேட்க, மனைவியோ "அவனுடைய பாட புத்தகத்தில் வையுங்கள் பத்திரமாக இருக்கும்' என்றாராம். இந்த நகைச்சுவை ஒருகாலத்தில் பிரபலம். அந்த அளவுக்கு மாணவர்கள் பள்ளியை விட்டுச் சென்றுவிட்டால் மறுநாள் பள்ளிக்கு வரும்போதுதான் புத்தகப் பையையே எடுப்பார்கள் என்ற நிலை இருந்தது.
 தற்போது அந்நிலை மாறி, மாலை நேரத்தில் "இல்லம் தேடிக் கல்வி' திட்டம் மூலம் வாசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை ஆரோக்கியமாகவே பார்க்கவேண்டியுள்ளது. ஆனால் இந்த திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள் ஒருபக்கம், ஆசிரியர்கள் ஒருபக்கம் என வெவ்வேறு திசைகளில் குழந்தைகளுக்கு வழிகாட்டினால் குழப்பமே மிஞ்சும். இரு தரப்பையும் இணைக்க கல்வித்துறை முனைய வேண்டும்.
 அலுவலகப் பணி, வங்கிப் பணி போன்று ஆசிரியர்களின் பணியைப் பார்க்கக் கூடாது. மற்றவர்கள் கோப்புகளுடன் பணி செய்கிறார்கள். அவர்கள் அந்த கோப்புகளை வீட்டிற்குக் கொண்டு வந்துகூட பணியாற்ற இயலும். இன்று, இணையவழியாக கோப்புகளைத் தரவிறக்கம் செய்துகூட பணிகளை மேற்கொள்ளலாம்.
 ஆனால் கல்வி என்பது மாணவர் - ஆசிரியர் நேரடியான தொடர்பின் மூலம் மட்டுமே வலுப்படுவது. இதற்கு தொடர்ச்சியான ஈடுபாடும், அனுசரணையும் அவசியம். இதனை வலுப்படுத்தும் விதமாக அரசின் வழிகாட்டல்கள் வரவேண்டியது அவசியம்.
 கல்வி உரிமைச் சட்டத்தின் வரவுக்குப் பிறகு மாற்றுத்திறனாளி குழந்தைகள் உட்பட அனைத்துக் குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்க்கும் விழிப்புணர்வு மக்களிடையே பெருகியுள்ளது. எந்த மாணவர் எந்தப் பள்ளியில் பயில்கிறார். ஒரு பள்ளியிலிருந்து விலகும் மாணவர் எந்தப் பள்ளியில் சேர்கிறார் போன்ற விவரங்களைக் சேகரிக்க வேண்டிய தேவை உள்ளது.
 அனைத்தும் கணினிமயமாகும்போது கல்வித்துறையையும் மின்னணு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயமே. ஆனால் இந்த நிர்வாகப்பணி, ஆசிரியர்களின் கற்பித்தல் பணி நேரத்தை பாதிக்காத வகையில் அமைய வேண்டும். இது போன்ற தரவுகளை சேகரிக்கவும், பதிவேற்றவும் சில எளிய இடைக்கால ஏற்பாடுகள் செய்யலாம். இதனால் ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் நேரம் கூடுதலாகக் கிடைக்கும்.
 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு புதிய ஆசிரியர்களே நியமனம் செய்யப்படாத நிலை உள்ளது. அரசின் இடைக்கால ஆசிரியர்கள் பணியமர்த்தும் முயற்சியும் நீதிமன்ற நடைமுறைகளால் காலதாமதமாகிறது. முறைப்படி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்தான் நியமனம் செய்யப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
 அது ஈடேறும் வரை இடைக்கால ஏற்பாட்டை தள்ளிப்போட்டால், மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளும் தள்ளிப்போகவே செய்யும். தற்போது கூடுதலான விதிகளுடன் நியமனம் நடைபெற உள்ளதாகக் கூறப்படுவதால் விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.
 நாம் இதுவரை சந்தித்திராத பெருந்தொற்றுக்குப் பின்னான நாட்களில் வாழ்ந்து வருகிறோம். நாட்டின் பல்வேறு துறைகளையும் சீரமைக்க போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெறுவதை நம்மால் காண இயல்கிறது.
 போர்க்கால அடிப்படையில் சேவையாற்றுவதற்காக ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி அலாதியானது. அவர்கள் மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை பகிரங்கமாக வெளிப்படுத்துவதன் கூடுதல் விளைவு அது. அவ்வாறாக தன்னலமற்று பிரச்னையின் வீரியம் புரிந்து ஆசிரியர்களும் பணியாற்ற வேண்டுமானால் அவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்கள் பணியின் மேன்மையையும் புரியவைக்க வேண்டும்.
 தம்முடைய பணி எவ்வளவு பெருமையான விளைவுகளை அளிக்க வல்லது என்பதை ஆசிரியர்களுக்கு உணர்த்த வேண்டியதும் முக்கியம். அதனைப் புரிந்துகொண்டு ஆசிரியர்கள் செயலாற்ற வேண்டியது அதனினும் முக்கியம். பரஸ்பர நம்பிக்கையின்றி முன்னேற்றம் சாத்தியமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com